நாற்காலியைக் கட்டிக் கொண்டே கிடக்கிறான்
பதவியுன் மத்தம் பிடித்த கெழட்டு ராஜா ஒருவன்
நாடெங்கும் எழுப்பப்படும் கோரிக்கைகள் குறித்த
அக்கறையொன்றுமில்லை அக் கெழட்டு ராஜாவுக்கு.
நாற்காலியோடு பிணைந்தேயிருக்க
தன்னுடலில் அவனேயடித்து கழற்றி யெறிந்திருந்த
ஆணிகளை அவசர கதியாய் தேடியெடுத்து
தன்னுடற் துவாரங்ளில் செருகிக் கொண்டிருக்கிறான்.
அங்கே உயிர்களுருகி மழையெனத் தெருக்களில்
ஓடுவதாக பதறுகிறார்கள் அவன் முன் முகமன் கூறுபவர்கள்.
பதற்றமாய் ஆணிகளை இறுகத்
திருகிக் கொண்டிருந்த கெழட்டு ராஜா தானொரு
ராஜதந்திரமொன்றை தீட்டிக் கொண்டிருப்பதாய்
அவர்களை கடிந்து கொள்கிறான்.  
அங்கே உயிர்கள் காடு, கரையென
மரங்களிலும், செடிகளிலும் தங்சமாய் ஒட்டிக்
கொண்டிருக்கின்றன.
அக் கெழட்டு ராஜாவின் மௌனம்
இங்கே கிளர்ச்சிக்காரர்களை
முளைக்க வைத்து விட்டதென
அவசரச் செய்தி வாசிக்கிறார்கள் முகமன் கூறுபவர்கள்.
அவர்களை முளையிலேயே கிள்ளி எறி
நான் ஒரு ராஜதந்திரமொன்றை தீட்டிக்
கொண்டிருக்கிறேனென நாற்காலியை
இறுக்கமாய் கட்டிக் கொண்டான் அக் கெழட்டு ராஜா.
அங்கே மரங்களும் செடிகளும்
தீ வைக்கப்பட்டு கருகிக் கொண்டிருந்தன..
காடு, கரைகள் முற்றாய் அழிந்து விடும் சூழல்
கிளர்ச்சிக்காரர்களை பெருக வைத்துவிட்டதென
முகமன் கூறுபவர்களும்
கோபம் தெறிக்கிறார்கள் அக் கெழட்டு ராஜாவிடம் .
கிளர்ச்சிக்காரர்களின் குரல்வளை நெரித்து
அவர்கள் குரலை நம் படையினருக்கு
பழக்கிக் கொடு
நானொரு ராஜ தந்திரமொன்றை தீட்டிக் கொண்டிருக்கிறேனென
நாற்காலியையே கட்டிக் கொண்டான் அக் கெழட்டு ராஜா.
நாட்டில் பெருங்கோபமுருவாகி புயலாய் தன்னை தாக்கவிருப்பதை
முகமன் கூறுபவர்கள்
உரைத்திராத போதும் உணர்ந்து விட்ட அக் கெழட்டு ராஜா
தீட்டப்பட்ட ராஜ தந்திரத்தின் வழியே ஓடி
உடற்நலம் குன்றி படுத்துக் கொண்டான்
பாதுகாப்பான குளிரூட்டப்பட்ட அவ்வறைக்குள்.

- அருள்குமார், கோவை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It