இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து !

தமிழீழ மக்களின் நிரந்தர அரசியல் தீர்வுக்குப் பொது வாக்கெடுப்பு நடத்திட அய்.நா. மன்றத்தில் முறையிடு !!

மார்ச்சு 2013இல் பாலகன் பாலச்சந்திரன் கொல்லப் பட்ட புகைப்படம் அன்று படித்துக்கொண்டிருந்த மாணவர் களின் மனசாட்சியை உலுக்கியது. மாணவர்கள் சாரை சாரையாக வீதியில் இறங்கிப் போராடினர். மாணவர் களின் கோரிக்கை முழக்கங்கள் விண்ணை முட்டின. அது, உறங்கிக் கிடந்த தமிழ்ச் சமூகத்தைத் தட்டி எழுப்பியது. அப் போராட்டம் இறுதி இலக்கை எட்டவில்லை.

எனினும், நம் போராட்டம்தான் முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கேட்டுப் போராடி வரும் நம் தொப்புள் கொடி உறவுகளுக்குப் பெரும் நம்பிக்கையை விதைத்தது. மாணவர் போராட்டம்தான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் துணையுடன் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்கள் மீது நடத்திய இனப் படுகொலையைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக் குள்ளும் எடுத்துச் சென்றது. தமிழ்நாட்டு அரசு, “ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை; அதற்குப் பன்னாட்டு விசாரணை வேண்டும்; நிரந்தர அரசியல் தீர்வு காண ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்” எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றியது. ஆனால், இந்திய அரசோ உலக நாடுகளோ இன்றுவரை தமிழர்களின் கோரிக்கைகளை ஏற்க வில்லை.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட படு கொலையை விசாரிக்க ஒரு பன்னாட்டுப் புலனாய்வுக் குழுவை நியமிக்க அய்.நா. மனித உரிமை மன்றம் கடந்த 2014 மார்ச் திங்களில் தீர்மானம் நிறைவேற்றிய போது, இந்திய அரசு அதற்கெதிராக வாக்களித்துத் தமிழ் நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்தது. அத் தீர்மானத்தின் படி மூவர் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழு தன் விசாரணையை முடித்து, கடந்த 2015 மார்ச் திங்களில் அறிக்கை அளிக்க இருந்த நிலையில் இலங்கையில் ஆட்சி மாற்றத்தினைக் காரணம் காட்டி அய்.நா. மனித உரிமை மன்ற ஆணையாளர் அவ் அறிக்கையை வரும் 2015 செப்டம்பர் திங்களுக்குத் தள்ளிப்போட்டார்.

அறிக்கை அளிப்பது தள்ளிப்போனதையே தம் சாதனையாகச் சொல்லிக் கொக்கரித்தார் இலங்கையின் புதிய அதிபர் மைத்ரி. தமிழினப் படுகொலையை மூடி மறைக்க, பன்னாட்டு விசாரணை நடவாமல் காலம் கடத்த உலக நாடுகள் மத்தியில் அனைத்து வேலை களையும் செய்து வருகின்றது இலங்கை அரசு. அதன் ஒரு பகுதியாக இனப் படுகொலைக்கு முழுத் துணைநின்ற இந்திய அரசின் இன்றையப் பிரதமர் மோடியை அழைத்து சர்வதேச அங்கீகாரம் பெற்றுக்கொண்டது.

28 ஆண்டு களுக்குப் பின்பு இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கைக்குப் பயணம் சென்று சிங்களக் கூட்டாளிகளோடு விருந்து உண்டு வந்தார். ஏழரை கோடித் தமிழ்நாட்டுத் தமிழர் களுக்கும் தான் பிரதமர் என்று சொல்லிக்கொள்ளும் மோடி, யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோதோ அல்லது தில்லிக்குத் திரும்பிய பிறகோ  தமிழர்களுக்கு இழைக்கப் பட்ட அநீதி குறித்தோ, தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்தோ இதுவரை வாய் திறந்து பேசவே இல்லை. ஈழத்தமிழர் படுகொலையில் சிங்களப் பேரினவாத அரசை ஆதரிப்பதில் காங்கிரசுக்கும், பாரதிய சனதா வுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

தமிழகத்திலோ, போர்க்காலத்தில் இலட்சக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டபொழுது வெறும், கடிதம் எழுதி, உண்ணாவிரதம் நடத்திக்கொண்டிருந்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி. இன்றைய முதல்வர் செயலலிதா வும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது, மத்திய அரசினருக்குக் கடிதம் எழுதுவது என கருணாநிதியின் நாடகப் போக்கையே கடைப்பிடிக்கிறார். தமிழீழ மக்கள் தங்கள்மீது ஏவப்பட்ட இனப்படுகொலைக்குப் பன்னாட்டு விசாரணை வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னரும் இந்திய அரசினருக்குக் கடும் அழுத்தத் தைக் கொடுக்காமல் வெறும் கடித நாடகம் நடத்தி மக்கள் போராட்டத்தைக் கேலிக் கூத்தாக்குவதில் கருணாநிதிக்கும் செயலலிதாவுக்கும் எந்தவித வேறு பாடும் இல்லை.

இராசபக்சே இடத்தில் மைத்ரி. மன்மோகன் சிங் இடத்தில் மோடி. கருணாநிதி இடத்தில் செயலலிதா.

காலமும் முகங்களும் மாறியிருந்தாலும் காட்சிகள் மாறவில்லை. சிங்கள இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமிழர் தாயகப் பகுதிகளில் இன்றும் பள்ளிச் சிறார்கள், பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. சிங்கள இராணுவத் தால் கைது செய்யப்பட்டுக் காணாமல் போன தங்கள் உறவுகளை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னும் பெற்றோர் களும், பெண்களும் தேடி அலைகின்றனர். முள்ளிவாய்க் கால் இனப் படுகொலைக்கு நீதி கேட்டு நமது உறவுகள் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.

மார்ச் 2013இல் முள்ளிவாய்க்கால் இனப் படு கொலைக்கு நீதி கேட்டு நாம் போராடினோம். உலகத் தமிழர்களின் போராட்டத்தின் பயனாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்து விட்டனர். தமிழர்களின் கோரிக்கைக்கு வடக்கு மாகாணச் சபையின் தீர்மானமும் வலுச் சேர்க்கின்றது. இனியும் ஆட்சியில் இருப்பவர்களின் கடிதங்களையும் ஆவேச அறிக்கைகளையும் படித்துப் பரவசம் அடைவதில் பயன் இல்லை.

ஈழத்தமிழர் பிரச்சனை, ஒரு மூத்த தேசிய இனத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. செயலலிதா - கருணாநிதியின் வாக்கு வங்கிப் பிரச்சனையல்ல. மாணவர்கள் நாம் களம் புகுந்தால்தான் காரியம் நடக்கும். உலகெங்கும் வாழும் தமிழர்கள் கள்ளங் கபடமில்லாத- பணத்திற்கும் பதவிக்கும் விலைபோகாத மாணவர்களாகிய நம் அறச் சீற்றத்தை எதிர்பார்த்து நமது கல்லூரி வாயிலை உற்று நோக்கியபடி இருக்கிறார்கள்.

2015 செப்டம்பர் திங்களில் அளிக்கவிருக்கும் மூவர் குழுவின் அறிக்கையை முன்வைத்து, இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலையை விசாரிக்கப் பன்னாட்டுத் தீர்ப்பாயம் அமைக்கவும், இனப் படு கொலை செய்த இலங்கை அரசைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கவும் கோருவோம். தமிழீழ மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு காணப் பொது வாக்கெடுப்பு நடத்திட அய்.நா. மன்றத்தினரையும் உலக நாடுகளையும் வலியுறுத்துவோம்.

இராசபக்சேக்களும் மோடிக்களும் நடுநடுங் கப், பொங்கி எழட்டும் தமிழக மாணவர் போராட்டம் !

அய்.நா மன்றத்துக்கும் கொழும்புக்கும் தில்லிக்கும் கேட்கட்டும் நமது முழக்கம் !

தமிழீழ விடுதலைக்கான மாணவர் - இளைஞர் கூட்டியக்கம்

Pin It