‘இந்தியா டுடே’ வார ஏட்டில் தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கிடும் கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படித்த பிறகே தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் நிலையைத் தாம் உணர்ந்ததாக தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த மக்களின் இன்னல்களை அகற்றிடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். நாமும், இது தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறோம்.

உலகம் முழுதும் ஈழத் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள். குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் உரிய கவுரவத்தோடு வாழ்வதோடு தமிழகத்தில் வாழும் தங்களுடைய உறவுகளுக்கு அவர்களே, வாழ்வதற்கான அடிப்படை உதவிகளை வழங்கி வருகிறார்கள். அய்ரோப்பிய நாடுகளில் அகதிகள் முகாம் என்ற ஒன்றே இல்லை. அவரவர் தங்களுக்கு விருப்பமான பகுதியில் வாழ்கிறார்கள். அகதிகள் உரிமைகளுக்கான அய்.நா.வின் சர்வதேச உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அதை மதித்து, அந்த மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா அகதிகள் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனவே அகதிகள் உரிமைகளை மதிப்பதில்லை.

கடல் வழியாக படகுகளில் உடைமைகள் ஏதுமின்றி, உயிர் பாதுகாப்புக்காக தமிழகம் வரும் அகதிகள் - மோசமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதுமான உணவு, குடிநீர், சுகாதார வசதியில்லாத நிலையில் வாழ வேண்டியவர்களாக உள்ளனர். எனவே முகாம்கள் என்று ஒன்று தேவைதானா என்பதை, தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும். அல்லது முகாம்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வாழ விரும்புவோருக்கு, எந்தத் தடையும் விதிக்காது அனுமதிக்க வேண்டும். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் முதலில் இவர்களை மனித நேயத்துடன் மதிக்க வேண்டும். பல முகாம்களில் கூலி வேலைக்கு சென்று தான், இவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. முகாமுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் திருப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு; காவல் துறையின் கெடுபிடிகள்; குறிப்பாக ‘கியு’ பிரிவு போலீசாரும், ‘சி.பி.சி.அய்.டி.’ போலீசாரும், இந்த மக்கள் மீது திணிக்கும், அடக்குமுறைகள், வார்த்தைகளால் கூற முடியாது. அகதிகள் ஒவ்வொருவருமே - விடுதலைப் புலிகளாகவே தமிழக காவல்துறையின் இந்தப் பிரிவினருக்கு தெரிகிறார்கள்.

அகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உரிமை, கிடைப்பதில் அரசு முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இடையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இவர்கள் பள்ளி, கல்லூரி கல்வியில் சேரவே முடியாத தடைகள் உருவாக்கப்பட்டன. அரசு, இப்போது, அதற்கான வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டாலும்கூட, இவைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. அகதிகளுக்காக அரசு வழங்கும் உதவி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், உயர்த்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் குடும்ப உறவினர் - இவர்களை தங்கள் நாட்டுக்கு அழைக்க விரும்பி, அதற்கான குடியிருப்பு உரிமைகளைப் பெற்றாலும்கூட தமிழக காவல்துறையின் கடுமையான கெடுபிடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழக உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே, இவர்கள் - வெளிநாடு போக அனுமதிக்கும் மோசமான கெடுபிடிகள் இருந்தன.

குறிப்பாக - ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் காவலதுறையின் உளவுப் பிரிவு குற்றவாளிகளாகவே பார்த்தது. மிக மோசமான அவமதிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இப்போதும் சென்னை விமான நிலையங்களில் இலங்கைக்கான ‘கடவுச் சீட்டை’ (பாஸ்போர்ட்) வைத்திருப்போர் - தனிமைப்படுத்தப்படுவதும், சந்தேகத்துக்குரிய நபர்களாக கருதப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற முறையில் இதையெல்லாம் தமிழக முதல்வர், மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

நாடுகளை இழந்து, வீடுகளை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, உடைந்த உள்ளங்களோடு தமிழகம் அரவணைக்கும் என்ற ஒரே ஆறுதலில் கடல் கடந்து கரை வந்து சேரும் இந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இப்போதாவது, தமிழக அரசு விழித்துக் கொண்டிருப்பதை வரவேற்கவே வேண்டும். முதலில் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டியது அடிப்படையானதாகும்!

Pin It