தலையங்கம்

ஈழத் தமிழர்களின் பாரம்பர்யப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்திய ராணுவம், தமது சிங்கள ஒற்றை ஆட்சியின் கீழ் சரணடைய வேண்டும் என்பதற்காக தமிழர்கள் மீது ராணுவப் படையெடுப்பை நடத்தி வருகிறது. தமிழ் மக்கள் வாழும் பகுதிக்கு சொந்தம் கொண்டாடும் சிங்களப் பேரினவாத அரசு அந்த உரிமையை துப்பாக்கி முனையில் பறிக்கத் துடிக்கிறது. இதைக் கண்டித்தால் சிங்களர் ஆத்திரமடைவதில் நியாயம் உண்டு.

தமிழக காங்கிரசார் ஏன் ஆத்திரமடைய வேண்டும்? முதல்வர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சி தூதுக் குழுவில் இடம் பெற்று, பிரதமரிடம் போர் நிறுத்தம் செய்ய இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்று கோரியது, தமிழக காங்கிரசாரும் தானே! இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் இல்லை, தாக்குதல் தொடரும் என்று அறிவித்து விட்டார். மன்மோகன்சிங் ஆட்சியோ மவுனம் சாதிக்கிறது. ஏன் இந்த மவுனம் என்று, தட்டிக் கேட்க சொந்தக் கட்சிக்காரர்களான காங்கிரசாருக்கு கூடுதல் உரிமை உண்டு. அப்படி கேட்கவும் இல்லை. அதுபற்றி வாய் திறக்கவும் இல்லை.

அவர்கள் கேட்க மறுப்பதை தமிழ்நாட்டில் இன உணர்வாளர்கள் கேட்டால், காங்கிரசார் எகிறிக் குதிக்கிறார்கள். விடுதலைப்புலிகள் பற்றியோ, ராஜீவ் காந்தி பற்றியோ பேசவே கூடாது என்று சட்டத்தால் தடைபோட்டு கருத்துரிமையை பறிக்க துடிக்கிறார்கள். மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குப் போய் ராஜபக்சேயிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும் என்பதும், அனைத்துக் கட்சியினர் விடுத்த கோரிக்கைதான்.

பிரணாப் முகர்ஜி போக மறுத்துவிட்டார். இதை தமிழக காங்கிரசார் தட்டிக் கேட்டார்களா? ஏன் வாயை மூடிக் கொண்டார்கள்? கொளத்தூர் மணி, மணியரசன், சீமான் இதைப் பேசினால், திருமாவளவன் பேசினால் கைது செய் என்று கூப்பாடு போடுகிறார்கள். ஏதோ, தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் சொந்த செல்வாக்கில் வெற்றி பெற்று வந்ததைப் போல் (கூட்டணி ஓட்டுகளை மறந்து), தி.மு.க. ஆட்சியை மிரட்டுகிறார்கள். மத்தியில் மன்மோகன்சிங் ஆட்சி நிலை பெற்று நிற்பதற்கு, தி.மு.க.வின் ஆதரவு தேவைப்படுகிறது என்பதை மறந்தே போய்விடுகிறார்கள். மிரட்டினால் கலைஞர் பணிந்து விடுவார் என்று கருதுவதற்கான வாய்ப்புகளை தமிழக முதல்வரும் தனது நடவடிக்கைகளால் உறுதிப்படுத்தி வருகிறார். இதையும் நாம் சுட்டிக்காட்டியாகவேண்டும்.

கருத்துரிமையை பறிக்கிறது என்பதற்காக 'பொடா' சட்டத்தை எதிர்த்த கட்சி தி.மு.க. பொடா சட்டம் இல்லாமலே அந்த இருண்ட காலத்தை உருவாக்க காங்கிரசார் துடிக்கும்போது இதற்கு தி.மு.கவும் துணை போகிறது. இப்போது கழகத் தலைவர் கொளத்தூர் மணி தமிழ்த் தேச பொதுவுடைமை கட்சிப் பொதுச்செயலாளர் மணியரசன், இயக்குனர் சீமான் கைது செய்யப் பட்டிருப்பதே, இதற்கு சான்றாகும். பொடா சட்டப்படியே ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேச உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது காங்கிரசாருக்குத் தெரியாதா என்று கேட்கிறோம்.

காங்கிரசார் வன்முறையைக் கையில் எடுத்து இயக்குனர் சீமான் காரை எரித்ததின் விளைவுதானே, சத்யமூர்த்தி பவன் தாக்குதல் வரை வந்திருக்கிறது? அறிக்கை விடும் காங்கிரசார் இதை ஏன் மறைக்கிறார்கள்? இயக்குனர் சீமான் கார் எரிக்கப் பட்டதை காந்தியின் வழி வந்தவர்கள் கண்டித்தார்களா? வினை ஒன்று நிகழ்ந்தால் எதிர் வினையும் இருக்கத் தானே செய்யும்? இதை காங்கிரசார் சிந்திக்க மாட்டார்களா? நாட்டில் எல்லா குடிமக்களுக்கும் ஒரே சட்டம் தான் என்பதை காங்கிரசார் புரிந்து கொள்ளட்டும்.

மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால், தமிழக காங்கிரசார் மற்ற குடிமக்களைவிட உயர்ந்த அதிகாரம் படைத்தவர்களாகக் கருதிக் கொள்ளக் கூடாது; ஆட்சி அதிகாரம் நிரந்தரமானதும் அல்ல.

தமிழக உணர்வை மதிக்காது செயல்படும் மன்மோகன் சிங்கையும், பிரணாப் முகர்ஜியையும் கண்டிக்காத காங்கிரசாருக்கு தமிழகத்தில் எழும் தமிழ் ஈழ ஆதரவுக் குரலை எதிர்க்கும் உரிமை கிடையாது. காங்கிரசாரின் இந்த சலசலப்புகள் தமிழின உணர்வை மேலும் உரம் போட்டு வளர்க்கவே செய்யும்; அது மட்டுமல்ல, அக்கட்சிக்கான சவக்குழியையும் அவர்களே இதன் மூலம் தோண்டிக் கொள்கிறார்கள்.

Pin It