சிகிச்சை பெறுவதற்கும், வெளிநாடு போவதற்கும், வேலை தேடுவதற்கும் என்று, கொழும்பு தனியார் விடுதிகளில் அறைகள் எடுத்துத் தங்கிய 500 தமிழர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடின்றி 30 நிமிடத்துக்குள் வெளியேற்றி, தனிப் பேருந்துகள் ஏற்பாடு செய்து, தமிழ் ஈழப் பகுதிக்கு கொண்டு போய் இறக்கியது சிறீலங்கா அரசு.
ஈழப் பிரச்சினையில் ஒவ்வொரு அசைவுக்கும் தலையங்கம் தீட்டி, விடுதலைப்புலிகளைக் கண்டிக்கும் ‘இந்து’ நாளேடு - அமெரிக்கா, பிரிட்டன், நார்வே என்று உலக நாடுகளே கண்டித்த இந்தப் பிரச்சினையில் தலையங்கம் தீட்டாமல் மவுனம் சாதித்தது. சிறீலங்காவின் உச்சநீதிமன்றமே இதைக் கண்டித்தும்கூட பார்ப்பன ‘இந்து’வுக்கு கண்டிக்க உள்ளம் வரவில்லை. அமெரிக்கா, நார்வே நாடுகளின் அறிக்கையை வெளியிட்ட ‘இந்து’ அதில் இடம் பெற்றிருந்த ‘கண்டனம்’ என்ற வார்த்தையைக்கூட நீக்கிவிட்டுத்தான் செய்தியை வெளியிட்டது.
அடுத்த நாள் - ராஜபக்சே வருத்தமும், மன்னிப்பும் கேட்டார். அதை வெளியிட்ட ‘இந்து’ ராஜபக்சே கூறிய ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டுத்தான் செய்தியை வெளியிட்டது.
இது தொடர்பாக - சிறீலங்காவுக்கான ஜப்பான் தூதர் கொழும்பில் பேட்டி அளித்தபோது - பிரிட்டனைப் போல் சிறீலங்காவுக்கு அளித்து வரும் நிதி உதவியை ஜப்பானும் நிறுத்துமா என்று ஒரு செய்தியாளர் கேட்டார். பிரிட்டனைப் போல் நிதி உதவியை நிறுத்த மாட்டோம் என்றார், ஜப்பான் தூதுவர். அதை ‘சிங்கள ரத்னா’ விருது பெற்ற பார்ப்பன ராம் நடத்தும் ‘இந்து’ எப்படி செய்தி வெளியிட்டது தெரியுமா? பிரிட்டன், சிறீலங்காவுக்கு நிதி உதவியை நிறுத்துவதற்கு, ஜப்பான் எதிர்ப்பு என்று செய்தி வெளியிட்டது. இப்படித்தான் சிங்களர்களை மிஞ்சிய ‘ராஜ விசுவாசியாக’ - பார்ப்பன ‘இந்து’வும், ராமும் இருக்கிறார்கள். இது பத்திரிகை தர்மமா? பூணூல் தர்மமா?
(‘இந்து’வின் இந்த பார்ப்பனியத்தை எதிர்த்து - இணைய தளங்களில் ஈழத் தமிழர்கள் நூற்றுக்கணக்கில் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தி விடுகின்றனர். பார்ப்பன எதிர்ப்புகளாக வெடித்திருக்கும் அந்த உணர்வுகள் பற்றிய செய்தி - அடுத்த இதழில்)
அப்பா - மகன்
மகன்: கனிமொழிக்கு எம்.பி. பதவி வழங்கியதை கேலி செய்து - பார்ப்பன ‘தினமணி’ வெளியிட்ட கேலிச் சித்திரத்தைக் கண்டித்து, முதலமைச்சர் கலைஞரே தனது கைப்பட போட்டி கேலிச் சித்திரம் ஒன்றை ‘முரசொலி’யில் போட்டிருக்கிறாரே பார்த்தீர்களா?
அப்பா: ஆம், மகனே!
மகன்: பூணூல் - உச்சிக்குடுமியோடு, திறந்த மேனியில் பார்ப்பான் படத்தைப் போட்டுக் காட்டி அது ஆதிக்கத்தின் சின்னம் என்று காட்டியிருக்கிறாரே!
அப்பா: அது உண்மை தானே, மகனே?
மகன்: உண்மை தான். ஆனால், அதே ஆதிக்க சின்னங்களை பெரியார் சிலை உடைப்புக்கு பதிலடியாக பெரியார் திராவிடர் கழகத்தினர் அறுத்தபோது, சாதாரண வழக்கில் வரக்கூடிய பிரச்னையாகக் கருதாமல், தேசப் பாதுகாப்புச் சட்டத்தையே ஏவி தேச விரோதிகள் என்று கலைஞர் கைது செய்தாரே, அது நியாயம் தானா, அப்பா?
கனிமொழி பிரச்சினையில் - பூணூல் சிண்டுகளை எதிர்க்கலாம் தவறில்லை. ஆனால், பெரியார் சிலை அவமதிப்புகளுக்கோ, கொள்கைப் பிரச்னைகளுக்கோ பூணூல் சிண்டுகளை எதிர்த்தால், அதுதான் தேச விரோதம் என்று கலைஞர் கூறுகிறாரா, அப்பா?
அப்பா: எனக்குத் தெரியாது, மகனே!
தேவாரம் பாட தமிழ் குடமுழுக்கு நடத்த நீதிமன்றம் தடை
சக்திவேல் முருகனார் - தமிழகம் முழுதும் பார்ப்பன வடமொழிகளை விலக்கி - தமிழ்த் திருமணங்களையும், தமிழில் குட முழுக்கையும் நடத்தி வருகிறார். அதே போன்று சண்முகசுந்தரனாரும் நடத்தி வருகிறார். ஆகமங்களுக்கு பதிலாக - தமிழ்த் திருமறைகளைப் பயன்படுத்தி வருவதற்கு, தடை விதிக்கக் கோரி மயிலாடுதுறை தர்மபுர ஆதினத்தின் சீடர்கள் சிலரும், சைவ சித்தாந்தத்தைக் கடைபிடிப்பதாகக் கூறும் திருஞான சம்பந்தம் உட்பட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். சைவ ஆதின மதத் தலைவர் களின் நன்மதிப்பை பாதிக்கும் கட்டுரைகளை இவர்கள் வெளியிட்டதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
வழக்கை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஜோதிமணி கோயில் குடமுழுக்கு, யாகம் போன்றவற்றில் ஆகமவிதிகளைப் பின்பற்றாமல், திருமறைகளைப் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தார். தீட்சதப் பார்ப்பனர்களின் முழுமையான ஆதிக்கத்தில் உள்ளதில்லை நடராசன் கோயிலில், அர்த்த மண்டபத்தில் - தேவாரம் திருவாசகம் பாட - பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு.
பார்ப்பனரல்லாதாருக்கு உரிமை இல்லை என்று தில்லை தீட்சப் பார்ப்பனர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர், அர்த்த மண்டபத்தில் பார்ப்பனரல்லாத ஓதுவார் தேவாரம் திருவாசகத்தைப் பாடலாம் என்று, இந்து அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளனர். நான்கு வாரத்தில் பதில் தருமாறு, அற நிலையத்துறைக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.
80 வயதைக் கடந்த ஆறுமுகசாமி எனும் ஓதுவார் - பார்ப்பன தீட்சதர்களை எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகிறார். பார்ப்பன தீட்சதர்கள் - முதியவர் ஆறுமுகசாமி தேவாரம் பாடுவதைத் தடுத்து, தாக்கி மண்டையைப் பிளந்து வெளியே தள்ளினர். இந்து அறநிலையத் துறைக்கு தனது கோரிக்கையைக் கொண்டு போனார். துறையின் இணை ஆணையர் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுத்துவிட்டார். ஆணையரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டபோது, 20.4.2007 இல், அனுமதி வழங்கப்பட்டது.
அறநிலையத்துறை ஆணையர் அனுமதி வழங்கியதை எதிர்த்து பொது தீட்சதர்களின் சார்பில் தன்வந்திரி தீட்சதர் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி ஜெயபால், வழக்கை தள்ளுபடி செய்தார். மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள், மேல் முறையீடு செய்தனர்.
“அர்த்த மண்டபத்தில் தீட்சதர்கள் தான் - பரம்பர பரம்பரையாக பக்திப் பாடல்களைப் பாடி வருகிறார்கள். தீட்சதர்களைத் தவிர வேறு எவருக்கும் இங்கு பாட உரிமை கிடையாது. கோயிலுள்ள மகா மண்டபத்தில் யார் வேண்டுமானாலும் பாடலாம். ஆனால் அர்த்த மண்டபத்தின் உரிமை, தீட்சதர்களுக்கே உரியது” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.