தலித் என்றால், திருமண மண்டபத்தில் இடமில்லை; சுடுகாட்டுக்கு பாதை இல்லை; முடிவெட்ட மறுப்பு; இரட்டைக் குவளை என்ற அவலம் தான் தமிழகக் கிராமங்கள் பலவற்றிலும் தொடருகிறது. ஈரோடு மாவட்டம் நம்பியூரில் திருமண மண்டபத்தில் தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தன்மானப் போராட்டம் வெடித்துக் கிளம்பியுள்ளது. தலித் இயக்கங்களோடு இணைந்து பெரியார் திராவிடர் கழகம் முன்னெடுக்கும் இந்த மனித உரிமை - தன்மானக் கிளர்ச்சியின் பின்னணி என்ன?

7.10.2007 - நம்பியூர், பிலியம்பாளையம் மாரியப்பன், தன் மகள் ஹரிணிக்கு 21.11.2007 அன்று காலை 9 மணிக்கு காதணி விழா நடத்த, நம்பியூர் ஸ்ரீ கற்பக விநாயக காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தை பொறுப்பாளர் அய்யாசாமியின் தையலகத்துக்கு சென்று கேட்டு வாடகை ரூ.2000 எனப் பேசி ரூ.2000 கொடுத்து பற்றுச் சீட்டுப் பெறுகிறார். அப்போது அங்கு வந்த மாரியப்பனின் நண்பர் ரங்கநாதன் பாளையம் முருகன், மாரியப்பனிடம் தெலுங்கில் பேச இவரை அருந்ததியர் என அய்யமுற்ற அய்யாசாமி பற்றுச் சீட்டை சரிப்பார்க்கக் கேட்பதுபோல் திரும்பப் பெற்றுக் கொண்டு, தாழ்த்தப்பட்டோருக்குத் தர முடியாது என்கிறார்.

மாரியப்பன் வாதாட நிர்வாகக் குழுவினரைக் கலந்து கொண்டு முடிவினை மதியம் சொல்வதாகச் சொல்கிறார். மாரியப்பன் தே.மு.தி.க. உறுப்பினர் என்பதால் தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் மருந்துகடை செந்திலிடம் புகார் செய்தார். (அவரும் மண்டப நிர்வாகக் குழு உறுப்பினர்) நிர்வாக குழுவினரிடம் பேசுவதாகவும், ஆனால் நிர்வாகக் குழு முடிவுக்கு தானும் கட்டுப்பட்டவன் தான் என்று கூறுகிறார்.

12 மணிக்கு - மீண்டும் மண்டபப் பொறுப்பாளர் அய்யாசாமியைச் சந்தித்தனர். நிர்வாகக் குழு தாழ்த்தப்பட்டவருக்கு மண்டபம் தர மறுத்து விட்டதாக அய்யாசாமி கூறுகிறார். உடனே தனது உறவினரான (சித்தப்பா மகன்) விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஒன்றியச் செயலாளர் தங்கவேலு, வி.டி.ரங்கசாமி ஆகியோருக்குத் தொலைபேசியில் பேசுகிறார். 1 மணிக்கு மூவரும் போய் காவல் நிலையத்தில் புகார் செய்கிறார்கள்.

காவல்துறை உதவி ஆய்வாளர், நேர்மையுடன் செயல்பட்டு, அய்யாசாமியை அழைத்துப் பேசி பணத்தைப் பெற்றுக் கொண்டு அனுமதித் தரச் சொல்கிறார். அப்போது மாரியப்பன் ரூ.1000 மட்டும் கொடுத்து பற்றுச் சீட்டில் முன்பணம் ரூ.1000 என எழுதிப் பெற்றுக் கொள்கிறார். அங்கு வந்த மண்டப நிர்வாகக் குழுவினரும் மாரியப்பனிடம் மண்டபத்தை மட்டும் சுத்தமாக பயன்படுத்த வேண்டும் எனச் சொல்லி அனுமதிக்கின்றார்.

17.10.2007 - விடுதலைச் சிறுத்தைகள் ஈரோட்டில் தலித் கிறித்துவர் மாநாட்டு சுவரொட்டிகளில் சிலவற்றை 21.10.2007 நம்பியூர் பெருமாள் கோவில் விளம்பர சுவரொட்டி மீது ஒட்டியதாக வந்த புகார் மீது காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் தங்கவேலு, வி.டி. ரங்கசாமி, நகரச் செயலாளர் செல்வம் ஆகியோர் மீது புகார் தரப்படுகிறது. வி.டி. ரங்கசாமி, தங்கவேலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மற்றொரு விடுதலை சிறுத்தை தோழர் பழ. செல்வம், முன் பினை பெற்றார். மற்ற இருவரும் நீதிமன்றம் பிணை வழங்கியும், ஆதிக்க சாதியினர் மிரட்டலால் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் வழங்குதலை 10 நாட்கள் வரை தாமதப்படுத்தியதால் 10 நாட்கள் கழித்தே விடுதலை ஆனார்கள்.

30.10.2007 - மண்டப பொறுப்பாளர் அய்யாசாமி தன்னை உதவி ஆய்வாளர், மாரியப்பன், விடுதலை சிறுத்தை கட்சியினர் 19.10.2007 அன்று மிரட்டியதால் ரசீது போட்டு வழங்கியதாக புகார் தந்தார். அதே புகார் அடிப்படையில் தனி வழக்கு போடப்படுகிறது. கோபி நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடுகிறது.

நவ. 18 - வட்டாட்சியர் அமைதிக்குழுக் கூட்டத்தை கூட்டுகிறார்; தீண்டாமையைத் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரி, மாறாக, விடுதலை சிறுத்தைகள் கடமையை ஆற்றவிடாமல் தன்னை தடுத்ததாக புகார் தருகிறார்; விடுதலை சிறுத்தைகள் தோழர்கள் வி.பி. ரங்கசாமி, தங்கவேலு மீது இ.பி.கோ. 354 பிரிவுகள் கீழ் வழக்கு தொடரப்படுகிறது. நவ. 20 - கோட்டாட்சியர் நம்பியூரில் 144 தடை ஆணையை 10 நாட்கள் பிறப்பித்து தீண்டாமைக்கு உள்ளான மாரியப்பன் உட்பட 27 பேர், கிராமத்துக்குள்ளே நுழைய தடை விதிக்கப்படுகிறது.

நவ. 21 - ஆதிக்க சாதியினர் 10 பேர் மாரியப்பன் வீட்டுக்குப் போய் மிரட்டியும், மிரட்டலுக்கு அஞ்சாமல் உடனே பகல் 12 மணியளவில் மாரியப்பன் மனைவி, குழந்தை, உறவினர் உட்பட 15 பேர் திருமண மண்டபம் நோக்கி புறப்பட்டு வந்தனர். நம்பியூர் முழுதும் காவல் துறையினரால் சூழப்பட்டது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட, 207 பேர் கொண்ட காவல்படை நிறுத்தப்பட்டது. சட்டம் வழங்கியுள்ள மனித உரிமைக்காக மண்டபம் நோக்கி வந்த 27 பேர் கைது செய்யப் பட்டனர். அன்று மாலையே விடுதலை செய்யப்பட்டனர்.

டிச. 4 - நம்பியூர் ஆதிக்க சக்திகள் கட்சி வேறு பாடின்றி ஒன்றாகத் திரண்டு தீண்டாமைக்கு ஆதரவாக கதவடைப்பு நடத்தி, கருப்புக்கொடி ஏற்றினர்.

டிச. 10 - நம்பியூர் அருகே உள்ள முக்கிய நகரில் சாதி ஆதிக்கவாதிகள் கட்சி வேறுபாடின்றி, தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி, கோபி கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாகச் செல்ல திட்டமிட்டு, கோபி முத்து மகாலில் கூடினர். பதட்டமான சூழ்நிலையில் ஊர்வலம் செல்ல காவல்துறை அனுமதி மறுத்தும், அதையும் மீறி ஊர்வலமாகவே சென்று கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்தது.

தாழ்த்தப்பட்டவருக்கு திருமண மண்டபம் தரக் கூடாது. தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அணி திரண்டவர்களில் இடம் பெற்றிருந்த முக்கிய புள்ளிகள் யார் யார்?

தி.மு.க.வைச் சார்ந்த பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ். சுப்ரமணியம், நம்பியூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் சென்னிமலை, நம்பியூர் நகர செயலாளர் உலகமுத்துசாமி, பேரூராட்சித் தலைவர் கீதா. தி.மு.க.வின் நேரடி எதிரியான அ.தி.மு.க. இதில் பகைமை பாராட்டாமல் தி.மு.க.வுடன் கைகோர்த்துக் கொண்டது. அ.தி.மு.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.கே. சின்னசாமி, ஜெயலலிதா, பேரவை முன்னாள் மாவட்ட செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் தம்பி (எ) சுப்ரமணி, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம். பழனிச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் சரவணன், வழக்கறிஞர் கருப்புசாமி, நடிகர் விஜயகாந்தின் தே.மு.தி.க., கோபி ஒன்றிய செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் பிரகாஷ், பா.ம.க.வின் முன்னாள் மாவட்ட செயலாளர் மகாலிங்கம், வியாபாரிகள் சங்கத்தைச் சார்ந்த கே.என். மணி, கொங்கு பேரவை அமைப்பாளர் குமார. ரவிக் குமார் ஆகிய முன்னணியினர் தலைமையில் ஆதிக்க சாதியினர் ஏராளமாக இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

நம்பியூரில் டிசம்பர் 4 ஆம் தேதியும், டிசம்பர் 10 ஆம் தேதியும் மீண்டும் கடையடைப்பு நடத்தி டிசம்பர் 19 ஆம் தேதியும் தீண்டாமை ஒழிப்பு சட்டத்தையே ரத்து செய்யக் கோரி 2000 வாகனங்களில் 13 கிலோ மீட்டர் பேரணியை கொங்கு வேளாள கவுண்டர் பேரவை நடத்தியது.

நவ. 21 - பணம் கட்டி ரசீது பெற்ற மண்டபத்துக்குள் காது குத்த அனுமதி மறுத்ததோடு அவர்களை மண்டபத்தில் நுழைய காவல்துறை அனுமதி மறுத்தபோது நடுரோட்டில் வைத்து குழந்தைக்கு காது குத்த முயற்சித்தனர்.

நவ. 28 - பெரியார் திராவிடர் கழகம் களமிறங்கி, ஈரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. விடுதலை சிறுத்தைகள் கோவணத்துடன் கையில் தேசியக் கொடியை ஏந்தி ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தீண்டாமையைத் தடுத்து நிறுத்துமாறு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

கட்சி வேறுபாடின்றி ஆதிக்கசாதியினர் ஓரணியில் திரண்டதன் எதிரொலியை தாழ்த்தப்பட்டோரிடம் காண முடிந்தது. நம்பியூரைச் சுற்றியுள்ள 134 கிராமங்களிலும், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்றியிருந்த அனைத்து அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை வெட்டி சாய்த்தனர். தாங்கள் சார்ந்திருந்த அரசியல் கட்சிகளி லிருந்து விலகுவதாக அறிவித்தனர்.

டிச. 20 - தடையை மீறி பெரியார் திராவிடர் கழகம், தலித் விடுதலை கட்சி, விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தச் சென்றபோது 1500 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கொந்தளிப்பான சூழ்நிலையில் தாழ்த்தப்பட் டோர் அமைப்புகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் பெரியார் திராவிடர் கழகம் இறங்கியது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மருத்துவர் கிருஷ்ணசாமி, ஆதித் தமிழர் பேரவை அமைப்பாளர் அதியமான் ஆகியோரிடம் தொடர்பு கொண்டு கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசினார்.

கடந்த டிசம்பர் 23 ஆம் தேதி கோவையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து பேசினர். ஜனவரி 7 ஆம் தேதி கோபியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

Pin It