ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகிலுள்ள அரியப்பம்பாளையம், சிறீ கிருஷ்ணா பஞ்சாலை அருகில் கடந்த 11.1.2009 அன்று பெரியார் பஞ்சாலை தொழிலாளர் கழக தொடக்க விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ப. சிவராஜ் தலைமை வகித்தார். தோழர்கள் ஏ.முத்துக்குமார், க. இராமலிங்கம், பி.சண்முகம், கே.செல்வன், எஸ்.கே.பழனிச்சாமி, ஏ.பரி பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் பெயர் பலகையைத் திறந்து வைத்து உரையாற்றினார். பஞ்சாலை வாயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கழகக் கொடிக் கம்பத்தில் விண்ணதிரும் முழக்கங்களுடன் கழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். அவரது உரையிலிருந்து:

"தொழிலாளர்கள் மீது அக்கறை இருப்பதால் இந்தத் தொழிற்சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் தொழிலாளர்களின் நலனுக்காக முழுமையாகப் பாடுபடும். இதன் பொறுப்பாளர்கள் அந்தந்தப் பகுதித் தொழிலாளர்களாகவே இருந்து, தலைமையேற்று நடத்த வேண்டும்.

ஏற்கனவே பணி செய்த வரும் தொழிலாளர்களை அனுப்பிவிட்டு ஒரிசா, பீகார் போன்ற வடமாநிலத்த வர்களை இங்கு கொண்டு வந்து புரோக்கர்கள் மூலம் பணியமர்த்தும் நிலை பல ஆலைகளில் இருக்கிறது. இதை எதிர்த்து பெரியார் பஞ்சாலை தொழிலாளர் கழகம் போராடும். தலை எழுத்து என்று சொல்லி கொடுக்கும் கூலியை நியாயப்படுத்தும் மதவாதி, முதலாளி கூட்டுக் கொள்ளையை எதிர்த்துப் போராட வேண்டும்.

ஆலைகளில் தொழிலாளர்களுக்குப் 'பங்கு' என்பதற்குப் பதிலாக 'தீபாவளி போனஸ்' என்று சுருக்கி, தொழிலாளர் உரிமையைப் பண்டிகைக்குள் அடக்கி விட்டார்கள். தொழிலாளர் கையில் காசு இருக்கக் கூடாது என்பதற்காகவே வாரம் ஒரு விழா, மாதம் ஒரு பண்டிகை என்று கொண்டாட வைத்து தொழிலாளர்களை ஏழையாகவே ஆக்கி வைத்துள்ளார்கள்.

பெரியார் தொழிற்சங்கம் தொழிலாளர்களை போராட வைப்பது மட்டு மல்லாமல், சிந்தனையைத் தூண்டி, அறிவியல் வழி முறையில் வாழ்க்கையை அமைப்பதற்கும் பாடுபடும் சட்டம் நம் பக்கம் இருக்கிறது. ஒற்றுமையாக இருந்து எந்த சமசரத்துக்கும் இடம் கொடுக்காமல் தொழிற்சங்கம் பாடுபட வேண்டும். அதற்கு கழகம் என்றும் துணை நிற்கும்" - இவ்வாறு பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பெ.தி.க. மாவட்டத் துணைத் தலைவர், வேலுச்சாமி, அமைப்பாளர் சதுமுகை பழனிச்சாமி, இளைஞரணி செயலாளர் புதுரோடு சிதம்பரம், இணைச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார், கருப்பணன் மற்றும் ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர். நிறைவாக பி.தனபால் நன்றி கூறினார்.

Pin It