capitalism india pyramidதிடீரென ஒருநாள் உருவான உலகமல்ல இது. கோடிக்கணக்கான வருடங்களாக பல இயற்கை நிகழ்வுகளாலும், மனிதர்களின் செயல்பாடுகளாலும் இப்படி நம் கண்முன்னே இருக்கிறது, இயங்குகிறது நம்மைச் சுற்றியுள்ள இந்த உலகம். நாம் வாழும் உலகம்.

பல சந்தர்ப்பங்கள், பல வாய்ப்புகளின் வாயிலாக நம்மைச்சுற்றி நடக்கும் நல்லவையோ, கெட்டவையோ அனைத்து விஷயங்களிலும் ஏதாவதொரு வகையில் நமது பங்களிப்பும் உள்ளது என்பதை நாம் உணர்ந்தே அக வேண்டிய காலமிது.

மக்களுக்காகப் போராடுபவர்களை குறைசொல்வதும், குறைகளை சுட்டிக்காட்ட வேண்டிய இடத்தில் ஊமையாக இருப்பதும், தன் மதம் சாதி என்ற குறுகிய வட்டத்திற்குள் நின்றுகொண்டு ஆளும் வர்க்கம் செய்யும் எல்லாவற்றையும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும், ஆதரிக்க வேண்டிய நல்ல மனிதர்களையும், இயக்கங்களையும், இதர விஷயங்களையும் ஆதரிக்காமல் விட்டுவிடுவதும் நமது அன்றாடப் பழக்கமாகி விட்ட காலமிது.

ஜனநாயகம் என்றாலே அது வாக்களிக்கும் உரிமை மட்டும்தான் என்ற நிலை தற்போது இந்தியாவில் நிலவிவருகிறது. வாக்களிப்பதே மிகப்பெரிய உரிமை, அதை மட்டும் செய்தாலே எல்லாம் சரியாக நடக்கும் என்ற மனக்கட்டமைப்பை முதலாளித்துவ பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் நம் மக்களின் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளன. அப்படியிருந்தும் கூட பல தரப்பு மக்கள் தங்கள் வாக்குரிமையைக்கூட தேர்தல் நாளில் பயன்படுத்துவது இல்லை என்பது இன்னொரு பக்கம்.

ஓட்டுப்போட்டால் மட்டும் போதாது, நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி, ஆளும் அரசாங்கமாக மாறிய பின்னர், தான் கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றி மக்கள் நலன் காக்கும் அரசாக செயல்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதும் ஓட்டுப்போடும் மக்களின் கடமையே ஆகும்.

அவ்வாறு செயல்படாத அரசாங்கத்தை வழிநடத்தும் கட்சிகளை கேள்வி கேட்பதும், அக்கட்சிகளின் தவறான செயல்பாடுகளை எதிர்த்து ஒன்று திரண்டு போராடி உரிமைகளை மீட்பதும் பொதுமக்களின் கடமையே ஆகும்.

அவ்வாறு மக்கள் தங்களை ஆளும் ஆட்சியாளர்களை கண்காணித்தால் மட்டுமே மக்கள் நல்லமுறையில் வாழ வழிபிறக்கும். ஆளும் அரசாங்கத்தின் மோசமான திட்டங்களை அனுசரித்துச் செல்வதாலும், சமூக ஊடகங்களில் வெளியாகும் மோசமான சிந்தனைக் கொண்ட பிரச்சாரங்களாலும் மக்களின் வாழ்வாதாரம் செல்லாக்காசாக மாறிவிடுகிறது. ஆளும் வர்க்கம் அவ்வாறு மாற்றிவிடுகிறது.

கொரோனா தொற்று நோய்க்காலம் இது. மனித குலத்தை வீட்டிலேயே முடக்கி வைத்து, உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பற்றி கவலை ஏதும் கொள்ளாத ஆளும் மத்திய அரசை உருவாக்கி வைத்திருக்கும் பெருமுதலாளிகள் நடத்தும் ஊடகங்கள் பாடுவதெல்லாம் எழவு வீட்டு ஒப்பாரி மட்டுமே. மாறாக ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகள் ஏதும் செய்யப்படுவதில்லை.

வருமானமின்றி தவிக்கும் அமைப்புரீதியாக திரட்டப்படாத முறைசாரா தொழிலாளர்களான மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க யாரும் தயாராக இல்லை. தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் குடும்பங்களின் நலன்காக்க எந்த திட்டமும் உருவாக்கப்படுவதில்லை.

தனியார் பெருமுதலாளிகளின் நிறுவனங்களை  சட்டதிட்டங்கள் மூலம் முறைப்படுத்த வேண்டிய  அரசாங்கங்களும்,  நீதிமன்றமும் பெருமுதலாளிகளுக்கே சாதகமாய் இருக்கின்றன.

தனியார் நிறுவனங்களும் அரசு நிறுவனங்களைப்போல தன் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் மற்றும் உரிமைகளை வழங்க வேண்டும் என்று எந்த  நீதிமன்றமும் சட்டம் போடுவதில்லை. மாறாக போராடுபவர்களின் வாயை மூடுவதிலையே குறியாக இருக்கின்றன.

மாத சம்பளம் வாங்கும் மாதக்கூலிகளான ஒருபிரிவினருக்கும், தினக்கூலியை இன்றைய சூழ்நிலையில் பெற முடியாதவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குமிடையே போட்டி பொறாமையை உண்டுபண்ணும் போக்கையே பெரும்பாலும் சமூக ஊடகங்கள் வாயிலாக பலரும் கடைப்பிடித்து வருகின்றனர்.

அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட அமைப்புக்குள் உள்ளனர். அவர்களுக்கு அரசாங்க நடைமுறை மற்றும் அலுவலக நடைமுறை விதிகளின்படி, ஒரு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த உரிமைகளைக் காப்பாற்றிக்கொள்ள அந்த மாதக்கூலி பெறும் அரசின் தொழிலாளர்கள் சங்கம், போராட்டங்கள் என தொடர்ந்து ஆளும் அரசுகளிடம் போராடியே பல உரிமைகளைப் பெற்று வருகின்றனர்.

அரசு தொழிலாளர் ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல உரிமைகளை இழந்தும் நிற்கின்றனர். 2003 ஆம் ஆண்டுக்குப்பின்னர் பணியில் சேர்ந்த அரசுப் பணியில் சேர்ந்த இளைஞர்களுக்கு தள்ளாடும் வயதில் ஓய்வூதியம் என்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்றைய சூழலில் அரசு வேலைவாய்ப்பும், தனியார் நிறுவன வேலைவாய்ப்பு போன்றே பல உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்படாத நிலையில் உள்ளது என்றால் அது மிகையல்ல.

தனியார் நிறுவன ஊழியர்கள் ஒருங்கமைக்கப்படாத மற்றும் முறைசார்ந்த அமைப்பு இல்லாதவர்களாக உள்ளனர். அவர்களை ஒருங்கிணைத்துப் போராடும் பல அமைப்புரீதியான சங்கங்களிலும் அவர்களால் முழுமையாக அணிதிரள முடிவதில்லை.

வேலை பார்க்கும் நிறுவன சூழல், பாதுகாப்பான பணிச்சூழல் இல்லாமை, தொழிலாளர் நலச்சட்டங்கள் மத்திய அரசால் திருத்தப்பட்டது, பொருளாதார பாதுகாப்பினை அரசாங்கமும், நிறுவனம் நடத்தும் பெருமுதலாளிகளும் வழங்க முன் வராதது போன்ற காரணங்களால் தனியார் நிறுவன தொழிலாளர்களால் தங்கள் உரிமைக்காக தொடர்ந்து போராட்டங்களில் பங்கெடுக்க முடிவதில்லை.

இந்த சூழ்நிலையைப்பயன்படுத்தி, தொழிலாளர்களுக்குள்ளேயே போட்டி பொறாமைகளை பெருமுதலாளிகளால் நடத்தப்படும் சமூக ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன.

இந்த அமைப்பு, இந்த கட்சி, இந்த அரசு நமக்கு நல்லது செய்யும் என்ற முறையில், அந்த அமைப்பில் சேர்ந்து, அந்த கட்சியை ஆதரித்து, தொழிலாளர் நலன் காக்கும் அரசினை உருவாக்க வேண்டியது அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவன தொழிலாளர்களின் கடமை.

தொழிலாளி இரண்டுபட்டால் பெரு நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளுக்கும், பல வாய்ச்சொல் காவாளிகளுக்கும், வாய்க்கு வந்ததை பேசும் பல தொலைக்காட்சிகளுக்கும் கொண்டாட்டம்தான்.

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை உருவாக்குவதில் நமக்கும் பங்கு உண்டு. நாம் நமது நல்லவிதமான மற்றும் மோசமான செயல்பாடுகளால் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், நம் சந்ததிகளுக்கு நல்ல விதமான உலகம் மட்டுமே வேண்டும் என்று நினைக்கிறோம்.

அப்படியானால், இன்னொரு பக்கத்தில் நம்மால் உருவாக்கப்பட்ட மோசமான உலகம் நம் சந்ததியை பின்தொடராமல் பாதுகாக்க நாம் நம்பிக்கையின் பின்னால், நன்மையின் பின்னால் தொழிலாளி வர்க்கம் என்ற ஒரே சிந்தனையோடு அணிவகுக்க வேண்டியது அவசியம்.

ஆகவே அந்த மோசமான இருண்ட உலகத்தையும், நம்மால் முடிந்த அளவு நமது செயல்பாடுகளால் மாற்றிக் காட்டுவோம் என ஒவ்வொரு தினக்கூலி, மாதக்கூலி தொழிலாளியும் சிந்தித்து செயல்பட ஆரம்பித்தால் மட்டுமே ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் நம்மை இணைத்துக் கொண்டால் மட்டுமே, நல்லவை மட்டுமே மிஞ்சியிருக்கும் ஒரு பொன்னுலகை நம்மால் உருவாக்க முடியும்.

1990 -களில் பெருமுதலாளிகளால் உருவாக்கப்பட்ட உலகமயம், தனியார்மயம், தாராளமயத்தால் கடந்த 31 ஆண்டுகளில், வேலைவாய்ப்பின்மை, காசுமயமான கல்வி, போதிய மருத்துவ வசதிகளின்றி கொரோனா நோய்த் தொற்றால் நம் மக்கள் கொத்து கொத்தாக சாகும் நிலை உருவாகியுள்ளது.

அவர்களால் மனிதகுல அழிவை உருவாக்க முடியுமென்றால், அதனை எதிர்த்து இந்த மாபெரும் தொழிலாளி வர்க்கத்தால் எல்லோருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் சமதர்ம பொன்னுலகை இப்பூவுலகில் உருவாக்க முடியாதா என்ன???

- சுடலைமாடன்

        

Pin It