moonar labour agitation

தமிழ்நாட்டையொட்டிய கேரளப் பகுதியில் உள்ள மூணாறு தேயிலைத் தோட்டட தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் கூலி உயர்வுக்காகவும், பிற உரிமைகளுக்காகவும் நடத்திய வீறார்ந்த போராட்டம் கேரள மாநிலத்தில் உள்ள பிற தோட்டத் தொழிலளார்களிடமும் எதிரொலித்தது; இந்தியா முழுவதும் ஊடகங்கள் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில், முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே நடத்திய இம்மாபெரும் போராட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய போராட்டம் இந்தியாவில் நடத்திருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

கண்ணன்தேவன் தேயிலைத் தோட்ட முதலாளிய நிறுவனம் மூணாறைத் தலைமையிடமாகக் கொண் டுள்ளது. கண்ணன்தேவன் தேயிலை நிறுவனத்துக்கு ஏழு பெரிய தேயிலைத் தோட்டப் பண்ணைகள் (எஸ்டேட்) உள்ளன. இவை 84 வட்ட நிருவாகப் பகுதிகளாக இயங்குகின்றன. மூணாறில் டாடா நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு பெரிய தேயிலை தோட்டப் பண்ணைகள் நான்கு நிருவாகப் பிரிவாக உள்ளன. தேயிலை உற்பத்தியில் உலக அளவில் டாடா நிறுவனம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆக, இந்த 92 வட்டங்களிலும் தேயிலைப் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் “பெண்கள் ஒற்றுமை” என்கிற அமைப்பை உருவாக்கி செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நாற்பது நாள்கள் வேலை நிறுத்தம் செய்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். மேலும் அவர்களின் போராட்டம் தலைநகர் திருவனந்தபுரத்தின் வீதிகளிலும், தலைமைச் செயல கத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எந்தத் தொழிற்சங்கத்தையும் சார்ந்திராமல்-இன்னும் சரியாகச் சொல்வதாயின், ஒதுக்கி வைத்துவிட்டு, தனித்து நின்று போராடியது ஏன்?

கேரளத்தில் தோட்டப் பயிர்களின் பண்ணைகளில் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். 2011 மே மாதம் தோட்டத் தொழிலாளர்களின் கூலி திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, ஒரு நாளைக்கு 21 கிலோ தேயிலை பறிப்பதற்கு 232 உருவா கூலி என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கூலி ஒப்பந்தம் 2014 திசம்பர் 31 அன்றுடன் முடிந்துவிட்டது. மூணாறு தேயிலைத் தொழிலாளர்களில் 70 விழுக்காட்டினர் பெண்களே ஆவர். ஆண்கள் உழுதல், உரமிடல், ஊர்தி ஓட்டுதல் போன்ற மற்ற வேலைகளைச் செய்வார்கள்.

19 ஆம் நூற்றாண்டின் நடுவாக்கில் ஜான்டேனியல் மன்றோ எனும் ஆங்கிலேயர் மூணாறில் 588 ஏக்கர் நிலத்தை வாங்கினார். அதில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்குவதற்கும் அவற்றில் வேலை செய்வதற்கும் என அப்பகுதிக்குரிய பூஞ்ஜார் சிற்றரசரின் இசைவுடன், தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக ஆட்களை அழைத்துவந்தார். இவர்களில் பெரும் பகுதியினர் தாழ்த்தப்பட்ட வகுப்பினரே ஆவர். அவர்கள் கொத்தடிமைகள் போல் வேலை செய்வதற் கான விதிகள் வகுக்கப்பட்டன. ஒரு தோட்டத்திலிருந்து இன்னொரு தோட்டத்திற்கு மாறி வேலை செய்யும் உரிமையும் மறுக்கப்பட்டது. இதற்காக அந்தந்த தேயிலைத் தோட்டப் பகுதிகளிலேயே புறாக்கூடு போன்ற வீடுகள் கட்டித் தரப்பட்டன. இவ்வாறு வந்தவர்களின் மூன்றாம், நான்காம் தலைமுறையினர்தாம் இப்போது மூணாறு தேயிலைத் தோட்டங்களில் வேலை செய் கின்றனர். எத்தகைய வசதி வாய்ப்பும் இல்லாத அதே ஒற்றை அறை கொண்ட குடியிருப்புகளில் தான் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

தேயிலைப் பறிப்பது மிகவும் துன்பமான சுமையான பணியாகும். செங்குத்தான மலைத் தோட்டத்தில் குருதியைக் குடிக்கும் அட்டைகளும் காட்டு விலங்கு களும் இருக்கும் சூழலில், கடுங்குளிரிலும் பனியிலும், வெய்யிலிலும் வேலை செய்யவேண்டும். காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை வேலை செய்தால்தான் தேயிலையின் கொழுந்துகள் 21 கிலோ பறிக்கமுடியும். பெண்கள்தான் திறமையாகத் தேயிலையைப் பறிப்பதால் ஆண்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்படுவதில்லை.

கூலி ஒப்பந்தக் காலம் முடிந்துவிட்ட பிறகு தமிழ்ப் பெண் தொழிலாளர்கள் 21 கிலோ தோயிலையைப் பறிப்பதற்கான கூலி உருவா 232 என்பதலிருந்து உருவா 500 ஆக உயர்த்தவேண்டும்; ஊக்கத் தொகை யை 20 விழுக்காடாக உயர்த்தித் தரவேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் (AITUC) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் (CITU)) காங்கிரசுக் கட்சியின் தொழிற்சங்கம் (INTUC) ஆகியவற்றிடம் வலியுறுத்தி வந்தனர்.

தொழிற் சங்கங்கள், கண்ணன்தேவன் தேயிலை நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தின. தங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேலையில், பெண் தொழிலாளர்களின் மீது இடி விழுவது போன்ற தோர் அறிவிப்பைக் கண்ணன்தேவன் நிறுவனம் 2015 ஆகத்து 22 அன்று வெளியிட்டது. 2013-14 ஆம் ஆண் டில் 19 விழுக்காடாக அளிக்கப்பட்ட ஊக்கத் தொகையை 8.33 விழுக்காடாக மட்டுமே இந்த ஆண்டிற்கு அளிக்கப் படும் என்று அறிவித்தது.

எனவே மூணாறு தேயிலைத் தோட்டங்களின்-தாழ்த்தப்பட்ட வகுப்பினரான-தமிழ்ப் பெண் தொழிலா ளர்கள் ஒன்றுகூடி விவாதித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய தொழிற்சங்கங்களை இனியும் நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து, பெண் தொழிலாளர்கள் மட்டுமே ஒன்றுபட்டுத் தனித்துப் போராடுவது என்று தீர்மானித்தனர்.

‘பெண்கள் ஒற்றுமை’ என்கிற அமைப்பின் கீழ் 9000 பெண் தொழிலாளர்கள் அணி திரண்டனர். காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். பேரணி, பொதுக்கூட்டம், சாலை மறியல், கண்ணன்தேவன் நிறுவனத்தை முற்றுகையிடல் என்று பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.

இப்பெண்களின் தீவிரமான வேலைநிறுத்தப் போராட்டத்தின் விளைவாகக் கேரள மாநிலத்தில் மலைப்பகுதிகளில் உள்ள காபி, இரப்பர், ஏலக்காய் ஆகிய தோட்டத் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு மூன்று இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தோட்டப் பயிர்கள் மூலம் கேரள அரசுக்கு ஆண்டுதோறும் 21,000 கோடி வருமானம் கிடைக்கிறது. மூணாறில் இருந்த 92 தேயிலைத் தோட்டங்களிலும் வேலை நிறுத்தத்தால் இளந்தளிர் தேயிலைகள் பறிக்கப்படாமல் முதிர்ந்தன.

நவம்பர் முதல் கிழமையில் கேரள மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடக்க இருந்ததால், தொழிற்சங்கங்களுடன் மாநில அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் கூலி உருபா, 301, ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உருபா 330, இரப்பர் தோட்டத் தொழிலாளர் கூலி உருபா 381 என உயர்த்துவதாக முடிவு செய்யப்பட்டது. உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்தபிறகு, தொழிலாளர்களின் மருத்துக் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை அரசே கட்டுவது, குடியிருப்புகளில் கூடுதலாகக் கட்டடம் கட்டித் தருவது, மற்ற வசதிகளை ஏற்படுத்தித் தருவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவது ஆகியவை செயல்படுத்தப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.

நாற்பது நாள்களுக்குமேல் கூலி வருவாய் இல் லாமல் வாழ்வது கொடுந்துன்பமாகிவிடும் என்று கருதி, ‘பெண்கள் ஒற்றுமை’ அமைப்பு இந்த ஒப்பந்தத்தை ஏற்பதாகக் கூறி, தங்கள் போராட்டடத்தைக் கைவிடுவ தாக அறிவித்தது.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்கிற கொள்கையை நடைமுறைப்படுத்தப்பட்ட பின், தொழிற் சங்கங்களின் செயல்பாடுகளும், போர்க்குணம் குன்றி விட்டன. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் சேவைப் பிரிவின் பங்கு 60 விழுக்காடாக உயர்ந்துவிட்டது. சேவைப் பிரிவுகளில்-குறிப்பாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கம் என்பதே இல்லை. தொழில்துறையில் உயர்தொழில் நுட்பத்தைப் புகுத்து வதன் காரணமாக தொழிலாளர் எண்ணிக்கைக் குறைக்கப்பட்டு வருகிறது.

மேலும் கடந்த இருபது ஆண்டுகளில் தனியார்துறையில் தற்காலிக அடிப் படையில் மட்டுமே வேலைக்கு ஆட்கள் அமர்த்தப் படுகின்றனர். தொழிலாளர் நலச்சட்டத்தின் கீழ் உள்ள உரிமைகளும் சலுகைகளும் பாதுகாப்பும் இவர்களுக் குக் கிடைப்பதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் தொழிற்சங்கங்கள் முடங்கி வருகின்றன.

இந்தச் சூழலில், தொழிலாளர்கள் ஒற்றுமையுடனும் உறுதியுடனும் போர்க்குணத்துடன் போராடினால் படிப்படியாக தங்கள் கோரிக்கைளை வென்றெடுக்க முடியும் என்பதை மூணாறு தேயிலைத் தோட்ட தமிழ்ப் பெண்களின் போராட்டம் உணர்த்துகிறது.

Pin It