(கற்பனையிலிருந்து அறிவு இயல் வரை சோசலிசத்தின் படிமலர்ச்சி)
எங்கெல்ஸ் எழுதிய Socialism: Utopian and Scientific என்று ஆங்கில மொழியில் தலைப்புடைய நூல் சுமார் 50 அல்லது 60 பக்கங்கள் உடைய சிறுநூல். இச்சிறுநூல் உலகம் முழுவதும் மிகவும் நன்கு அறியப்பட்ட நூல்.
மார்க்சியம் குறித்த சிறு அறிமுகம் கொண்டவரும்கூட இந்நூலை அறிவார்கள். மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்து களுக்குள் நுழைவதற்கு இந்நூல்தான் நுழைவாயில்.
இந்த நூல் முதலில் எழுதப்பட்ட மூலமொழியில், அதாவது ஜெர்மன் மொழியில் வெளிவரவில்லை; மார்க்ஸ்-எங்கெல்ஸ் போதித்த சோசலிசம் பற்றிய தொழிலாளர்களுக்கான ஒரு அறிமுகப் பிரசுரம் வெளியிட வேண்டும் என்ற நோக்கில், பால் லபார்க்கின் பிரெஞ்சு மொழியாக்கம்தான் 1880ஆம் ஆண்டு முதலில் வெளிவந்தது; அறிமுகச் சிறுவெளியீடு என்ற காரணத் தாலேயே, அடுத்தடுத்து உடனே ஜெர்மன், போலிஷ், இத்தாலி, ருஷ்ய, டேனிஷ், டச்சு, ருமேனிய, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பல பதிப்புகள் வெளிவந்தன.
“எனக்குத் தெரிந்தவரை வேறு எந்த சோஷலிச நூலும், 1848ஆம் ஆண்டின் எங்களது கம்யூனிஸ்டு அறிக்கையோ அல்லது மார்க்சின் மூலதனமோ கூட, இவ்வளவு அதிகமாய் மொழிபெயர்க்கப்பட்டிருக்கவில்லை” என்று 1892ஆம் ஆண்டு ஆங்கில மொழிப் பதிப்பின் முன்னுரையில் எங்கெல்ஸ் எழுதியுள்ளார். இக்கூற்று மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகளிடையே இந்நூலின் பிரபலத் தன்மையையும் வெகுசனத் தன்மையையும் புரிந்துகொள்ள உதவும்.
ஜெர்மனியில் மட்டும் இந்நூல் 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒரு பத்தாண்டுகளில், நான்குப் பதிப்புகளில் 20,000 படிகள் அச்சிடப்பட்டன என்று எங்கெல்ஸ் கணக்குத் தருகின்றார்.
அமெரிக்காவில் 1900-1908ஆம் ஆண்டுகளுக்குள் வெளியான ஆங்கிலப் பதிப்பில் 30,000 படிகள் விற்றுத் தீர்ந்தன என்று சிகாகோ சார்ளஸ் எச்.ஹெர் புத்தக நிறுவனம் வெளியிட்ட 1914ஆம் ஆண்டுப் பதிப்பாளர் குறிப்பு கணக்குச் சொல்கிறது.
இந்தக் கணக்குகள் ஒரு மாதிரிக்குத்தான். இதுவரை காலம், இந்நூல் உலகம் முழுவதும் பல கோடிக் கணக்கான படிகள் அச்சிடப்பட்டிருக்கும்.
ஒரு புத்தகத்திலிருந்து ஒரு சிறுவெளியீடு
இவ்வாறெல்லாம் கூறுவதால், இச்சிறுநூல் “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை” போன்று திட்டமிட்டு எழுதப்பட்ட பிரசுரப் பாங்கிலானது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்ற வாதப் பெருநூலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறுநூல். இதனைச் செய்தவர் மார்க்சின் மருமகன் பால் லபார்க்.
மார்க்சின் இரண்டாவது மகள் லாராவை மணந்தவர் பால் லபார்க்; பிரெஞ்சுத் தொழிலாளர் கட்சியின் தலைவர்களில் ஒருவர். மார்க்ஸ்-எங்கெல்ஸ் உருவாக்கிய சோசலிசத் தத்துவத்தைப் பிரான்சு நாட்டுத் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் ஒரு சிறுவெளியீடு கொண்டுவர எண்ணினார். இவ்வெளியீடு கொண்டுவர எண்ணிய காலம் 1880.
பாரிஸ் கம்யூன் தோல்விக்குப் பிறகு பிரான்சு நாட்டுச் சோசலிஸ்டுகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, மீண்டும் வேலை செய்யத் தொடங்கிய நேரம். பாரிஸ் கம்யூனிலும் சரி, அதற்கு முன்பும் பின்பும் சரி, பிரெஞ்சு சோசலிஸ்டு களிடையே மார்க்சியம் மிகக் குறைந்த அளவுக்கே செல் வாக்குப் பெற்றிருந்தது.
இதற்காகவே மார்க்சியம் குறித்து ஓர் அறிமுகப் பிரசுரம் கொண்டுவர எண்ணினார். இந்த வேளையில் இப்படியரு பிரசுரம் எழுத நேரம் ஒதுக்க முடியாத அளவுக்கு மார்க்சும் எங்கெல்சும் வேலைப் பளுவால் அழுந்தி இருந்தனர். அதனால் எங்கெல்ஸ் எழுதிய வாதப் பெருநூலிலிருந்து இச்சிறுநூலை லபார்க் பிரித்தெடுத்தார்.
அவ்வாதப் பெருநூல் மார்க்சுக்காக எங்கெல்ஸ் மேற்கொண்ட ஒரு பணி ஆகும். அதாவது, பாரிஸ் கம்யூன் தோல்வியுற்ற 1870ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் சோசலிஸ்டுகளிடையே மார்க்ஸ்-எங்கெல்ஸ் உருவாக்கிய சோசலிசத் தத்துவத்தை விமர்சனம் செய்து பெர்லின் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓய்கேன் டூரிங் 1870களில் பல நூல்களை வெளியிட்டார். இந்நூல்கள் ஓரளவுக்கு ஜெர்மன் சோசலிஸ்டுகளிடையே தாக்கம் செலுத்தவும் செய்தன.
இதனை ஜெர்மன் சோசலிஸ்டுகளில் இருந்த மார்க்சியக் குழுவினர் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கவனத்துக்குக் கொண்டுவந்து, டூரிங்குக்கு எதிராக வாதப் போர் தொடுக்க வலியுறுத்தினர். இவ்வேலையைச் செய்யும் அளவுக்கு நேரமில்லாமல் மூலதனம் நூலின் அடுத்தடுத்த தொகுதிகளின் வேலைகளில் மார்க்ஸ் ஈடுபட்டிருந்தார்.
அப்போதுதான் தொழிற்சாலை முதலாளி என்ற வாழ்க்கையிலிருந்து வெளியேறி, மீண்டும் முழுநேரம் பொதுவுடைமை இயக்க அரசியல்-அறிவுசார் பணிக்கு எங்கெல்ஸ் திரும்பி இருந்தார். மார்க்சும் எங்கெல்சும் பகிர்ந்து கொண்ட வேலைத்திட்டத்தின்படி, தத்துவத் துறையில் “இயக்க இயல்” பற்றி ஒரு பெருநூல் எழுது வதற்கான வேலைகளை எங்கெல்ஸ் மேற்கொண் டிருந்தார். மார்க்ஸ் எங்கெல்சை டூரிங்குக்கு மறுப்பு எழுதும்படி வேண்டிக் கொண்டார். அவரின் வேண்டு கோளின்படி, எங்கெல்ஸ் தன் வேலைகளை இடை நிறுத்தம் செய்துவிட்டு, சள்ளைப் பிடித்த வாதப்போரில் இறங்கினர்.
எங்கெல்சின் டூரிங்கு எதிரான வாதப் போர் கட்டுரைத் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக 1878-ல் வெளியிடப்பட்டது. இந்நூலை வாசித்த பால் லபார்க், மார்க்சியம் குறித்து பிரெஞ்சுத் தொழிலாளர் களுக்கான அறிமுகமாகக் கொண்டுவர எண்ணியிருந்த சிறுவெளியீடு இவ்விவாதப் பெருநூலில் இருப்பதைக் கண்டுகொண்டார். இதுகுறித்த எண்ணத்தை எங்கெல்சிடம் தெரிவித்து, குறிப்பிட்ட பகுதிகளை எங்கெல்சிடம் ஒழுங்கு செய்துதரக் கோரினார். எங்கெல்ஸ் ஒழுங்கு செய்து தந்த பின் பிரெஞ்சில் மொழியாக்கம் செய்து, சோசலிச ஆய்வேடு இதழில் தொடராகவும் பின்னர் நூலாகவும் லபார்க் வெளி யிட்டார்.
நட்பின் வெளிப்பாடாக அறிமுகத்திற்கு ஓர் அறிமுகம்
இவ்விடத்தில் ஒரு விசயம் கவனம் கொள்ளத் தக்கது. இச்சிறுநூல் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளிவந்த போது எங்கெல்ஸ் குறித்தும், அவருடைய பணிகள் குறித்தும், அவர் எழுதிய அச்சிறுநூலின் முக்கியத்துவம் குறித்தும் ஒரு சுருக்கமான, ஆனால் கனம் மிகுந்த அறிமுகக் குறிப்பு லபார்க்கின் பெயரில், 1880ஆம் ஆண்டு பிரெஞ்சுப் பதிப்பில் வெளியானது. வெகுகாலம் இக்குறிப்பு லபார்க் எழுதியாகவே கருதப்பட்டு வந்தது.
1950ஆம் ஆண்டுகளில் நடந்த மார்க்ஸ்-எங்கெல்ஸ் முழுஆக்கத் திரட்டு ஜெர்மன் மொழிப் பதிப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட காலத்தில்தான் லபார்க்குக்கு மார்க்ஸ் அனுப்பிய கடிதங்களிடையே, மார்க்சின் கையெழுத்தில் இந்த அறிமுகக் குறிப்பும் கிடைத்தது. பின்னர்தான் இது மார்க்ஸ் எழுதியது என்று உலகுக்குத் தெரியவந்தது.
இதிலென்ன விசேசம் என்கிறீர்களா? 1870ஆம் ஆண்டில் எங்கெல்ஸ் முழுநேரப் பொதுவுடைமை அரசியலுக்குத் திரும்பி வந்த போது, சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தில் 1840களில் எங்கெல்ஸ் ஏற்றுக்கொள்ளப்பட்ட மாதிரி ஏற்றுக் கொள்ளப்பட வில்லை. எங்கெல்சைப் பலர் ஒரு முதலாளி என்றே பார்த்தனர்; புறம் பேசினர்.
பாரிஸ் கம்யூன் தோல்விக்குப் பிறகு, சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்திற்குள் மார்க்சின் எதிராளிகள் பலர், எங்கெல்ஸ் என்ற முதலாளியுடன் சேர்ந்துகொண்டு இயக்கத்திற்குத் துரோகம் இழைப்பதாக நேரடியாகவும் புறம்பாகவும் மார்க்சைப் பழி பேசித் திரிந்தனர். இப்பேச்சுகள் எங்கெல்சைவிட மார்க்சுக்கு அதிகத் துன்பத்தை ஏற்படுத்தின.
‘தான் மூலதனம் நூல் ஆய்வுப் பணியை சிரமமின்றி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் நண்பன் தொழிற்சாலையை நிர்வகிக்கும் பணிக்குத் திரும்பினான். அதனால் இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகிவிட்டானே’ என்று மார்க்ஸ் மருகினார்.
அதனால்தான் இந்தக் கனமான அறிமுகக் குறிப்பைத் தம் நண்பன் குறித்து மார்க்ஸ் எழுதினார் போலும். இதுமட்டுமில்லாமல் இச்சிறுநூல் வெளிவருவதற்கு லபார்க் மட்டுமில்லாமல், மார்க்சும் ஆர்வம் காட்டியுள்ளார் எனவும் இக்குறிப்பின் மூலம் தெரிய வருகின்றது.
இச்சிறுநூல் “அறிவார்ந்த சோசலிசத்திற்கு மிகச்சிறந்த அறிமுகம்” என்று மார்க்ஸ் எழுதினார். மார்க்சின் சொற்கள் பலித்துவிட்டன. உலகப் பொது வுடமை இயக்கத்தில் இன்றுவரை இச்சிறுநூல் மிகச் சிறந்த அறிமுக நூலாக விளங்குகின்றது.
அறிமுகம் ஆழமாகுதல்
இச்சிறுநூலுக்குப் பிரெஞ்சு மொழி பேசும் உலகில் கிடைத்த பெரும் வரவேற்பை எங்கெல்ஸ் எதிர் பார்க்கவில்லை. இப்பெரும் வரவேற்பைக் கண்டுதான், எங்கெல்ஸ் ஜெர்மன் மொழியில் வெளிக்கொணரத் தூண்டுதல் பெற்றார். சோசலிச ஜனநாயகம் இதழ் ஆசிரியர் குழு, ஜெர்மன் தொழிலாளர்களுக்குத் துண்டு வெளியீடு எழுதித் தருமாறு கேட்ட போது, உடனே இந்நூலை எங்கெல்ஸ் கொடுத்தார்.
ஆனால் 1850களில் மார்க்சும் எங்கெல்சும் சிந்தித்தது போல இப்போது சிந்திக்கவில்லை. இப்போது அவர்களின் சிந்தனையில் பொருளாதாரம், அரசியல், தத்துவம் சார்ந்த பிரெஞ்சு, ஆங்கில மொழிக் கலைச்சொற்களும், புதிதாக அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட கலைச்சொற்களும் வந்து சேர்ந்திருந்தன.
இது ஜெர்மன் வாசகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் என எங்கெல்ஸ் நினைத்தார். இச்சிறுநூலின் முதலாவது ஜெர்மன் பதிப்புக்கு முன்னுரையில் எங்கெல்ஸ் பின்வருமாறு தன்னைத் தானே கேட்டுக்கொண்டார் : “முழுமையும் அறிவுத் துறைச் சார்ந்த இப்படைப்பு வெகுசன பிரச்சாரத்திற்கு எவ்வாறு பொருத்தமுடையதாக இருக்கும்? வடிவத் திலும் உள்ளடக்க அளவிலும் என்ன மாற்றங்கள் தேவைப்படுகின்றன?”.
இதற்கு ஒரு வெகுசன பிரசுரம் எழுதும்போதும், துறைசார்ந்த கலைச்சொற்கள், அதுவும் அயல்மொழிக் கலைச்சொற்கள் இடைவந்தால், தவிர்க்க முடிகின்ற அளவுக்கு அயல்மொழிக் கலைச்சொற்களைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்கிறார். ஆனால் கலைச்சொல் மொழியாக்கம் பொருளுணர்ச்சியைச் சிதைக்கக் கூடாது என்கிறார். இச்சிறுநூலில் ஜெர்மன் வாசகர்களைக் கவனத்தில் கொண்டு சில சிறு மாற்றங்களையும் செய்தார்.
இவ்வாறு செய்த மாற்றங்களில் மிக முக்கியமான மாற்றம் “மார்க்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தது ஆகும். இந்தக் கட்டுரை ஜெர்மன் உழவர்கள், நில உறவு, குறிப்பாக ஜெர்மனியில் நிலத்தில் நிலவிய கூட்டுடைமை வடிவங்கள் பற்றிய வரலாற்று விவரணை ஆகும்.
1870களுக்குப் பிறகு மார்க்சும் எங்கெல்சும் தொழிலாளர்களுக்கு அப்பால், உழவர்களிடையிலும் பொதுவுடைமை இயக்கம் செல்வாக்குப் பெற வேண்டியதன் அவசியத்தை அதிகமாக வலியுறுத்தி வந்தனர்; தொழிலாளர், உழவர்கள் கூட்டணி ஏற்பட்டால்தான் முதலாளியத்தை வெற்றிகொள்ள இயலும், ஆகவே இதற்காகக் கொள்கை நிலைப்பாடு களையும் செய்ய வேண்டிய நடைமுறை வேலைகளையும் வகுத்தளித்தனர். இப்பணியின் ஒரு பகுதியாக “மார்க்” பற்றிய கட்டுரையை எங்கெல்ஸ் எழுதிச் சேர்த்தார். உழவர்கள் குறித்த “அறிவு” தொழிலாளர் இயக்கத்தில் பரவ வேண்டும் என எங்கெல்ஸ் விரும்பினார். எங்கெல்ஸ் இறப்புக்குப் பிறகு வெளிவந்த ஆங்கிலப் பதிப்புகளில் இக்கட்டுரை சேர்க்கப்பட வில்லை; தனிச் சிறுநூலாக வெளியிடப்பட்டது.
இச்சிறுநூலின் நான்காவது ஜெர்மன் பதிப்பு மற்றொரு முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அது லெனின் ஏகாதிபத்தியம் என்ற கோட்பாட்டை உருவாக்குவதற்கு இருபதாண்டுகளுக்கு முன்னமே, அக்கோட்பாட்டை எங்கெல்ஸ் முன்னூகித்தது ஆகும். 1891ஆம் ஆண்டு இச்சிறுநூலின் நான்காம் பதிப்பில் செய்துள்ள மாற்றத்தைப் பற்றி முன்னுரையில் கூறும் போது, “இக்காலத்தில் Ôடிரஸ்ட்கள்Õ ஒரு முக்கியமான புதிய உற்பத்தி வடிவமாக தோன்றியுள்ளது பற்றியும் மிகச் சுருக்கமாக விவரித்துள்ளேன்” என்று முதலாளிய உற்பத்திமுறையின் ஏகாதிபத்தியக் கூறுகளின் தோற்றக் காலத்திலேயே அவற்றை அடையாளம்கண்டு கூறினார்.
இச்சிறுநூலின் ஆங்கில மொழியாக்கம் 1892ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூலுக்கு மிக விரிவான அறிமுகம் ஒன்றை ஆங்கிலத்தில் எங்கெல்ஸ் எழுதினார். நவீன பொருள்முதல்வாதத்தின் வரலாறு இங்கிலாந்திலிருந்து தான் தொடங்குகிறது, ஆனால் வரலாற்றுப் பொருள் முதல்வாதம் சொல்லைக் கேட்டாலே ஆங்கில மேற் குடியினர் ஏன் குமட்டுகின்றனர் என்று ஐரோப்பிய தொழிலாளர் இயக்க வரலாற்றின் பின்னணியில் ஐரோப்பிய தத்துவச் சிந்திப்பு வரலாற்றை எங்கெல்ஸ் மற்றுமொரு கோணத்தில் படம்பிடித்துக் காட்டுகிறார். இந்த அறிமுகவுரை 1892-93ஆம் ஆண்டுகளில் புதிய காலம் இதழில் ஜெர்மன் மொழியில் “வரலாற்றுப் பொருள்முதல்வாதம்” என்ற தலைப்பில் வெளிவந்தது. உண்மையில், இந்த அறிமுகவுரை வரலாற்றுப் பொருள் முதல்வாதத்திற்கு மிகச் சிறந்த அறிமுகம் ஆகும். அதனால்தான் இதுவும் பின்னர் சிறுபிரசுரமாக ஆங்கிலத்தில், இன்னும் பல ஐரோப்பிய மொழிகளிலும் கடந்த நூற்றாண்டு முழுவதும் வெளியிடப்பட்டது. இப்படி இச்சிறுநூலின் மூலக்கதை பல கிளைக் கதை களாக விரிந்து செல்லும் பாங்குடையது.
இரண்டு தமிழ் மொழியாக்கங்கள்
இச்சிறுநூலுக்கு இரண்டு தமிழ் மொழியாக்கங்கள் உள்ளன. முதலாவது மொழியாக்கத்தை 1957 ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் “கற்பனா சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற தலைப்பில் வெளி யிட்டது. அப்போது இந்நூலின் விலை 1 ரூபாய் 25காசுகள் ஆகும்.
இதனை மொழியாக்கம் செய்தவர் தோழர் வி. ராதாகிருஷ்ணன். இவர் ஜனசக்தியில் பணி யாற்றியவர். இம்மொழியாக்கத்திற்கு உதவியதற்காக எஸ்.இராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோருக்கு மொழிபெயர்ப்பாளர் நன்றி கூறியுள்ளார். வி.ராதா கிருஷ்ணன் மொழிபெயர்ப்பாளர் முன்னுரையில்,
“கடைசியாக, மொழிபெயர்ப்பைப் பற்றியும் ஒரு வார்த்தை. விஞ்ஞானத்தையும், பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் விளக்கும் இந்நூலை மொழிபெயர்ப்பது மிக, மிகச் சிரமமான விஷயமே. பல ஆங்கிலச் சொற் களுக்குச் சரியான தமிழ் சொற்கள் கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது.
ஒருசில இடங்களில் போதிய விளக்கமின்றி, புரிந்துகொள்வதற்குக் கஷ்டமாய் இருப்பதை வாசகர்கள் உணரலாம். ஒன்றுக்குப் பலமுறை படித்துத்தான் இந்தக் கடினமான நூலைப் புரிந்துகொள்ள முடியும்”
என்று மொழியாக்கம் குறித்து கூறியுள்ளார் (1957:8). டைலக்டிக்ஸ் என்பதற்கு தர்க்கவியல் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். மெட்டாபிசிக்ஸ் சொல்லை அப்படியே ஒலிபெயர்ப்பு செய்துள்ளார். இம்மொழியாக்கம் சிறுசிறு வாக்கியங்களில் சரளமாக அமைகிறது. ஆயினும், நூலின் நடுவே ஒரு பகுதி விடுபட்டுள்ளது. எவ்வாறாயினும் இவ்வெளியீடு மார்க்ஸ்-எங்கெல்ஸ் எழுத்துகளைத் தமிழில் வெளிக் கொணர வேண்டும் என்ற தமிழகப் பொதுவுடைமை இயக்கத்தின் ஆரம்பக் காலச் சுயமுயற்சிகளில் ஒன்று ஆகும்.
“கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற தலைப்பில் இந்நூலின் இரண் டாவது மொழியாக்கம் 1974ஆம் ஆண்டு மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டது. இம்மொழி யாக்கத்தை செய்தவர், மார்க்சியச் செவ்வியல்
எழுத்துகளைப் பெருமளவுக்கு மொழியாக்கம் செய்த ரா. கிருஷ்ணையா. இம்மொழியாக்கத்தில் இன்று புழக்கத்தில் உள்ள கலைச்சொற்கள்தாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கலைச்சொற்களை உருவாக்கியவர்களில் ஒருவர் ரா. கிருஷ்ணையா. பொதுவாக இம் மொழியாக்கம், மூலநூலின் மொழிநடைக்கு அணுக்க மாகவும், பொருள் தெளிவோடும் செல்கின்றது. இம் மொழியாக்கமே சிறு திருத்தங்களுடன், மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட மார்க்ஸ்-எங்கெல்ஸ் தேர்வுநூல்கள் தொகுதி 10-ல் இடம் பெற்றுள்ளது.
நூல்பரவலும் புரிதலும்
தமிழில் இச்சிறுநூல் தனிப்புத்தகமாக 1957 (NCBH), 1974, 1979 (முன்னேற்றப் பதிப்பகம்) ஆகிய ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. முன்னேற்றப் பதிப்பகம் 1979-க்குப் பின்னும் தனிநூலாக வெளியிட்டிருக்கலாம். ஆனால் இதுபற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை. 1989-ல் வெளிவந்த 10-ஆவது தேர்வுநூல் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. 1990களுக்குப் பிறகு சரவணபாலு பதிப்பகம் என்ற கோ.கேசவன் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த பதிப்பகம் இந்நூலுக்கு ஒரு பதிப்பைக் கொண்டுவந்தது. இப்போது ஒரு “புதிய மொழியாக்கம்” ஒன்று வெளிவந்துள்ளது. இந்தப் பதிப்புகளையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், 1950களுக்குப் பிறகு சராசரியாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை தமிழில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது தெரிகிறது.
பொதுவாக, தமிழகத்தில் மார்க்சிய ஆரம்ப வகுப்புகளில் வாசிக்கப்பட வேண்டிய நூல்களில் இதுவும் கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்கும். 2000ஆம் ஆண்டுகளில் இயக்கத்திற்கு அறிமுகமான புதிதில் எனக்கு வாசிக்கக் கொடுக்கப்பட்ட நூல்களில் இதுவும் ஒன்று. அப்போது இந்நூலைத் தனிப்புத்தகமாகவும்
10-ஆவது தேர்வுநூல் தொகுதியாகவும் நாமக்கல், சேலம் பழைய புத்தகக் கடைகளில் வாங்கியுள்ளேன். இதுவே இந்நூலின் பரவலைக் காட்டுகின்றது. ஏனென்றால், அதிகமாகச் சமூகத்தில் புழங்கிய புத்தகங்களே பழைய புத்தகக் கடைகளில் தாராளமாகக் கிடைக்கும்.
இச்சிறுநூலின் விநியோகம் பரவலாக இருந்தாலும், இந்நூல் பற்றிய ஆய்வுகள், உரையாடல்கள் எதுவும் தமிழில் நடக்கவில்லை; ஒரு மௌனமான வாசிப்பு நடந்தேறியுள்ளது. ஆனால் இயற்பியல், வேதியியல், விலங்கியல் போன்ற பிற நவீன இயற்கை அறிவியல் துறைகள் போன்று மார்க்சியமும் ஓர் அறிவியல் என்ற புரிதலுக்கு, இச்சிறுநூலின் தலைப்பும் சில பத்திகளும் ஆதாரமாகக் காட்டப்படுகின்றன. “மார்க்சியம் ஓர் அறிவியல்” புரிதல் சரியானதாஞ்?
மார்க்சியம் ஓர் அறிவியலா அல்லது அறிவு இயலா?
ஜெர்மன் மொழியில் இந்நூலின் தலைப்பு Die Entwicklung des Sozialismus von der Utopie zur Wissenschaft என்பது ஆகும். இத்தலைப்பை அப்படியே சொல்லுக்குச் சொல் மொழிபெயர்த்தால், “கற்பனையிலிருந்து அறிவு இயல் வரை சோசலிசத்தின் படிமலர்ச்சி” என்பது ஆகும். இதில் வரும் Wissenschaft என்ற ஜெர்மன் சொல் அடையாக நிற்கும்போது கிடைக்கும் அகராதிப் பொருள்கள் scientific, academic, scholarly, learned, academical, academically என்பன ஆகும். இந்தச் சொற்கள் எல்லாம் அறிவுத் துறை சார்ந்த, புலமைத் துறை சார்ந்த என்ற பொருள்களைத் தரவல்லன.
இவற்றில் குறிப்பாக scientifique என்ற ஆங்கிலச் சொல், scientific என்ற பிரெஞ்சுச் சொல்லிருந்து 16ஆம் நூற்றாண்டில் ஆங்கில மொழிக்கு வந்த சொல். இதற்கு “அறிவை உருவாக்குதல்” என்பது மூலப்பொருள். பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் இவ் ஆங்கிலச் சொல் முறையான, முறைமை சார்ந்த என்ற பொருள்களைத் தந்தன. பழைய தமிழில் ‘தத்துவ நூல்’, ‘கலை நூல்’, ‘சிற்ப நூல்’ என்ற சொற்றொடர்களில் வரும் ‘நூல்’ என்ன பொருளைத்தருகின்றதோ அந்தப் பொருளைத்தான் scientifique என்ற சொல் குறிக் கின்றது; இந்த ‘நூல்’ என்ற சொல் இக்காலத் தமிழில் ‘தத்துவவியல்’, ‘பொருளியல்’, ‘அரசியல்’ என்ற சொற்றொடர்களில் வரும் ‘இயல்’ போன்ற சொல். அதாவது முறையான, தருக்கப் பூர்வமான அறிவுத் துறையைக் குறிக்கும் சொல்.
இதுமட்டுமில்லாமல் மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுத்துகளில் wissenschaftlich என்ற ஜெர்மன் மூலச்சொல் தத்துவார்த்த என்ற பொருண் மையையே குறிக்கின்றது என்று ஹால் ட்ரேப்பர் என்ற மார்க்சிய அறிஞர் வாதிட்டுள்ளார் என்பதையும் நினைவில் கொள்வோம். இவையெல்லாம் இருக்கட்டும், நவீன இயற்கை அறிவியல் போன்று மார்க்சியமும் ஓர் அறிவியல் என்று சொன்னால் என்ன குடிமுழுகிப் போய்விடும்? என்ற கேள்வி நியாயமான கேள்வியே.
இதற்கு இரண்டு பதில்கள் உண்டு. ஒன்று முதலாளிய சமூக உருவாக்கத்தின் உடன் விளைவான நவீன இயற்கை அறிவியல் துறைகள் இயக்க மறுப்பியல் அடித்தளத்தைக் கொண்டவை, நவீன இயக்க மறுப்பியல் தத்துவப் போக்குகளைத் தோற்றுவித்தவை என்று மார்க்சியம் விமர்சனம் செய்கிறது. இதைப் பற்றி இச்சிறுநூலில் உள்ள எங்கெல்சின் கூற்று வருமாறு:
மெய்யான இயற்கை விஞ்ஞானம் பதினைந்தாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் ஆரம்பமாயிற்று; அது முதலாய் மேலும் மேலும் கூடுதலான வேகத்தில் முன்னேறிவந்துள்ளது. இயற்கையை அதன் தனித்தனிப் பிரிவுகளில் பகுத்தாய்தல், வெவ்வேறு இயற்கை நிகழ்ச்சிப் போக்குகளையும் பொருள்களையும் திட்ட வட்டமான வகுப்புகளில் வகை பிரித்தல், அங்ககப் பொருள்களின் பல்வேறு வடிவங்களிலும் அவற்றின் உள் அமைப்பியலை ஆராய்தல் - இவைதாம் இயற்கையைப் பற்றிய நமது அறிவு கடந்த நானூறு ஆண்டுகளில் பீடு நடை போட்டுப் பிரமாதமான முன்னேற்றம் கண்டதன் அடிப்படை நிபந்தனைகள்.
ஆனால் இவ்விதமான ஆய்வு முறையானது, இயற்கைப் பொருள்களையும் நிகழ்ச்சிப் போக்குகளையும் பிரம்மாண்டமான முழு அமைப்புடனும் அவற்றுக்குள்ள தொடர்புகளிலிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தி வைத்து அவற்றைக் கண்ணுறும் பழக்கத்தை, அவற்றின் இயக்கத்தில் அல்லாது உறக்கத்தில், சாராம்சத்தில் மாறிக் கொண் டிருக்கும் மதிப்புருக்களாய் அல்லாது நிலையாய் இருக்கும் மாறிலிகளாய், அவற்றின் உயிருள்ள வாழ்வில் அல்லாது மரண நிலையில் வைத்துக் கண்ணுறும் பழக்கத்தை நமக்கு மரபுரிமையாய் விட்டுச் சென்றுள்ளது. பொருள்களைக் கண்டறிவதற்கான இந்த வழிமுறையை பேக்கனும் லாக்கும் இயற்கை விஞ்ஞானத்திலிருந்து தத்துவவியலுக்கு மாற்றிய போது, அது கடந்த நூற்றாண்டிற்கு உரிய தனி இயல்பாகிய குறுகிய, மாறா நிலைவாத [இயக்க மறுப்பியல் அல்லது இயங்காவியல்]ச் சிந்தனை முறையைத் தோற்றுவித்தது (1979:84).
ஆகவே மார்க்சியத்தை இந்த “அறிவியல்கள்” போன்ற ஓர் அறிவியல் என்று சொல்லமுடியாது. இரண்டாவது பதில், இயக்க இயல் பொருள்முதல்வாதம் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட, வர்க்கமற்ற புதுயுக உருவாக்கத்துடன் இணைத்து கொண்டுள்ளது மார்க்சியம். அதை ‘அறிவியல்’ என்று சொல்வது, சூத்திரங்களின், முன்முடிவுகளின் தொகுப் பாகக் கருத வைக்கின்றது; நிதர்சமான சூழல்களை முறையாகப் பகுப்பாய்வு செய்து நடைமுறைகளை வகுத்துக்கொள்ளும் இயக்க இயல் முறையைக் கருத்தில்கொள்ளாது விட்டுவிடுகின்றது.
சரி, ஏன் எங்கெல்ஸ் இயக்க இயலை நவீன இயற்கை அறிவியல் கண்டுபிடிப்புகள் மெய்ப்பிக்கின்றன என்று வாதிடுகின்றார். இதற்கான எங்கெல்சின் பதில் பின்வருமாறு:
‘கற்றறிந்த’.. வாசகர்களுக்கு [ஜெர்மன் பூர்ஷ்வா வரலாற்றியலாளர்களுக்கு], சோஷலிசத்தின் வளர்ச்சி வரலாற்று விவரணையில் கான்ட்-லாப்ளாஸ் அண்ட வியலையும், நவீன இயற்கை அறிவியலையும் டார்வினையும், ஜெர்மன் செவ்வியல் தத்துவத்தையும் ஹெகலையும் பற்றி குறிப்பிடுவது ஆச்சரியம் அளிப் பதாக இருக்கும். ஆனால் அறிவு இயல் சோஷலிசம் என்பது ஜெர்மனியில் உயிரோட்டமாக உள்ள பிரக்ஞை பூர்வமான இயக்க இயல் மரபில் வாழ்ந்துகொண் டிருக்கின்ற செவ்வியல் தத்துவக் கருத்தமைவிலிருந்து மட்டுமே தோன்ற முடிகிற, அடிப்படையில் ஒரு ஜெர்மன் விளைபொருளே ஆகும். வரலாறு பற்றிய பொருள் முதல்வாதக் கருத்தாக்கம், பாட்டாளிகளுக்கும் பூர்ஷ்வாக்களுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டத்தில் அதனுடைய கையாளுகை இயக்க இயல் பற்றிய சிந்தனை வழியாக மட்டுமே சாத்தியப்பட முடியும். மாபெரும் ஜெர்மன் தத்துவவாதிகள் பற்றியும் இயக்கஇயல் பற்றியுமான நினைவு அழிந்துபோய்விட்ட, வெற்றுப் புலமைப்பாட்டுச் சதுப்பு நிலத்தில் பிழைத் திருக்கின்ற ஜெர்மன் பூர்ஷ்வா பள்ளிக்கூட ஆசிரியர் களுக்காகவே, இயக்கஇயல் மெய்மையின் உறுதிப் பாட்டிற்கான சான்றாக நவீன இயற்கை அறிவியலைக் கொண்டுவந்து காட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளோம்.
இந்தக் கூற்று “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற நூலின் முதலாம் ஜெர்மன் மொழிப் பதிப்பின் முன்னுரையில் எங்கெல்ஸ் எழுதியது. இது நவீன இயற்கை அறிவியல் கண்டு பிடிப்புகள் குறித்து எங்கெல்ஸ் ஆர்வம் காட்டி யதற்கான காரணத்தை இன்னும் தெளிவாகக் கூறுகின்றது. ஆகவே நவீன சோசலிசத்தை, அதாவது மார்க்சியத்தை நவீன இயற்கை அறிவியல் துறை நிலைக்குக் கிழிறக்குவது கொச்சைப்படுத்துவது ஆகும்; மார்க்சியத்தை அறிவு இயலாகக் கற்பதற்குத் தீங்கிழைப்பதும் ஆகும். முதலாளிய சமூக அமைப்பின் சமூக, இயற்கை அறிவு இயல்களுக்கு மாறான, எதிரான ஒரு அறிவு இயல் மார்க்சியம் ஆகும்.
சிமோன், ஃபூரியே, ஓவன் ஆகிய “மாபெரும் மெய்யான மனிதர்”களின் கற்பனையாக இருந்த சோசலிசத்தை, மார்க்ஸ் ஒரு புதுயுக அறிவு இயலாக மாற்றினார். இந்த வரலாற்றையே, “கற்பனாவாத சோஷலிசமும் விஞ்ஞான சோஷலிசமும்” என்ற எங்கெல்சின் நூல் கூறுகின்றது.