மதவெறி சக்திகளின் திட்டமிட்ட சதி

திருவரங்கத்தில் நடந்த பெரியார் சிலை உடைப்பு - மதவெறி சக்திகள் கடந்த பல ஆண்டுகளாகவே நடத்தி வரும் வன்முறைகளின் தொடர்ச்சியேயாகும். கொதித்துப் போன தமிழர்கள் - இப்போதுதான் முதன்முதலாக - தன்னெழுச்சியாக எதிர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர் என்று - கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர்கள் இராம கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அறிக்கை விவரம்:

திருவரங்கத்தில் பெரியார் சிலையை மதவெறி சக்திகள் உடைத்தது - திட்டமிட்ட சூழ்ச்சியாகும். தமிழ்நாட்டில் - மதக் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, திட்டமிடப்பட்டு இது நடந்துள்ளது. பெரியார் சிலைக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பை எதிர்த்து குமுறிய பெரியார் உணர்வாளர்கள் - தன்னெழுச்சியாக சில இடங்களில் எதிர்த்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். குறிப்பாக - பெரியார் சிலை உடைக்கப் பட்டதற்காக, இனிப்புகள் வழங்கி, மதவெறி சக்திகள் கொண்டாடிய பகுதிகளில் மட்டுமே இது நடந்துள்ளது. இந்த எதிர் நடவடிக்கைகள், சட்டத்துக்குப் புறம்பானவை என்றாலும், தமிழர்களின் தன்மானத்துக்குப் போராடிய தலைவர் மீது கொண்டுள்ள உணர்வின் பற்றின் வெளிப்பாடாகும்.

சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவது பெரியார் திராவிடர் கழகத்துக்கு உடன்பாடானது அல்ல; ஆனாலும் இத்தகைய செயலுக்குத் தூண்டுகோலாக - மதவெறி சக்திகள் தொடர்ந்து செயல்படுவதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கடந்த பல ஆண்டுகளாகவே, நாகை, காஞ்சி, திண்டுக்கல் என்று பல பகுதிகளில், தொடர்ந்து பெரியார் சிலையை, மதவெறி சக்திகள் அவமதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

பெரியார் இயக்கப் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் விளைவித்து, தடைப்படுத்தினார்கள்.

போரூரில் - திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்ட மேடையிலேயே புகுந்து வெட்டினார்கள்.

அதே போரூரில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் கலைவிழாவை கலவரம் செய்து தடுத்தார்கள்.

திண்டுக்கல்லில் - பெரியார் கருத்துகளை - செய்திப் பலகையில் எழுதி வந்த திராவிடர் கழகத் தோழரை, அரிவாளால் வெட்டினார்கள்.

கோபி அருகே சதுமுகையில், இந்து முன்னணியினரே பிள்ளையார் சிலைகளை உடைத்து விட்டு பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது பொய்ப் புகார் தந்தனர். பிறகு, விசாரணையில் உண்மைகள் கண்டறியப்பட்டு, இந்து முன்னணி அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பாரதி இல்லத்தில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய பெரியார் விழாவில் கலவரம் விளைவித்தனர்.

சத்ய மங்கலம் அருகில் தெம்பநாய்க்கன்பாளையம், மணக்கடவு, குண்டடம் ஆகிய ஊர்களில் - திராவிடர் கழகப் பிரச்சார வாகனங்களை வழிமறித்துத் தாக்கினர்.

போரூரில் கடந்த மாதம் பேராசிரியர் நரேந்திர நாய்க் நிகழ்த்தவிருந்த ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடைபெற விடாது தடுத்தனர்.

தில்லை நடராசர் கோயிலில், தமிழில் தேவாரம் பாடிய 80 வயதுடைய ஓதுவார் ஆறுமுகம் என்பவரை தீட்சதர்கள் கோயிலுக்குள்ளே அடித்து, மண்டையை உடைத்தனர். இன்று வரை, அக் கோயிலுக்குள் தேவாரம் பாட தீட்சதர்கள் அனுமதிப்பதில்லை.

இப்படி பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டலாம். மத உணர்வை, மதவெறியாக மாற்ற முயலும், இந்த மதவெறி சக்திகள் - சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, வன்முறைகள் நடத்திய போதெல்லாம், பெரியார் கொள்கையாளர்களும், தமிழின உணர்வாளர்களும், ஜனநாயகபூர்வமான எதிர்ப்புகளைத்தான் தெரிவித்து வந்தார்களே தவிர, ஒரு போதும் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயல்படவில்லை.

இந்த நிலையில் திருவரங்கம் பெரியார் சிலையையும் இடித்த போது, அதற்கான எதிர் நடவடிக்கைகளை, சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். திருவரங்கத்தில் பெரியார் சிலை இடிப்பை தனித்துப் பார்க்க முடியாது. கடந்த கால மதவெறி சக்திகளின் வன்முறைகளின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டும்.

குஜராத்தில்  வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு முஸ்லீம்களைத் தேடிப் பிடித்துக் கொன்று குவித்தார்கள். பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அவர்கள் மீது பொடா சட்டம் பாய்ந்தது. மசூதியை இடித்ததால் கொதிப்படைந்து, தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடிய முஸ்லீம்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டனர்.

வன்முறையை திட்டமிட்டு நடத்துவது மதவெறி சக்திகள். ஆனால், அதற்கு எதிர்வினை நடக்கும் போது, அவைகள்தான் வன்முறையாகவும், பயங்கரவாதமாகவும் சித்தரிக்கப்படுகின்றன. பெரியார் திராவிடர் கழகம் இந்த நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. இவை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தமிழக அரசுக்கு  சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கக் கூடாது என்பதில் பெரியார் திராவிடர் கழகம் உறுதியாக இருக்கிறது. இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில், களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்த இயக்கம் பெரியார் திராவிடர் கழகம்.

ஜெயலலிதா ஆட்சியை - பெரியார் கொள்கைக்கு எதிராக  கி.வீரமணி தலைமையிலான திராவிடர் கழகம் ஆதரித்த போது அதை எதிர்த்து, திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்களால் உருவாக்கப்பட்டது தான் ‘பெரியார் திராவிடர் கழகம்’.

இப்போது பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோரெல்லாம், திராவிடர் கழகத் தலைமையால் தி.மு.க. ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தான். எனவே, தமிழக அரசுக்கு சட்டம் ஒழுங்கு நெருக்கடியை உருவாக்குவது பெரியார் திராவிடர் கழகத்தின் நோக்கமல்ல.

அதே நேரத்தில், சென்னையில் அயோத்தியா மண்டபம் தாக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கழகத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் தபசி குமரன் பொய்யாக சேர்க்கப்பட்டிருக்கிறார். தயானந்த சரசுவதியின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, பிறகு விசாரணையில் அவரை வழக்கிலிருந்து நீக்கியுள்ளது காவல்துறை. அதே போல் தபசி குமரன் மீது தொடரப்பட்ட பொய் வழக்கையும், ஏன் நீக்கக் கூடாது என்பதே நமது கேள்வி. காவல்துறையின் இந்தப் பொய் வழக்கை பெரியார் திராவிடர் கழகம் கண்டிக்கிறது.

பெரியார் தொண்டால் தன்மானம் பெற்று தலைநிமிர்ந்து நிற்கும் நன்றியுள்ள ஒவ்வொரு தமிழனும் மதிக்கக்கூடிய ஒரு மகத்தான தலைவருக்கு தொடர்ந்து பெரியார் மண்ணில் இழைக்கப்பட்டு வரும், அவமதிப்பு வன்முறைகளுக்கு எதிரான எதிர் விளைவாகவே தமிழர்கள் இந்த நிகழ்வுகளைக் கருதவேண்டும்; கருதுவார்கள்.

தொடர்ந்து எந்த வன்செயலுக்கும் இடமின்றி அமைதி காத்திட தோழர்களையும் உணர்வாளர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

Pin It