ஐயா சுபவீ அரண் செய் வலையொளிக்கு "சுப்ரமணிய சாமிகளின் திமிரைக் காலம் அடக்கும்" எனும் தலைப்பில் தந்த நேர்காணலில் தோழர் தியாகு குறித்துச் சொன்ன சொற்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டும். வரலாறு எப்போதும் தன் தீர்ப்பை வழங்கத் தவறாது. அப்படி வழங்கும் காலத்தில் சுபவீயின் சொற்கள் தொலைந்து போய் விடாதிருக்க இந்தப் பதிவு பேருதவி புரியும். வரலாறு சுபவீக்கும் ஒரு தீர்ப்பு வழங்கும். அதற்குத் தோழர் தியாகு குறித்த அவரின் சொற்களாலும் அவர் மதிப்பிடப்படுவார்.

subhaveeஐயா சுபவீயை இனி எங்கள் தலைமுறை கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்கும். நான் கேட்கத் தொடங்குகிறேன். என்னுடைய 18 - 19ஆவது வயதில் தமிழ்த்தேசியம் நெருப்புப் பொறியாக என்னுள் விழுந்ததற்கு ஐயா சுபவீ ஒரு காரணம். அவரின் பேச்சும் எழுத்தும்தான் கூர்மையாக ’நான் இந்தியன் இல்லை, தமிழன்’ என என்னை உணரச் செய்தது. கோட்பாட்டு வகுப்பின் மாணவனாக அமரும் முன்னமே தமிழின உணர்வு என்னுள் பீறிடச் செய்தது சுபவீயின் தமிழ்!

ஒரு காலத்தில் ஒழுங்கீனத்தின் மொத்த உருவமாக இருந்த போதே உணர்ச்சி மேலீட்டில் பாரதியாக இருந்த நான் பகத்சிங் பாரதி ஆனேன். அதற்குக் காரணம் ஐயா சுபவீ எழுதிய ’பகத்சிங்கும் இந்திய அரசியலும்’ நூல். தமிழ்த் தேசியத்தின் மீது புரிதல் வரும் முன்னால் இந்தியன் என்பதும் ஜெய்ஹிந்த் என்பதும் அருவருப்புக்கு உரியதாக என்னுள் ஆகிப் போனதற்கு காரணம் அன்றைய சுபவீயின் தமிழ்ச் சீற்றம்! இதனை விரித்து எழுத இது இடமில்லை. ஒன்றைத் தொடக்கத்திலேயே சொல்லி விட வேண்டும். தோழர் தியாகு பெயரைத் திரும்பப் திரும்பப் பயன்படுத்துவது இந்த மறுமொழிக்குத் தவிர்க்க இயலாத ஒன்று. தோழர் தியாகு மீதான சுபவீயின் கருத்துகளுக்கு தியாகுவின் கருத்துகளே அடிப்படை. தியாகுவின் கருத்துகள் அனைத்தும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் கருத்துகள்தாம். தியாகு மீது வைக்கப்படும் மறுப்புகள் அல்லது அவதூறுகள் இயக்கத்தின் மீதானவை என்றே பொருள் கொள்ள முடியும். தோழர் தியாகு எனக் குறிப்பிடுவதும் தியாகுவுக்காக வாதிடுவதும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைக் குறிப்பிடுவதுதான்; இயக்கத்து நிலைப்பாடுகளுக்காக வாதிடுவதுதான்.

ஐயா சுபவீ அரண் செய் நேர்காணலில் தோழர் தியாகு குறித்து இரண்டு இடங்களில் இப்படிச் சொல்லியுள்ளார்:

1) சாதியைப் பாதுகாப்பதற்காகவே திராவிடத்தை எதிர்க்கிறார்கள். திராவிட எதிர்ப்பு என்பது மறைமுகமான பார்ப்பனிய ஆதரவு. அதனை யார் செய்தாலும். . . நான் பார்க்கிறேன். . . திராவிடம் குறித்து நான் எழுதிய செய்திகளுக்குத் தோழர் தியாகு மறுப்பெழுதிக் கொண்டிருக்கிறார். பாரதிய சனதாவின் வாட்ஸ்அப் குழுவில் தியாகுவுக்கு ஒரே பாராட்டு மழை. எப்படி மணியரசனை பாண்டே பாராட்டுகிறாரோ அப்படி தியாகுவைப் பாராட்டுகிறார்கள். ஹெச். ராஜா, நாராயணன் திருப்பதி, பாண்டே, மணியரசன், சீமான், தியாகு ஒரே நேர்கோட்டில் நடக்கிறார்கள். திராவிடத்தை எதிர்ப்பதும் ஒழிப்பதும் மட்டுமே இவர்களின் நோக்கம். திராவிடத்தை உயர்த்திப் பிடிப்பது மட்டும்தான் நமக்கு நோக்கம். நமக்கு ஒன்றும் சிக்கலில்லை. எதிரிகளிடத்தில் போயிருப்பவர்கள் வெட்கப்பட வேண்டும்.

2) திராவிடத்தை எதிர்ப்பதே தங்களின் குறிக்கோள் என்றிருக்கிறார்கள். நேரடியாகவே தோழர் தியாகுவிடத்திலே கேட்டேன். திராவிடத்தை எதிர்ப்பதில் நீங்கள் காட்டுகிற முனைப்பை பத்ம சேஷாத்ரி பாலபவனில் நடந்த அந்த நிகழ்வு பற்றி வாய் திறக்கவே இல்லையே, என்ன காரணம்? பாண்டே வருத்தப்படுவாரா? என்று கேட்டேன். சுப்ரமணிய சுவாமி, பாண்டே பத்ம சேஷாத்திரிக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள். . . அவர்கள் அவர்களைப் பாதுகாப்பதில் கவனமாக இருக்கிறார்கள். இவர்கள் அவர்களுக்குத் துணை போகிறார்கள். அவர்களை விட இவர்கள்தான் தமிழினத்தின் எதிரிகளாக இருக்கிறார்கள் என நான் கருதுகிறேன்.

இந்த இரண்டு விடைகளுக்குரிய இரண்டு வினாக்களுமே தியாகுவைப் பற்றியதன்று. இரண்டிலுமே வலிந்து தியாகுவை இழுத்துக் கொள்கிறார். நல்லது. இவற்றுக்கான அடிப்படைகளைக் குறிப்பிட்டு விட்டு மறுப்புக்குச் செல்ல வேண்டும்.

Dravidian stock என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் குறிப்பிட்டதைத் தொடர்ந்து ஆதன் வலையொளி தோழர் தியாகுவை நேர்காணல் செய்கிறது. அவர்கள் அதற்கிட்ட தலைப்பு:

*நான் திராவிடர் அல்ல தமிழர்!* இந்த நேர்காணலைக் கண்ணுற்ற ஐயா சுபவீ Dravidian Professional Forum நடத்திய இணையக் கருத்தரங்கில் பெயர் குறிப்பிடாது பதிலளிக்கிறார். அதே உரை தணிக்கை செய்யப்பட்டு முரசொலியில் ஒரு கட்டுரையாக வெளிவருகிறது. அந்த உரைக்கு மறுப்பாகத் தோழர் தியாகு சுபவீக்கு திறந்த மடல் எழுதுகிறார். முதல் இரண்டு மடல்கள் வந்த நிலையில் சுபவீ நம் விவாதத்துக்குரிய நேர்காணலின் குறிப்பிட்ட பகுதியில் தியாகு குறித்து மேற்சொன்னவாறு குறிப்பிடுகிறார். இதன்பின் தோழர் தியாகுவின் மூன்றாவது திறந்த மடல் வெளியாயிற்று. அது அத்தோடு முற்றிற்று.

திராவிடர் அல்ல தமிழர் என்ற நேர்காணலிலும் சரி, ஐயா சுபவீக்கு எழுதிய இரண்டு மடல்களிலும் சரி, தோழர் தியாகு திராவிடத்தை எதிர்க்கவில்லை. அதாவது திராவிடக் கருத்தியலை எதிர்த்ததாக ஒன்றைக் கூட எவரும் காட்ட முடியாது. மொழியால், இனத்தால், நாட்டால் நான் தமிழர்தானே தவிர திராவிடர் அல்ல என்கிறார் தியாகு. இதையேதான் சுபவீயும் சொல்கிறார். மொழியால் இனத்தால் நாட்டால் நாம் தமிழர்கள்தான். திராவிடம் என்பது மொழியையோ இனத்தையோ குறிப்பதல்ல. இன்று அதுவொரு கருத்தியல். ஒரு சித்தாந்தம் (ideology) என்கிறார் சுபவீ. கருத்தரங்கிலும் சரி, முரசொலி கட்டுரையிலும் சரி சுபவீ இதையேதான் சொல்கிறார். இந்த நிலைப்பாட்டில் சுபவீயும் தியாகுவும் ஒன்றுபட்டே நிற்கின்றனர். கருத்தியல் என்ற அடிப்படையிலும் தோழர் தியாகு திராவிடத்தை எதிர்க்கவில்லை; எதிர்த்ததும் இல்லை. தமிழ்த் தேசியத்தின் உருத்திரிந்த வடிவமே திராவிடம். தமிழ்த் தேசியத்தை உள்ளடக்கமாகக் கொண்டதே திராவிடம். திராவிடம் எனும் முட்டைக்குள்ளிருந்து ஓடுடைத்து வெளிவந்ததே தமிழ்த் தேசியம். . . இவை அனைத்தும் தியாகுவின் அழுத்தமான கருத்துகள். நேற்றும் இன்றும் மட்டுமல்ல, நாளையும் இவற்றில் தோழர் தியாகுவுக்கு மாற்றமில்லை.

ஒட்டுமொத்தத் தமிழினத்தையே திராவிட இனம் என அழைப்பதை ஏற்க முடியாது என்பதையும், இன்றைய திராவிடம் அன்றிருந்த உள்ளடக்கத்திலிருந்து நீர்த்துப் போய் விட்டது என்பதையும் சுட்டிக்காட்டிக் குற்றாய்வு செய்கிறார். இந்தக் குற்றாய்வுகளில் ஒன்றையேனும் எடுத்து வைத்து ஐயா சுபவீ ஏன் மறுப்புச் சொல்ல முற்படவில்லை?

எல்லாவற்றையும் விட தியாகு - சுபவீ விவாதத்தில் முகன்மையானது ஒன்றுண்டு. அதுதான் குறிப்பிட்ட இந்த விவாதங்களில் குறிப்பிடத்தக்கது. ஐயா சுபவீ தனது உரையிலும் கட்டுரையிலும் திராவிடம் என்பது இனம் அல்ல. அதுவொரு கருத்தியல் என்பதையே மையமாக வைத்து அதனை நிறுவுகிறார். அறிஞர் அண்ணா We belong to Dravidian stock எனக் குறிப்பிட்டு 1962ஆம் ஆண்டு ஆற்றிய மாநிலங்களவை உரையைக் குறிப்பிட்டுத் தனது கருத்தை அண்ணா வழியாகவும் நிறுவ முற்படுகிறார். . . . "and it's only because I consider Dravidians have something concrete, something distinct, something different to offer to the world at large'" என்கிற வரிகளைச் சுட்டிக்காட்டி இதில் அண்ணா "உலகத்தவர்க்குக் கொடுப்பதற்கு மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறுபட்டவை திராவிடர்களிடம் இருப்பதாலேயே என்னை நான் அப்படி (Dravidian stock) அழைத்துக் கொள்கிறேன். " இதனை எடுத்துக்காட்டி, பாருங்கள் அண்ணா திராவிடத்தைக் கருத்தியலெனக் கொண்டார் என்று தனது நிலைப்பாட்டிற்கு வலிமை சேர்க்கப் பார்க்கிறார் ஐயா சுபவீ.

தியாகு அதே உரையில் அண்ணாவின் கூற்றை எடுத்து அண்ணா திராவிடத்தைக் கருத்தியலாக முன்வைக்கவில்லை. நாடு இனம் என்ற பொருளிலேயே கையாண்டார் என்று எடுத்துக்காட்டுகிறார். "I claim Sir, to come from a country, a part of India now, but which I think is of a different stock, not necessarily antagonistic. I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian…. ”

“நான் ஒரு நாட்டிலிருந்து வருகிறேன், அது இப்போது இந்தியாவின் பகுதியாக உள்ளது. ஆனால் அது வேறு கூட்டத்துக்குரிய நாடெனக் கருதுகிறேன், அது பகைமை கொண்டதாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. நான் திராவிடக் கூட்டத்தைச் சேர்ந்தவன். என்னைத் திராவிடன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். ”

அண்ணா அவ்வுரையில் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் எனத் தெளிவாகச் சொல்கிறார். பெரியார் 1956 வரைக்கும் அண்ணா அதன் பின்னும் திராவிடத்தை நாடு என்ற பொருளில் கையாண்டவர்கள்தான். திராவிட நாடு திராவிடருக்கே எனும் முழக்கம் பிறகு எங்கிருந்து வந்தது. ஐயா சுபவீ தன்னுடைய நிலைப்பாட்டுக்கு வலுச்சேர்க்க அண்ணாவின் உரையை ஏன் மறைத்துப் பேச அல்லது எழுத வேண்டும். திராவிடம் ஒரு கருத்தியல் என வலியுறுத்தட்டும். நிலைப்படுத்தட்டும். அதற்காக, பாருங்கள் அண்ணாவும் அப்படித்தான் கருதினார் எனும் பொருளில் அதற்குரிய மேற்கோளைக் காட்டிக் குறிப்பிடுவது நியாயமில்லையே! சொல்லப்போனால் சுபவீ காட்டும் "மிக உறுதியான, மிகத் தெளிவான, மிக வேறுபட்ட" என்ற சொற்றொடரிலிருந்தும் கூட சுபவீ குறிப்பிடுவது போல் திராவிடம் என்பது கருத்தியல் என அண்ணா சொன்னதாகப் பொருள் கொள்ள முடியாது. முழு உரையையும் காண வேண்டும். அண்ணா சுபவீக்கு துணைவர மாட்டார். அது குறித்துத் தனித்து இறுதியான கோட்பாட்டு மறுப்பில் பேசப் போகிறோம். நிற்க!

அண்ணாவின் குறிப்பிட்ட ”நான் திராவிட நாட்டிலிருந்து வந்திருக்கிறேன்” என்பதை சுபவீ தனது கருத்துக்காகக் கண்டும் காணாமல் விட்டது ஏன்? தியாகு இதைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்புகிறார். இல்லை, நான் மறைக்கவில்லை தியாகு பொய் கூறுகிறார் என்றோ, இல்லை, நான் குறிப்பிடாததற்கு இன்ன காரணம் என்றோ விளக்கமோ தர முயலவில்லை ஐயா சுபவீ.

தோழர் தியாகுவின் எந்தக் கருத்தையும் எடுத்து வைத்து விடையளிக்காமல் அண்ணாவின் கருத்தையே மாற்றிப் பொருள் கொடுப்பது குறித்துச் சுட்டிக்காட்டியும் விளக்கமளிக்காமல் தியாகு திராவிடத்தை எதிர்க்கிறார் எனப் பொத்தம்பொதுவாகக் கூறிச் செல்வது அறம் இல்லையே ஐயா!

பாரதிய சனதாவினர் தியாகுவைப் பாராட்டுகிறார்களாம்! வாசுபேயை ஜென்டில்மேன் எனக் குறிப்பிட்டவர் கலைஞர். எஸ். வி. சேகரைப் புரட்சி நடிகர் என்றவர் கலைஞர். பாசக ஒன்றும் தீண்டத்தகாத கட்சியல்ல என்றவர் கலைஞர். பாசகவோடு கூட்டணி கொண்டிருந்த போது குசராத் படுகொலையை மறைக்கும் நோக்கில் நரேந்திர மோதி காந்தி நகரில் நடத்திய பேரணியில் பழனிமாணிக்கத்தை கலந்து கொள்ளச் செய்து கூட்டணி தர்மம் காத்தவர் கலைஞர். பாபர் மசூதி தீர்ப்பு அண்மையில் வந்தபோது மக்கள் விருப்பு வெறுப்புக்கு இதை உட்படுத்தாமல் இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றவர் மு. க. ஸ்டாலின். ஏன், இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்னால் கூட, ”அன்று வாசுபாயின் தலைமையிலான பாசக ஆரோக்கியமானதாக இருந்தது, அதனால் கூட்டணி கண்டோம்; நரேந்திர மோதி தலைமையிலான பாசக அப்படியில்லை” என்றார் மு. க. ஸ்டாலின். பாசகவைக் கலைஞர் பாராட்டுவது மட்டும் நிகழவில்லை, அவர்களோடு கூடிக் குலாவி இருந்தது திமுக. இன்று வரை அது தவறு என திமுக வெளிப்படையாகச் சொன்னதில்லை. பாபர் மசூதியை இடித்தவர்களோடு, குசராத் படுகொலையை நிகழ்த்தியவர்களோடு, சாதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தத்துவம் கொண்டவர்களோடு, பாசிசத்தை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருப்பவர்களோடு, பார்ப்பனீயத்தை அரியணையில் வைத்து ராமராச்சியம் அமைக்க நிற்பவர்களோடு ஒரே நேர்கோட்டில் நடந்ததே திமுக. இந்தத் திமுக ஆதரவுதான் திராவிடம் என உயர்த்துப் பிடிப்பது தந்தை பெரியாரைச் சிறுமைப்படுத்துவதாகும். எதிரிகளிடம் போயிருந்தவர்களை, இது வரை அதற்கு மக்கள் மன்றத்தில் மன்னிப்புக் கேட்காதவர்களைத் தூக்கிச் சுமப்பதற்கு ஐயா சுபவீ வெட்கப்பட வேண்டும்.

தியாகுவைப் பாராட்டும் பாசகவினர்க்கு சுபவீயே பதில் சொல்லியிருக்கலாம். நாங்களாவது மாநில சுயாட்சி என்கிறோம், தியாகு மாநிலம் என்பதையே ஏற்றுக் கொள்ளாதவர், ஏன், இந்தியாவையே ஏற்றுக் கொள்ளாதவர், தமிழ்நாடு இந்தியாவிலிருந்து விடுதலை அடைய வேண்டும் என்பவர் என்று எடுத்துச் சொல்லியிருக்கலாம். எதை மறுத்தாலும் தியாகுவின் இந்த அரசியல் நிலைப்பாட்டை சுபவீ மறுக்க மாட்டார். தியாகுவிடம் இல்லாத திராவிட எதிர்ப்பைச் சொல்லும் சுபவீ அவரின் தமிழ்த் தேசிய விடுதலை நிலைப்பாடு பார்ப்பனீய ஆதரவுக்குத்தான் என்றும் சொல்வாரோ?

திராவிட இயக்கத்திற்கென ஒரு வரையறை கொடுப்பதானால் பார்ப்பனீய எதிர்ப்பு, இந்து மத ஒழிப்பு, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண் விடுதலை, இந்தியத் தேசிய மறுப்பு எனலாம். பெரியாரின் திராவிட இயக்கம் இந்தியத் தேசியத்தை ஏற்றதே இல்லை. அது திராவிட நாடு விடுதலை என்றாலும் சரி, தமிழ்நாடு விடுதலை என்றாலும் சரி, இரண்டுக்கும் அடிப்படை இந்தியத் தேசிய மறுப்புதான்! இந்தியா எமது நாடல்ல எனும் போர்க் குரல்தான்! பெரியாரின் இந்த உறுதிமிக்க நிலைப்பாடு சாதி ஒழிப்புக்காகத்தான் என்பதை ஐயா சுபவீயே மறுக்க மாட்டார். ஆர். எஸ். எஸ். இந்திய ஆளும் வர்க்கத்திற்கு எதிராகத் தந்தை பெரியாரை ஆயுதமாக்குவோம் என்று முழங்குபவர் தியாகு. இன்றும் இந்நிலைப்பாட்டில் மாற்றமில்லை, நாளையும் இல்லை. பெரியார் மீது வேறுபாடும் மாறுபாடும் உண்டுதான். தந்தையோடு மாறுபாடு இருக்கலாம். ஆனாலும் அவர் எமக்குத் தந்தை! தந்தை பெரியார். . . .

பெரியாரின் திராவிடம் புறநிலையில் தமிழர்களின் உட்பகையான சாதியத்தையும் புறப்பகையான இந்தியத்தையும் ஒழிக்க நின்றது. இந்தக் கண்ணோட்டத்தில், இந்த நிலைப்பாட்டில் ஊன்றி நின்று ஆரியத்துக்கு எதிராகக் கருத்துச் சமராடுபவர் தியாகு. திராவிடம் இனமல்ல என்பது வேறு; தமிழ்த் தேசியத்தின் முற்கட்டம்தான் திராவிடம் என்கிற தெளிவு வேறு. இந்தப் பொருளில் திராவிடத்தை இந்துத்துவவாதிகளிடம் விட்டுக் கொடுக்காது கருத்துக் களத்தில் நிற்பதுதான் எங்கள் நிலைப்பாடு.

இந்தக் கட்டத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருந்தும். திராவிடம் குறித்த அடிப்படைக் கண்ணோட்டத்தில் தோழர் பெ. மணியரசன் நிலைப்பாடும் எமது நிலைப்பாடும் வேறு வேறு.

புதிய தலைமுறையின் புதுப்புது அர்த்தங்கள் அதிகாலை நிகழ்வு ஒன்றில் ஹெச். ராஜாவும் தோழர் தியாகுவும் பங்கெடுத்தனர். நெறியாளர் ஜென் ராம். ஹெச். ராஜாவை வைத்துக் கொண்டு தியாகு சொன்னார் : "இந்தியா சுதந்திரம் அடைந்த போது காசுமீர் இந்தியாவிலேயே இல்லை. தலை இல்லா முண்டமாகத்தான் பாரத மாதா பிறந்தாள். " இந்தியக் கொடி எரிப்புக்காகச் சிறை சென்ற இளைஞரின் விடுதலைக்காக நடந்த பொதுக் கூட்டமொன்றில் இந்தியக் கொடியைக் கொண்டு நாம் நம் வீட்டுக் குழந்தைகளின் மலத்தையும் துடைக்கலாம், அது சட்டப்படி குற்றமில்லை எனப் பேசினார் தியாகு. தேசியப் பாதுகாப்புச் சட்டம் பலரின் மீது பாய்ந்த நேரத்தில் அதற்கு எதிராகத் தந்த நேர்காணல் ஒன்றில் இந்திய ஒருமைப்பாட்டை எதிர்க்கிற என்னைக் கைது செய்ய முடியாது என்றார் தியாகு. ஹெச். ராஜா தியாகுவை ஒருமையில் பேசி மிரட்டி இவற்றுக்கு எதிர்வினை ஆற்றினார். நான் சில கூட்டங்களில் அதனை எதிர்த்தும் மறுத்தும் பேசியுள்ளேன்.

இந்தக் கட்டத்தில் ஒன்றைக் குறிப்பிடுவது பொருந்தும். இந்தியத் தேசியம் குறித்தக் கண்ணோட்டத்திலேயே திரு சீமான் நிலைப்பாடும் எமது நிலைப்பாடும் வேறு வேறு. பெ. ம. வுக்கும் சீமானுக்கும் வேறுபாடு உண்டு என்பதையும் பதிவு செய்துவிட வேண்டும்.

திமுக சாதி ஒழிப்புக் கட்சியா ஐயா சுபவீ அவர்களே! சாதி ஒழிப்பில் முன்னுக்குப் பின் முரணில்லாது பயணிக்கும் கட்சியா திமுக? நீங்களே சொல்லுங்கள். திமுக சமூகநீதி அடிப்படையில் செய்திருக்கிற சில நன்மைகளை மறுக்கவில்லை. ஆனால் அந்தச் சமூகநீதிக்கு எந்த இந்திய ஆளும் வர்க்கம் அரணாக நின்றிருக்கிறது! நின்றதில்லை. நிற்காது. அந்த இந்திய ஆளும் வர்க்கத்தோடு மாறி மாறி திமுக பதவிப் பங்கு போட்டுக் கொள்வது சமூகநீதி நோக்கத்திற்காகவா? நீட்டை திமுக எதிர்க்கிறது. தொடர்ந்து எதிர்க்கும். இதை ஒப்புக் கொள்வதில் எந்தத் தயக்கமுமில்லை. எமது கேள்வி நீங்கள் எவ்வளவு மூர்க்கமாக நீட்டை எதிர்ப்பீர்கள் என்பதில்லை. இதோ இப்போது கூட நீதியரசர் ராஜன் அவர்கள் தலைமையில் இதன் பாதிப்புகள், மாற்றுகளைப் பரிந்துரைக்க ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளை இப்போதே முன்முடிவுகள் அடிப்படையில் விமர்சிக்கத் தேவையில்லை. முயற்சி தொடரட்டும். நமது அடிப்படைக் கேள்வி: இந்திய அரசமைப்புக்கு உட்பட்டு நீட்டை எப்படி எவ்வகையில் தடுத்து நிறுத்தப் போகிறீர்கள் என்பதற்குரிய வழித்தடம் என்ன? சுபவீயே கூட அதைச் சொல்லலாம். சட்டப் பேரவையில் சட்டமுன்வடிவைக் கொண்டுவந்து நிறைவேற்றியும் நீட்டைத் தடுத்து விட முடியவில்லை. அந்தச் சட்டத்தைக் குப்பையில் வீசியது பாசக அரசு. நாங்கள் சட்டமியற்றியும் நீட்டை எப்படி நுழைக்கலாம் என்கிற கேள்வியிலிருந்தே நீட் எதிர்ப்பு தொடங்கப்பட வேண்டும். ஆட்சி குறித்து கவலை கொள்ளாது மக்கள் போராட்டத்திற்குத் தலைமை வகித்துப் போராட்ட அரசியலை வளர்த்தெடுத்தால் நீட்டை இறுதியிலும் இறுதியாக ஒழிக்க முடியும். இதையெல்லாம் குறிப்பிடக் காரணம் இந்தியக் கட்டமைப்பை இறுக அணைத்துக் கொண்டே சமூகநீதி காப்பேன் என்பது முரணானது என்பதை வலியுறுத்தவே!

கலைஞர் செய்வாரா மாட்டாரா என்பதல்ல வினா. செய்வார்தான். சிலவற்றை செய்துமிருக்கிறார்தான். 1972 அல்லது 73 இல் ஐந்து துறைகளில் தமிழ் வழியில் படித்தோர்க்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என அறிவித்தார் கலைஞர். இது தமிழ்வழிக் கல்வி தொடர்பானது. தமிழ்வழிக்கல்வி சமூகநீதிக்கானது என்பதறிவோம். காங்கிரசின் தூண்டுதலால் மாணவர் போராட்டம் அன்று பெயரளவில் நடந்தது. ஆட்சி போய்விடக் கூடும் எனக் கருதி அந்த அறிவிப்பு கைவிடப்பட்டது. ஆட்சி போனாலும் விட்டுக் கொடுக்க முடியாது எனும் நிலை எடுத்திருக்க வேண்டும். யார் சொல்லியிருந்தாலும் கொள்கை நிலைப்பாட்டை விட்டுக் கொடுத்திருக்கக் கூடாது. ஆட்சி மேல்துண்டைப் போன்றது; கொள்கை இடுப்பில் கட்டியுள்ள வேட்டியைப் போன்றது என்றார் நம் அண்ணா! அதன்பின் அதே ஆட்சி இந்திய அரசால் கலைக்கப்பட்டது என்பதறிவோம்.

சமூகநீதித் தளத்தில் நாம் எட்டிக்கூடப் பார்க்க முடியாத துறைகள் உண்டு. இடஒதுக்கீட்டுக்கு சாவுமணி அடிக்கும் வகையில் தனியார்மயம் கோலோச்சிக் கொண்டிருப்பதையும் மறந்துவிட முடியாது. காங்கிரசோடு நின்று கொண்டே அல்லது இந்தியத்தோடு கைகுலுக்கிக் கொண்டே தனியார்மயத்தை எதிர்ப்பது எங்ஙனம் என சுபவீயே எடுத்துரைக்கலாம். இந்திய அரசமைப்பின் மீது சத்தியம் செய்து விட்ட பிறகு இந்திய அரசின் உலகமய தாராளமய தனியார்மயப் பொருளியல் கொள்கைகளை மாநில அரசு ஏற்றுத்தான் செயல்பட முடியும். தனியாக ஒரு பொருளியல் கொள்கையைத் தனித்து வைத்துக் கொண்டு பின்பற்ற இந்திய அரசமைப்பு அனுமதிக்கவில்லை. இந்தப் பொருளியல் கொள்கைகள் என்பவை அடிப்படையிலேயே சமூகநீதிக்கு எதிரானவை என்பதைச் சொல்லத் தேவையில்லை.

நமது வரலாறு தந்த பட்டறிவு கொண்டு சொல்கிறோம்: இந்திய அரசமைப்புக்குட்பட்டு சமூகநீதியை வென்று நிலைநிறுத்தவே முடியாது.

இந்த அடிப்படைகளில் நின்று சொல்கிறோம். இன்று திராவிடம் என்பது இந்தியத் தேசிய மறுப்பைக் கைகழுவி அதனோடு பதவிப் பங்கு போட்டு சமரசமாகி விட்டது. தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருக்க முடியாது என்பது போல இந்தியத்தோடு கலந்து விட்ட பிறகு திமுக உயிர்ச்சாரமான கொள்கைகளுக்குப் பதவி விலை கொடுத்துவிட்டது என்கிறோம். அதனால்தான் மாநில சுயாட்சி என்பதே இந்திய ஒருமைப்பாட்டுக்குத்தான் என்றும், இந்தியக் கொடியை ஏற்றும் உரிமையையே பெற்றிருக்கிறோம் என்பதை வெற்றி போலவும் கலைஞரால் சொல்ல முடிந்தது.

இந்தியத் தேசியத்தோடு இந்தளவு கரைந்து விட்டது சமூகநீதி அடிப்படைகளுக்கு முரணாகிறது. அந்த முரண்பாட்டைக் கொள்கைவழி நின்று தீர்த்துக் கொள்ள முடியாது அப்படியே பதவிகள் கொண்டு வாழப் பழகி திமுகவுக்கு நெடுங்காலமாகி விட்டது. இந்தத் தொடர் நெடும் போக்கின் விளைவுகள்தான் திமுகவின் முதன்மைத் தலைவர்களான ஆர். எஸ். பாரதியின் "திராவிடம் (திமுக) தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட்ட பிச்சை" என்ற கூற்றும். . "என்னுடன் இருப்பவர்கள் எல்லோருமே அரிசனங்கள்தான்" என்ற பேச்சும். . . தயாநிதி மாறனின் "நாங்கள் என்ன தாழ்த்தப்பட்டவர்களா?" என்ற கேள்வியும். இப்படிப் பேசுகிற போது அவர்களுக்குக் கூச்சமே இருக்கவில்லை. கே. என். நேருவும் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரனும் ஆர். எஸ். பாரதியும் சாதிக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் என்பது சாதிநாயகத் தேர்தல் என்று புரட்சிகர ஆற்றல்கள் பேசி வருகிறோம். சாதி பார்த்து திமுக தேர்தலில் எதுவும் செய்வதில்லை, எந்த முடிவும் எடுப்பதில்லை என அறுதியிட்டுரைக்க ஐயா சுபவீ தயாரா? தேர்தலைக் கொண்டு சாதிய உணர்வை மங்கச் செய்து சாதி ஒழிப்புக்கு தேர்தல் வழியாகவும் திமுக பங்காற்றுகிறது எனச் சொல்ல முடியுமா? கலைஞரே இருந்தாலும் சொல்ல மாட்டார். இந்தத் திமுக ஆதரவுதான் திராவிட ஆதரவு. இந்தத் திராவிடத்தை எதிர்த்தால் அது பார்ப்பனீய ஆதரவு, இந்தத் திராவிடத்தை எதிர்த்தால் அது சாதியைப் பாதுகாப்பது என்று பூச்சாண்டி காட்டுவதை இனியாகிலும் கைவிட வேண்டும்.

நாங்கள் தமிழ்த் தேசியர்கள். தோழர் தியாகு தலைமையில் இயங்கும் நாங்கள் தந்தை பெரியார் முன்வைத்த தமிழ்நாடு தமிழருக்கே என்பதை அரசியல் கொள்கையாக ஏற்றுச் செயல்படுபவர்கள். இந்தியா ஒழியாமல் சாதி ஒழியாது என்ற பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்று சாதி ஒழிந்த தமிழ்த் தேசம் படைக்க நிற்பவர்கள். இந்தியா என்பதே பார்ப்பனிய பனியாக் கட்டமைப்பு என்ற பெரியாரின் வரையறையை ஏற்று இந்தியப் பார்ப்பனியக் கட்டமைப்பை வீழ்த்தப் பாடாற்றுகிறவர்கள். இதையெல்லாம் உள்ளடக்கியே தமிழ்த் தேசியச் சமூகநீதிக் குடியரசு படைக்கும் இலக்கை வரித்துக் கொண்டவர்கள். தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தைப் பொறுத்த வரை சமூகநீதி நிலைநாட்டப்பட பார்ப்பனிய பனியா இந்தியத் தேசியம் முறியடிக்கப்பட வேண்டும், சாதி ஒழிப்பைச் சாத்தியமாக்க தமிழ்த்தேசியம் வென்றெடுக்கப்பட வேண்டும் என்கிறது.

ஐயா சுபவீ சொல்கிறார்: தியாகு சாதியைப் பாதுகாப்பவராம்! நான் கீழ்வெண்மணி பெற்றெடுத்த பிள்ளை என்று தியாகு தன்னைச் சொல்லிக் கொள்வதுண்டு. தமிழ்த் தேசியத்தின் உயிர் சாதி ஒழிப்பு என்பேன் நான். அப்படிக் கருதும் வகையில் நான் உருவாகக் காரணம் தியாகுவின் தமிழ்த்தேசியக் கோட்பாடுகளைப் பற்றி வளர்ந்தவன் என்பதால்தான்.

தமிழ்வழிக் கல்வி என்பது சாதி ஒழிப்புக்குரிய கோரிக்கை என்பது உங்களுக்கே தெரியும். தோழர் தியாகு தமிழகத்தில் முதல் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளி தொடங்கி அதை மக்களியக்கமாக்கியவர் என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். தமிழ்ப் பெருமிதத்திற்காக அல்ல சமூகநீதிக் கண்ணோட்டத்திலேயே அவர் தாய்த் தமிழ்ப் பள்ளியைத் தோற்றுவித்தார். தாய்த் தமிழ்க் கல்விப் பணியின் தலைவராகவும் செயல்பட்டவர். இவ்வழி தமிழகமெங்கும் உள்ள தமிழுணர்வாளர்களை சமூகநீதித் தளத்தில் செயல்பட வைத்தவர் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

சாதி ஒழிப்பை முதன்மை இலட்சியமாகக் கொண்டு இயங்குகிற இயக்கம் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம். எமது இயக்கத்தின் முழக்கமே ”தமிழர் விடுதலைப் போர் முழக்கம்! சமூகநீதித் தமிழ்த் தேசம்!” என்பதுதான்! சாதி ஒழிப்புக்கான எமது செயல்பாட்டை விரித்துச் சொல்ல இடமில்லை. குறிப்பாக இன்றும் எமது இயக்கத்தின் சார்பில் காதல் அரண் எனும் செயலியை உருவாக்கி, சாதி மறுப்புத் திருமணங்களை இயக்கமாகவே நடத்தி வருகிறோம். திருமணத்திற்குப் பிறகு சாதி வேறுபாட்டைப் பொறுத்து ஆணவக் கொலைக்கு வாய்ப்பிருக்கும் எனக் கருதினால் அவர்களைத் தொடர்ந்து விழிப்போடு பாதுகாத்துக் கரை சேர்த்து வருகிறோம். இதனை இயக்கச் செயல்திட்டமாகவே கொண்டு இயங்குகிறோம். இதையெல்லாம் அறிந்து வைத்து ஐயா சுபவீ பொறுப்போடு பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம். உயிர் கொடுத்து இவற்றுக்காக உழைப்பவர்களுக்கு சுபவீ தருவது வலி மட்டுமல்ல, அடங்காச் சீற்றமும்தான்.

தோழர் தியாகு குறித்த ஐயா சுபவீயின் இரண்டாவது கருத்துக்கு எதிர்வினையையும்... இறுதியாக ஐயா சுபவீக்கு எனது கோட்பாட்டு மறுப்புரையையும்... அடுத்தடுத்து எழுதுவேன்.

- வே.பாரதி

Pin It