கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

புலவர் படிப்பு சாமியார் படிப்பா?

புலவர் பட்டத்திற்குப் படிக்க நான் விரும்பிய போது, “அது சாமியார் படிப்பு” எனத் தடைபோட்டார் என் தந்தையார்.

தஞ்சைக்கு அருகே உள்ள செந்தலையில் திராவிடர் கழகத் தலைவராக 1944ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தவர் என் தந்தையார். திராவிடர் கழகப் பொறுப்பாளர்களும் முன்னோடிகளும் எங்கள் இல்லத்திற்கு அடிக்கடி வந்து செல்வதை இளமையிலிருந்தே பார்த்திருக்கிறேன்.

நான் பிறந்த சமயம் எங்கள் செந்தலை இல்லத்திற்குத் தந்தை பெரியார் வந்துள்ளார். அப்போது அவர் எனக்கு வைத்த பெயர்தான் கவுதமன்!

தொடக்கப்பள்ளிப் பருவத்திலிருந்தே திராவிடர் கழகக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் அப்பா அழைத்துச் செல்வார். வீட்டில் படிக்கக் கிடைப்பது ‘விடுதலையும்’, பெரியார் நூல்களும்தாம்! சாமி படம், வழிபாடு என்பவை எங்கள் வீட்டில் பார்த்தறியாதவை!

குடும்பச் சூழலால் பெரியாரியக்கப் பற்று தானாகவே எனக்குள் வளர்த்தது. பார்ப்பன, ஆரிய வைதீக எதிர்ப்பை வடமொழி எதிர்ப்பாகவும், தமிழ்ப் பற்றாகவும் எனக்குள் வளர்த்தது திராவிடர் கழகமே!

தென்மொழி இதழ்த் தொடர்பும் பாவாணர், பெருஞ்சித்திரனார் எழுத்துகளும் என் தமிழ்ப்பற்றைப் பள்ளிப் பருவத்திலேயே செழுமைப்படுத்தின. அதற்குக் காரணமானது என் திராவிடர் கழகத் தொடர்பே! பள்ளிப் படிப்பு முடிந்தது. புலவர் கல்லூரியில் படிக்க வேண்டும் என்னும் உறுதி எனக்குள் துளிர்விட்டது. 'புலவர் படிப்பு சாமியார் படிப்பு. அது எதற்கு?’ என எனது விருப்பத்திற்குத் தந்தையார் எதிர்ப்பு காட்டியது கவலை தந்தது.

பெரியார் அப்போது உயிரோடிருந்தார். திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எங்கள் இல்லத்திற்கு அப்போது வந்தார். நான் புலவர் படிப்பு படிக்க விரும்புவதைக் குற்றச்சாட்டு போல் அவரிடம் சொன்னார் என் தந்தையார்! அதனை ஆதரிப்பதுபோல் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் பேசினார்: “புலவர் படிப்பு வேண்டாம். ஆசிரியர் பணிக்கு மட்டும்தான் அது பயன்படும். தமிழ் பி. ஏ படியுங்கள். பணிவாய்ப்பு ஏராளம். பி. ஏ. படிக்க நான் ஏற்பாடு செய்கிறேன். ” இப்படி மாற்றுவழி காட்டி விட்டுப் புறப்பட்டார் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள்!

வெறும் வாய்க்கு ‘அவல்’ தந்த பெரியார்

‘படித்தால் புலவர் படிப்பு தான்’ என நான் காட்டிய உறுதிக்கு அப்பாவின் ஒத்துழைப்பு மெதுவாகக் கிடைத்தது. கனவு நிறைவேறித் திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு மாணவராகி விட்டேன். கல்லூரியில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவிற்குத் தந்தை பெரியாரை அழைத்தோம்; வர இசைந்தார்.

23-9-1972ஆம் நாள் பிற்பகல் எங்கள் திருவையாறு அரசர் கல்லூரிக்கு வந்து பேசினார் பெரியார். அதேநாள் இரவு திருவையாறு பகுத்தறிவாளர் கழகப் பொதுக் கூட்டத்திலும் பேசினார்.

அரசர் கல்லூரி விழாவில் பேசியபோது , எங்கள் கருத்திற்கு எதிர்நிலைபோல் பேசி விட்டார். பேச்சிலும் நடப்பிலும் தனித்தமிழ் உணர்ச்சிக்கு வலிமையூட்டும் மாணவர் இயக்கமாக நாங்கள் செயற்பட்டு வந்தோம்!

தனித்தமிழையும் கலைச்சொல் முயற்சிகளையும் ஒதுக்குவது போல் பெரியாரின் அன்றைய பேச்சு அமைந்து விட்டது:

 “பட்டன், கோட்டு இதுக்கெல்லாம் ஏன் தமிழைத் தேடுறீங்க? அப்படியே சொல்லிவிட வேண்டியதுதானே!” இப்படி நீண்டு சென்றது பெரியாரின் அன்றைய பேச்சு.

பெரியாரைத் தமிழ்எதிரியாகக் காட்டக் காரணம் தேடிக் கொண்டிருந்த எங்கள் கல்லூரி மாணவர்களிலும் பேராசிரியர்களிலும் சிலர், வெறும்வாய்க்கு அவல் கிடைத்ததுபோல் ‘மெல்லத்’ தொடங்கினர். “உங்க தலைவரு உங்களுக்கு எதிர்ப்பா பேசிட்டுப் போறாரே” என்றனர்.

பெரியார் புகழ் பேசிய புலவர்கள்

திருவையாறு அரசர் கல்லூரி வடமொழிக் கல்வியை வழங்கிக் கொண்டிருந்தபோது, அதில் தமிழ்ப்புலவர் கல்வி தொடங்கக் காரணமாய் இருந்தது திராவிடர் இயக்கம்தான்! அந்த நன்றியுணர்வு புலவர் படித்த அனைவருக்கும் இருந்தது. அரசர் கல்லூரி தமிழ்ப் புலவர் படிப்புக்கு இடம் தந்தாலும், மாணவர் விடுதியில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் எனும் வருணாச்சிரம உணவுப் பந்திப் பாகுபாடு 1941 வரை மாற்றமின்றித் தொடர்ந்து கொண்டிருந்தது. தந்தை பெரியார் காதுக்கு இச்செய்தியை மாணவர்கள் கொண்டு சென்றனர்.

கொதிப்படைந்த பெரியார், புலவர் கல்லூரி மாணவர்கள் ஒரே பந்தியில் உணவருந்த வேண்டும் என அறிக்கை விடுத்தார்.

பெரியார் எழுப்பிய சமத்துவக் குரலால் ஊக்கம் பெற்ற மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினர். எல்லோருக்கும் ஒரே பந்தியில் உணவு உண்ண 27-1-1941ஆம் நாள் கல்லூரி நிருவாகம் சம்மதித்தது. சூத்திர மாணவர்களோடு ஒரே பந்தியில் பிராமணாள் உட்கார்ந்து சாப்பிடுவது ஆச்சாரக் கேடு எனச் சங்காராச்சாரியார் தூபம் போட்டார்.

உசுப்பி விடப்பட்ட பார்ப்பன மாணவர்கள் ஒரே பந்தியில் உட்கார்ந்து சாப்பிட மறுத்தனர். உண்ண மறுத்த அவர்களுக்கு உணவு தர அக்கிரகாரம் ஓடி வந்தது. பார்ப்பனர்களின் வெறுப்புக்கு ஆளாக விரும்பாத அன்றைய தஞ்சை மாவட்டக் கழகப் (ஜில்லா போர்டு) பொறுப்பாளர்கள் நாடிமுத்து பிள்ளையும் கிருட்டிணசாமி வாண்டையாரும் ‘சமையலுக்குத் தேவையான அனைத்தையும் சமைக்காமலேயே பார்ப்பன மாணவர்களுக்குத் தந்துவிடுவது’ என முடிவெடுத்தனர்.

பிராமணர்களின் கோபத்திற்கு ஆளானால் ‘பிரம்மஹத்தி தோஷம்‘ பிடிக்கும் எனத் தமிழர்கள் நம்ப வைக்கப் பட்டிருந்தனர். சூத்திரத் தலைவர்கள் ‘தோஷத்திற்கு’ அஞ்சி நடுங்கிய காலம் அது!

வெட்கக் கேடான காரியம் எனத் தந்தை பெரியார் குடிஅரசு (20-11-1943) இதழில் இதனைக் கண்டித்து எழுதினார்: நமது இழிவுக்கும் தாழ்வுக்கும் நம்மவர்களே பொறுப்பாளர்கள் எனச் சினத்தை உமிழ்ந்தது பெரியாரின் கட்டுரை. (சான்று : உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு -2ஆம் பாகம், கி. வீரமணி, 2007, ப. 132.)

அதன்பின்பே ஒரே பந்தி எனும் உறுதிக்குப் பணிந்து ‘சூத்திரப் பந்தி’யில் சேர்ந்து சாப்பிட்டார்கள் பார்ப்பன மாணவர்கள்!

சாதித் திமிரை ஒழித்த பெரியாரைத் திட்டத் தொடங்கிய பார்ப்பனர்களின் செயல் இன்றும் தொடர்கிறது - எட்டப்பத் தமிழர்களின் துணையோடு! தமிழ்ப் புலவர் கல்விக்கும் சமத்துவ உணவுப் பந்திக்கும் காரணமான தந்தைபெரியாரை வரலாறு தெரிந்த எவரும் மறப்பதில்லை.

அந்த நன்றியுணர்ச்சி காரணமாகவே தமிழ்நாடு முழுவதும் பள்ளிதோறும் தமிழாசிரியர்கள் பெரியார் புகழ் பேசுவோராகவும் திராவிடர் இயக்கத்திற்குப் படைதிரட்டுவோராகவும் இருந்தனர். திராவிடர் இயக்க வளர்ச்சிக்குக் காரணமானவர்கள் தமிழ்ப் புலவர்களே என 1976இல் கல்கண்டு இதழில் தமிழ்வாணன் எழுதக் காரணம் இந்தப் பின்னணி தான்! தமிழ்ப் புலவர்களைக் கைது செய்தால் திராவிட இயக்க வளர்ச்சியைத் தடுத்து விடலாம் எனவும் அதே கட்டுரையில் தமிழ்வாணன் அரசுக்கு அறிவுரை கூறியிருந்தார். அப்படி எழுதியபின், செல்லும் இடமெல்லாம் எதிர்ப்புக்கு ஆளாகி முடங்கிப் போனது தமிழ்வாணன் வாழ்வு!

கசப்பும் இனிப்பும்

தமிழைத் தாங்கிய வரலாறு பெரியாருக்கு இருந்தாலும், தமிழையும் தமிழ்ப் புலவர்களையும் அவ்வப்போது இடித்துக் காட்டும் இயல்பு உடையவராகவே அவர் இருந்து வந்தார். அதனால், திராவிடர் கழகத்தில் ஒரு பிரிவினருக்குத் தமிழ், தமிழ்ப்புலவர் என்றால் ஓர் ஏளனப் பார்வை இருக்கத்தான் செய்தது. என் தந்தையாரும் அந்த வகை! புலவர் படிப்பில் நான் சேர இணக்கம் காட்டாததற்கு, அவருக்கிருந்த அந்தப் பார்வையும் ஒரு காரணம்.

“உங்கள் மொழிக் கொள்கை எங்களுக்கு உடன்பாடில்லை” எனக் கருப்புச் சட்டை அணிந்தபடியே பெரியாரிடம் நேருக்கு நேர் பேசிய புலவர்களும் அப்போது இருந்தார்கள். அதற்குச் செவிமடுக்கும் பெருந்தன்மையான இயல்பும் பெரியாரிடம் இருந்தது. புலவர் ‘வை. பொன்னம்பலனார்’ பெரியாரிடம் அப்படிப் பலமுறை பேசியவர். வை. பொன்னம்பலனாருக்குச் சேலம் தமிழ்ப்பேரவை சார்பில், ‘தமிழ் மறவர்’ பட்டம் வழங்கியவர் பெரியார். அதே ‘28.7.1957’ ஆம் நாளில் ‘திராவிட மொழிநூல் ஞாயிறு ‘ பட்டத்தை ‘ஞா. தேவநேயப் பாவாணர்’ அவர்களுக்கு வழங்கியவரும் பெரியார் தாம்! விருதுப் பட்டம் வழங்கியதோடு இருவருக்கும் ஐநூறுஉரூபா பணமுடிப்பும் வழங்கி 1957இலேயே பாராட்டியவர் தந்தை பெரியார்.

பாவாணர் தம்வாழ்வில் முதன்முதல் பெற்ற பட்டம் ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’ பட்டமே! இதனை ‘மொழிஞாயிறு’ என 8.9.1970ஆம் நாளிலிருந்து தென்மொழி இதழில் சுருக்கி வழங்கத் தொடங்கியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

பெருந்தன்மைப் பெரியார்

பெரியாரின் தமிழ்ப் பார்வைக்குத் தெளிவு தரும் நிகழ்ச்சியாக அமைந்தது 30-6-1968ஆம் நாள் நிகழ்ந்த உடையார்பாளையம் செமீன்தத்தனூர் திருமண நிகழ்ச்சி! அந்தத் திருமணத்தில்தான், தம் தமிழ்க் கொள்கையை மூவர் தீர்மானித்தால் ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்தார் பெரியார்!

தந்தை பெரியார் அறிவித்த அந்த மூவர் :

(1) தமிழ் மறவர் புலவர் வை. பொன்னம்பலனார்

(2) பெரியாரியல் அறிஞர் தோழர் வே. ஆனைமுத்து

(3) பேராசிரியர் புலவர் முனைவர் பொற்கோ.

ponnambalanar aanaimuthu and porkoபெரியார் வரலாற்றிலும் இயக்க வரலாற்றிலும் பேசப்பட வேண்டிய ‘திருப்புமுனை நிகழ்ச்சி’ இது. இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் ஆற்றிய சொற்பொழிவின் ஆழமும் நேர்மையும் விரிவாகக் கவனிக்கப்பட வேண்டும்.

பெரியார் கூறிய மூவர்

30-6-1968ஆம் நாள் காலை இரு திருமணங்களை நடத்தி வைக்கப் பெரியார் இசைந்திருந்தார். இரண்டுமே புலவர்கள் இல்லத் திருமணங்கள்!

தமிழ் மறவர் ‘புலவர் வை. பொன்னம்பலனார்’ மகள் எழிலரசி - பொன். இராசமாணிக்கம் திருமணம் முதல் நிகழ்ச்சி! அரியலூர் ‘புலவர் சி. தமிழ்மணி’ (இராமசாமி) வி. கமலம் திருமணம் அடுத்த நிகழ்ச்சி. (சான்று : பெரியார் ஈ. வெ. ரா பயணக் காலக் கண்ணாடி, வே. ஆனைமுத்து. 2012, ப. 375)

பொன்னம்பலனார் மகள் எழிலரசி - பொன் அராசமாணிக்கம் திருமணம் 30. 6. 1968 காலை பெரியார் தலைமையில் செந்துறை அருகே உள்ள மருவத்தூரில் நிகழ்ந்தது. வே. ஆனைமுத்து, பொற்கோ இருவரும் வாழ்த்துரை வழங்கினர். அடுத்த தமிழ்மணி - கமலம் திருமணம் நடந்தது உடையார் பாளையம் செமீன் தத்தனூரில்! தந்தை பெரியார், வை. பொன்னம்பலனார், வே. ஆனைமுத்து முதலியோர் மூடுந்தில் சென்றதால் திருமண வீட்டிற்கு விரைவாகச் சென்று விட்டனர்.

வாழ்த்திப் பேச வேண்டிய பொற்கோ அவர்களுக்கு வாகனம் கிடைக்கவில்லை. நண்பர்களோடு மிதிவண்டியில் புறப்பட்டுத் திருமண வீட்டை மெதுவாகச் சென்றடைந்தார். அப்போது பெரியார் பேசத் தொடங்கி விட்டார். இடையில் நுழைந்தால் பெரியார் பேச்சுக்கு இடையூறாகிவிடும் என எண்ணி, மணப்பந்தலுக்குள் நுழையாமல் மிதிவண்டியில் அமர்ந்தபடி, பெரியார் பேசுவதைப் பொற்கோ கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

பொற்கோ வந்தவுடன், மேடைக்கு அழைத்து வாருங்கள் - எனக் கழகத்தோழர்களிடம் கூறிய பிறகே பெரியார் பேசத் தொடங்கியிருந்தார். தோழர்கள் அழைத்தும் உள்ளே செல்லத் தயங்கினார் பேராசிரியர். தோழர் பொற்கோ அவர்களை மேடைக்கு வருமாறு அழைக்கிறேன் என்று தந்தை பெரியாரே ஒலி பெருக்கியில் அறிவித்து விட்டார்.

புலவர் பொற்கோ அவர்கள் இப்போது பேசுவார். அவர் பேசி முடித்ததும் மீண்டும் என் பேச்சைத் தொடர்வேன் என்று பெரியார் அறிவித்ததைக் கேட்டு அனைவருக்கும் வியப்பு!

திகைப்பும் தெளிவும்

தமிழுக்கும் தமிழ்ப் புலவர்களுக்கும் எதிராகப் பெரியார் பேசி வந்த நேரம் அது! பெரியாரைத் தமிழ் எதிரியாகக் காட்ட இனஎதிரிகள் அவற்றைப் பெரிதுபடுத்திக் கொண்டிருந்தனர்.

மணமக்களை வாழ்த்திப் பேசத் தொடங்கிய பொற்கோ, பெரியாரை நேருக்குநேர் விரல் நீட்டிக் குற்றம் சாட்டுவதுபோல் செய்திகளை அடுத்து அடுத்து அடுக்கத் தொடங்கி விட்டார்:

"நான் தமிழ்ப்புலவன் மட்டுமல்ல; ஆங்கிலம் நன்றாகப் படித்தவன்; மொழியியலும் படித்தவன்! தமிழ் தொடர்பான அய்யா பெரியாரின் கருத்துகள் யாவும் தவறானவை. மூடத்தனமும் கடவுள் செய்திகளும் தமிழ் இலக்கியத்தில் இருப்பது போல், ஆங்கில இலக்கியங்களிலும் ஏராளமாய் இருக்கின்றன. மில்டன், சேக்சுபியர் முதலிய எவரும் இதில் விதிவிலக்கு இல்லை.

ஆங்கிலத்தைப் போற்றும் பெரியார் தமிழைத் தாழ்வாகக் கருதுவதும் பேசுவதும் தவறு!" (12-12-2017ஆம் நாள் பேராசிரியர் பொற்கோ அவர்கள் கோவை வந்திருந்தபோது, ந. கவுதமன் இரணியன் இருவரிடமும் நேரில் கூறிய செய்திகள் இவை.)

பொற்கோ இப்படிப் பேசியது கண்டு தந்தை பெரியார் சினம் அடைவாரோ எனத் திகைப்புடன் இருந்தது திருமணக் கூட்டம்! ஆயிரம் பேருக்குமேல் மக்கள் மாநாடுபோல் அமர்ந்திருந்தனர்.

பாதியில் நிறுத்திய பேச்சைப் பெரியார் மீண்டும் தொடர்ந்தார்:

"பேராசிரியர் பொற்கோ பேசிய கருத்துகளை அப்படியே நான் ஏற்றுக் கொள்கிறேன். அவர் பேசிய கருத்துகளில் சிறிதும் எனக்கு முரண்பாடு இல்லை. ஆங்கில இலக்கியங்களிலும் மூடத்தனம், பக்தி இருப்பதை அவர் சொன்னார். மூடத்தனம் உள்ளது என ஆங்கில இலக்கியங்களைக் குற்றஞ்சொல்லவும் ஆராய்ச்சி செய்யவும் அங்கே அனுமதிப்பார்கள். இங்கே முடியுமா? தமிழில் அப்படியா உள்ளது?

எந்தத் தமிழ்நூலைத் தொட்டாலும் அதைப் பற்றிப் பேசாதே, ஆராயாதே என்று தடை போடுகிறார்கள். மாற்றுக் கருத்தைச் சொன்னால் புனிதம் கெட்டு விடும் என்கிறார்கள். அதுதான் எனக்குக் கோபம்! அதனால்தான் கடுமையாகப் பேசுகிறேன்.

எனக்கு நன்றாகத் தெரியும். எனக்குப் பக்கபலமாக இருப்பவர்கள் தமிழ்ப் புலவர்கள் தான்! அவர்களால் தான் நம் இயக்கம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது. எல்லாம் தெரிந்துதான் பேசுகிறேன்.

உரிமையுள்ள இடத்தில்தானே கோபப்பட முடியும்! அதனால்தான் புலவர்கள்மீது கோபப்படுகிறேன்.

எனக்குத் துணையாக யார் இருக்கிறார்கள்? நம் கருத்தைச் சொல்ல அனாதை போல சுற்றி வருகிறேன். எனக்குத் தெரிந்ததைச் சொல்லி வருகிறேன். சரியான செய்திகளை எனக்குக் கொடுங்கள். என்னைத் திருத்திக் கொள்கிறேன்.*

தமிழைப் பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும் இந்த மூவரும் சொல்லட்டும். புலவர் பொன்னம்பலனார், ஆனைமுத்து, பொற்கோ மூவரும் சொல்வதை என் கொள்கையாக இனி ஏற்றுக் கொள்கிறேன்.

இவர்கள் மூவரையும் கொண்ட ‘தமிழ் ஆராய்ச்சிக் குழு’ அமைக்க விரும்புகிறேன். இவர்கள் சொல்லும் நூல்களையும் கருத்துகளையும் என் தலைமேல் சுமந்து மக்களிடம் பரப்பத் தயாராக இருக்கிறேன்.

பெரியார் பேசிய உருக்கமான பேச்சு, அரங்கத்திலிருந்த அனைவரையும் உணர்ச்சி வயப்பட வைத்தது.

முப்பதாண்டிற்கு முன்னும் பின்னும்!

பெரியாரின் இயல்பே, தகுதியானவர்களை முன்னே நிறுத்திப் பின்னால் இருந்து செயல்படும் பெருந்தன்மைதான்! அவர் வரலாறு முழுதும் இந்த இயல்பு எதிரொலித்திருப்பதைத் தொடர்ச்சியாகப் பார்க்கலாம்.

கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்து 1938இல் நிகழ்ந்தது முதலாவது மொழிப்போர்! மறைமலை அடிகளாரையும் நாவலர் ச. சோமசுந்தர பாரதியாரையும் முன்நிறுத்தித் தம்மைக் களப்பணியாளராக அப்போது காட்டிக் கொண்டவர் பெரியார்!

1968இல், முப்பதாண்டு இடைவெளிக்குப் பின்னும் பெரியாரின் பணிவும் பெருந்தன்மையும் மாறவில்லை. 1938இல் இருவரை முன்னிறுதியது போல், தமக்கு மிக இளைய மூவரை 1968இல் முன்நிறுத்திப் பேசினார் பெரியார்.

'மொழித்துறையில் எனக்கு வழி காட்டுங்கள்’ எனத் தத்தனூர் மணவிழா மேடையில் வெளிப்படையாகவே அறிவித்தார்.

மூவரில் இருவரான வை. பொன்னம்பலனாரும், வே. ஆனைமுத்தும் காலத்தில் கரைந்து விட்டனர். பேராசிரியர் பொற்கோ (பொன். கோதண்டராமன்) இன்று நம்மோடு இருக்கின்றார். பெரியார் பின்பற்றிய நடைமுறைகளும் அவர் வாழ்ந்து காட்டிய வழிமுறைகளும் தொடர்ந்து நினைவுகூரப்பட வேண்டும். அப்போதுதான், பெரியார் வெல்வார்; பெரியாரியல் வெல்லும்.

- புலவர் செந்தலை ந.கவுதமன்