அம்பேத்கர் படத்தை ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை அட்டைப்படமாக போடுவதும் அம்பேத்கர் சிலைகளை திறப்பதும், நயவஞ்சக மானது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் எச்சரித்தார்.

சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை:

அம்பேத்கர் விருது கொடுத்து என்னை கவுரவித்ததற்கு மிகுந்த நன்றி. குறிப்பாக பாசிசத்துக்கு எதிராக அரசியல் கூட்டணி களைத் திரட்ட வேண்டிய அவசியமும் அவசரமும் உள்ள இந்த காலகட்டத்தில் இந்த விருதை எனக்கு வழங்குவதற்காகப் பாராட்டு கிறேன்.

வெட்கமே இல்லாமல் இந்தியாவை இந்து தேசம் என்று வாதாடிக்கொண்டிருப்பவர்கள் இன்று இந்தியாவின் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள். அந்த குறிக்கோளை எட்டு வதற்காக சக்கரங்கள் சுழன்று கொண்டே யிருக்கின்றன - பொதுவெளியிலும் தனிப்பட்ட முறையிலும். பல்கலைக்கழக, பள்ளிக்கூட பாடத் திட்டங்கள் மாற்றப்படுகின்றன; வரலாறு மாற்றி எழுதப்படுகிறது (அது எழுதப்பட வேண்டும் ஆனால் இப்படி அல்ல), கற்றல் வழிமுறைகள் முழுமையாக மாற்றியமைக்கப் படுகின்றன; இந்துத்துவ குருமார்கள் நீதித்துறை யிலும், காவல்துறையிலும், உளவுத்துறையிலும் ராணுவத்திலும் கூட அமர்த்தப்படுகிறார்கள்.

விஸ்வ இந்து பரிஷத்தும் பஜ்ரங் தளமும் நாடெங்கிலும் நடத்திக்கொண்டிருக்கும் இந்த வித்தியாசமான கர் வாப்ஸி (வீடு திரும்புதல்) பற்றித்தான் நான் உங்களுடன் இன்று பேச விரும்புகிறேன். முன்பெல்லாம் அது சுத்தி (தூய்மை) இயக்கம் என்றே அழைக்கப்பட்டது. அதாவது அசுத்தமானவர்களை தூய்மைப் படுத்தி அவர்களை மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பி அழைத்து வரும் செயல்பாடு. 150 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது அது. அதற்கும் மதத்திற்கும் உண்மையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது முழுக்க முழுக்க மக்கள் தொகை சம்பந்தப்பட்டது. இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கான முயற்சி அது. இன்று அதை வாக்கு வங்கி என்று நாம் அழைக்கிறோம்.

ஆனால் இந்து சமுதாயம் என்ற ஒன்று இருந்ததே இல்லை. அது சமீபத்தில் உருவான கருத்துரு. “இந்து சமூகம் என்பதே ஒரு புனைவு தான் என்று உணர்வதுதான் முதன்மையானதும் முக்கியமானதும் ஆகும். சிந்து சமவெளியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் தங்களிட மிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியர்கள் கொடுத்த பெயர் அது” என்று பாபாசாகேப் அம்பேத்கர் குறிப்பிடுகிறார். .

நூறு வருடங்களுக்கும் முன்பு சாம்ராஜ் யங்கள் தேசங்களாக மாறிய போதும் மன்னர்களுக்குப் பதிலாக பிரதிநித்துவ அரசியல் உருவான போதும்தான் இந்த வாக்கு வங்கிகளை ஏற்படுத்தும் வழக்கம் உண்டானது. பிரதிநித்துவ அரசியல் எண்ணிக்கையைப் பற்றிய ஒரு புதிய கவலையை உருவாக்கியது. தாம்தான் பெரும்பான்மை என்பதை நிறுவ ஆதிக்க சாதிகள் மிகவும் பிரயத்தனப்பட்டன. இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள் அதன் பிறகுதான் அவ்வாறு செய்யத் தொடங்கினார்கள். அது வரை சாதியே அவர்களது அடையாளமாக இருந்தது. மக்கள் தொகை பற்றிய கவலை உருவாகும் வரை, இலட்சக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள், சாதியின் கொடுங்கரங்களிலிருந்து தங்களை காத்துக்கொள்ள இஸ்லாத்துக்கும், கிறிஸ்துவத்துக்கும், சீக்கிய மதத்திற்கும், பௌத்தத்திற்கும் மாறியது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

ஆனால் மக்கள் தொகை பற்றிய கவலை உண்டானவுடன், அவர்கள் யாருடைய தொடுதலை தவிர்த்தார்களோ, யாருடைய உணவை ஏற்றுக்கொள்ள மறுப்பார்களோ, யாருடைய வீடுகளுக்குச் செல்ல மாட்டார்களோ அந்த நாலரை கோடி ‘தீண்டத் தகாதவர்களும்’ இந்துக்கள்தான் என்று முடிவு செய்து விட்டார்கள். ஒரு பெரிய பிரச்சாரம் தொடங்கியது - சாதிஅமைப்புக்கு எதிராக அல்ல, அதன் சொத்து உரிமை பற்றி அல்ல ஆனால் தீண்டாமைக்கு எதிராக தொடங்கியது. தீண்டத்தகாதவர்களை இந்து மதத்திற்குள் வைத்துக்கொள்வதுதான் அதன் நோக்கம். பிறகு ஆரிய சமாஜ் ‘தூய்மை’ இயக்கத்தைத் தொடங்கியது. அதைத்தான் தற்போதைய அரசு மிகப்பெரிய அளவில் மறு அறிமுகம் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. பிரச்னை இதுதான்: பெரிய வீட்டுக்குள் அழைத்து வந்த பிறகு அவர்களை எப்படி தனிமைப்படுத்தி வைப்பது? வேலைக்காரர் களுக்கான குடியிருப்பிலா? இந்து பெரும்பான்மையை உருவாக்கும் அதே நேரம் சாதித் தூய்மையை எப்படி பாதுகாப்பது? சாதி அமைப்பை தூக்கிப்பிடித்துக் கொண்டே தீண்டாமை பற்றி இவர்கள் வடிக்கும் முதலைக்கண்ணீரின் நோக்கத்தை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.

நவீன அரசியல்வாதிகளில் மிகச் சிறந்தவர் என்று நான் நம்பும் பாபாசாகேப் அம்பேத்கர் இவற்றை யெல்லாம் பல வருடங்களுக்கு முன்பே கண்டுணர்ந்து கோபத்தோடும் வெறுப்போடும் அறிவு வலிமை யோடும் நிராகரித்தார். இது எல்லாம் அவருடைய எழுத்தில் இருக்கின்றன.

ஆனால் இன்று, பாஜக தலைவர்கள் வெட்கமே இல்லாமல் பாபாசாகேப் அம்பேத்கரின் படங்களை யும் சிலைகளையும் தினமும் திறந்து கொண்டிருக் கிறார்கள். அவர் மீதான அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் பத்திரிக்கையான ஆர்கனைசர் அவரை தனது முகப்பு அட்டையில் பிரசுரித்திருக்கிறது. அவரைத் தொழுவதாக ஏமாற்றும் அதே நேரம் பாபாசாகேபின் அரசியலை அடித்துக் கூழாக்கி அவரை இந்துவின் சின்னமாக கட்டமைக் கிறார்கள். கடும் பயத்தில் கிறிஸ்துவர்கள் வாழும் கந்தமால், பதர் போன்ற இடங்களில் கிறிஸ்துவ சமூகம் மீது அவர்கள் நடத்தும் கொலைவெறித் தாக்குதல்கள், தேவாலயங்களை எரிப்பது, கன்னியாஸ்திரிகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குவது எல்லாம் இந்து மதத்தை விட்டு வேறு மதத்திற்கு மாறச் சொல்லி அம்பேத்கர் சொன்னதை செய்த தலித்துகள் மீதான தாக்குதலே.

இன்று கொடுமை என்னவென்றால் தலித் கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் ‘கர் வாப்சி’ நிகழ்வில் பங்கு கொள்ள அவர்கள் தரும் ஊக்கம், எதற்காக அம்பேத்கர் பாடுபட்டாரோ அந்த இட ஒதுக்கீடுதான். மதம் மாறியதால் இட ஒதுக்கீட்டுக்குத் தகுதியற்றவர்களாகிவிட்ட அவர்களை அந்த ஆசை வார்த்தையைச் சொல்லியே மீண்டும் இந்து மதத்திற்குள் அழைத்து வர முனைகிறார்கள். அம்பேத்கரின் சிந்தனைகளைத் திரித்து அவருக்கு எதிராக, அவர் நம்பியவற்றுக்கு எதிராக ஒரு கத்தியாக இன்று பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.அவரது மக்களின் வறுமையும் பாதுகாப்பற்ற நிலையும் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது.

இதுதான் வல்லரசா?

இந்திய ஒரு வல்லரசு என்று நமது தலைவர்கள் சொல்கிறார்கள். இந்த வல்லரசில்தான் எண்பது கோடி மக்கள் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பணத்தில் ஒரு கௌரவமான வாழ்க்கையை வாழ முடியுமா? நிறைய பேர் ஆப்ரிக்கா வறுமையான கண்டம் என்றும் இந்தியா பணக்கார நாடென்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆப்ரிக்கா விலுள்ள ஏழை நாடுகளின் ஒட்டுமொத்த ஏழை மக்களை கணக்கிட்டால்கூட அதை விட அதிகமான ஏழை மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள்.

உலகின் மிக அதிகமான ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் வாழ்வது இந்த நாட்டில்தான். அதே நேரம், விரல்விட்டு எண்ணக்கூடிய சில கோடீ°வர தொழிலதிபர்களிடம் கோடிக்கணக்கான ஏழைகளிடம் இருக்கும் சொத்துகளைவிட அதிக சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. உலகின் மிக அவமானகரமான, சமநிலையேயில்லாத ஒரு சமுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மற்ற நாடுகளைப் போல அல்லாமல் நமது நாட்டில் மக்கள் சமத்துவம் மறுக்கப்படுகிறது. இந்து ஜாதியமைப்பு என்ற நிறுவனத்தால் இந்த ஏற்றத்தாழ்வு புனிதப்படுத்தப்பட்டுள்ளது.

நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தில் வாழும் எண்பது கோடி பெரும்பான்மை மக்கள், அணைகள், சுரங்கங்கள், சிறப்பு மண்டலங்கள் போன்ற மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களால் தங்கள் வாழ்நிலங்களிலிருந்து துரத்தப்பட்ட இலட்சக்கணக்கான பெரும்பான்மை மக்கள், ஊட்டசத்து குறைவுள்ள குழந்தைகளில் பெரும்பான்மையானவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், வீடற்ற மக்கள், நகரங்களில் குடிசைப் பகுதிகளில் வாழ்பவர்கள், சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் எல்லோரும் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் இப்போது இஸ்லாமியர்கள். வன்முறை நிறைந்த நமது நாட்டில் கலவரங்களில் கொல்லப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இவர்களே.

தேசிய குற்ற ஆவண மைய விவரங்களின் படி, தலித் அல்லாத ஒருவர் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கும் ஒரு தலித் மீது வன்முறையை செலுத்துகிறார். ஒவ்வொரு வாரமும் 4 தலித் பெண்கள் பிற சாதியினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள், ஒவ்வொரு வாரமும் 13 தலித்துகள் கொல்லப்படு கிறார்கள். ஆறு தலித்துகள் கடத்தப்படுகிறார்கள்.

தில்லியின் கூட்டு பாலியல் வல்லுறவு கொலை சம்பவம் நிகழ்ந்த 2012ல் மட்டும் 1574 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள். (தலித்துக்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலும் மற்ற குற்றங்களிலும் வெறும் பத்துசதவிகிதம் மட்டுமே ரிப்போர்ட் செய்யப்படு கின்றன). 651 தலித்துகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அது பாலியல் குற்றம் மற்றும்கொலைகளின் எண்ணிக்கை மட்டுமே. நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்துச் செல்வது, மலத்தைத் திணிப்பது, நிலத்தை அபகரிப்பது, சமூக புறக் கணிப்பு, குடிநீர் தராமல் இருப்பது எல்லாம் இந்த எண்ணிக்கையில் அடங்காதவை.

பாபாசாகேப் அம்பேத்கர் சொன்னது போல: “தீண்டாதவர்களைப் பொறுத்தவரையில் இந்து மதம் கொடூரங்களின் கூடாரம்.”ஆனால் வன்முறை என்பது குற்ற செயல்களில் ஈடுபடும் கும்பல்களோடு நின்றுவிடுவதில்லை. அது இந்திய தேசம் என்கிற கற்பிதத்தில் இருக்கிறது.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதியன்று ஆந்திர மாநிலத்தின் சிறப்பு காவல்படை 20 பேரை இரத்த வெறியோடு கொன்றது. யாரும் கைது செய்யப்படவில்லை. ஹஷிம்புராவில் 42 இ°லாமியர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் காவல்துறை யினர் விடுதலை செய்யப்பட்டது போல, கீழ்வெண்மணிபோல, பிற தலித் படுகொலை வழக்குகள் போல அனேகமாக இந்தப் படுகொலைகளைச் செய்த சிறப்புக் காவல்படையினர் மீதும் எந்த நடவடிக்கையும் இருக்காது. அதே நாளில் தெலுங்கானாவில் கைது செய்யப்பட்டு வாரங்கல்லிலிருந்து ஐதரபாத்துக்கு அழைத்து வரப்பட்ட ஐந்து இ°லாமிய கைதிகளை சுட்டுக் கொன்றது காவல்துறை. பிறகு கொல்லப்பட்ட மக்களுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது!!

அரசியல் பிரச்சினைகளை தீர்க்க இராணுவம்

இந்தியா இறையாண்மை கொண்ட அரசாக மாறிய பிறகு கடந்த 67 வருடங்களில், உள்நாட்டில் அரசியல் பிரச்னைகளைக் கையாள இந்திய இராணுவம் அனுப்பப்படாத வருடம் என்று ஒன்று கூட இல்லை. காஷ்மீர், நாகாலாந்து, மிசோரம், மணிப்பூர், ஹைதராபாத், கோவா, தெலுங்கானா, அசாம், பஞ்சாப், மேற்கு வங்கம் என்று பல மாநிலங்களுக்கும் இராணுவத்தினர் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது ஆதிவாசி மக்கள் வாழும் மத்திய இந்தியாவிற்கு நிலத்தை சுரங்க நிறுவனங்களுக்கும் கட்டுமான நிறுவனங்களுக்கும் கையளிக்க இராணுவம் அங்கு செல்ல தயாராக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இலட்சக் கணக்கானவர்கள் துன்புறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். தேசத்தின் எதிரிகள் யார்? யோசித்துப் பாருங்கள். அவர்கள் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், ஆதிவாசிகள், சீக்கியர்கள் மற்றும் தலித்துகள். எப்போதும் தனது சிறுபான்மையினரோடு தலித்துகளோடு போர் புரிந்துகொண்டிருக்கும் ஒரு பார்ப்பன இந்து தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்தியா சிறுபான்மையினரின் தேசம் - இந்த மேட்டுக்குடி சிறுபான்மை (பார்ப்பனரும் பனியாக்களும் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் வெறும் 6 சதவிகிதம் மட்டுமே) எப்படி தங்களது சலுகைகளையும் அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்ள முடிகிறது? காலனிய ஆட்சியாளர்களைப்போல மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரைத் திருப்பிவிடுவதன் மூலம்தான். காஷ்மீரில் சண்டையிட நாகாக்களை அனுப்புவதன் மூலம், காஷ்மீரிகளை சட்டிஸ்கருக்கு அனுப்புவதன் மூலம் தமிழர்களை அசாமுக்கு அனுப்புவதன் மூலம், இடைநிலைச் சாதியினரை தலித்துகளுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம், தலித்துகளை இ°லாமியர்களுக்கு எதிராக நிறுத்துவதன் மூலம் நீதி மனித உரிமையாக சுருங்கியது.    

(மீதி அடுத்த இதழில்)

Pin It