இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒரு ‘சமூகப் புரட்சி’ தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது. அந்தப் ‘புரட்சி’தான் இந்த மண்ணில் சமூக-பொருளியல் மாற்றங்களுக்காக வித்திட்டது. அதுதான் கடந்த காலங்களில் நடந்த ‘கல்விப் புரட்சி’. இராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்தபோது பள்ளிகளை மூடினார். ‘குலக்கல்வித் திட்டத்தை’க் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்த பெரியாரின் இயக்கம் வெகுண்டு எழுந்தது. கல்வி உரிமைகளை நசுக்கிய இராஜகோபாலாச்சாரியை பதவியிலிருந்து ஓட வைத்தது. அதற்கான போராட்டச் சங்கை ஊதியவர் பெரியார்.

பெரியாரின் ஆதரவோடு அடுத்து ஆட்சிக்கு வந்தார் காமராசர். மூடிய பள்ளிகளைத் திறந்தார். மேலும் கூடுதலாக பள்ளிகளைத் திறந்தார். கல்லூரிகள் தொடங்கப்பட்டன; மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவசக் கல்வி வந்தது. அரசுப் பள்ளிகளும், அரசுக் கல்லூரிகளும், அரசு தொழில்நுட்ப நிறுவனங்களும் முதல் தலைமுறையாக படிக்க வந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றின. தமிழகம் ஏனைய மாநிலங்களிலிருந்து இப்போதும்கூட ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றதற்கு அடித்தளமாக அமைந்ததே கடந்த கால அரசின் கல்வித் திட்டங்களும் கல்விக் கொள்கைகளும்தான். அந்தத் தமிழ்நாட்டில் இன்று என்ன நிலை?

அரசுப் பள்ளிகள் மெல்ல மெல்ல மரணித்துக் கொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மோசமான அளவில் குறைந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1100 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. மிகக் குறைவாக மாணவர் எண்ணிக்கைக் கொண்ட 2000த்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் விரைவில் மூடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக ஒதுக்கிடும் தொகை மிக மோசமாகக் குறைந்து வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதி ரூ.20,936.50 கோடி. இந்த நிதி ஒதுக்கீடும் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும் இல்லை. 14 வகையான இலவச நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டது. புற்றீசல்கள் போல பெருகி நிற்கும் தனியார் பள்ளிகள், வணிகம் நடத்தி கொள்ளை யடிக்கின்றன.

இந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் நடைமுறையில் இருந்தும், அந்தச் சட்டம் செயல்படவிடாமல் முடக்கப்பட்டுக் கிடக்கின்றன. இந்தச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் கட்டணம் ஏதுமின்றி 25 சதவீத இடங்களை அப்பகுதியில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு ஒதுக்கிட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் தனியார் பள்ளி நிர்வாகங்கள் இந்த இடங்களை ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கிட மறுக்கின்றன.

தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வம், சட்டசபையில் இத்திட்டத்தின் கீழ் 1.36 இலட்சம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக கூறுகிறார். இந்த புள்ளிவிவரத்தை அப்படியே உண்மையாக ஏற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட வேண்டிய இடங்களில் இது 11 சதவீதம் மட்டும்தான். இப்படி சேர்க்கப்பட்ட குழந்தைகள்கூட கட்டணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றன. ஒரு கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியிலுள்ள குழந்தைகளை மட்டுமே தனியார் பள்ளிகள்

25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும் என்பது சட்டம். அது பின்பற்றப்பட வில்லை.

வேறு பகுதிகளைச் சார்ந்த வசதி நிறைந்த குடும்பத்துக் குழந்தைகளிடம் கட்டணம் வாங்கிக் கொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் சேர்த்து வருகிறார்கள். இந்த மாணவர் சேர்க்கைக்கு சட்டத்தில் வலியுறுத்தப்பட்ட நடைமுறைகளும் மீறப்படுகின்றன. இது குறித்து அ.இ.அ.தி.மு.க. ஆட்சி, எந்தக் கவலையும் எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. 6 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத்தான் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கல்வியை உறுதி செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

ஆனால், தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி, ‘மழலைகளுக்கான கிண்டர் கார்டன்’ பள்ளிகளை அனுமதிக்கிறது. குழந்தை களுக்கு நேர்முகப் பேட்டி முறை ஏதும் பின்பற்றக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. மாறாக, தனியார் பள்ளிகள் இத்தகைய பேட்டிகளை நடத்துகின்றன. ஆட்சி தடுக்கவில்லை. குழந்தைகளுக்கான கட்டணத்தை, மாநில அரசு தனியார் கல்வி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். ஆனால், 3 ஆண்டுகளாக இந்தக் கட்டணத்தை தமிழக அரசு செலுத்தாத நிலையில், தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கட்டணம் கட்டுமாறு வற்புறுத்துகின்றன. அரசு கட்டணத் தொகையைத் தரும்போது திருப்பித் தருவதாக கூறுகின்றன.

தனியார் பள்ளி நிர்வாகிகள் கல்வி உரிமைச் சட்டத்தைப் பின்பற்ற மாட்டோம் என்று மாநாடு கூட்டி அறிவித்துள்ளனர். இந்த சட்ட விரோத அறிவிப்பு மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர், தமிழக ஆளுநர்! நாடு எங்கே போகிறது?

குஜராத் உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் வழங்கிய ஒரு தீர்ப்பை சுட்டிக்காட்ட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத ஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி வீ.எம். சகாய் மற்றும் ஆர்.பி. தோலாரியா ஆகியோரடங்கிய அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது.

இத்தகைய விழிப்புணர்வு, எதிர்ப்பு ஏன் தமிழகத்தில் இல்லை? தங்கள் தலைவியை ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்க,அமைச்சர்கள் காவடி தூக்கு வதற்கும், யாகம் நடத்துவதற்கும் போட்டி போட்டுக் கொண்டு நிற்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்த தயாராக இல்லை.

கல்விப் புரட்சியில் வழிகாட்டிய இந்தியாவுக்கே தமிழகத்திலா இந்த அவலநிலை?

Pin It