தமிழ்நாட்டைச் சார்ந்த நீதிபதி பி. சதாசிவம், உச்சநீதி மன்றத்தின் 40ஆவது தலைமை நீதிபதியாகியுள்ளார். இவர் தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர் என்பதும், குடும்பத்தில் முதல் பட்டதாரி என்பதும் தமிழ் வழியில் பயின்றார் என்பதும் தமிழகத்தில் நீண்டகாலம் நடந்த சமூகநீதிப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி யாகும். பிரிக்கப்படாத சென்னை மாகாணமாக இருந்த காலத்தில், 1951 இல் பதஞ்சலி சாஸ்திரி என்ற பார்ப்பனர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இதற்கு முன் இருந்துள்ளார்.

சமச்சீர் கல்விக்கு ஆதரவாக தீர்ப்பளித்தவர் நீதிபதி சதாசிவம். இயற்கை எரிவாயு தொடர்பாக அம்பானி சகோதரர்களுக்குள் ரிலையன்ஸ் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கும், ரிலையன்ஸ் தொழில் நிறுவனத்துக்கும் நடந்த வழக்கில், “இயற்கை எரிவாயுவை அரசின் பொதுத் துறை வழியாகவே கையாள வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில், இயற்கை வளங்கள் மக்களுக்கே சொந்தமாக இருக்க வேண்டும்” என்று அவர் வழங்கிய தீர்ப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். குழந்தைகள், பெண்கள் தொடர்பான வழக்குகளில் அவர்களின் உரிமைகளுக்காக, கண்டிப்பான தீர்ப்புகளை வழங்கிய பெருமை அவருக்கு உண்டு. ஜாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிராக நடக்கும் ‘கவுரவக் கொலைகளை’ தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும் என்று ‘இந்து’ ஆங்கில நாளேட்டுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இப்போதைய சட்டப்படி கொலைக் குற்றம் என்று தான் நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அந்த கவுரவக் கொலைக்கு உடந்தையாக குழுமி யிருந்தவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. அவர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே அதற்கு தனிச் சட்டம் அவசியம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ள கருத்து, பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

இப்படி ஒரு தனிச் சட்டம் கொண்டு வருவதற்காக முந்தைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால், பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரான பிறகு, அந்தக் குழு கலைக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது

Pin It