‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை வேண்டும்’ என்பது ஏதோ அர்ச்சகர் வேலைக்கான போராட்டமாக குறைத்து மதிப்பிடு வது சமூகப் பார்வையின் கோணல்புத்தியே ஆகும்.

அனைத்து சாதியினரும் - பார்ப்பன ஆதிக்க ஜாதி குடியிருப்பு வீதிகளில் நடக்கும் உரிமை கோரியபோது இது நடைப்பயிற்சிக்கான போராட்டம் என்று கேலி செய்வதுபோல் பார்ப்பனர்கள் இந்த உரிமைப் போராட்டத்தையும் கேலி செய்கிறார்கள்.

ஜாதியின் மய்யமான உயிர்ப் புள்ளி கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள் இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தில் அடங்கியிருக்கிறது என்ற உண்மையை சமூக விஞ்ஞானியான தந்தை பெரியார் கண்டறிந்தார். அதற்காக தனது வாழ்க்கையின் இறுதி காலத்தில் போராட்டக் களம் அமைத்தார். இதே கோரிக்கையை ஏற்று தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும், பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. முதல்வர் எம்.ஜி.ஆர். காலத்தில் இதே கோரிக்கையை பரிசீலிக்க நீதிபதி மகராசன் தலைமையில் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக எந்த ஆகமும் தடை போடவில்லை என்பதை ஆதாரங் களுடன் உறுதிப்படுத்தியது. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்தில் அர்ச்சகர் பயிற்சிக்காக 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படை யில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் தொடங்கப்பட்டு, அதில் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதியையும் சேர்ந்த 204 மாணவர்கள், உச்சநீதிமன்றத் தடையால் அர்ச்சகர் ஆக முடியாமல் தடுக்கப்பட்டு விட்டனர். தந்தை பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோது, 2002 ஆம் ஆண்டில் காஞ்சி காமாட்சி கோயில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தி, 1000 தோழர்கள் கைதானார்கள். மீண்டும் இப்போது தோழர் கோவை இராமகிருட்டிணன் அவர்களை பொதுச் செயலாளராகக் கொண்டு செயல்படும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தி தோழர்கள் கைதானார்கள். (அதற்காக அவர்கள் முன் வைத்த கோரிக்கைகளில் நமக்கு கருத்து வேறுபாடு உண்டு. அது வேறு சேதி) அதேபோல கி.வீரமணி அவர்கள் தலைமையில் இயங்கும் திராவிடர் கழகம், இப்போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் போராட்டத்தை அறிவித்துள்ளது. எந்த பெரியார் அமைப்பு இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், அது தந்தை பெரியார் அவர்களால் அறிவிக்கப்பட்ட போராட்டம் தான். தந்தை பெரியார் அவர்களின் ஜாதி இழிவு ஒழிப்புப் போராட்டத்தின் தொடர்ச்சிதான்!

ஆனால், நாட்டில் நிலவும் சிறு சிறு நிகழ்வு களைக்கூட ஊதிப் பெருக்கி விளம்பரப்படுத்தும் பார்ப்பன ஏடுகள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகருக்கான உரிமைப் போராட்டம் என்றால், இதுகாலம் வரை ‘கள்ள மவுனம்’ சாதிப்பது தான், ‘அவாள்களின்’ வாடிக்கையாகிவிட்டது. கடந்த வாரம் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, இது குறித்து சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்பியதைப் பாராட்டி வரவேற்க வேண்டும். அதில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகக் கூடாது என்பதில் பார்ப்பனர்கள், தங்களின் நச்சுக் கருத்துக்களை வெளிப்படையாக முன்வைத்ததை பல்லாயிரக் கணக்கில் மக்கள் பார்த்திருப்பார்கள். ‘பார்ப் பனர்கள் திருந்தி விட்டார்கள்’ என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழர்கள், இந்தத் தொலைக்காட்சியில் பார்ப்பனர்களின் வெறிப் பேச்சுக்களைக் கேட்ட பிறகாவது தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.

இவ்வாரம் வெளிவந்த ‘துக்ளக்’ பத்திரிகையில் (ஜூலை 24), திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை கொச்சைப்படுத்தி அனைத்து சாதி யினரும் அர்ச்சகர் ஆகும் போராட்டத்தை எதிர்த்து பார்ப்பன நச்சைக் கக்கியுள்ளது.

“அர்ச்சகர் வேலை என்பது வெறுமனே சுவாமி சிலையின் மீது பூக்களை விட்டெறிகிற வேலையல்ல. அதற்கென்று தனியாக படிப்பு இருக்கிறது. சமஸ்கிருத மந்திரங்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும். பூஜை விதிமுறை களில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆழ்ந்த சம்ஸ்கிருத அறிவு தேவை. இவற்றையெல்லாம் வகுப்பெடுத்துச் சொல்லி தந்துவிட முடியாது. அது இயல்பாகவே வரவேண்டிய ஒன்று. சங்கீதம், நடனம் மாதிரித்தான் புரோகிதம் செய்வதும், அர்ச்சகராவதும்” - என்று எழுதியுள்ளது, துக்ளக்.

சமஸ்கிருத அறிவை வகுப்புகளில் கற்பித்துத் தெரிந்து கொள்ள முடியாதாம். அது இயல்பாகவே வரக் கூடியதாம்! என்ன சொல்ல வருகிறது ‘துக்ளக்’? பார்ப்பனராகப் பிறந்தவர்களுக்கு மட்டுமே சமஸ்கிருதமும், அதன் வழியாக கடவுளை நெருங்கும் உரிமையும், பிறவியின் அடிப்படையில் இயல்பாக வரக்கூடியது என்று கூசாமல், பார்ப்பன வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சங்கீதமும், நடனமும்கூட படித்தோ பயிற்சிப் பெற்றோ வருவதில்லையாம். அதுவும்கூட ‘இயல்பாகவே’ (அதாவது ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறந்ததால் மட்டுமே) வரக் கூடியதாம். ‘இயல்பாகவே’ வரக்கூடிய அறிவு என்று ஒன்று இருக்கிறது - என்று பிறவியின் அடிப்படையில் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கிறது இந்தக் கூட்டம்.

தமிழ்நாட்டில் பார்ப்பனர்கள் பூஜை நடத்தும் ஆகமக் கோயில்களில் ஆகம முறைகேடுகள் எந்தெந்த முறைகளில் நடக்கின்றன என்பதை நீதிபதி மகராஜன் குழு, நீண்ட பட்டியலிட் டுள்ளதை ‘துக்ளக்’ பார்ப்பனருக்கு சுட்டிக் காட்டுகிறோம். காஞ்சி கோயிலுக்குள் தேவநாதன் எனும் அர்ச்சகர் பார்ப்பான் ‘கிருஷ்ண லீலை’கள் நடத்தி, அவை ‘ஒளிக் காட்சி’களாக தமிழகம் முழுதும் உலா வந்ததே. அதுபற்றி எல்லாம் ‘துக்ளக்’ பார்ப்பான் ஒரு வரிகூட எழுத முன் வரவில்லை. இவையெல்லாம் வகுப்பறைப் பயிற்சியில்லாமல் இயல்பாகவே அந்த அர்ச்சகப் பார்ப்பான் கற்றுக் கொண்ட பிறவிக்குரிய பெருமை என்கிறதா, துக்ளக்?

அது மட்டுமல்ல, கோயிலில் தமிழ் வழி பாட்டு முறையையும் கிண்டல் செய்கிறது, இந்த ஏடு. ‘தமிழ் அர்ச்சனை என்பது தோற்றுப் போன சமாச்சாரம். கோயில்களில் உள்ள பல்லிகூடத் தமிழில் அர்ச்சனை செய்யச் சொல்வது இல்லை. எல்லோரும் தங்கள் குழந்தை ஆங்கில வழிக் கல்வியில் தான் படிக்க வேண்டும் என்று ஆசைப் படுவதுபோல, கோயில்களில் சமஸ்கிருதத் தில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். மக்களின் விருப்பம் இது’ என்று எழுதுகிறது இந்த பார்ப்பன ஏடு!

தமிழில் பத்திரிகை நடத்தி வியாபாரம் செய்யும் கும்பல் - அர்ச்சனை மட்டும் தமிழில் நடத்தக் கூடாது என்கிறது. சமஸ்கிருதத்தை மட்டும் தான் கடவுள் ஏற்பார் என்று பேசி வந்த இந்தக் கூட்டம், இப்போது ‘மக்கள் விருப்பம்’ என்ற வாதத்துக்குள் புகுந்து கொண்டு, தனது ஆதிக்கத்தை நிலை நாட்டத் துடிக்கும் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘கோயில்-பக்தி-வழிபாட்டு முறை-அவற்றில் பார்ப்பன மேலாதிக்கம்’ என்பவை எல்லாம் பக்தி சார்ந்த புனிதங்கள் என்றும், ஆண்டவனால் உருவாக்கப்பட்டவை என்றும், அதில் கேள்விக்கே இடமில்லை என்றும் காலம் காலமாக பார்ப் பனர்கள் கட்டமைத்து, அச்சுறுத்தி திணித்து வரும் நம்பிக்கைகளைத்தான் இப்போதும் அவர்கள் ‘கவசங்களாக’ பயன்படுத்தி வருகிறார்கள். இந்தப் ‘புனிதங்களை’ பொய்மைகளை, கற்பிதங்களை கட்டுடைத்து, மக்கள் மன்றத்தில் கேள்வி எழுப்பிய பெருமை பெரியார் இயக்கத்துக்கு மட்டுமே உண்டு என்பதை கூரை மீது ஏறி நின்று நாம் முழங்க முடியும். “மக்கள் மனம் புண்படும்; மக்கள் நம்பிக்கைக்கு எதிராக நாம் பேச முடியாது; இந்த நம்பிக்கைகள் மக்கள் வாழ்க்கையோடும் மகிழ்ச்சி யோடும் கலந்து நிற்கின்றன” என்று இதுநாள் வரை பேசிக்கொண்டு, ‘புனிதக் கட்டுடைப்பு’களிலிருந்து ஒதுங்கி நின்று கொண்டு, ஜாதி-தீண்டாமை ஒழிப்பு-சமத்துவம்-சமதர்மம் பேசும் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் அனைத்தும் இது குறித்து கவலையுடன் சிந்திக்க வேண்டும் என்று வற்புறுத்துவது நமது கடமையாகிறது. ‘மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்’ என்ற வாதம், ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படும் போது அந்த மக்களிடம் இது குறித்து விழிப் புணர்வை, பரப்புரையை நடத்தி, அவர்களை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு முற்போக்கு இயக்கங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியை கவலையுடன் முன்வைக்க விரும்பு கிறோம்.

அடிமுட்டாள்தனமாக இது குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளது, துக்ளக்! “பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலையிடக் கூடாது; அவர்கள் ‘சமாதி’க்கு மாலை வைக்கக் கூடாது என்று ஒரு கும்பல் கிளம்பி போராட்டம் நடத்தினால், ஏற்றுக் கொள்வார்களா?” என்று கேட்கிறது துக்ளக்.

துக்ளக் வாதப்படியே பதில் சொல்வோம். “பெரியார், அண்ணா சிலைகளுக்கு, நினைவிடங் களுக்கு மரியாதை செய்ய மாலை அணிவிக்க எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதி மட்டும் தான் வரவேண்டும் என்றோ அவர்களின் கொள்கைகளை வகுப்பெடுத்து புரிந்து கொள்ள முடியாது என்றோ, இவர்களின் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் அறிவு ‘இயல்பாகவே’ வரக்கூடியது என்றோ இங்கே எவரும் சொல்லவில்லையே! அப்படிச் சொன்னால் இந்த சிலைகளுக்கு, நினைவிடங் களுக்கு வரவேண்டாம் என்று தாராளமாய் போராட வரட்டும்!”

திராவிடர் கழகத்தில் இருக்கிற எல்லாருமே “எங்களையும் பொதுச் செயலாளராக்குங்கள்; எங்களையும் தலைவராக்குங்கள் என்று போராட்டம் நடத்த ஆரம்பித்தால் என்னவாகும்?” - என்று கேட்கிறது துக்ளக்.

தங்களுக்கான பொதுச் செயலாளர்களையும், தலைவர்களையும், விரும்பி ஏற்றுக்கொண்டவர்கள் தான், அந்த இயக்கத்தில் இருக்கிறார்கள். அதற்கும் கோயில்களில் அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை கேட்பதற்கும் என்ன தொடர்பு? ‘சோ’ தலைக்கும் முழங்காலுக்கும் ஏன் முடிச்சுப் போட வேண்டும்? கோயில் என்பது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு வழிபாட்டு இடம். இதே கோயில்களுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று ஒரு காலம் இருந்தது. அப்போது கோயிலுக்குள் நுழையாமலேயே தாழ்த்தப்பட்ட மக்கள் ஒதுங்கி இருந்தார்கள். “இது மக்கள் விருப்பம்; எனவே தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு என்பது தோற்றுப் போய் விட்டது” என்று அப்போது ‘துக்ளக்’ பத்திரிகை இருந்திருந்தால் ‘மேதாவித்தனமாக’ எழுதியிருக் கும். கோயில் நுழைவுப் போராட்டங்கள் நடத்திய பிறகே கோயில் நுழைவு உரிமை கிடைத்தது; தீண்டாமை ஒழிக்கப்பட்டது. இப்போது கர்ப்பக் கிரகத்துக்குள் நிலைத்து நிற்கும் தீண்டாமையை ‘இயல்பானது’ - வகுப்பறையில் சொல்லிக் ‘கொடுக்க முடியாதது’, ‘எல்லோரும் தலைவர் களாகிட முடியாது’ என்றெல்லாம் குதர்க்கவாதம் பேசி நியாயப்படுத்த பார்ப்பனர்கள் துடிக்கிறார்கள்.

கர்ப்பகிரகத்துக்குள் பார்ப்பன ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, உரிய பயிற்சியுடன் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகிவிட்டால், ஜாதி-தீண்டாமைகளின் ‘ஆணிவேர்’ புனிதங்களின் மூலம் தகர்க்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுதான் பார்ப்பனர்களுக்கு ஆத்திரம். பார்ப்பன அர்ச்சகர் இல்லாத எந்தக் கோயிலுக்கும் பார்ப்பனர்கள் வழிபாட்டுக்கு வரமாட்டார்கள்; கோயிலே தீட்டாகிவிட்டது என்பார்கள். கடந்தகால அனுபவங்கள் இதையே நமக்கு உணர்த்துகின்றன.

ஜாதி இழிவு ஒழிப்புப் போராட்டத்தை எந்தப் பெரியார் அமைப்பு முன்னெடுத்தாலும் திராவிடர் விடுதலைக் கழகம், அது, பெரியார் முன்னெடுத்த ஜாதி ஒழிப்புக்கான போராட்டமாகவே பார்க்கும். அதை எதிர்த்து கொச்சைப் படுத்தும் பார்ப்பன சக்திகளுக்கு பதிலடிக் கொடுக்கத் தயங்காது. பெரியார் இயக்கங்கள் வாக்குகளுக்கு ஓடிக் கொண்டிருக்கும் ஓட்டு அரசியல் கட்சிகள் அல்ல. இதை பார்ப்பனர்கள் புரிந்து கொள்ளட்டும்!

Pin It