23 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், “என்னுடைய கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணத்தைக் கூறுவீர்களா?” என்று தகவல் உரிமை தலைமை ஆணையருக்கு கடிதம் எழுதினார். “அது முடியாது; குடியரசுத் தலைவருக்கு அமைச்சரவை எழுதிய குறிப்புகளையோ, குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்வதற்கான காரணங்களையோ வெளியிட வேண்டிய அவசியமில்லை. அதை சட்டம் அனுமதிக்கவில்லை” என்று கண்டிப்பாக பதில் எழுதிவிட்டார் அதிகாரி. அதுவும்கூட, ஒரு வகையில் சரிதான். கருணை காட்டுவதற்குத்தான் காரணம் வேண்டும். கருணையை மறுப்பதற்கு காரணம் ஏதும் தேவையில்லையே! கருணை உள்ளம் இல்லாமல் இருந்தாலே போதும்!

குடியரசுத் தலைவர் ‘கருணையுடன் - கருணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று எழுதி யிருப்பார், போலிருக்கிறது! பேரறிவாளன் கருணை மனு நிராகரிப்பு மட்டுமல்ல, தடா நீதிமன்றத்தில் அவர் மீது நடந்த வழக்கு விசாரணைகூட ரகசியமாகத்தான் நடந்தது. அதாவது, நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை வழக்குப் பற்றி நடக்கும் வாதங்கள், குறுக்கு விசாரணைகள் மக்களுக்கு தெரிந்துவிடவே கூடாது என்று அப்படி ஒரு ‘தேச ரகசியத்தைக்’ காப்பாற்றினார்கள்.

இந்தியாவின் தூதரக செயல்பாடுகளை யெல்லாம் அமெரிக்கா கண்காணித்துள்ளது என்பதுகூட அண்மையில் அம்பலமானது. (அமெரிக்க உளவு நிறுவனத்தில் பணியாற்றி, மனசாட்சி பொறுக்காமல், இந்த உண்மைகளை அம்பலப்படுத்தி, இப்போது ரஷ்யாவில் அடைக்கலமாகியுள்ள ஸ்னோடன் என்ற இளைஞர்தான் இந்த ரகசியத்தைக் கூறினார்)

அய்யோ, இந்தியாவின் ரகசியங்களை அமெரிக்கா கண்காணிப்பதா? என்று இந்தியா அப்படி ஒன்றும் துள்ளி குதிக்கவில்லை. “இந்தியாவை அமெரிக்கா கண்காணித்தால், இந்த ஆசாமிக்கு என்ன வந்துவிட்டது? இப்படிப்பட்ட அமெரிக்க தேசத் துரோகிகளுக்கெல்லாம் அடைக்கலம் தர இந்தியா ஒன்றும் திறந்த வீடு அல்ல” என்று இந்திய தேசப் பற்றுடன் பதில் சொல்லிவிட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர்!

“அமெரிக்க எஜமான் - நமது நாட்டு ரகசியங்களை தெரிந்து கொள்ளட்டும். அது அவர்கள் எடுத்துக்கொண்ட உரிமை. அதற்காக அற்ப இந்திய குடிமக்கள் எல்லாம் அந்த உரிமையை கேட்கலாமா?” என்று எதிர் கேள்வி போடுகிறார்கள், ஆட்சியாளர்கள்.

இந்தியாவில் சி.பி.அய்., அய்.பி. என்ற பெயரில் புலனாய்வுத் துறைகள் இயங்கிக் கொண்டிருக் கின்றன. இவர்கள் ரகசியமாக தேசநலனுக்கான செயல்பாடுகளையெல்லாம் துப்பாக்கிகளை ஏந்தி உயிரைப் பணயம் வைத்து செய்து கொண்டிருக் கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதே தேச பக்தி.

குஜராத் முதல்வர் மோடியை கொலை செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டார்கள் என்று கூறி, மும்பையைச் சார்ந்த இஷ்ரத்கான் எனும் மாணவியையும், இன்னும் நால்வரையும் இந்திய உளவுத் துறை தந்த தகவல் அடிப்படையில் குஜராத் போலீசார் சுட்டுக் கொன்றுவிட்டனர். இது ‘போலி என்கவுண்டர்’; உளவுத் துறையும் (அய்.பி.), குஜராத் போலீசும் சேர்ந்து நடத்திய சதி என்று சி.பி.அய். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டது. இப்படி அய்.பி.க்கு எதிராக வழக்கை நடத்தும் சதிஷ்வர்மா எனும் சி.பி.அய். அதிகாரி, அப்படி ஒன்றும் நேர்மையான அதிகாரி அல்ல; அவர் பணியாற்றும் சி.பி.அய்.யும் நேர்மையானது அல்ல என்று மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது. உள்துறை அமைச்சகத்தில் பணியாற்றிய ஆர்.வி.எஸ். மணி என்ற அதிகாரி, சி.பி.அய்.க்கு எதிராக ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அதாவது உள்துறை அமைச்சகத்தில் தாம் பணி யாற்றியபோது இஷ்ராத் ஜஹான் போலி என் கவுண்டருக்கு அய்.பி. தான் காரணம் என்று பிரமாண பத்திரத்தில் சேர்க்குமாறு தன்னைக் கட்டாயப்படுத்தியதாக அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

அது மட்டுமல்ல; 2001 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தாக்குதலும், 2008இல் மும்பையில் நடந்த தாக்குதலும் இந்தியாவே திட்டமிட்டு நடத்தியது என்று சி.பி.அய். அதிகாரி சதிஷ்வர்மா, தன்னிடம் கூறியுள்ளதாகவும் அதிகாரி மணி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத் தாக்குதலைக் காரணம் காட்டி, ‘பொடா’ சட்டம் வந்தது. மும்பை தாக்குதலைக் காரணம் காட்டி ‘தீவிரவாதத் தடுப்புச் சட்டம்’ (ரயயீயன) வந்துவிட்டது. தாக்குதல்கள் நடத்தப் பட்டதே, இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்குத்தான் என்று சி.பி.அய். அதிகாரி தெரிவித்தாராம்!

அடேங்கப்பா! இப்படி எல்லாம்கூட நடக்குமா என்று கேட்காதீர்கள். தேசத்தைக் காப்பாற்ற இந்த ரகசியத் தாக்குதல்கள் எல்லாம் கட்டாயத் தேவை என்பது தேசபக்தர்களுக்குத்தான் தெரியும்! தேசவிரோதிகளுக்குப் புரியவே புரியாது. தேசத் தந்தை, அகிம்சை போதித்த காந்தியின் தேசமல்லவா? அவர் வழியில் நடைபோட வேண்டாமா? தேச பக்தியும், அதன் ரகசியங்களும் இதோடு முடிந்து விடவில்லை. முன்னாள் அதிகாரி ஆர்.வி.எஸ். மணி எழுதிய இந்தக் கடிதத்தை பாகிஸ்தான் தனது தேசபக்திக்கு பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணமல்ல என்ற உண்மை வெளிவந்துவிட்டது என்று அந்த நாட்டு ஊடகங்கள் இந்தக் கடிதத்தை தலைப்பு செய்திகளாக வெளியிட்டுவிட்டன.

ஆனாலும் எவ்வளவோ ரகசியங்கள் எல்லாம் வெளி வந்தாலும்கூட, ஒரு பிரச்சினையில் மட்டும் ரகசியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவதில் மன்மோகன் காங்கிரஸ் ஆட்சி அசைந்துக் கொடுக்காமல் இருந்து வருகிறது.

ராஜீவ் கொலை தொடர்பாக நியமிக்கப்பட்ட நீதிபதி ஜெயின், நீதிபதி வர்மா விசாரணை அறிக்கைகளையும் கேட்டு, தலைமை தகவல் அதிகாரியிடம் பேரறிவாளன் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கைகளைத் தரவேண்டும் என்று அதிகாரியும் அனுமதித்து விட்டார். அதற்குப் பிறகுதான் இந்த அறிக்கைகளைத் தேடத் தொடங்கினார்கள். ஜெயின் ஆணைய அறிக்கையின் ஒரு பகுதிதான் கிடைத்திருக்கிறதாம். மற்றொரு நீதிபதியான வர்மா தந்த அறிக்கை தான் கிடைக்கவில்லையாம்! அதாவது முழுவதுமே காணாமல் போய் விட்டதாம்! அப்படிப் போடு!

விசாரணை அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ்தான் பெற முடியும் என்பது இந்தியாவின் ‘ஜனநாயகம்’!

அப்படி என்ன வர்மா அறிக்கையில் ‘ரகசியம்’ அடங்கியிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறதா? அதில்தான் ராஜீவ் காந்திக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் நடந்த குளறுபடிகள், குழி பறிப்புகள் பற்றிய விவரம் அடங்கியிருக்கிறது. அதற்குக் காரணமான அதிகாரிகளின் பெயர்கள் அடங்கி இருக்கிறது. நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் பெயர் பட்டியலும் அடங்கி இருக்கிறது. இவ்வளவு ரகசியங்களும் உள்ள அறிக்கை காணாமல் போகாமல் இருக்குமா, என்ன?

தூதரக ரகசியம் வெளியாகலாம்; ‘என்கவுண்டர்’ ரகசியம் வெளியாகலாம்; நாடாளுமன்றத் தாக்குதல் ரகசியம் வெளியாகலாம்; பேரறிவாளன் கேட்கும் ‘ஏனய்யா என்னை தூக்கில் போடச் சொல்லுகிறீர்கள்’ என்ற கேள்விக்கான விடை மட்டும் ‘ரகசியம்’; ராஜீவ் பாதுகாப்புகளை குலைத்தது யார் என்ற கேள்விகளும் ரகசியமோ ரகசியம்!

எந்த விலைக் கொடுத்தாலும் சரி, எங்கள் தேசத்திலிருந்து இந்த ரகசியங்களை மட்டும் நீங்கள் வாங்கவே முடியாது; அது அமெரிக்க உளவுத் துறையாக இருந்தாலும்கூட

Pin It