இளவரசனின் மரணம், உணர்வுகளை உலுக்கிவிட்டுள்ளது. திவ்யா-இளவரசன் என்ற அன்பினால் இணைந்த இளம் உள்ளங்களை ஜாதி வெறி பிரித்தது. திவ்யாவின் தந்தையின் உயிரை இந்த ஜாதி வெறி காவு கொண்டது. இப்போது இளவசரன் என்ற 20 வயதே நிறைந்த இளைஞனை ஜாதிவெறி கொலை செய்து விட்டது. இதுதான் ஜாதியப் பெருமையா? இதுதான் இவர்கள் பேசும் க்ஷத்திரிய தர்மமா? இதுதான் ‘அக்னி’ வம்ச வழியில் வந்து பிறந்ததாக பீற்றிக் கொள்ளும் பெருமையின் அடையாளமா?

‘தலித்’ இளைஞர்கள் ஜீன்ஸ், பேன்ட், கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு, வன்னியப் பெண்களை மயக்கி திருமணம் செய்து ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். இது நாடகக் காதல் என்று நீட்டி முழங்கிய ஜாதியத் தலைவர்களே! இப்போது யாரை யார் ஏமாற்றியிருக்கிறார்கள்! நாடகத்துக்கான காட்சிகள் எந்த திசையிலிருந்து அரங்கேற்றப்பட்டன? பதில் சொல்ல முடியுமா?

திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டபோது, இந்த சாவுக்குக் காரணமாக இளவரசன் மீதும், காவல் துறை வழக்குப் பதிவு செய்து, காவல் துறையில் இந்த இளைஞருக்கு கிடைக்க வேண்டிய பதவி நியமனத்தையும் தடுத்தார்களே! இப்போது இளவரசன் மரணத்துக்கு காரணமான ஜாதியத் தலைவர்கள், வழக்கறிஞர்கள் மீது காவல்துறை

வழக்குப் பதிவு செய்யுமா?

திவ்யா என்ற பெண், ஜாதி வெறியர்களின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் சூழ்நிலைக் கைதி யாக்கப்பட்டார். காரணம், அவர் ஒரு பெண்ணாகப் பிறந்ததும் தான்! எந்த ஒரு சூழ்நிலையிலும் அந்தப் பெண், தான் கைப்பிடித்த காதலனையோ, அவரது குடும்பத்தினரையோ ஒரு வார்த்தைக்கூட குறை காணவில்லை!

இப்போதும், மகனை இழந்த துயர நிலை யிலும்கூட, கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே இளவரசனின் தந்தை, “திவ்யா எனது மகளைப் போன்றவர், அவர் என் வீட்டில் கடைசி வரை வாழலாம்; மறுமணம் செய்ய விரும்பினால், எனது செலவிலேயே செய்து வைக்கிறேன்” என்று மனிதநேயத்தோடு பாசத்தைக் கொட்டியிருக்கிறாரே. “ஓ, ஜாதி வெறிக் கூட்டமே! இந்த மனித நேயத்தின் முன் நீ தலைகுனிந்து, கூனிக் குறுகி அவமானப்பட்டு, மண்ணில் தலை புதைந்து கிடப்பது, உனக்குத் தெரியுமா? அது உனக்குத் தெரியாது; உனது ஜாதி வெறி மனிதநேயத்தை உணர வைக்காது.

தமிழ்நாட்டில் ஜாதியம், கிராமப்புறங்களில் வேர்ப்பிடித்து நிற்பது உண்மைதான். அதைப் பட்டியலிட்டு அம்பலப்படுத்தி வருகிறோம் என்பதும் நிதர்சனம் தான். ஆனாலும், ஜாதியத்தை வெறியாக்கி, ஊதிப் பெருக்கி, அணியாக்கி, படைதிரட்டி, போர் நடத்தி, அரசியலுக்கு ஓட்டுகளாக்கிக் கொள்ளலாம் என்ற இறுமாப்புக்கு, தமிழகத்தில் இடமில்லை என்பதை, ஓ, ஜாதியத் தலைவர்களே! நீங்கள் இப்போதாவது பாடம் கற்றுக் கொள்வீர்களா?

உங்களுக்கு ஓர் உண்மை புரிந்ததா? “பாட்டாளிகள்” படை வரிசையை நீங்கள் கட்டியமைக்கப் புறப்பட்ட ஓராண்டு காலத்துக் குள்ளேயே அது கலகலத்து பின்னங்கால் பிடறியில் தெறிக்க சிதறி ஓடிக் கொண்டிருப் பதைப் பார்த்தீர்களா? தனித்துவிடப்பட்டதை உணருகிறீர்களா? தோள் தட்டி, தொடை தட்டி, பின்பாட்டுப் பாட வந்த ஜாதியக் குழுக்களின் தலைவர்களாக அடையாளம் காட்டிக் கொண்ட வர்கள், இப்போது எங்கே போனார்கள்? எங்கே பதுங்கினார்கள்? அந்தக் கூட்டணி இப்போது தோள் கொடுக்க வந்ததா? மாமல்லபுரம் கடற்கரையில், “இதோ நாங்களும் இருக்கிறோம்”; பாட்டாளி மக்கள் ஆட்சி யமைக்கும் காலத்துக்காக காத்திருக்கிறோம் என்று கர்ஜித்த ‘பிராமண சங்கம்’ இப்போது எங்கே போனது?

சமூக வலைதளங்களில் பதிவாகும் ஆயிரமாயிரம் கருத்துகளில் உங்களுக்கு ஆதரவாக ஏதாவது ஒரு குரல் கேட்கிறதா? ஜாதிவெறியை எதிர்த்து நின்ற திராவிடர் விடுதலைக் கழகத்தை லெட்டர் பேட் அமைப்பு என்று ஏளனம் செய்தீர்கள்; அந்த இயக்கம் தான், தமிழகத்தில் ஜாதி வெறி தலைதூக்குவதை துணிவோடு எதிர்த்தது; தொடர்ந்து போராடியது; ஜாதித் தலைவர்கள் கூடு மிடங்களில் எல்லாம் எதிர் போராட்டங்களை நடத்தியது; தோழர்கள் கைதானார்கள்.

உணர்வுள்ள தோழர்களை, அமைப்புகளை இணைத்து எதிர்வினையாற்றினார்கள்! ஆம்; நாங்கள் மக்களிடம் சென்றோம்; கருத்துகளை விதைத்தோம். நாமக்கல்லில் உருட்டுக்கட்டை களையும் சென்னையில் கற்களையும் தூக்கி வீசினார்கள். ஜாதி வெறியர்கள் வீசிய கல்லடிகளில் எங்கள் தோழர்கள், சென்னை தெருக்களில் சிந்திய ரத்தம் வீண் போகவில்லை.

ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. கவலைப்பட வில்லை; போராட்டங்கள்; மாவட்டந்தோறும் ஜாதி எதிர்ப்பு மாநாடுகள், மாநாட்டு மேடைகளில் ஜாதி மறுப்புத் திருமணங்கள், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தோடு பரப்புரைப் பயணங்கள் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தனித்த ஒரு இயக்கமாக தமிழகத்தின் வீதிகளில் சுழன்று சுழன்று பணியாற்றியது.

விளைவு - ஜாதி வெறியின் முகத்திரை -

மக்கள் மன்றத்தில் கிழிந்துப் போய் நிற்கிறது.

மனிதத்தை சிதைப்பது - ஜாதியம்!

மனு தர்மத்தை விதைப்பது - ஜாதியம்!

மனித உயிர்களைக் காவு கேட்பது - ஜாதியம்!

இணைந்த காதல் உள்ளங்களை பிரித்து அவர்களின் உணர்வுகளை அழித்து, அதில் அற்ப மகிழ்ச்சிக் கூத்தாடுவது - ஜாதியம்!

இதை மீண்டும் மீண்டும் மக்கள் உள்ளங்களில் நாம் எழுதத்தான் போகிறோம்!

‘அப்பாடா நாம் தப்பித்துக் கொண்டோம்; அவாளுக்குள் மோதிக்கிறானுக’ என்று பார்ப்பனியம் பதுங்கி நின்று கும்மாளம் போடு வதும் நமக்குத் தெரியும்!’ அவாள்களின் நச்சுக் கருத்தியலே இந்த ஜாதியத்தின் வேர் என்பதையும் இடைவிடாமல் முழங்கப் போகிறோம்.

தோழர்களே! நாம் முன்னெடுப்போம் கொள்கைத் தளங்களில் மேலும் முன்னேறிச் செல்வோம்; மக்களின் உள்ளங்களில் கருத்துக்களை விதைப்போம், வெற்றி நமமே! நம்பிக்கையுடன் வாருங்கள்!

Pin It