ஒவ்வொரு மொழிக்கும் அதன் எழுத்து. உச்சரிப்பு, இலக்கணம், வாக்கிய அமைப்பு போன்றவை திட்டமிட்டு அந்த மொழிக்காகவே வடிவமைக்கப் பட்டவை என்ற கருத்து பலரிடமும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல. ஒரு மொழியிலிருந்து பல மொழிகள் கிளைத்துள்ளன. மாற்றங்களைத் தாங்கி வளர்ந்துள்ளன. அடிப்படை இலக்கணம் வழியாகவே மொழியை கற்பிக்க வேண்டும் என்ற சிந்தனையில் மாற்றம் தேவை. அறிவியல் பார்வையில் மொழி பற்றிய வகுப்பறைப் பாடங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். நமது குழந்தைகள் மொழியையும் சமூகத்தின் மொழியையும் நாம் புறந்தள்ளிவிடக் கூடாது. வகுப்பறைகளில் அறிவியலின் தரம் உயர்த்தப்பட வேண்டும். இன்று ஒரு மொழியாக இருப்பது நாளை இரண்டு மொழிகளாக திரியக்கூடும்.

இந்துஸ்தானி என்ற ஒரு மொழியிலிருந்துதான், இந்தி, உருது என்ற இரண்டு மொழிகள் கிடைத்தன. செர்போ-குரோஷியன் மொழியிலிருந்து செர்பியன், குரோஷி ஆகிய இரண்டு மொழிகள் தோன்றின. பிராஜ், மைத்திலி, அவாதி, போஜ்புரி போன்ற மொழிகள் இந்தியின் தாய்மொழியாக இருந்தவை. இப்போது, இந்தி தாய்மொழியாகி, அவை இந்தியின் சேய் மொழியாகிவிட்டன. பல பெரும் கவிஞர்கள், இந்தி மொழியில் கவிதை எழுதுவதையே தரம் தாழ்ந்த செயலாகக் கருதிய காலம் ஒன்று இருந்தது. அதைவிட பிராஜ் மொழியிலேயே அவர்கள் எழுத விரும்பினார்கள். சமூக அரசியல் நிகழ்வுகளின் வழியாகவே ஒரு மொழி தன்னை தரப்படுத்திக் கொள்கிறது. இலக்கணங்கள், எழுத்து வடிவங்கள், அகராதிகள், தரவுகள் - மொழிப் பயன்பாட்டில் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில்தான் கட்டமைக்கப் படுகின்றன.

அரசியல் சட்டத்தைப் படிக்காமலேயே இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாகச் சிலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள். இந்தி ஆட்சி மொழி என்றே அரசியல் சட்டத்தின் 8 ஆவது பிரிவு கூறுகிறது. தேசிய மொழி என்று கூறவில்லை. ஆங்கிலம் துணை ஆட்சி மொழியாக இந்தி பேசாத பகுதி மக்கள் விரும்பும் வரை நீடிக்கும் என்பது 1965 ஆம் ஆண்டு மொழிப் போராட்டத்துக்குப் பிறகு உறுதியானது. அரசியல் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் முதலில் 8 மொழிகள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டிருந்தன. இப்போது இதன் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் இதில் கூடுதலாக மொழிகளை சேர்க்கும் வாய்ப்புகள் சட்டத்தில் உள்ளன. கொங்கனி, மணிப்பூரி, போடோ, நேபாளி, டோக்ரி, சந்தாணி போன்ற மொழிகள் இன்னும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை.

சமஸ்கிருதம் ஏதோ முழுமையாக வடிவமைக்கப்பட்ட மொழி என்றும், இந்திய மொழிகளின் தாய் என்றும் கூறப்படுவது எல்லாம் பொய். வங்காளம், குஜராத்தி, மராத்தி, இந்தி, பஞ்சாபி போன்ற இந்தோ -ஆரிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளுடன் சமஸ்கிருதத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்பது உண்மைதான். ஆனால், தென்னாட்டின் மொழிகளும், வடகிழக்கு மாநிலங்களில் பேசப்படும் திபெத்து, பர்மிய குடும்ப மொழிகளும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவையே! இந்தியாவில் பல்வேறு பழங்குடிப் பிரிவினர் பேசும் முந்தா மொழிக்கும், சமஸ்கிருதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு எப்படி சமஸ்கிருதம், இந்திய மொழிகளின் தாய் மொழியாக முடியும்?

சமஸ்கிருத எழுத்து வடிவமான ‘தேவநாகிரி’ வடிவம்தான் மிக உயர்ந்தது என்றும், அதற்கான எழுத்தும் ஒலியும் கடவுளால்தான் உருவாக்கப்பட்டது என்றும் ஒரு பொய்யான நம்பிக்கை கட்டமைக்கப்பட்டுள்ளது.

உண்மையில் சமஸ்கிருதம், 14-க்கும் அதிகமான எழுத்து வடிவங்களில் எழுதப்பட்டுள்ளது என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. உலகில் எந்த வடிவ எழுத்துகளிலும் சிறிய மாற்றங்களுடன் சமஸ்கிருத மொழியை எழுதிட முடியும். மொழியின் ஒலிக்கும் எழுத்து வடிவத்துக்கும் தொடர்பு உண்டு என்பதுகூட ஒரு மாயைதான். எந்த ஒரு மொழிக்கும் ஒரு எழுத்து வடிவத்தை ஒரு சில நாட்களிலேயே நாம் உருவாக்கிட முடியும்.

எழுத்து மொழியைவிட பேச்சு மொழி வேகமான மாறுதல்களுக்கு உள்ளாகி விடும். சமூக, கலாச்சார, அரசியல் காரணங்களுக்காக எழுத்து வடிவ மொழியை காப்பாற்ற வேண்டிய அவசியமிருக்கிறது. இந்த நிலையில் வகுப்பறையில், 10, 12 வயது குழந்தைகளிடம் மொழியின் கட்டமைப்பு, இலக்கணம், பாரம்பரியம் பற்றிய புரிதல்களை உருவாக்கிட முடியாது. அது மிகவும் கடினம். அதற்கு பதிலாக மொழி தொடர்பான புரிதலை, அறிவியல் ரீதியாக அவர்களிடம் விளக்கிடும் பயிற்சி முறைகள் உருவாக்கப்பட வேண்டும்.

- ‘இந்து’ நாளேட்டில் (மே 15, 2013) வெளிவந்த கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

Pin It