தனக்குத் தேவையானதை அருகே வைத்துக் கொள்வதும், தேவையில்லாததை ஒதுக்கி வைப்பதும் ஆதிக்கத்தின் தன்மை. சாதி ஆதிக்கமும் அப்படித்தான். தனக்கு சமமில்லை என்று ஒதுக்கப்பட்டதாகவே தலித் குடியிருப்புகள் இருந்து வருகின்றன. திண்டிவனம் அருகே உள்ள மயிலம் கிராமத்தில் ஆதிக்க சாதியினரான வன்னியர்கள் ஒன்றுசேர்ந்து, ஊரோடு ஒத்துப் போகவில்லை; ஊரில் தொடர்ந்து எல்லோரிடமும் ஏதேனும் ஒரு வகையில் சண்டையிட்டு வருகிறார் என ஒரு வன்னியர் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கினார்கள்.பூரணி, அவரது கணவர் தனுசு, இவர்களது மகள் சுசிலா, மகன் ராஜா இவர்கள்தான் அந்தக் குடும்பமாகும். மயிலம் தலித் குடியிருப்பில் இடம் வாங்கி, வீடு கட்டி வாழத் தொடங்கிய இந்த வன்னியர் குடும்பம், தலித் குடும்பங்களை நம்பி சிறு இட்லி கடை தொடங்கினர். எதற்காக ஊரைவிட்டு ஒதுக்கப்பட்டார்களோ அதையே குடியேறிய தலித் குடியிருப்பிலும் செய்தார்கள். ஆனால் அப்போது வன்னியர்கள், ஒதுக்கப்பட்ட இந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகவும், பாதிப்பிற்கு ஆளாகும் தலித்து
களுக்கு எதிராகவும் நடந்து கொண்டனர்.
சாதி ஆதிக்கத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட தலித் பெண்மணி அமுதா, தனக்கும், தனது குடும்பத்திற்கும் நேர்ந்தது குறித்து நம்மிடம் கூறியவை :
“எங்க ஊர்ல ஏரி வேலை நடக்கும்போது வார்டு வாரியா பிரிச்சிதான் வேலை கொடுப்பாங்க. அந்த பூரணி அம்மா, எங்க காலனி வார்டுல இருக்கறதால எங்க காலனிகாரங்க வார்டுக்கு என்னைக்கு வேலை கிடைக்குதோ அப்ப அவங்களுக்கும் வேலை கொடுப்பாங்க. எங்ககூட வேலைக்கு வந்தாலும் அந்தம்மா சும்மா இருக்க மாட்டாங்க. ஏதாவது புலம்பிக்கிட்டும், பிரச்சனை பண்ணிக்கிட்டும் இருப்பாங்க. அதுவும், “பறச்சிங்க கூட சேர்ந்து வேலை செய்யற கேவலமான நிலைமைக்கு
வந்துட்டமேன்னு'' புலம்பிக்கிட்டே ரொம்ப அசிங்க, அசிங்கமா பேசுவாங்க. அவங்களப் பத்தி எல்லாருக்கும் தெரிஞ்சதால யாரும் எதுவும் பேச மாட்டோம்.
எங்க காலனிக்கு தண்ணி ஒழுங்கா வராது. அதுவும் குடிக்கிற தண்ணிக்கு ரொம்ப கஷ்டப்படுவோம். அதனால நாங்க ஏரி வேலைக்குப் போகும்போது, காலி குடம் எடுத்துகிட்டுப் போவோம். சாப்பாட்டு நேரத்துல ஏரிகிட்ட இருக்குற அடி பைப்பில் என்னோட பொண்ணு போய் தண்ணி அடிச்சிக்கிட்டு வந்துடுவா. அப்படித்தான் ஒரு இரண்டு மாசத்துக்கு முன்னாடி, சாப்பாட்டு நேரத்துல என்னோட பொண்ணு போய் தண்ணி அடிச்சிகிட்டு வந்து வச்சா. அதுக்கு அந்தம்மா எங்கிட்ட, “எங்கடி உம்பொண்ணு வேலை நேரத்து லன்னு'' வேலைய உட்டுட்டு ஒன்னும் போகல, சாப்பாட்டு நேரத்துலதான் போயிட்டு வந்தா, அதுக்கு எதுக்கு இப்ப நீங்க விடாம பேசிக்கிட்டு பிரச்சனை செய்றீங்க'' என்றேன். அதுக்கு அந்த அம்மா, “பறத் தேவிடியாளுங்ககூட எல்லாம் வேலை செய்ய வந்த பாரு என்ன சொல்லனும்'' என்றார்கள். அப்ப என்னோட பொண்ணு, இப்ப சாதிய பத்தி எதுக்குப் பேசுறீங்க. நாங்க என்னா அவ்வளவு கேவலமா ஆயிட்டமா என்றாள். அதற்குள் பக்கத்தில் இருந்தவங்களும் கம்முன்னு வேலைய பாருங்க. சும்மா பேசிகிட்டு என்று சத்தம் போட்டார்கள். அதன் பிறகு அந்தம்மா சத்தமா எதுவும் பேசலன்னாலும் அவங்களுக்குள்ளயே புலம்பிக்கிட்டே இருந்தாங்க.
வேல முடிஞ்சி எல்லாம், அவங்கவுங்க மண்வெட்டி, தட்டு, பாண்டு எடுத்துக்கிட்டு கிளம்பினோம். ஏரிக்கரையை விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். என்னோட பொண்ணு, தண்ணிகுடத்த தூக்கப்போன அப்பதான் அந்த பூரணியோட மகன் ராஜா கையில் வச்சிருந்த பாண்டால என்னை அடித்து விட்டான். பேசினால் சண்டை வரும் என்பதால், அவர்களிடம் ஒன்றும் பேசாமல், அங்கிருந்த தலைவரிடம் முறையிட்டேன். சரி நீ போம்மா நான் விசாரித்து, கண்டிக்கிறேன் என்று அவர் சொன்னார். அதன் பிறகு நாங்கள் வீட்டிற்கு வந்துவிட்டோம். அன்னிக்கு சாயங்காலமே அவங்க புருசன், பொண்டாட்டி ரெண்டு பேரும் எங்க வீட்டுக்கு வந்து சண்டை போட்டார்கள். அதுக்கு நாங்க ஒண்ணும் பேசல. தேவையில்லாம சண்டை எதுக்குன்னு அமைதியா இருந்துட்டோம்.
எங்க ஊர்ல நிறைய பேர் பூத்தோட்டம் வச்சிருக்காங்க. ஏரி வேலை இல்லாதப்ப பூ பறிக்கிற வேலைக்குப் போவோம். அர்ச்சுனன் என்பவர் அவரோட தோட்டத்துல பூ நிறையா இருக்கு வாங்கன்னு கூப்பிட்டார். அப்ப அந்தம்மாவும் அங்க பூ பறிக்கற வேலை செஞ்சிகிட்டு இருந்தாங்க. நாம போனா திரும்பவும் ஏதாவது சொல்லுவாங்க. எதுக்கு தேவையில்லாத பிரச்சனைன்னு நான் போகல. ஆனா, அந்த தோட்டத்துக்காரரு தொடர்ந்து, பூ நிறைய பூத்திடுச்சி வீணாயிடும்னு சொன்னார். நான், அந்த பூரணி இருக்காங்க, நான் வந்தா அந்தம்மா ஏதாவது சொல்வாங்க எதுக்குப் பிரச்சனை நான் வரலன்னு சொன்னேன். அதற்கு அவர், அந்த பூரணி வரல நீங்க வாங்கன்னு சொல்லி கூப்பிட்டாரு.
அதனால நானும், என் பொண்ணும் கடந்த 2.9.2009 அன்னிக்கு பூ பறிக்கப் போனோம். வேற ஒரு வயசான அம்மா ஒருத்தவங்களும் பூ பறிச்சிகிட்டு இருந்தாங்க. நாங்களும் பூ பறிக்க ஆரம்பிச்சோம். கொஞ்ச நேரத்துல அந்த பூரணி வந்தாங்க. கொஞ்சம் நேரம் பூ பறிச்சிக்கிட்டு இருந்தாங்க. திடீர்னு “பறத் தேவிடியாளுங்க, காசு, வேலன்னா போதும், தொங்கப் போட் டுக்கிட்டு வருவாளுங்க'' என்று ஏளனமாகப் பேசினார். நாங்க எதுவும் பேசாம பூப்பறிச்சிக்கிட்டே இருந்தோம். ஆனாலும் தொடர்ந்து அந்தம்மா, சாதிய சொல்லி இழிவுபடுத்தி பேசிக்கிட்டே இருந்தாங்க. அந்த நேரத்துல, அந்த இடத்துகிட்ட வந்த 8ஆவது படிக்கிற என்னோட மகன் சபேஷ், “சும்மா எதுக்கெடுத்தாலும், எதுக்கு பறச்சி, பறச்சின்னு சொல்லிகிட்டு இருக்கிற. நீங்களும் கூலிக்கு வந்திருக் கீங்க. எங்க அம்மா வும் கூலிக்குதான் வந்திருக்காங்க'' என்று கேட்டான். உடனே, நான் எனது மகனை, “பெரியவங்கள அந்த மாதிரி பேசாதடா'' என்று திட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டேன். அதன் பிறகு அந்தப் பூரணி, “மொளச்சி மூணு இல விடுல, பறநாயி அதெல்லாம் நம்மகிட்ட சட்டம் பேசுது'' என்று எனது மகனைப் பற்றி திட்டினார். அதன் பிறகு நான் அங்கு வேலை செய்யாமல் வீடு திரும்பி விட்டேன்.
இதற்கடுத்து இரண்டு நாள் கழித்து, காலையில 8.30 மணி இருக்கும். பள்ளிக்குச் சென்ற எனது மகன், அழுது கொண்டே வீட்டிற்குத் திரும்பினான். கேட்டால், பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கும்போது, வழியில் இருந்த பூரணி, “பறத்தேவிடியா புள்ள எனக்கு நீ புத்தி சொல்றியா'' என்று திட்டி, தொடப்பத்தால் முதுகில் மாற்றி மாற்றி அடித்துள்ளார். மகன் அழுத வேதனை பொறுக்காமல், நான் உடனடியாக அவனை இழுத்துக் கொண்டே அந்தம்மா வீட்டிற்குச் சென்று, “நம்ம பெரியவங்களுக்குள்ள சண்டைன்னா நமக்குள்ள இருக்கணும், சின்ன புள்ளைய போட்டு எதுக்கு இப்படி அடிக்கிறீங்க'' என்று கேட்டுவிட்டு வந்தேன்.
நான் என்னோட வீட்டுக்குச் சென்ற கொஞ்ச நேரத்தில், அந்த பூரணி, அவரோட மகன் ராஜா, மகள் சுசீலா ஆகியோர் எனது வீட்டிற்கு வந்து என்னை இழுத்துப் போட்டு அடித்தார்கள். மேலும், ராஜாவும், சுசீலாவும் கீழே விழுந்த என்னைத் தடியால் தாக்கினார்கள். தொடர்ந்து அவர்கள் என்னை காலால் ஏறி மிதித்தும், உதைத்தும், முடியை இழுத்தும் தாக்கி, தெருவில் இருந்த சாக்கடை வாய்க்காலில் தள்ளினார்கள். வயிற்றில் ஏறி மிதித்தார்கள். அதில் எனக்கு கடுமையான உதிரப்போக்கு ஏற்பட்டது. அப்போது, மேற்படி பூரணி ஒரு பெரிய கல்லைக் கொண்டு வந்து என் தலைமேலும், இடுப்பிலும் போட்டார்கள். அதில், எனது நெற்றியும், மண்டையிலும் காயமேற்பட்டு ரத்தம் ஒழுகத் தொடங்கியது. ஏற்கனவே இருந்த உதிரப்போக்குடன் இதுவும் சேர்ந்து நான் மயக்கமானேன்.
அதன் பிறகு அவர்கள் என்னை விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். பிறகு என்னை மயிலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்று, மயக்கம் தெளிவித்தனர். அங்கிருந்த மருத்துவர்கள், திண்டிவனம் மருத்துவமனைக்கு செல்லும்படி கூறினார்கள். நேராக மயிலம் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்துவிட்டு, மெமோ வாங்கிக் கொண்டு திண்டிவனம் மருத்துவமனைக்குச் சென்றோம். அப்போது பகல் 1.45 மணி இருக்கும். தொடர்ந்து 4 நாட்கள் திண்டிவனம் ஆஸ்பத்திரியில் இருந்தேன். உடல் வலி கொஞ்சம் குறைஞ்சாலும், தலையிலும், இடுப்பிலும் கல் விழுந்த வலி கொஞ்சமும் குறையவில்லை. மேலும், வயிற்றில் ஏறி மிதித்ததில் உருவான ரத்தப்போக்கும் நிற்கவில்லை. ஆனாலும், ஆஸ்பத்திரியில் இருந்து என்னை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பி விட்டார்கள். தினமும் வந்து காட்டச் சொன்னார்கள். சில நாட்கள்தான் போக முடிந்தது. இன்றுவரை வலியும் வேதனையும் குறையவில்லை.
2 ஆம் தேதி நான் தாக்கப்பட்டு புகார் கொடுத்து 10 நாட்களுக்கு மேலாகியும் போலிசார் வழக்கு போடாமல் இருந்தனர். பூரணியின் உறவினர்களான பஞ்சாயத்து தலைவர் ரவி, பால் ஸ்டோர் பாபு உள்ளிட்ட பலர் எங்களிடம் புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி சமாதானம் பேசினார்கள். நாங்கள் ஒத்துக்கொள்ளாத நிலையில் மிரட்டவும் செய்தார்கள். தொடர்ந்து நாங்கள் போலிசாரி டம் சென்றாலும், இன்ஸ்பெக்டர் இல்லை, டி.எஸ்.பி. வருவார் என்று கூறினார்கள்.
தொடர்ந்து வன்னியர் தரப்பினர் எங்களிடம் பேசியும் நாங்கள் சமாதானமாகாத நிலையில் 13 ஆம் தேதி மேற்படி பூரணி, அவரது கணவர் தனுசு, மகன் ராஜா, மகள் சுசிலா ஆகியோர் மீது போலிசார் வழக்குப் பதிவு செய்தனர். அதற்கடுத்த இரண்டாவது நாள் எங்கள் மீது அதாவது, நான் எனது மகள் எனது உறவினர்கள் சிலர் சேர்ந்து பூரணி குடும்பத்தை 2 ஆம் தேதி தாக்கியதாக எங்கள் அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர்.
நாங்கள் சமாதானத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் மேற்படி வன்னியர் சமூகத்தினர் ஒன்று சேர்ந்து, எங்கள் மீது பொய்வழக்கு போட்டுள்ளனர். நாடெங்கும் பெருமையுடன் பேசப்படும் மயிலம் தேரோட்டத்தின்போதும் நாங்கள் காலனிக்குள்தான் அடங்கிக் கிடக்க வேண்டும். ஊருக்குள் செல்லாமல் நாங்கள் ஒதுங்கியே இருந்தாலும், எங்கள் காலனிக்குள் குடிபுகுந்த ஒரே ஒரு சாதிக் குடும்பத்திற்கு ஒட்டுமொத்த காலனியும் அடிமையாகத்தான் இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஊரிலிருந்து ஒதுக்கப்பட்ட வன்னியர் குடும்பம் காலனியில் குடியேறி, எங்களை ஆதிக்கம் செய்கிறது. ஊரைவிட்டே ஒதுக்கப்பட்டாலும், அந்த சாதி இந்துக்களின் ஆதிக்கத்திற்கு மட்டும் கொஞ்சமும் குறைவில்லாமல் இருந்தது. வேண்டாம் என்று ஒதுக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு ஊரே திரண்டு காவல் நிலையம் வந்தது. அது ஒதுக்கப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு ஆதரவு என்பதைவிட, தலித்துகளான எங்களுக்கு எதிரானதாகவே உள்ளது.''
...
இத்தொடருக்கான முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் இன்றும்கூட (30.12.09) திண்டிவனம் வட்டத்தில் உள்ள இறையனூர் கிராமத்தில், வன்னியர் சாதி இளைஞர்களால், செல்வகுமார் என்கிற பட்டதாரி தலித் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஹிட்லர், அத்வானி, நரேந்திர மோடி, ராஜபக்ஷே போன்ற இனவெறியர்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரவேண்டும் என்ற அவசியமில்லை. இவர்கள் செயல்களை – வடக்கே வன்னியர் சாதியினரும், தெற்கே கள்ளர் சாதியினரும், மேற்கே கொங்குவேளாள கவுண்டர் சாதியினரும் நடத்திவரும் சாதிப் படுகொலைகளால், மேற்கண்ட இனப்படுகொலையாளர்களையும் விஞ்சியவர்களாக உள்ளனர். இச்சாதியினரின் வன்கொடுமைக்கு ஆளாவதும், இனப்படுகொலைக்கு உள்ளாவதும் – தலித் மற்றும் பழங்குடியின மக்களே.
சமூக வன்கொடுமையும், இனப்படுகொலையும் செய்கின்ற சாதியை சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் இவற்றைத் தடுப்பதற்கான, இரு சாதியினரிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கான எந்தவித முன் முயற்சிகளையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது, அவர்களும் இதை ஆதரிக்கின்றார்களோ என்ற சந்தேகத்தை விதைக்கிறது.
குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் அண்மைக் காலமாக தலித்துகள் மீது நிகழும் வன்கொடுமைகள், வன்னியர் சங்கத்தின் தலைவர் "காடுவெட்டி' குரு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைக்குச் சென்று திரும்பிய பிறகு அதிகரித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் அணி மாற்றத்திற்குப் பிறகு ஏற்பட்ட தேர்தல் தோல்விக்குப் பிறகுதான் மிக அதிகளவில் இத்தகைய வன்கொடுமைகள் நடந்து வருகின்றன.
தேர்தல் தோல்விக்குப் பின்பு, வன்னியர்களை எல்லாம் ஓரணியில் திரட்ட வேண்டும் என்று பா.ம.க. முயன்று, வன்னியர் சங்கம் மூலம் ஊர்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். வன்னியர் சங்கத்திற்கு உறுப்பினர் சேர்த்தல், சாதி வாரிய கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு என்று பல்வேறு பெயர்களில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும்கூட நிகழ்ச்சிகள் நடத்தி, "வன்னியர் ஒற்றுமை' என்ற பெயரில் தலித்துகளுக்கு எதிராக அணிதிரண்டு வருகிறார்கள்.
சாதி வெறியும் மத வெறியும் கூரிய வாளின் இரு பக்கங்கள். ஆனால் மதவெறிக்கு எதிராக இயங்கும் தமிழ் நாடு, சாதி வெறிக்கு எதிராகவும், தலித்துகள் மீதான வன்கொடுமைக்கும் எதிர்வினையாற்றுவதில்லை. தமிழக அரசியலைப் பொருத்தவரை, மதவெறிக் கட்சியான பாரதிய ஜனதாவுடன் எந்தக் கட்சியும் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது என நிர்பந்திக்கும் நிலை நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால், ஜாதி வெறி கட்சிகளுடன் கூட்டணி வைக்கக் கூடாது என யாரும் நிர்பந்திப்பதில்லை. இங்கு மதவெறி சக்திகளுக்கு மாலை அணிவித்து விட்டு எந்தக் கட்சியும் அவ்வளவு எளிதில் சென்று விடமுடியாது. ஆனால் மதவெறிக்கு எதிராக இயங்கும் சி.பி.எம்., சி.பி.அய். உள்ளிட்ட அனைத்து திராவிடக் கட்சிகளும், முற்போக்குவாதிகளும் ஜாதி வெறியின் குறியீடான முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு ஆண்டுதோறும் வரிசையில் நின்று மாலை அணிவதற்கு துளியும் வெட்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தியையொட்டி நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் பற்றி இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.
ஜாதிகளாலானதுதான் இந்து மதம். ஜாதிகள் இல்லை எனில், இந்து மதம் உயிர் வாழ முடியாது. மறுபுறம், இந்து மதத்தின் அங்கீகாரமின்றி ஜாதிகள் உயிர்வாழா. ஆக, மதவெறியும் ஜாதிவெறியும் பின்னிப் பிணைந்துள்ளன. இதில் ஒன்றை எதிர்ப்பதும் மற்றொன்றை அரவணைப்பதும் ஏமாற்று வேலை. தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம், தமிழர் ஒற்றுமை என்ற கருத்துருவாக்கங்கள் எல்லாம் அரசியல் கண்ணோட்டத்துடனேயே கட்டப்படுவதால், அரசியல் அணி பிரியும்போது இரு அணிகளின் சாதிகளும் மோதிக் கொள்கின்றன. பிரிவினைகள் மேலும் கூர்மையாக்கப்படுகின்றன.
இச்செய்திக் கட்டுரைத் தொடரின் நோக்கம், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கிடையே நிலவும் முரண்பாடுகளை கூர்மைப்படுத்துவது அல்ல. அல்லவே அல்ல. சாதி அமைப்பால் கீழ்மைப்படுத்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு பல்லாண்டுகளாக மோத வைக்கப்பட்டுள்ள இவ்விரு சமூகத்திற்கான முரண்கள் தீர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் சாதி ஒழிக்கப்பட்டு, சமூக ஜனநாயகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கத்துடனேயே இத்தொடர் வெளியிடப்பட்டது. சாதியால் கடும் பாதிப்பிற்குள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்வினையும் எழுச்சியும் – பிற சாதிகளை ஒடுக்கும் நோக்கத்தைக் கொண்டதல்ல; அவர்களை நேர்படுத்தி ஒடுக்குமுறையற்ற சமூகத்தை உருவாக்குவதே!
- முருகப்பன்