தூய அன்புக் காதலொன்று
தூரத்தி துரத்தி
அடிக்கப் பட்டதே!

காயம்பட்ட நெஞ்சோடு
அது
கல்லறைக்கு
விரட்டப்பட்டதே!

மூளை சிதற சிதற
உன்னை
முட்டித் தள்ளியது
புகை வண்டித் தொடரா?
பகை கொண்ட சதியா?

தலைதெறிக்க
ஓடிவந்த
தாயின் முன்னே
நீ
தலைவெடித்து
வீழ்ந்து கிடந்த
கொடுமை என்ன!

குலம் மாறி
நீ
காதலித்தாயென்று
களம் அமைத்தோர்
உன் கதை முடித்ததென்ன!

நீதியின்
காலடியில் வீழ்ந்து
நியாயம்
கேட்பதுபோல்
நெடுஞ்சாண் கிடையாய்
மாண்டு கிடக்கும்
இளவரசனே!

சாதிவெறிக்
கொடுமைகளுக்கு
உன் சாக்காடு
சமாதி கட்டுமா!
இனிவரும்
சந்ததியர்க்காவது
உன்னால்
ஒரு நீதி கிட்டுமா!

Pin It