தனித்தமிழ் இயக்கத்தின் நூற்றாண்டுச் சிறப்புக்குப் பெருமைசேர்க்கும் வகையில் உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் தஞ்சையிலும், (தென்மொழி இயக்கம், உலகத் தமிழ்க் கழகம், தமிழியக்கம்  ஆகிய மூன்று இயக்கங்களின் ஒருங்கி ணைப்பிலான) தனித்தமிழ் இயக்க நூற்றாண்டுக் கூட்டமைப் பின் சார்பில் சென்னையிலும் மாநாடுகள் சிறப்பாக நடந்தன.

தஞ்சை மாநாட்டில் தன்னேரில்லாத தமிழ்  எனும் பெயரில் உலகத் தமிழர் பேரமைப்பு வெளியிட்ட நுற்றாண்டு விழா மலர் சிறந்ததோர் ஆவணமாக விளங்குகிறது.  நல்ல பதிவுகளோடு அம்மலர் வெளிவந்திருக்கிறது.

அதேபோல் / பல கோணங்களில் தனித்தமிழ் இயக்கங் களின் கடந்த நூறாண்டுக் கால நிகழ்வுகள் முழுமையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

அவ்வகைச் சிறப்புக்குக் களமாக விளங்கிய தனித்தமிழ் இயக்கங்களின் பணிகள், இன்றைக்கும் தேவைப்படுவனவாக உள்ளன. இன்னுஞ் சொன்னால் இன்னும் கூடுதலாக விரிந்த தளங்களில் செயல்பட வேண்டிய தேவைகளும் இருக்கின்றன.

இந் நிலையில், தனித்தமிழ் இயக்க முயற்சிகள், தேவைகள் குறித்துச் சிலவற்றை அறிய வேண்டியிருக்கிறது.

முதலில், தனித்தமிழ் என்பது சரிதானா?

உலக அளவில் அறிவியலும், அரசியலும், பொருளியலும் விரிந்து எல்லாமே கணிப்பொறிக் காலமாகிக் கொண்டிருக்கிற இந் நேரத்தில் தனித்தமிழ் என்பது எவ்வகையில் சரியாக இருக்கும் என்று கடந்த காலங்களில் கேட்கப்பட்டு நீர்த்துப் போன கேள்விகள் இன்றைக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதைப் பற்றித் தெரிந்து கொண்டாக வேண்டும்.

தமிழ் என்றாலே தனித்தமிழ்தான் என்பார் பாவாணர்.  தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பயன்படுத்துவதுதான் பிழையானது.

உலக அளவில் அனைத்து மொழியினருமே துய மொழிக் கொள்கையைக் கொண்டிருந்தனர்; இருக்கின்றனர்.

ஆங்கிலத்தைத் துய்மைப்படுத்த வேண்டும் என பெர்னார்டு சா இயக்கமாக இயங்கினார்.

உருசிய மொழியில் பிற மொழிகளை வலிந்து கலந்தெழுவதை இலெனின் கடுமையாகச் சாடியிருக்கிறார்.

ஆக, துய தமிழ் முயற்சி சரியானது என்பது மட்டுமன்று; அம் முயற்சிகளால்தாம் தமிழ் காக்கப்பட்டு வருகிறது என்றும்கூடச் சொல்லலாம்.

எனவே, கடந்த காலங்களைவிட இப்போது தனித்தமிழ் இயக்கத்தின் பணி பல வகையில் விரிந்திருக்கிறது என்பதில் முதன்மையாக அறியப்பட வேண்டியது என்னவெனில்,

அந்தப்பணி  இப்போது இருவேறுபட்ட நிலையில் முன் னெடுக்கப்பட வேண்டிய தேவைக்குரியதாகி விட்டது என்பதே.

ஒன்று  தனித்தமிழ் இயக்கத்தின் பொறுப்பாளர்கள்  உறுப்பினர்கள்  தொடர்புடையோர்  ஏற்புறவுடையோர் எனும் படியானவர்களிடையே செய்யப்பெறும் பணி.

மற்றது  தமிழ் பற்றிய ஆழ்ந்த விரிந்த அறிதல் இல்லாமல் ஈழத்தின் தாக்குதலுக்குப் பின்னர் தமிழ்  தமிழன்  தமிழகம்  தமிழீழம் என்கிற உணர்வேற்பட்ட நிலையிலான புதிய தலைமுறையினரிடையேயான பணி.

இவையன்றி, அந்தக் காலங்களிலும், இப்போதும், தனித் தமிழுக்கு எதிரான கருத்துடையோர் முன் வைக்கும் இடக்கு மடக்கான தருக்கக் கேள்விகளுக்கு என்ன வகையிலெல்லாம் விடைகள் தேவைப்படுகின்றன என்று பொதுப்பட அறிந்து வைத்திருப்பது வேறு.

ஆக, இந்நிலையில் மேற்சொன்ன இரண்டு வகைப் பணிகளையும் எவ்வாறெல்லாம் செய்ய வேண்டும் எனத் தொடர்புடைய தமிழ்த் தேசிய, தமிழிய அமைப்புகள் ஆழ்ந்தும், விரிவாகவும் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

அவைகுறித்துக் கலந்தாய்ந்து திட்டமிட்ட செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்.

அவை குறித்து விரிவாகப் பிறகு பார்க்கலாம்.

ஆனால்  இச்சூழ்நிலையில் அதற்கு முன்பாக அறிந்துகொள்ள வேண்டிய முதன்மையானதொரு செய்தி குறித்தே இக்கட்டுரை எழுத வேண்டி வந்தது.

அதாவது தனித்தமிழியக்கத்தின் முதன்மை எதிரி யார் என்பதே அது.

முதன்மை எதிரி யார் - என்று கடந்த காலங்களில் யார் அறியப் பெற்றிருந்தார்கள், இக்கால்யாராக அறியப்படுகிறார்கள் என்ற பார்வையோடு யாராக அறியப்பட வேண்டும் என்பது குறித்தும் பார்த்தாக வேண்டும்.

அண்மைக்காலமாகத் தமிழ்த் தேசக் கருத்தாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக் கூறிக் கொள்ளும் சிலர் பெரியாரை இழிவுபடுத்திச் செய்து கொண்டிருக்கிற அரம்பச் செயல்கள் எங்கிருந்து தோற்றங் கொண்டன  என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

ஆனால்  தமிழ்த் தேசக் கருத்தாளர் என்னும் பெயரில் சிலர் மட்டும் ஏன் இப்படிச் செய்ய வேண்டும்.  அப்படிச் செய்வது ஏதோ துணிவின் அடையாளமா? என்றால் அப்படி ஏற்க முடியவில்லை.

அது  பித்துப் பிடித்தவர்களின் செயல் என்பதாகவே அறிய முடிகிறது.

ஆம்; ஒன்றைப் பற்றிய அறிவுத் தெளிவில்லாமல் உணர்வு வயப்பட்டுச் செய்யப்படும் அரம்பச் செயல்களை பித்துப் பிடித்த செயல் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்ல முடியும்?

இனி நம் கேள்விக்குள் நுழைவோம்.

தமிழ்த்தேசத்தின் முதன்மை எதிரி யார், எது என்று ஏன் பார்க்க வேண்டும்?

எந்த ஒரு குமுகமும் ஒரே ஓர் எதிர்மையரை மட்டுமே கொண்டிருப்பதில்லை.

தமிழகத்திற்கும் அவ்வகையில் பல்வேறுபட்ட எதிரிகள் உண்டென்பதை ஆழ்ந்து அறியமுடியும்.

மொழி அளவில் சமசுக்கிருதத்திணிப்பும், இந்தித் திணிப்பும், ஆங்கிலத் திணிப்பும் இந்திய வல்லாட்சியால் தொடர்ந்து செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்க் குமுகத்தை ஏதோவொரு வகையில் ஆண்ட அரபிய, மராட்டிய, தெலுங்கிய, கன்னடிய எனப் பல இனத்தினரின், மொழிகளின் கலப்பும் தமிழின், தமிழர் வாழ்வியலின் பல கூறுகளை அடிமைப்படுத்தியிருக்கிறது.

மேற்படி இந்தி உள்ளிட்ட அனைத்துத் திணிப்புகளும், கலப்புகளும் முற்றும் முழுமையுமாக எதிர்க்கப்பட வேண்டி யவையே எனினும்  அவற்றுள் முதன்மை யாகவும், உடனடி யாகவும் எதிர்க்கப்பட வேண்டியது எது என்கிற பார்வை தேவைக்குரியது.

ஆங்கிலத் திணிப்பும் இந்தித் திணிப்பும், சில நிலைகளில் சமசுக்கிருதத் திணிப்பும் கல்வியில், ஆட்சியில், அலுவல் நடைமுறையில், நயன்மை (நீதி)த் துறையில், வழிபாட்டில், வாழ்வியல் நடைமுறைகளில் எல்லாம் பெருமளவில் திணிக்கப்டுவதோடு அதிகாரமும் செய்து தமிழை அழித்துக் கொண்டிருப்பதை அறிவோம்.

எனவே அதன் அதிகாரங்களையும், திணிப்புகளையும் எதிர்த்துப் போராடித்  தமிழே கல்விமொழி, தமிழே ஆட்சிமொழி, தமிழே அலுவல் மொழி, தமிழே நயனக (நீதிமன்ற) மொழி, தமிழே வழிபாட்டு மொழி, தமிழே வாழ்வியல் பண்பியலுக்கான மொழியாக ஆக்கிவிடுகிற பணியே முதன்மைப் பணியாகிறது,

தமிழை ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும், கல்வி மொழியாகவும் முழுமையாக நிலைநாட்டிவிட்டால் அதில் மிகக் குறைவான விழுக்காட்டில் கலந்து போயிருக்கிற பிற மொழிகளை அறவே நாம் புறக்கணித்திடவும், களைந்திடவும் முடியும்.

மாறாகத் தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்கள் தங்களைத் தமிழர்களாகக் கருதுவதில்லை. எனவே தமிழில் கலந்துள்ள அரபுச் சொற்கள்தாம் இன்றைக்கு முதன்மையாக நீக்கப்பெற வேண்டுவது. அதன்பிறகு ஒவ்வொன்றாக நீக்கலாம் என்று யாரும் சொன்னால் அக்கருத்தில் சிறிதளவு உண்மை யிருப்பினும், அதுவும்  எடுத்துச் செய்யப் பெற வேண்டியது என ஏற்றுக் கொண்டாலும், அதுதான் முதன்மைப் பணி என்பதாக எண்ண இயலாது.

மேலும், மொழி அளவில் மட்டுமல்லாது இன அளவில், அரசியல் அளவில், பண்பாட்டு அளவில், கலை  இலக்கிய அளவில், பொருளியல் அளவில், மெய்யியல் அளவில், வரலாற்றியல் அளவில் தமிழும், தமிழரும், தமிழகமும் முழுமையாக அடிமைப்பட்டிருப்பதை நன்கு உணரவேண்டும்.

இவற்றுள் தமிழை, தமிழரை, தமிழகத்தை அடிமைப் படுத்தியுள்ள எல்லா நிலைகளையும் எதிர்த்திடுவதும் அடிப்படைத் தேவையானதும், ஒவ்வொன்றிலும் கருத்துச் செலுத்த வேண்டியதாயினும் எதை முதன்மையாக எதிர்த்திடுவதால்  பிற ஆளுமைப் போக்குகளையும் தொடர்ந்து எதிர்த்திடுவதற்கு அது துணையாக இருக்கும் எனக் காணவேண்டும்.

மொழி அளவில் தமிழை விடுதலைக்குட்படுத்திவிட்டால் அதன் பிறகு இன நிலையிலும், பொருளியல் நிலையிலும், பிற நிலைகளிலும் தமிழர்களைத், தமிழ்நாட்டை விடுதலைப் படுத்திவிட முடியும் என்பதாகச் சிலர் கருதுவது சரியா?

- இந்தக் கேள்விக்குரிய விடையைச் சற்று கூர்ந்து சிந்தித்திடல் வேண்டும்.

இந்தக் கேள்விக்குரிய விடைக்குள் நுழைவதற்கு முன்னர் இதையொட்டிய இன்னொரு கேள்வியும் பலரிடம் எழுவது இயல்புதான்.

தமிழ்மொழியை விடுதலைக்குட்படுத்துவது என்கிற முனைப்பை எதற்குத் தமிழ்நாட்டின் விடுதலையோடு தொடர்புபடுத்த வேண்டும்-தமிழைக் கல்வி மொழி, ஆட்சி மொழி உள்ளிட்ட எல்லா துறைக்குமான உரிமை நிலைகளில் நிறைவேற்றிட முழுமையாகக் கவனம் செலுத்தினால் போதாதா?  - என்பதான கேள்வியே அது.

அதாவது தமிழின் மீது அதிகாரம் செலுத்துகிற சமசுக்கிருத, இந்தி, ஆங்கிலத் திணிப்புகளை எதிர்த்துப் போராடி நீக்கிவிடு வதோடு, தமிழில் கலந்துள்ள பிற மொழிகளின் வழக்குகளையும் நீக்கியதான தமிழை அனைத்துத் துறைகளிலும் கையாண்டால் போதாதா, அதுவே இத் தமிழினத்தின் விடுதலையில் பெரும் பங்காற்றிடுமே  என்று பலர்  கருதுகின்றனர்.

இக் கருத்தில் இரண்டு செய்திகள் உள்ளன.

ஒன்று, அவ்வாறு செய்து விடுவதால் தமிழினமோ தமிழ்நாடோ விடுதலை பெற்றிட இயலாது என்பது, அதாவது அப்படி ஒருவேளை நடந்தாலும் தமிழ்நாடும். தமிழினமும் அரசியல்வழி, பொருளியல்வழி யெல்லாம் இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்சிக்கு அடிமைப்பட்டே இருந்திடும்.

மற்றது, தமிழ்நாடு விடுதலையடையாமல் தமிழ்மொழியை சமசுக்கிருத, இந்தி, ஆங்கிலத் திணிப்பதிகாரங்களிலிருந்து விடுதலைப்படுத்திட முடியாது என்பது.

தமிழ்நாட்டை இந்தியாவும், பன்னாட்டு அரசு நிறுவனங் களும் தன் ஆட்சி அதிகாரங்களுக்குக் கீழ்வைத்திருப்பதன் நோக்கம் தமிழகத்தின் பொருளியலைச் (கனிம வளங்கள்  இயற்கை வளங்கள்  உழைப்பு வளங்கள்  என அனைத்தையும்) சுரண்டிக் கொள்ளையடிப்பதற்காகவே. இக் கொள்ளையடிப்புகள் எளிதே மக்களுக்குத் தெரிந்து மக்களின் எதிர்ப்புகளைச் சந்திக் காமல் இருக்க, மக்களைப் பண்பாட்டுச் சீரழிவு, மதவியல் போக்கு உள்ளிட்ட நிலைகளில் மயக்கப்படுத்தி வைக்கிறது இந்திய அரசு.

அவ்வகையில் இந்திய அரசின் இன்னொரு முகமான பார்ப்பனிய / வைதீக வல்லாட்சி முகத்தின் அதிகாரப் போக்குக் கான கூறாகவே சமசுக்கிருத, இந்தித் திணிப்புகள் நடை பெறுகின்றன.

எனவே, தமிழகம், தமிழன், தமிழ் என்கிற அடையாளப் படுத்தங்கள் அழிக்கப்படும் நோக்கில்தான் இந்தியா, இந்தியன், இந்தி-எனும் அதிகாரப் பதிவுகள் அடையாளப்படுத்தப்படு கின்றன.

இந்தியா முழுக்க ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கல்வி முறை, ஒரே வரலாறு  என ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் முறைகளெல்லாம் ஆரியப் பார்ப்பனியச் சார்புடைய நிலையிலேதான் இருக்க வேண்டுமென இந்திய அரசு கட்டமைத்துக் கொண்டிருக்கிறது.

ஆக, இந்த நிலையில் இந்திய அரசுக்கு இந்தியை, சமசுக்கிருதத்தை, ஆங்கிலத்தைத் திணிக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமன்று.

அதன் இந்திய வயமாக்கம், இந்திய  பன்னாட்டுச் சுரண்டல் கொள்ளை, இந்திய அரசாட்சி ஆகிய நோக்கங்களுக்கு இசைவான  இணக்கமான திட்டங்களே சமசுக்கிருத, இந்தி, ஆங்கிலத் திணிப்புத் திட்டங்க ளெல்லாம்.

ஆக  இந்திய ஆட்சியதிகாரத்திற்காகத்தான், இந்த மொழித் திணிப்புகளெல்லாம் செய்யப்படுகின்றனவே யல்லாமல், மொழித் திணிப்புகளின் நோக்கம் மட்டுமே இந்தியாவுக்கு இல்லை.

எனவே, தமிழகத்தில் இந்திய ஆட்சியதிகாரத்தின் இறுதிப்பிடிப்பு இற்று வீழ்த்தப்படுகிறவரை அதன் இந்திய வயமாக்கம் எனும் எந்த முயற்சிகளையும் அது முற்றாகக் கைவிட்டுவிடாது.

இந்நிலையில் இந்தியக் கட்டமைப்பை அறுத்தெறிகிற அல்லது அவிழ்க்கிற தமிழ்நாட்டின் எவ்வகை உரிமை முயற்சிகளுக்கும் இந்திய அரசு எளிதே செவிசாய்த்து விடாது.

எனவே, தமிழ்நாட்டின் உரிமைக்குரிய  ஒவ்வொரு முறையீடுகளையும் போர்க்கள முயற்சியாகச் செய்தே ஓரளவு வெற்றி காண முடியும்.

ஆக, தமிழ்மொழி உரிமை மீட்புக்கான முயற்சிகள் என்பன தமிழ்நாட்டு விடுதலை முயற்சியின் பகுதி முயற்சிகளே அல்லாமல் தனித்த முயற்சியாகிவிடாது.

எனவே,

தமிழ்நாட்டு விடுதலை இலக்கில்லாதவர்களால் தமிழ்மொழி மீட்புக்கான முயற்சிகளைச் செய்ய இயலாது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் தமிழை ஆட்சிமொழியாக்கத் திறனற்றவர்களே-தவறியவர்களே இந்தியாவில் அனைத்து மொழிகளையும் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர்.

கூரையேறி கோழி பிடிக்கும் திறனற்றவர்கள் எப்படி வானம் ஏறி  வல்லூறைப் பிடிப்பார்கள்?

இந்திய அளவில் அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழிகளாக்குவது என்பது இயலாதது என்பது மட்டுமன்று-அது ஒரு பித்தலாட்டக் கோரிக்கை அல்லது முழக்கம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.   அது எவ்வாறு ஓர் ஏமாற்று முழக்கம் என்பதைப் பற்றி அது குறித்தான தனிக் கட்டுரையில் பார்க்கலாம்.

இப்போது இந்தச் செய்திக்கு வருவோம்.

அதாவது இந்திய அரசெதிர்ப்புச் செயற்பாடில்லாமல், திட்டமில்லாமல் தமிழைக் கல்வி மொழியாக்கிடவோ, ஆட்சி மொழியாக்கிடவோ, நயனக(நீதி) மொழியாக்கிடவோ  பிற வகையில் எல்லாம் ஆளுமைப் படுத்திடவோ முடியாது என்பதே இங்கு விளங்கிக் கொள்ள வேண்டிய செய்தி.

இங்குக் கல்வித்துறை என்று வந்தால் அது தமிழக அரசின் அதிகாரத்திற்குட்பட்டதாக மட்டுமே இல்லை.  இந்திய அரசுக்குட்பட்ட சி.பி.எசு.இ. பள்ளிக்கூடங்களிலும், பன்னாட்டு அரசுச் சார்பு நிறுவனங்களான இன்டர்நேசனல் பள்ளிக் கூடங்களிலும் தமிழக அரசதிகாரம் எந்தச் சிறு மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

மருத்துவம், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்  உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் தமிழக அரசு தலையிட முடியாது.  பாரதீய சனதா அரசின் புதிய கல்விக் கொள்கையோ, இன்னும் மேலதிகமான அதிகாரங்களைத் தமிழகத்திடமிருந்து இந்தியாவுக்குப் பறித்துக் கொள்வதால், தமிழக அரசு கல்வித் தொடர்பான பெருமளவு  அதிகாரங்களையும் இழந்து விடுகிறது.

இந் நிலையில், கல்வித்துறை சாதி அமைப்பு போல் ஏற்றத் தாழ்வுகளோடு அமைந்திருக்கிறது என்பதோடு, இந்திய அரசின் பெரும் அதிகாரத்திற்குட்பட்டதாகவே அடங்கிப் போய்விடுகிறது.

இந்நிலையில், ஒருவன் தமிழே தெரியாமல், தமிழ்நாட்டில் உள்ள இந்திய, பன்னாட்டு நிறுவனங்களின் அதிகாரங்களுக் குட்பட்ட பள்ளிகளில் படித்து உயர் வேலைகளில் அமர முடியும்.

ஆக, கல்வித்துறை முழுமையையும் தமிழக அரசதிகாரத்தின் கீழ் வரச் செய்யாமல், இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனப் பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் இயங்கத் தடை செய்யாமல் தமிழே கல்விமொழி என்பதை நிறைவேற்ற முடியாது.

இதே நிலைதான் தமிழே ஆட்சிமொழி என்பதிலும் தமிழே நயனக (நீதிமன்ற) மொழி என்பதிலும் இருக்கிறது.

ஆக, தமிழ்நாட்டில் தமிழைக் கல்விமொழியாக்குவது, தொடங்கி தமிழ் மொழிக்கான எவ்வகை உரிமை முழக்கமானாலும் அதற்கு முழுத் தடையாக இருப்பது இந்திய அரசே என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

தனித்தமிழ் இயக்கத்தின் கொள்கை தமிழ்க் காப்பு என்கிற அடிப்படை கொண்டது எனில், அந்தத் தமிழை இந்தியிலிருந்தும், சமசுக்கிருதத் திலிருந்தும், ஆங்கிலத்திலிருந்துமான அதிகாரத் திணிப்பிலிருந்தும் மீட்டுத் தற்காத்துக் கொள்வதே ஆகும்.

அம் முன்றின் அதிகாரத் திணிப்பு என்பது ஏதோ மொழி சார்ந்ததாக மட்டுமல்லாமல் இந்திய அரசு சார்ந்தது என்பதும் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்தி வேண்டாம் என்பது, இந்திய ஆட்சி வேண்டாம் என்கிற நிலையுடையது. சமசுக்கிருதம் கூடாது என்பது ஆரியப் பார்ப் பனியம் கூடாது என்கிற பொருளுடையது. ஆங்கில எதிர்ப்பு என்பது பன்னாட்டு நிறுவன எதிர்ப்பின் சாரத்தைக் கொண்டது.

ஆக-அம் மூன்று மொழித் திணிப்பு எதிர்ப்பு என்பதும் இந்திய அரசெதிர்ப்பும், ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பும், பன்னாட்டு நிறுவன எதிர்ப்பும் ஆகிய மூல எதிர்ப்புகளைக் கொண்டது.

அது, அவ் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து வீழ்த்துதல் வேண்டு மான முதன்மைப் பணியோடு இணைந்தது.

ஏறத்தாழ இதே தன்மை நிலை கொண்டவர்களாகவே காசுமீரிகளும், நாகர்களும், அசாமிகளும், வங்காளிகளும், மிசோரம் மக்களும்-அவ்வளவு ஏன் மராட்டியர்களும், தெலுங் கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் உள்ளனர்.  இந் நிலையில் தமிழ்க் காப்புக்கு முதன்மை எதிர்மை நிலைக் குரியதான இந்திய அரசெதிர்ப்பைச் செய்யாமல், தெலுங்கர் களையும், கன்னடர்களையும், மலையாளிகளையும் முதன்மை எதிரிகளாகச் சிலர் காட்டிப் பேசுவது அறியாமை வழிப்பட்டது என்பதைவிட அழிவு வழிப்பட்டது என்றே கூறவேண்டியுள்ளது.

அப்படியாக அவர்கள் கருதுவதற்கு அல்லது கருத்தறி விப்பதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை.

கடந்த காலங்களில் திராவிடக் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. செய்த இரண்டகங்களையே முதன்மைக் காரணமாக அறியலாம்.

தேர்தல் நலனுக்காக தி.மு.க., இந்திய அரசின் பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு அடங்கிப் போய், திராவிட நாட்டு விடுதலைக் கொள்கையைக் கைவிட்டது.

-தமிழைக் கல்வி மொழியாக்கிடாமல் இருந்தது,

- கல்வித்துறையை இந்திய அரசிடம் கையளித்தது

-தமிழ்நிலப் பரப்புகளில் (குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தொடங்கி கட்சத் தீவு வரை) கவனமின்றித் தமிழகம் இழந்திடக் காரணமாக இருந்தது.

-தமிழக ஆற்று உரிமைகளில் அக்கறையின்றி இந்திய அரசுக்கு அடிபணிந்தது.

-தமிழகத் தொழில்வளங்களை இந்திய அரசுக்கும், வெளிநாட்டுக் கொள்ளை நிறுவனங்களுக்கும் தாரை வார்த்தது.

- இந்தியக் கல்விக் கூடங்கள், பன்னாட்டுக் கல்விக்கூடங்கள் தமிழகத்தில் நுழைய இசைந்தது.

- கட்சி தொடங்கியபோது  இந்திப் பெயர்ப்பலகை அழிப்பு உள்ளிட்ட இந்தித் திணிப்பு எதிர்ப்பைச் செய்துவிட்டுப், பின்னாள்களில் நெடுஞ்சாலைகளிலேயே இந்தியை எழுதியது

-2009  தமிழீழச் சிக்கலின் உயிர்நிலைப் போரில் மிகப் பெரும் இரண்டகம் செய்தது

-உள்ளிட்ட தமிழ்நாட்டு உரிமைகளுக்கு மாறாகவும், இந்தியத் தோடு இணங்கிக் கொண்டும் தி. மு. கழகம் செய்த இரண்டகங்களின் பட்டியல் மிக நீளமானது.

அத்தகைய இரண்டகப் போக்கிற்குத் தி.மு.க.வின்   தலைமைகளே   காரணம் என்பதை எவரும் மறுத்திட இயலாது.

அண்ணாத்துரை தொடங்கி கருணாநிதி வரை அவர்கள் செய்த இரண்டகச் செயல்களைப் பட்டியலிட முடியும்.

ஆனால் அவர்கள் செய்த இரண்டகங்களுக்கு அவர்கள் திராவிடக் கருத்துடையவர்கள் என்பதல்ல காரணம்.

ஒருவேளை அவர்கள் திராவிடக் கருத்துடையவர்களாக அல்லாமல் தமிழர்  தமிழ்நாடு என்ற கருத்துடையவர்களாக இருந்திருந்தாலும்கூட அத்தகைய இரண்டகப் போக்கையே அவர்கள் செய்திருப்பார்கள்

அது மேலும் சிறப்பாக விளங்க வேண்டும் என்றால், இந்த இடத்தில் இன்னொன்றையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.

ஒருவர் தமிழுக்கு இரண்டகம்  செய்வதற்கு அவர் தமிழரல்லாதவராக இருந்தார் என்பது மட்டுமே காரணமாகிட முடியாது, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் அதைவிட அவர் எத்தகைய கொள்கை மற்றும் நடைமுறையைக் கொண்டவர் என்பதே முகாமையானது. கொள்கை நடை முறையால் இந்திய அரசோடும், பன்னாட்டு நிறுவனங்களோடும் இயைந்து போகிற, அண்டிப் பிழைக்கிற ஒருவர்  எப்படித் தமிழர்க்கு, தமிழுக்குத், தமிழ்நாட்டிற் கானவராக இருக்க முடியும்?

பொதுவாக எண்ணுவோமானால் பிறப்பைப் பேசி அதனடிப்படையில் சிறப்பும், இழிவும் கற்பிக்கிற கண் ணோட்டமே ஆரியப் பார்ப்பனியக் கண்ணோட்டம் என்பதை அத்தகைய இயக்கப் போக்கினர் தெரிந்துகொள்ள வேண்டும்.

பிறப்பொக்கும்  எல்லா  உயிர்க்கும்  எனும்  அறவியல்  உணர்வு கொண்டவர்களின் மூளையில் பிறப்பைக் குறிப்பிட்டு, சாதியைக் கணக்கிட்டுப் பேசுகிற  வைதீக  மனுதர்மக் கண்ணோட்டங்களும் புகுந்துகொண்டு செய்கிற பிழைப் போக்குகளை எப்படி ஏற்க இயலும்?

அவ்வகையில் தி.மு.க. செய்த பிழைகள் அவர்கள் கொண்டிருந்த திராவிடக் கருத்தால் வந்த பிழைகளன்று; அவர்களின் இந்திய உறவால் அதனோடு இணங்கி அண்டிப் பிழைத்ததால், பிழைத்து வருவதால் ஏற்பட்ட பிழைகள்.

அதாவது எவை எதிர்க்கப்பட வேண்டியவையோ அவற் றோடே கூடிக் குலாவிய பிழை.

திராவிடம் என்ற கருத்துடன் அவர்கள் இந்தியத்தை எதிர்த்துத் திராவிட நாட்டை உருவாக்க எண்ணிய காலம் ஒன்று இருந்தது. ஆனால், அது பிரித்தானிய ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்டிருந்த சென்னைத் தலை மாநிலம் (மெட்ராசு பிரசிடென்சி) எனும் ஆட்சி அமைப்புக்குள் இப்போதைய தமிழகம், ஆந்திரம், கருநாடகம், கேரளம் ஆகியவை உள்ளடங்கியிருந்த காலம்.  ஆரியப் பார்ப்பனியக் கருத்துருவாக்கத்தில் அன்றைய பிரித்தானிய இந்தியாவை அவர்கள் இந்துசுத்தான் என்று அடையாளப்படுத்தி அழைத்துக் கொண்டிருந்ததற்கு மாறாக, அதை மறுத்துத் திராவிடம், திராவிட நாடு எனும் கருத்து தோன்றியிருந்த காலம்.

1956-க்குப் பின்னர் அதாவது மொழிவழி மாநிலப் பகுப்புக்குப் பின்னர் திராவிட நாட்டுக் கருத்தைக் கொண்டிருந் தோர் பலர்; குறிப்பாகப் பெரியார், தமிழகம், ஆந்திரம், கரு நாடகம், கேரளம் இவற்றையெல்லாம் இணைத்த பெருநிலத்தை திராவிட நாடு என நம்புவதை விட்டுவிட்டுத் தமிழ்நாட்டு விடுதலையையே முன்வைத்துப் பேசலானார்.

ஆனால் தேர்தல் நலனுக்காகத் திராவிட நாடு என்று 1949 முதல்  பேசிவந்த தி.மு.க.வோ, 1963 வரை, “அடைந்தால் திராவிட நாடு-இல்லையேல் சுடுகாடு” என்று வீர முழக்கமிட்டுவிட்டு, 1963இல் இந்திய அரசிடம் இருந்து சட்ட நெருக்கடி வந்தவுடன், நாங்கள் விடுதலைக் கருத்தைக் கைவிட்டுவிட்டோம் எனத் தடாலடியாகத் தலைக்குப்புற வீழ்ந்தனர்.

ஆக, இங்குத் தமிழக வரலாற்றின் வளர்ச்சியில் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பில், இந்திய எதிர்ப்பில், வல்லரசிய எதிர்ப்பில் எந்த அளவு காலூன்றி உறுதியாய் இருந்தார்கள், இருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவர்களின் அரசியலும் செயல்களும் கணிக்கப்பட வேண்டுமே அல்லாமல், பிற வகையில் அதாவது பிறப்பின் அடிப்படையில், சாதியின் அடிப்படையிலன்று.

அவ்வாறு அரசியல்வழியாகத் தெளிவாகக் கணிக்காத வகையிலான செயல்பாடுகளின் பிறழ்ச்சிகளாகவே பன்னூற்றுக் கணக்கான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டமுடியும்.

அண்மையில் தருண்விசய் திருவள்ளுவரைத் தூக்கிக் கொண்டு நாடகமாடிய போது, அவரோடு உறவாடி மகிழ்ந்த தமிழ் அமைப்புகள் தமிழ் அடியார்கள் சிலரின் இழிநிலையைக் குறிப்பிடவேண்டும்.

இந்துவியத்தைப் பரப்புவதற்கும், ஆரியப் பார்ப்பனியத்தைக் காலூன்ற வைத்திடுவதற்குமான நோக்கங் கொண்டதே ஆர்.எசு.எசு.

அந்த ஆர்.எசு.எசு. இயக்கத்தின் வழிநெறியில் செயல்படுகிறவரே தருண் விசய் போன்றவர்கள்.

அவர்கள் திருவள்ளுவரை ஏற்றிப் பேசுவதிலும், திருவள்ளுவத்தை ஏற்றுக் கொள்வதாய்ப் பொய்யுரைப்பதிலும் உண்மையில்லை என்பதை உணர வேண்டும்.

திருவள்ளுவத்தின் அறக்கொள்கையை ஏற்றுக் கொள்ப வரானால் ஒருவர் மனு நீதியையோ. வேதப் புளுகுகளையோ ஏற்றிட இயலாது.

தருண்விசயால் மனுதர்மத்தையோ, வேத புராணங் களையோ மறுத்திட முடியுமா?

அதேபோல் சென்னையில் அண்மையில் ஆர்.எசு.எசு.வின் அடிதாங்கி குருமூர்த்தி நடத்திய 8 ஆம் இந்துப் பண்பாட்டுக் கண்காட்சிக்குள் மயங்கிப் போய் கலந்துகொண்டு மகிழ்ந்த தமிழ்ச் சிவனியர்களையும், மாலியர்களையும் என்னென்று மதிப்பிடுவது?

ஆனால் மறைமலையடிகளும், பாவாணரும், பாவலரேறு வும் மனுதர்மத்தைக் கடுமையாக மறுத்தவர்கள்; வேத புராணங்களை மறுத்தவர்கள்; எதிர்த்தவர்கள்.

அவ்வகையில் ஆரியத்தை வலுவாக மறுத்துத் தமிழி யத்தைக் காக்க எண்ணியவர்கள்; செயல்பட்டவர்கள்.

மறைமலையடிகளாரின் சிவனியக் கருத்தாடல்களில் நம்மால் ஒன்ற இயலாமல் போனாலும், வைதீகத்தையும், ஆரியப் பார்ப்பனியத்தையும், அவை இந்துவியம் என்னும் பெயரில் முகமூடியிட்டுச் சுற்றித் திரிந்ததையும் அவர் கடுமையாக எதிர்த்ததை நாம் வரவேற்க வேண்டும்.

ஆரியப் பார்ப்பனியத்தின் இந்துவியம்  என்பதும் இந்தியம் என்பதும் வெவ்வேறானவையன்று  என்ற நிலையில் அவற்றை எதிர்த்துக் களம் கண்டவர்களே மறைமலையடிகள், பாவாணர், பாவலரேறு  எல்லாரும்.

அதனால்தான் இறையியல் கருத்தில் முற்றிலும் மாறுபட்ட நிலையினராக இருந்தபோதிலும், தமிழ் மீட்பு, தமிழ்க் காப்புக் கருத்தில் மறைமலையடிகளாரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாகப்  பெரியார் எழுதவும் பேசவும் செய்தார்.

அன்றைய தனித்தமிழ் இயக்கத்திற்கு ஆரியமே முதன்மை எதிரி, சமசுக்கிருதமும் இந்தியுமே எதிரிகள், இந்தியமே எதிரி அவற்றையெல்லாம் அவர்கள் எதிர்த்து எந்த அளவு திட்டமிட்டுச் செயற்பட்டார்கள் பேராடினார்கள் என்பது வேறு.

ஆனால் எதிரியை இனங்கண்டிருந்தார்கள்;  எவ்வகை இணக்கப் போக்கும் இல்லாமல் எதிரியை எதிர்த்தார்கள்.

இன்றைக்குள்ள தனித் தமிழ் இயக்கத்தினர் பலர் ஆரியத்தை வலுவாக மறுப்பவர்களாக இல்லாததால்தான் தருண்விசயைப் பாராட்டுகின்றனர்;  வலுவான ஆரிய எதிர்ப்பாளர்களாக இல்லாததால் தான் இந்தியத்தோடு உறவு கொண்டாடுகின்றனர்.

இந்தியத்தை எதிர்த்துத் தமிழியத்தைக் காக்கவோ, தமிழ்நிலத்தை மீட்கவோ ஆன எந்த அரசியல் இலக்கோ, செயல்திட்டமோ இக்கால் உள்ள தமிழ் இயக்கங்களிடையே இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நிலையில், இந்திய அரசெதிர்ப்பை வலுவாகக் கடந்த காலங்களில் செய்யத் தவறியதோடு, இந்திய ஆட்சியர்களோடு குழைந்துகொண்டு தமிழுக்கும், தமிழினத்திற்கும், தமிழ் நாட்டிற்கும் கேடுகள் செய்த திராவிடத் தேர்தல் கட்சிகளை மனத்தில் வைத்துக்கெண்டு, திராவிடம் பேசுகிறவர்ளையே பகைவர்களாகவும் எதிரிகளாகவும் சில தமிழ் இயக்கத்தினரும், தமிழன்பர்களும் எதிர்த்து வருவதை அறியலாம்.

அவ்வகையில் திராவிடக் கருத்துடையவர்களையே முதன்மைப் பகைவர்களாகக் கருதிடும் அவர்களின் அரசியல் தெளிவின்மை குறித்து வருந்தவே வேண்டியுள்ளது.

தமிழ் உணர்வாளர்களுக்கும், தமிழ்த் தேசக் கருத்தாளர்களுக்கும் இந்தியமே முதன்மை எதிரியாக இருக்க முடியுமே அல்லாமல் வேறன்று.

மற்றபடி இந்தியத்தோடு கூடிக் குலாவித் திரியும் எவரா னாலும் அதாவது திராவிடக் கருத்துடையவர்களானாலும் சரி, தமிழர் கருத்துடையவர்களானாலும் சரி; அவர்களையும் இந்தியம் எனும் எதிர்மை நேர்க் கோட்டில்  வைத்தே எதிர்த்திட வேண்டும்.

ஆக, தமிழ் இயக்கங்களுக்கும், தமிழ்த்தேச இயக்கங்களுக்கும் முதன்மை எதிரி இந்தியமும், பன்னாட்டு நிறுவனங்களுமே எனத் தெளிதல் வேண்டும்.

அவ்வகையிலேயே அவர்களின் கருத்துகளும் செயல் பாடுகளும் இருந்திடல் வேண்டும் என்பதையே வலியுறுத்து கிறோம்.

இந்திய எதிர்ப்பும், பன்னாட்டு வல்லாட்சிகளை எதிர்த்திடுவ தும் சாதி ஒழிப்பு இலக்கைத் தம் கருத்தோடு இணைத்துக் கொண்டு இயங்குவதுமே தனித்தமிழ் இயக்கங்களின் முதன்மை எதிர்மை இலக்காக இருந்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

மற்றபடி இந்தியத்தை. பன்னாட்டு வல்லரசியங்களை. சாதியத்தை எதிர்க்கிற அனைவரையும் நட்பாக்கிக் கொள்கிற நடைமுறையே தனித்தமிழை மட்டுமன்று, தமிழ்த் தேசத்தை வென்றெடுப்பதற்குமான சிறந்த உத்தியாக இருக்க முடியும்

அவ்வகையில் இன்றைக்கு  இயங்கிக் கொண்டிருக்கிற தனித்தமிழ் இயக்கங்களும், தமிழ்த்தேச இயக்கங்களும்  எதிரியைச் சரியாக இனங்கண்டு செயல்படவேண்டும் என்பதே நம் விழைவு.

Pin It