திராவிடர் விடுதலைக் கழக செயல்வீரர்கள் 18 ஊர்களில் திட்டமிட்டபடி மனு சாஸ்திரத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தி முடித்துவிட்டனர். திட்டமிடப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் போராட்டம் நடந்தது, தோழர்களின் உறுதியான கொள்கை உணர்வுக்கு கட்டியம் கூறுகிறது. ஒன்றிரண்டு பகுதிகளைத் தவிர, எல்லா ஊர்களிலும் பெண்களே தலைமையேற்று போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். எந்த மனு சாஸ்திரம், பெண்களை மனிதர்களாகக்கூட ஏற்க மறுத்ததோ, அதே ‘மனு’வுக்கு பெண்களே தலைமையேற்று தீயிலிட்டு பொசுக்கியிருக்கிறார்கள்.

ஆதித் தமிழர் பேரவையின் நிறுவனர் தோழர் அதியமான், ஏப்.14 அன்று நிகழவிருந்த தமது அமைப்பின் நிகழ்ச்சிகளை வேறு தேதிக்கு தள்ளி வைத்துவிட்டு, தமது தோழர்களுடன் பொள்ளாச்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றிருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். கொள்கை தளத்தில் நீளும் இந்த நட்புக் கரங்கள் நமது எதிர்கால செயல்பாட்டுக்கு வலிமை சேர்ப்பதாகவே உணருகிறோம்.

ஜாதி-தீண்டாமையின் கொடூரமான அடக்குமுறைகளை எதிர்க்கும் போராட்டக் களங்கள் இன்றைய அவசியத் தேவைகளாக நம்முன் நிற்கின்றன. இதற்கு முகம் கொடுக்கும் அதே வேளை, மற்றொரு அடிப்படையான கருத்தை நாம் எப்போதும் கவனத்தில் கொண்டு செயலாற்ற கடமைப்பட்டுள்ளோம். ஜாதி வெறி, தீண்டாமை அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதே வேளை, இதற்கான கருத்தியல்களை வழங்கும் “புனித” நூல்களின் அதிகாரங்களையும் அதன் மீதான மக்கள் நம்பிக்கைளையும் தகர்த்திட வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.

பெரியார் கூறுகிறார்:

“ஒரு மனிதனுக்கு கீழோ அல்லது மேலோ ஜாதி என்பது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல் ஜாதி வித்தியாசத்துக்கு ஆதாரமுள்ளவைகளை அடியோடு அழிக்க முயலவேண்டும். அப்படிச் செய்யாமல் உயர்வு தாழ்வை போக்கிவிடலாமென்று கருதுதல் நுனி மரத்தில் நின்று கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற மனிதனின் முட்டாள் செய்கையேயாகும்.” (5.10.1929 ‘திராவிடன்’)

அம்பேத்கர் கூறுகிறார்:

“ஜாதி தெய்வீக அடிப்படை கொண்டதாக இருக்கிறது. எனவே ஜாதிக்குத் தரப்பட்டுள்ள புனிதத்தையும் தெய்வீகத்தையும் நீங்கள் ஒழித்தாக வேண்டும். அதாவது வேதங்கள், மற்றும் சாஸ்திரங்களின் அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்.” (‘ஜாதி ஒழிப்பு’ நூல்)

ஜாதி, தீண்டாமை ஒழிப்பில் நாம் இப்போது சந்தித்துள்ள களம் இந்த ‘புனித’த்துக்கு எதிரானதே ஆகும். அதன் அதிகாரங்களை மகத்துவத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அதனை செயலற்றதாக்குவதற்காகவே மக்கள் முன் ‘மனு சாஸ்திரங்களை’ எரித்துள்ளோம். மனு சாஸ்திரத்தை உருவாக்கியதாகக் கூறப்படும் அந்த “பிரம்மா”வே நம்மைத் தண்டிக்கவோ தடுக்கவோ ஓடி வரவில்லை. காவல்துறைதான் தடுக்க முயற்சித்தது. மூன்று ஊர்களில் அந்த காவல்துறையும்கூட கண்டுகொள்ளவில்லை.

ஆனால், ஜாதியைக் கட்டிக் காப்பாற்றும் பார்ப்பனிய சக்திகள், ஊடகங்கள் இதில் ‘அசாத்திய மவுனத்தை’ கடைபிடித்தன. ஆர்.எஸ்.எஸ்.ஸோ, இந்து முன்னணியோ, மனு சாஸ்திரத்தை ‘பூணூல்’ வழியாக பின்பற்றிக் கொண்டிருக்கும் ‘பிராமண’ சங்கமோ நமது போராட்டம் குறித்து கடும் மவுனம் சாதித்தன. இந்த மவுனத்தின் பின்னால் மாபெரும் சதி அடங்கியிருக்கிறது. இந்த ‘மனு சாஸ்திரம்’ விவாதக் களத்துக்கு வந்துவிட்டால், தங்களின் ஆதிக்க முகத்திரை மக்கள் மன்றத்தில் கிழிந்து தொங்கிவிடும் என்பதே இந்த மவுனத்துக்குள் மறைந்து நிற்கும் சூழ்ச்சி!

பார்ப்பனர்கள் இப்படி என்றால், தமிழர்களுக்காக களத்தில் நிற்கும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும்கூட இதே மவுனத்தையே வெளிப்படுத்தின என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறோம். மனுசாஸ்திரம் எரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா என்ற கருத்தைக்கூட இவர்கள் வெளிப்படுத்த வில்லையே! புரட்சி பேசும் இடதுசாரிகள்கூட ‘மனு சாஸ்திர’ எதிர்ப்பு இயக்கம் பல மாதங்களாக நாம் நடத்திய போதும் அது குறித்து ஒரு வார்த்தைகூட தங்கள் ஏடுகளில் வெளிவந்துவிடக் கூடாது என்று உறுதிபூண்டு செயல்பட்டனர்!

தீண்டாமைக் கொடுமைகள் பற்றிப் பேசும், எழுதும் அமைப்புகளும் ஏடுகளும்கூட அதற்கான அதிகாரங்களை வழங்கிடும் “புனித நூல்கள்” பக்கம் தங்கள் எதிர்ப்பு திருப்பி விடக் கூடாது என்று “கண்ணும் கருத்துமாக” - பார்ப்பனியத்தின் எதிர்ப்புக்கு உள்ளாகிவிடக்கூடாது என்ற பதைப்பில் கைகட்டி வாய்ப்பொத்தியே நின்றன.

இத்தகைய எதிர்மறை சமூகச் சூழலில்தான் நாம் பெரியார், அம்பேத்கர் தந்த கருத்தியல் ஆயுதங்களை கரங்களில் ஏந்தி புறப்பட்டோம். இந்த லட்சியப் பணிகளுக்கு விளம்பரம் கிடைக்காது; பெரியார் காலம் போலவே இருட்டடிப்புக்கும் கள்ள மவுனத்துக்கும் உள்ளாக்கப்படும் என்பதை அறிந்தே தன்மானத்துக்கான - இயக்கத்தை முன்னெடுத்தோம்! ஆம் அந்த ‘புனித’ எதிர்ப்புப் போரில் திராவிடர் விடுதலைக் கழகம் மட்டுமே களத்தில் நிற்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

மக்களை கிராமம் கிராமமாக சந்தித்தோம்; அவர்களிடம் நேரடியாகவே கருத்துகளை விதைத்தோம்; மாநாடுகள் வழியாக பரப்புரை இயக்கங்கள் வழியாக மக்களை நேரடியாக சந்தித்தோம்; அந்த விதைப்புகள் வீண்போகாது. அதன் விளைச்சலை நாம் பார்க்கத்தான் போகிறோம்!

சமூகத்தின் ஒவ்வொரு அசைவிலும் ஊடுருவி நிற்கும் பார்ப்பனிய மனு சாஸ்திரம், தனது அடையாளத்தை நீண்ட காலத்துக்கு முகமூடிப் போட்டுக் கொண்டு மறைந்து ‘கண்ணாமூச்சி’ காட்டிக் கொண்டிருக்க முடியாது. அந்த முகமூடி கிழியும் வரை நாம் ஓயப்போவதும் இல்லை. ஆம்! வேறு எவரும் செய்ய முன் வராத இந்தத் தொண்டூழியத்தை தோள்மேல் சுமந்து களம் கண்டுள்ளது நமது கொள்கை அணி! நமது தோழர்கள் இந்தப் போராட்டத்தின் வழியாக சாதித்துள்ளார்கள்!

எதிர் நீச்சலில் நாம் நடத்திய போராட்டம் இது. மாலைகள், பாராட்டுகளை எதிர்பார்க்காத களம் இது. இந்த லட்சியப் போராட்டத்தில் நாம் ஓயப் போவதில்லை. கள்ள மவுனங்கள் உடைபடும் காலத்தை நாம் விரைவில் சந்திக்கத்தான் போகிறோம்.‘மனு சாஸ்திரத்தை’ நெருப்பிலிட்ட கொள்கைத் தோழர்களே! நெஞ்சுயர்த்தி பெருமை கொள்ளுங்கள்! நாம் அடிமரத்தை வெட்டுகிறோம்; சாஸ்திர அதிகாரத்தை நெருப்பில் பொசுக்குகிறோம். ஆம்! நாம் பெரியார், அம்பேத்கரின் லட்சியப் பாதையில் சரியாகவே நடைபோடுகிறோம்! இறுதியில் வெல்லப்போவது நாம்தான்!                                                         - இரா

Pin It