ஜாதிய சக்திகளை அணி திரட்டும் மருத்துவர் இராமதாசின் போக்கை விமர்சித்து தமிழருவி மணியன் அவருக்கு ஒரு திறந்த ‘மடலை’ ஜூனியர் விகடனில் எழுதினார். இதற்கு பதிலளித்து மருத்துவர் இராமதாசு அதே இதழில் எழுதினார். இதற்கும் பதிலளித்து தமிழருவி மணியன் ஏப்ரல் 21 ஆம் தேதி ‘ஜனியர் விகடனில்’ எழுதியுள்ளார். அதிலிருந்து ஒரு பகுதி:

“சாதிச் சாயத்துடன் நீங்கள் சமூகப் பிரச்சினைகளை அணுகுவதில்தான் என்னைப் போன்றவர்கள் உங்களுடன் முரண்பட நேர்கிறது. என்னிடம் நீங்கள் கேட்டிருக்கும் மூன்று கேள்விகளும் மிக முக்கியமானவை. ‘இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் உருவாகிவிட்டதா?’ என்று கேட்கிறீர்கள். ‘உருவாகி விடவில்லை’ என்று வருத்தத்துடன் ஒப்புக் கொள்கிறேன். ‘இந்த மண்ணில் ஈராயிரம் ஆண்டுகளாக நம் சாதி முறை சமய ரீதியாக, தத்துவ ரீதியாக, அமைப்பு ரீதியாக, மனுஸ்மிருதி போன்ற சட்ட ரீதியாக, சமூகக் கட்டுப்பாடாக மாறுதல்களே இல்லாமல், மாற்றவும் முடியாமல், இன்று வரை நிரந்தரமாக, இறைவனின் ஆணையாகக் கெட்டிப்படுத்தப்பட்டுவிட்டது. சாதிக்குள் மட்டுமே திருமணம் என்ற தவறான சமூகக் கட்டுப்பாட்டால், சாதிப் பரம்பரை, சாதிச் சடங்கு, சாதிக் கடவுள், சாதி ஆசாரம் என்ற வழிமுறை காரணமாக சாதித் தனித்துவம் உடைக்க முடியாதபடி இறுகிவிட்டது’ என்ற ஞானையாவின் (மார்க்சிய எழுத்தாளர்) விளக்கம்தான் உங்கள் கேள்விக்குச் சரியான பதில். இப்படி இறுகிக் கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதிய அமைப்பு நீடிப்பது உங்களுக்குச் சம்மதமா? இந்த மோசமான அமைப்பு முறையில் சமூக நீதி சாத்தியமா?

‘காதல் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளைச் சாதியற்றவர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள்?’ என்று கேட்கிறீர்கள். காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் ஆண் சார்ந்திருக்கும் சாதியையே பிள்ளைகளுக்குப் பதிவு செய்யும் வழக்கம், ஆணாதிக்கத்தின் எச்சம். இதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஒரு தனி மனிதன் சாதியைத் தவிர்க்க விரும்பினாலும் அரசு அவன் தலை மீது அதைத் திணித்து விடுகிறதே.... சட்டம் தானே சாதியைக் காப்பாற்றுகிறது? அதை எதிர்த்துப் போராடப் புறப்படுவோம்.

‘நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உள்ளடக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை. சட்டத்தைத் திருத்தக்கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமையுண்டு’ என்று, பெரியார் மிகச் சரியாகச் சிந்தித்து, சட்ட எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதை நீங்கள் நினைத்து பார்ப்பது நல்லது.

சாதி என்பதே இருக்கக் கூடாது. சாதிப் பிரிவுகள்தாம் நம்மை ஒருவருக்கொருவர் ஒற்றுமையில்லாமல் ஆக்கி விட்டன. நாம் யாவரும் சமம் என்ற நிலை வரவேண்டும். ஆதி திராவிடர், ஹரிஜனம், தாழ்த்தப்பட்டவர், பறையர், பஞ்சமர், தீண்டாதவன், புலையன் ஆகிய பட்டங்களை ஒழித்தாலொழிய இப்பழங்குடி மக்கள் மனிதத் தன்மையுடன் வாழ முடியாது. தோழர்களே - திராவிடர் இயக்கம் தனது கடைசி மூச்சிருக்கும் வரையில் இந்நாட்டில் பள்ளன், பறையன் என்ற இழி சாதிகளை ஒழித்து அவர்களை முன்னேற்றவே உழைக்கும் என்ற உறுதியை வழங்குகிறேன்’ என்ற பெரியாரின் பாதையில் உங்கள் பயணம் தொடர வேண்டும் என்பது என் பெருவிருப்பம்.

எனக்கு எள் மூக்கின் முனையளவும் சாதி உணர்ச்சி என்றும் இருந்ததில்லை. என் மகனும் மகளும், சாதி மதங்களை மீறிய மனிதம் சார்ந்து நடப்பவர்கள் என்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு. ஆனால், பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு நிலையிலும் சாதியை முன்னிறுத்தும் அரசியலமைப்பு மாற்றப்படாத வரை சாதிப் பதிவு தவிர்க்க முடியாதது. இன்றைய முதல் தேவை சாதியுணர்வு கொள்ளாமல் இருப்பது; சாதியை முன் வைத்துப் பூசலை வளர்க்காமல் சமத்துவம் காண்பது. இந்தப் பார்வை எனக்கும், என் பிள்ளைகளுக்கும் உண்டு. அனைவருக்கும் இது அவசியம் என்பதுதான் சமூக நீதிக்கான பாதை” - என்று ராமதாசுக்கு பதில் அளித்துள்ளார்.

Pin It