சட்ட “நிபுணராகிறார்” சேலம் காவல்துறை அதிகாரி(!) - மனு சாஸ்திரம் அரசியல் சட்டத்துக்கு சமமானதாம்!

மனு சாஸ்திரம் என்பது அரசியல் சட்டத்துக்கு நிகரானது, அதை எரிப்பது குற்றம் என்று சேலம் மாநகர தெற்கு சரகம் காவல் உதவி ஆய்வாளர் ஆ.இரவி சங்கர் என்பவர் எழுத்து மூலம் கழகத்துக்கு பதில் அனுப்பியுள்ளார். சேலத்தில் மனு சாஸ்திரத்தை போஸ் மைதானத்தில் எரிக்கப் போகிறோம் என்ற தகவலை மாவட்டக் கழக சார்பாக காவல் நிலையத்தில் எழுத்து மூலம் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்துக்கு அனுமதி கேட்கவில்லை. ஆனால், காவல் உதவி ஆய்வாளர் அனுமதி கேட்டதாக அவரே தீர்மானித்துக் கொண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினார். அதில், “மனு சாஸ்திர எரிப்பு இந்து மக்களின் மனத்தை புண்படுத்துவதாக இருக்கும் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்றும், மேலும் மனு சாஸ்திரம் என்பது சட்டப் புத்தகத்துக்கு நிகராகக் கருதப்படுவதாலும் அதை எரிப்பது சட்டம் ஒழுங்கை பாதிக்கும்” என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியல் சட்டத்துக்கு நேர் எதிரான கருத்துகளைக் கொண்டதுதான் மனு சாஸ்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Pin It