இந்நூலில் பௌத்தத்தையும், பார்ப்பனியத்தையும் (மீட்டுருவாக்கம்) முறையே புரட்சி, எதிர்ப்புரட்சி என பொருள்படுத்துகிறார் அம்பேத்கர்.
பண்டைய இந்தியாவில் புரோகித (ஆரிய) அமைப்பு முறையால் ஏற்பட்ட சமூக சீரழிவுகளை தனது பண்பாட்டுப் புரட்சியால் சீர் செய்தது பௌத்தம். இந்தப் புரட்சியை நூலின் முதல் நான்கு இயலில் உரிய வரலாற்று ஆதாரங்களுடன் விவரிக்கிறார் அம்பேத்கர். நான்காவது இயலான "சீர்திருத்தக்காரர்களும் அவர்களுக்கு நேர்ந்த கதியும்", பண்டைய ஆரிய சமூகத்தின் சீர்கேடுகளான சூதாட்டம், மது, கூடாவொழுக்கம், வேள்வி பலிகள் பற்றியும், அவற்றை எதிர்த்து புத்தர் நிகழ்த்திய பரப்புரைகள் பற்றியும் விவரிக்கிறது. வேள்விகளுக்கு எதிரான புத்தரின் உரைகள் 'குடகந்தா சூத்தாவிலும்', ஜாதி அமைப்பு முறைக்கு எதிரான புத்தரின் உரைகள் 'அம்பத்த சூத்தாவிலும்' பதிவு செய்யப்பட்டுள்ளது.
போக்கர்சாதி எனும் பார்ப்பனரிடம் சீடனாக இருந்த அம்பத்தா எனும் இளம் பார்ப்பனரிடம் தென்பட்ட ஜாதி ஆணவத்தை புத்தர் தனது தர்க்கப் பூர்வமான கேள்விகள் மூலம் தகர்த்தெறிகிறார். ஜாதியை எதிர்த்து பரப்புரை செய்ததோடு அல்லாமல் அதை தனது சங்கத்தில் நடைமுறைப் படுத்தவும் செய்தார் புத்தர். சங்கத்தில் புத்தருக்கு அடுத்தபடியாக கருதப்பட்ட உபாலி ஒரு நாவிதர். சுநீதா, சதி என்பவர்கள் முறையே பழங்குடி, மீனவ வகுப்பைச் சேர்ந்தவர்கள். சூத்திரர்களும், பெண்களும் சங்கத்தில் பிக்குணிகளாக முடிந்தது.
இந்தியாவில் பௌத்த வீழ்ச்சிக்குக் காரணமாக இஸ்லாமிய படையெடுப்பை முக்கியமானதாகக் குறிப்பிடும் அம்பேத்கர், இஸ்லாமியப் படையெடுப்பில் இருந்து பார்ப்பனியம் தப்பிப் பிழைக்கவும், பெளத்தம் அழிந்தொழியவும் காரணமான மூன்று சூழ்நிலைகளை "பௌத்த சமயத்தின் நலிவும் வீழ்ச்சியும்" எனும் இயலில் விளக்குகிறார்.
அந்த சூழ்நிலைகள் பின்வருமாறு: 1. இஸ்லாமியப் படையெடுப்பில் தொடங்கி அதன் பரவலாக்கம் வரையில் இந்தியாவில் பார்ப்பனியத்திற்கு அரசின் (பார்ப்பன ஆதரவு அரசுகள்) ஆதரவு இருந்து வந்துள்ளது. 2. பௌத்த பிக்குகளின் அமைப்பு இஸ்லாமியர்களின் வாளுக்கு இரையானது; இந்தத் தாக்குதலில் இருந்து அது மீளவே இல்லை. 3. பௌத்தர்கள் பார்ப்பனியத்தை ஆதரிக்குமாறு இந்திய (இந்து) அரசர்களால் பெரிதும் கொடுமைப் படுத்தப்பட்டனர். இக்கொடுமையில் இருந்து தப்பிக்க பௌத்தர்கள் இஸ்லாம் சமயத்தில் சேர்ந்து பௌத்தத்தை துறந்தனர்.
பார்ப்பனிய எதிர்ப்புரட்சியின் முக்கிய அம்சங்களாக அம்பேத்கர் முன்வைப்பது: புஷ்யமித்ர சுங்கன் ஆட்சி, மனுஸ்மிருதி மற்றும் பகவத் கீதை.
புஷ்யமித்திரன் சுங்க கோத்திரத்தைச் சேர்ந்த சாமவேதி பார்ப்பனன். பார்ப்பனியத்தையும், பார்ப்பன மேலாதிக்கத்தையும் மீட்டெடுக்க வேண்டி பெளத்த அரசனான மௌரிய பேரரசின் கடைசி மன்னரைக் கொலை செய்து ஆட்சியைக் கைப்பற்றினான் புஷ்யமித்திரன். பௌத்தத்தை பூண்டோடு அழித்து ஒழிக்க வேண்டும் என்று எண்ணிய புஷ்யமித்திரன் ஒவ்வொரு பெளத்த பிக்குவின் தலைக்கும் நூறு பொற்காசுகள் விலையாக வைத்தான். கீதையும் பெளத்தத்திற்கு எதிராக இயற்றப்பட்டது தான். அதாவது புத்த மத தாக்கத்திலிருந்து பார்ப்பனிய எதிர்ப்புரட்சியின் கோட்பாடுகளை (ஜைமினியின் பூர்வமீமாசம்) பாதுகாக்கவே கீதை இயற்றப்பட்டது.
அடுத்ததாக பார்ப்பனிய மீட்டுருவாக்கத்தின் மிக முக்கிய காரணகர்த்தாவாக கருதப்படுபவர் 'மனு' என்று பொதுவாக அழைக்கப்படும் மனுஸ்மிருதியின் ஆசிரியரான சுமதி பார்கவா. மனுவின் பார்ப்பனிய எதிர்ப்புரட்சி கோட்பாடுகள் புஷ்யமித்ர சுங்கன் ஆட்சியில் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தப் பட்டது. சமயம், சட்ட விதிகள், ஒழுக்கவியல் ஆகிய மூன்றின் கதம்பமாக இயற்றப்பட்ட மனுஸ்மிருதி, பார்ப்பனர்களுக்கு ஏகபோக உரிமைகளை வழங்கி அவர்களை கடவுளுக்கு நிகராக நிலைநிறுத்தியது.
மனு 11:35 - "பார்ப்பனன் உலகைப் படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், ஆசிரியனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளான்; எனவே அவன் படைக்கப்பட்டவை அனைத்துக்கும் புரவலனாக விளங்குகிறான்; அவனிடம் எந்த மனிதனும் அமங்கலமான எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பயன்படுத்தவோ கூடாது".
மனுவுக்கு முன்னதான ஆரியச் சட்டம் மன்னனுக்கு எதிரான பார்ப்பனக் கிளர்ச்சியை தடை செய்கிறது. ஆனால் மனுவோ அந்தக் கிளர்ச்சியை நியாயப் படுத்துவதற்காக சட்டத்தையே (மனு, 12:100, 11:31, 11:32) திருத்தி அமைக்கிறார். இது மட்டுமல்லாமல் பார்ப்பனன் மேற்கொள்ள வேண்டிய தொழில்கள், பார்ப்பனருக்கான தண்டனைகள், சூத்திரர் மற்றும் பெண்கள் மீதான பார்ப்பனர்களின் ஏகபோக உரிமைகள் பற்றி விரிவான சட்ட/ஒழுக்க விதிகளை மனுஸ்மிருதி கொண்டுள்ளது.
பார்ப்பனிய எதிர்ப்புரட்சிக்குப் பின் பார்ப்பனர்கள் முதன்மையாக ஈடுபட்ட செயல், வர்ணத்தை ஜாதியாக மாற்றி அமைத்தது தான். மன்வந்திரம், குருகுல முறை, உபநயனம் செய்யும் உரிமையை குருவிடமிருந்து தந்தைக்கு மாற்றியமைத்தல் எனப் பல கட்டங்களாக இந்த செயல் அமைந்தது. ஒருவன் பெற்ற பயிற்சியின் அடிப்படையில் அவன் வர்ணத்தை தீர்மானிக்கும் முறை "குருகுல முறை" எனப்பட்டது. இதில் ஒரு குழந்தைக்கு உபநயனம் குருகுலத்தில் செய்யப்பட்டது. ஆனால் உபநயனம் செய்யும் உரிமை குருவிடம் இருந்து தந்தைக்கு மாற்றப்பட்டதால் ஒரு குழந்தையின் வர்ணம் அவன் பெரும் பயிற்சியின் அடிப்படையில் அல்லாமல் அவன் தந்தையின் வர்ணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதுவே வர்ணத்தை பிறப்பின் அடிப்படையிலான ஜாதியாக மாற்றி அமைக்க வழி செய்தது.
பார்ப்பனர்கள் பிரதிலோம திருமணத்தை தடை செய்ததும், அனுலோம திருமணத்தின் விதியில் மாற்றம் (மாத்ர சவர்ண) செய்ததும் ஜாதி முறையை மேலும் இறுக்கமாக்கியது. அகமண முறை, சதி, விதவை முறை, குழந்தை மணம் ஆகியவை ஜாதியைக் காப்பதற்கான கடுமையான வழிமுறைகளாகப் பின்பற்றப்பட்டது.
பார்ப்பனிய எதிர்ப்புரட்சியில் சூத்திரர்களும், பெண்களும் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். இவ்விருவர்களுக்கான மனுஸ்மிருதியின் சட்ட விதிகளும், ஒழுக்க விதிகளும் மிக அருவருக்கத் தக்கவை, கொடூரமானவை. (மனு, 8:272, 8:374, 10:129, 8:271, 2:231, 2:214, 5:47, 9:17).
மனுவின் காலத்திற்கு முன்பான பெண்கள்/ சூத்திரர்களின் நிலை பற்றிய தகவல்களை கடைசி இரண்டு இயல்களில் எடுத்துக் காட்டுகிறார் அம்பேத்கர். இந்தத் தகவல்கள் நமக்கு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கக் கூடியதாக இருக்கிறது.
சூத்திரர்களும் ஆரியர்களே எனக் கூறும் அம்பேத்கர், சூத்திரர்கள் ஆட்சியாளர்களாகவும் (நந்தர்கள், மெளரியர்கள்), வேதம் பயிலும் உரிமை பெற்றவர்களாகவும் (சாந்தோக்கிய உபநிடதம்), முனிவர்களாகவும், வேதச் சடங்குகள் செய்ய உரிமை பெற்றவர்களாகவும் (காத்யாயன ஸ்ரெளத சூத்திரம்) இருந்திருக்கிறார்கள் என்பதை உரிய சான்றுகளுடன் நிறுவுகிறார். போலவே பெண்களும் இத்தனை உரிமை பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள் (அதர்வண வேதம், கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம்). ஆனால் இவர்களை ஒடுக்க மனு ஏன் சட்டம் இயற்றினார் என்பது புதிராகவே உள்ளது.
உண்மையான இந்திய வரலாறு என்பது பெளத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் இடையேயான போராட்டம் தான் என்பது அம்பேத்கரின் துணிபு. இந்து இந்தியாவின் மீது இஸ்லாமியர்கள் படையெடுத்ததைப் போல பெளத்த இந்தியா மீது பார்ப்பனர்கள் படையெடுத்தார்கள் என்கிறார் அம்பேத்கர். இந்தச் சமூகம் அறிவின் உரிமைகளை 'உயர்' ஜாதியினரின் சிறப்புரிமைகள் என்னும் பலிபீடத்தில் பலி கொடுத்து விடுகிறது எனும் அம்பேத்கர், பார்ப்பனர்கள் தாங்கள் பெற்ற கல்வியை தங்கள் சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டனர் என்கிறார்.
பார்ப்பன மதம் என்பது அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு, அதன் அரசியலை மூடி மறைக்கும் மதம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. இந்திய வரலாற்றை அறிய முற்படுபவர்கள் புரட்சியாளர் அம்பேத்கரின் இந்த ஆகச் சிறந்த படைப்பில் இருந்து தொடங்கினால் அவர்கள் தெளிவான வரலாற்றைக் கண்டடைய முடியும்.
- சரவணன் பெருமாள்