மாணவப் பருவத்திலேயே திராவிடர் கழகத்திலும், பகுத்தறிவாளர் கழகத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மயிலாடுதுறையில் தொடர்ந்து பெரியாரியல் கொள்கையைப் பரப்பி வந்த தோழர் நாக. இரகுபதி (60), கடந்த 18 ஆம் தேதி இரவு 9 மணியளவில் முடிவெய்தினார். தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றம் நிகழ்வில் பங்கேற்க தனது உடல்நலத்தையும் பொருட் படுத்தாமல் அவர் சென்றார். மேடையில் ஒரு அமர்வில் உரையாற்றி முடித்தவுடன் அவர் மயக்கமுற்றார். உடன் தஞ்சை தனியார் மருத்துவமனையில் பழ.நெடுமாறன் அவர்கள் முயற்சியால் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி முடிவெய்தினார். ஏற்கனவே இரு முறை இருதய அறுவை சிகிச்சைக்கு உள்ளானவர் தோழர் இரகுபதி. ஆனாலும் உடல்நலத்தைவிட கொள்கைகளை நோக்கியே அவரது இதயம் ஓடிக் கொண்டிருந்தது. முள்ளி வாய்க்கால் முற்றம் மேடையோடு அவர் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1970 ஆம் ஆண்டு வேளாங்கன்னியில் பெரியார் முன்னின்று நடத்திய பயிற்சி வகுப்பில் நானும் அவரும் ஒன்றாக பயிற்சி பெற்று, அன்றைய கீழத் தஞ்சை மாவட்டத்தில் கிராமம் கிராமமாக கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி னோம். நாக. இரகுபதி நல்ல பேச்சாளர், சீரிய களப்பணியாளர். மாநாடுகள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என்றால் ஊர்தோறும் ஓடிப்போய் பங்கேற்பவர்.

பெரியாரியல்வாதிகள் பலரும் தொண்டற்றிய மயிலாடுதுறை வரலாற்றில் நாக. இரகுபதிக்கும் நிச்சயம் இடம் உண்டு.

1972 இல் நான் ‘விடுதலை’ அலுவலகத்தில் பணியாற்ற மயிலாடுதுறை யிலிருந்து அறிமுகமில்லாத சென்னைக்கு வந்தபோது, என்னுடன் சென்னை வரை வந்து வழியனுப்பிய தோழர். வாழ்க்கையையும் கொள்கையையும் இணைந்து நடத்திய பயணத்தில் சக தோழராக இணைந்தும் - விலகியும் - இணைந்தும் பயணித்துக் கொண்டே வந்த அவர், அவ்வப்போது அரசியல் பக்கம் திரும்பினாலும், பெரியார் கொள்கை என்பதே அவரது உறுதியான அடித்தளமாக இருந்தது. ‘கண்ணாரத் தெரு’ மாடியில் அமைந்திருந்த பகுத்தறிவாளர் கழகத்தில் இரவும் பகலும் தோழர்கள் கூடி மகிழ்ந்து, சிரித்து, விவாதித்து, கொள்கைக் குடும்பமாய் வாழ்ந்த அந்த இனிமையான தருணங் கள் மறக்க முடியாதவை. சொந்த வாழ்க்கையைவிட பெரியார் கொள்கை வழி பொது வாழ்க்கையையே நேசித்த ஒரு தோழர் - விடைபெற்றுக் கொண்டார்.

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் கொள்கையாளர்களும் அனைத்துக் கட்சியினரும் அவரது நீண்டநாள் நண்பர் குழாமும் திரண்டு வந்து வீரவணக்கம் செலுத்தினர். நவம்பர் 19 ஆம் தேதி பிற்பகல் அவரது உடல் எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது.

நண்பன் இரகுபதிக்கு வீரவணக்கம்!

- விடுதலை இராசேந்திரன்

Pin It