வருகுது பார் வருகுது பார்

கருஞ்சிறுத்தைப் பட்டாளம்

ஓட்டு கேட்கா பட்டாளம்

உரிமை கேட்கும் பட்டாளம்

என்ற எழுச்சிகர முழக்கத்தோடு கொள்கையில் சிறந்த, தத்துவ பேராளன் தந்தை பெரியாரின் பேரன்களும், பேத்திகளும், பகுத்தறிவுப் பகலவனின் தலை மாணாக்கர்கள், 75 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரருமான தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணியின் தலைமையில் குடந்தையில் கடந்த 08.07.2018 அன்று கருஞ்சிறுத்தைகளாய் அணிவகுத்து  நின்றனர்.

gopalasamy lakhmsnan 600ஏன் குடந்தையில் மாநாடு?

திராவிட மாணவர் கழகத்தின் 75ஆம் ஆண்டு பவள விழா மாநாடு குடந்தையில் நடந்தது. தமிழகத்தின் அத்துணை மாவட்டங்களும் ‘பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண் தான்” பின்பு ஏன் குறிப்பாகக் குடந்தை?

தாய்க்கு முந்தியது பிள்ளை என்பதற்கேற்ப திராவிடர் கழகம் தோன்றுவதற்கு ஒரு வருடம் முன்னரே தோன்றியது தான திராவிட மாணவர் கழகம். 75 ஆண்டுக்கு முன்னால் 1943-ஆம் ஆண்டு குடந்தை மண்ணில் ஆண்கள் அரசு கலைக்கல்லூரியில் ‘சிறுத்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்’ என்பதை நிரூபித்து தோன்றியது தான் திராவிடர் கழகத்தின் மாணவர் அமைப்பான திராவிட மாணவர் கழகம்”.

சாதியத்தைச் சாகடிக்கப் பிறந்த திராவிட மாணவர் கழகம்

சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், சாதி எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவின் பாசறை, இவைதான் இன்றைய திராவிடர் மாணவர் கழகம். அன்றைய தினமும் (1943-இல்) இதே நோக்கத்திற்காக, சாதியத்தைச் சாகடிக்கத் தோன்றியது தான் ‘திராவிட மாணவர் கழகம்”.

பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பிரச்சனையில், சாதியத்தின் சங்கநாதத்தைச்  சாகடித்தது. பார்ப்பனருக்குத் தனியாக வைக்கப்பட்ட தண்ணீர் பானையை உடைத்தெறிந்து, உடைக்கப்பட்டது பானை அல்ல, சாதியம் என்பதை வெளிப்படுத்தி உருவானது தான் திராவிட மாணவர் கழகம். இதற்கு வித்திட்ட சீறிய சுயமரியாதை சுடரொளிதான் ‘செ.தவமணிராசன், கவிஞர் எஸ். கருணாநந்தம், குடந்தை செங்குட்டுவன் (பூண்டி இரா.கோபால்சாமி), கோ. இலட்சுமணன், இன்னும் பலர்.

பவள விழா மாநாட்டிற்கு முந்தைய ஆயத்த பணிகள்

ஏறத்தாழ 25 ஆண்டு காலமாக திட்டமிட்டு சரியான நாளில், சரியான இடத்தில், சீறிய தீர்மானங்களோடு மாநாடு நடந்தேறியது. பொதுவாக திராவிடர் கழகத்தில் வருடத்திற்கு பல மாநாடுகள், பல மாவட்டங்களில் நடக்கும் (நடந்து கொண்டே இருக்கிறது) இருந்த போதிலும், மாநில மாணவர் கழக பவள விழா மாநாடு தனிச் சிறப்பாக அமைந்ததற்கு முதன்மைக் காரணம், அங்கே குழுமியிருந்த பெரியாரின் சேனைகளே!

கிராமம் கிராமமாக, ஊர் ஊராக கல்லூரிகள், பள்ளிகள் என்று பல குழுக்களாகத் திராவிடர் கழக, திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள் கொள்கை விளக்கப் பிரச்சாரம் செய்து, தமிழர் தலைவர் ஆசிரியரின் ஈடற்ற உழைப்பினை எடுத்துக்கூறி மாணவர் படையை குடந்தையை நோக்கி அழைத்துவரத் திட்டமிட்டார்கள்.

பேருந்து பிரச்சாரம் செய்த மாணவர்களின் முதன்மை நோக்கம், பணம் வாங்குவது அல்ல. மாறாக பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கொள்கையும், நீட் என்ற நவீன தீட்டின் ஆபத்தை விளக்கவும், ஆசிரியரின் சமூகநீதிப் பணிகளை விளக்கவும், வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

‘இனமானம் காப்பவர்களுக்கு தன்மானம் பெரிதல்ல” என்ற லட்சிய பாதையை வாழ்வியலில் செய்முறை விளக்க பயிற்சி எடுத்தனர். நீட் எதிர்ப்பு, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு, இந்தி சமஸ்கிருத மொழி திணிப்பு- எதிர்ப்பு, இடஒதுக்கீடு பாதுகாப்பு, வேலைவாயப்பு போன்ற சமூகநீதி பிரச்சனைகளை முதலில் அவர்கள் உள்வாங்கி அதை மக்களிடத்தில் மாணவரிடத்தில் கொண்டுபோய் சேர்த்தனர்.

அரிமாக்களால் அலங்கரிக்கப்பட்ட குடந்தை மாநாடு

கருப்பு சட்டைகள் மட்டுமல்ல தமிழகமே எதிர்நோக்கி இருந்த திராவிட மாணவர் கழக 75-ஆம் ஆண்டு பவள விழா மாநாடு சூலை 8 அன்று தொடங்கியது. காலையில் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி, கருத்தின் ஊற்றாக கருத்தரங்கம், கவியரங்கம், புத்தகக் கண்காட்சி நடைபெற்றது.

“ஆசிரியர் பேசுகிறார் என்றால்

ஆதாரங்கள் பேசுகிறது என்று அர்த்தம்”

என்பதை மெய்ப்பிக்கும் வண்ணம் குழுமியிருந்த கருப்புச்சட்டைத் தோழர்கள், மாணவர் படைகளுக்கு, ஆசிரியர் அய்யா வீரமணி கருத்துரை வழங்கினார். காலை நிகழ்ச்சிகள் முடிந்த தருணத்தில் மாலை நிகழ்விற்கு வந்திருந்த அனைத்து மாணவர்களும் ஆயத்தமாகினர்.

பெரியாரை சுவாசிப்போம்!

பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!

பெரியாரை சுவாசிப்போம் என்ற சீருடையை அணிந்து, போர்ப்படை தளபதிகள் போல் 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் (கொள்கை உணர்ந்த மாணவர்கள்) அணிவகுத்து நின்றனர்.

‘பணத்திற்காக கூடிய கூட்டம் அல்ல, பகுத்தறிவிற்காகக் கூடிய கூட்டம், சுயலாபத்திற்கு கூடிய கூட்டம் அல்ல, சுயமரியாதைக்காகக் கூடிய கூட்டம், என்பதை உறுதிபடுத்தி நின்றனர். படைவீரர்கள் மத்தியில் படைத்தளபதி நடந்து வருவது போல் மாணவர்கள் நடுவே 85 வயதிலும், வீறுநடை போட்டு தந்தை பெரியாரின் தத்துவ வாரிசு ‘வீரமணியார்” நடந்து வந்தார்.

ஆரியத்தின் குலை நடுங்கியது

பத்து உறுதிமொழிகளை தமிழர் தலைவர் கூற அதை அப்படியே வழிமொழிந்து கருஞ்சிறுத்தைகள் உறுதிமொழி ஏற்றனர்.

‘நன்றி என்பது பெற்றவர் காட்டக்கூடியதே தவிர, கொடுத்தவர் எதிர்பார்க்கக் கூடியது அல்ல” என்ற பெரியாரின் வரிகளை மெய்ப்பிக்க, சமூகநீதி காவலர், இந்தியாவிலேயே 69 சதவீதம் இடஒதுக்கீடு பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமிதத்துக்குச் சொந்தக்காரர். நீட்டை ஒழிக்க தினமும் களம் காணும் தலைவர், பார்ப்பனர்களால் பழனியில் பாடைகட்டி தூக்கப்பட்;டபோது ‘ஒரு சூத்திரனை பார்ப்பனர்கள் பாடைகட்டி தூக்குகிறார்கள் என்றால் அது நம்முடைய வெற்றி” என்ற கொள்கையாளர் தமிழர் தலைவர் வீரமணி அவர்களைத் திராவிடர் கழகத் திராவிட மாணவர் கழகத் தோழர்கள் சாரட் வண்டியில் ஊர்வலமாக மாநாட்டு மேடைக்கு அழைத்து வந்தனர்.

2000 மாணவர்கள், 4000 கருஞ்சட்டைகள், 1000 பொது மக்கள் என்று முழுக்க முழுக்க அய்யா பெரியாரின் பணிமுடிக்க ஆசிரியரின் தலைமையில் அணிவகுத்து, 19 வரலாற்றுச்  சிறப்பு மிக்கத் தீர்மானங்களை வழிமொழிந்தனர்.

‘பார்ப்பனர் கோட்டையாம் குடந்தை

பகுத்தறிவின் பாசறையாய் மாறியது”

BJP, RSS, மதவாத, சாதிய சக்திகள் குலை நடுங்கியது.

Pin It