தமிழ்நாட்டில் ஜாதி-தீண்டாமை வன் கொடுமைகள் தொடர் நிகழ்வுகளாகிவிட்டது. வெட்கித் தலைகுனிய வேண்டிய அவமானமாகும். ‘திவ்யா-இளவரசன்’ இணையரின் ஜாதி மறுப்புத் திருமணம் தமிழ்நாட்டில் ஜாதி வெறியின் களமாக மாற்றப்பட்டது. தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி தலித் மக்களின் உடைமைகள் அனைத்தையும் ஜாதி வெறிக் கும்பல் சூறையாடியது. அதன் தொடர்ச்சியாக மரக்காணத்தில் தலித் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். இவ்வளவுக்குப் பிறகும் தலித் இளவரசனோடு வாழ்வதில் உறுதியாக இருந்தார் ‘வன்னிய’ சமூகத்தைச் சேர்ந்த திவ்யா.

ஜாதித் தடைகளைக் கடந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்த இணையர் கட்டாயப்படுத்தப்பட்டு அரசியல் சதியின் காரணமாக மிரட்டி பிரிக்கப்பட்டு விட்டனர். கணவர் வீட்டில் எந்தக் குறையும் தனக்கு இல்லை என்று நீதி மன்றத்தில் கூறிய திவ்யா, ‘ஜாதி அரசியல்’ தந்த அழுத்தத் துக்காக தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை தொலைத்து விடும் நிர்ப்பந்தத் துக்கு உள்ளாகி யுள்ளார். ஜாதி மனிதத்துவத்துக்கு எதிரானது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 வயது தலித் சிறுவன் காலில் செருப்புப் போட்டு நடந் தான் என்ற “குற்றத்துக்காக” ஜாதி வெறியர்கள் அந்த சிறுவனின் தலை மீது செருப்பை தூக்க வைத்து வீதிகளில் நடக்கவிட்டிருக்கிறார்கள். உசிலம்பட்டி என்றாலே அது ஜாதி வெறிப் பகுதி என்றே தமிழக வரைபடத்தில் ரத்த அடையாளத் துடன் பதிந்து போய் நிற்கிறது. அதே உசிலம் பட்டியில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயணத்தை கழகம் நடத்தியபோது, ‘மாவீரன் இமானுவேல் சேகரன்’ என்ற பெயரை உச்சரித்த ஒரே காரணத்தால் கழகச் செயல்வீரர் இராவணன் மீது கல்வீசி, அவரது கையை உடைத்தனர். அதே உசிலம்பட்டியில்தான் இப்போது 6ஆவது வகுப்பில் படிக்கும் தலித் சிறுவன் தலை மீது ‘செருப்பை’ சுமக்க வைத்துள்ளார்கள்.

இதே உசிலம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட மூன்று பஞ்சாயத்துகளை ‘ரிசர்வ்’ தொகுதி யாக்கியதை எதிர்த்து 1996-லிருந்து 2001 ஆம் ஆண்டு வரை தேர்தலே நடத்தவிடாமல் தடுத்து வந்தது ஜாதி வெறிக் கும்பல். 9 முறை இடைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டும், ஒருமுறைகூட தேர்தலை நடத்தவிடவில்லை. தலித் மக்களுக்கு ‘கொட்டாங்கச்சி’யில் தேனீர் ஊற்றும் அவலமும் சுடுகாடுகளில் பிணத்தைப் புதைக்க தடை போடும் கேவலமும் இப்போதும் தொடருவதாக ‘இந்து’ நாளேடு (ஜூன் 10) கூறுகிறது.

ஜாதி-தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம், ‘தீண்டாமை எதிர்ப்பு முன்னணி’ போன்ற ஒரு சில அமைப்புகள் மட்டுமே எதிர்த்துப் போராடி வருகின்றன. வேறு கட்சிகளோ, இயக்கங்களோ, இப்பிரச்னைகளிலிருந்து முழுமையாக ஒதுங்கி நிற்கின்றன. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் இப்படி அவமதித்து அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை ஜாதி வெறிக் கும்பல் பறித்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதை எதிர்த்து ஒரு கண்டனக் குரல் எழுப்புவதற்குக்கூட இந்த நாட்டில் தமிழுக்கும் தமிழனுக்கும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்துகிறவர்கள் ஏன் முன்வரவில்லை? என்ற கேள்வியை வேதனை யுடன் எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஜாதி வெறியும் தலித் மக்கள் மீதான வெறுப்பும் பொதுப் புத்தியில் திணிக்கப்பட் டுள்ளதன் வழியாக பார்ப்பனியம் உயிர்த் துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை! இந்தப் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சுயமரியாதைக் கான போராட்டத்தை முன்னெடுக்கும் செயல் களத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உறுதியாக பயணிக்கும்.

“தமிழன் என்று சொல்லடா? அவன் தலை யில் செருப்பைத் தூக்கி வையடா” என்பது தமிழனுக்கான அடையாளமல்ல; அது அவமானம்!

Pin It