கேரளாவிலிருந்து சென்னை அய்.அய்.டி.க்கு படிக்க வந்த பாத்திமா லத்தீப் என்ற இஸ்லாமிய மாணவி, அய்.அய்.டி. விடுதியில் நவம்பர் 9ஆம் தேதி தூக்கிட்டு உயிரை மாய்த்திருக்கிறார். மத ரீதியாகத் தான் துன்புறுத்தப்பட்டதால் இந்த முடிவுக்கு அவர் தள்ளப்பட்டிருக்கிறார். தனது அலைபேசியில் தன்னை துன்புறுத்தி, மதிப்பெண்களைக் குறைத்த சுதர்சன் பத்மநாபன் உள்ளிட்ட மூன்று பேராசிரியர்கள் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். கேரள முதலமைச்சர் இப்பிரச்சினையை தமிழக முதல்வரிடம் கொண்டு வர, தமிழகக் காவல்துறை சி.பி.சி.அய்.டி. துறை வழியாக விசாரணை நடத்தி வருகிறது. கோட்டூர்புரம் காவல்துறை மதிப்பெண் குறைந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக அய்.அய்.டி. நிர்வாகத்தின் குரலையே எதிரொலித்து வழக்கை மூடி மறைக்க முயற்சித்தது. இப்போது கேரள மாநில முதல்வர் தலையீட்டால் வழக்கு விசாரணையில் புதிய திருப்பம் உருவாகி யிருக்கிறது. இந்தப் பின்னணியில் அய்.அய்.டி. வரலாற்றை மீண்டும் சுருக்கமாக நினைவுகூர வேண்டியுள்ளது.

fathima lathif 600சென்னை அய்.அய்.டி.யில், தலித், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மீது திணிக்கப்படும் பாகுபாடுகளை எதிர்த்து 1998இல் தொடங்கி, 2000 ஆண்டு வரை மூன்று ஆண்டு காலம் தொடர்  போராட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் முன்னின்று நடத்தியது. தலித் அமைப்புகளை இணைத்து, ‘சமூகநீதி மீட்பு இயக்கம்’ ஒன்றை உருவாக்கி போராடியது.

பொதுக் கூட்டங்கள், முற்றுகைப் போராட்டங்கள் ஆளுநரிடம் மனு என்ற வடிவில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ‘அய்.அய்.டி. வளாகத்துக்குள் விடுதலைப் புலிகள் ஊடுருவுகிறார்கள்’ என்று புதுடில்லியிலிருந்து சுப்ரமணியசாமியைப் பிடித்து அறிக்கை வெளியிட வைத்தது அய்.அய்.டி. நிர்வாகம். அப்போது இங்கே பணியாற்றிய 420 பேராசிரியர்களில் தலித் இரண்டு பேர்; பிற்படுத்தப்பட்டோர் 20 பேர்; ஒரு முஸ்லீம்கூட இல்லை. இவர்கள்கூட இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படவில்லை. திறந்த போட்டியில் போட்டி யிட்டு வந்தவர்கள்தான். 15 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்த நிலையில் எந்த மாற்றமும் நிகழ்ந்திடவில்லை. 

2019 நிலவரப்படி மொத்த பணியிடங்கள் 900, அதில் 684 நிரப்பப்பட்டன. அதில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர், துணை பேராசியர்களின் ஜாதிவாரி எண்ணிக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டன. இதன்படி பேராசிரியருக்கான பணிக்கு, எஸ்.சி. பிரிவில் மொத்தம் 47 இடங்களில் 5 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன. எஸ்.டி.பிரிவில் 23 இடங்களில் ஒரு இடம் மட்டுமே நிரப்பப்பட்டது. ஓ.பி.சி பிரிவில் 84 இடங்களில் 29 நிரப்பப்பட்டுள்ளன. ஓ.சி. பிரிவில் மொத்தம் 154 இடங்களுக்கு 273 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

இணை பேராசிரியருக்கான பணிக்கு, எஸ்.சி. பிரிவில் 27 இடங்களில் 4, எஸ்.டி. பிரிவில் 13 இடங்களில் ஒன்று, ஓ.பி.சி. பிரிவில் 49 இடங்களில் 19, ஓ.சி. பிரிவில் 90 இடங்களுக்கு 156 இடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. 

துணை பேராசிரியருக்கான பணிக்கு, எஸ்.சி பிரிவில் 30 இடங்களில் 7, எஸ்.டி பிரிவில் 15 இடங்களில் ஒன்றும், ஓ.பி.சி பிரிவில் 53 இடங்களில் 18, ஓ.சி. பிரிவில் 98 இடங்களில் 170 ம் நிரப்பப் பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டு ஆசிரியருக்காக விண்ணப்பித்த 271 பேரில் 5 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு 682 பேரில் 16 பேர் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். 

அய்.அய்.டி.யின் ஜாதி வெறிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் ஏராளம். அத்தனையும் விசாரணைக்கு வராமல் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளன. ஒரே ஒரு முறைதான் அய்.அய்.டி. ஜாதியத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பு உயர்நீதிமன்றத்திலிருந்து வந்தது. வழக்கு இதுதான். அய்.அய்.டி. இயக்குனராக பல ஆண்டு காலம் வேத கால ஆட்சி நடத்திய நடராஜன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு ஆனந்த் என்ற பார்ப்பனர் கொல்லைப்புற வழியாக வந்து விட்டார்.

அவரது நியமனம் முறையாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் இரகசியமாக அரங்கேற்றமானது. அதற்கான ஆவண சான்றுகளும் இருந்தன. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி இந்த நியமனத்தின் முறைகேடுகளை எடுத்துக் காட்டி, இயக்குநர் நியமனத்தை செல்லாது என்று அறிவித்தார். இந்த வரலாற்றுப் புகழ்மிக்க தீர்ப்பை வழங்கியது நீதிபதி சந்துரு. இதுவும் நிலைத்திடவில்லை. அடுத்த சில வாரங்களிலேயே மேல்முறையீட்டில் நிர்வாகம் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற்று விட்டது.

அய்.அய்.டி.யின் வரலாறு

நாட்டில் தொழில்நுட்ப உயர்கல்வியை உலகத் தரத்துக்கு உயர்த்த 1959ஆம் ஆண்டில் இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் பம்பாய், சென்னை, டெல்லி, கான்பூர், கோரக்பூர் மற்றும் கவுகாத்தியில் தொடங்கப்பட்டன. தேசிய முக்கியத்துவம் பெற்ற இந்த நிறுவனங்களின் வேந்தர் - குடியரசுத் தலைவர். 1961ஆம் ஆண்டு நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ், இந்த நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டன. 1963இல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, வெகு மக்களின் மேம்பாடே இதன் நோக்கம் என்று சட்டப்பூர்வமாக அறிவிக்கப் பட்டது. மக்கள் வரிப்பணத்தில் வெகு மக்கள் மேம்பாட்டுக்காக நடத்தப்படும் இந்த நிறுவனம், 'பூணூல்'களுக்குள் முடக்கப்பட்டு விட்டது.

நிறுவனம் தொடங்கப்பட்டு, 20 ஆண்டுகள் வரை அரசியல் சட்டம் உறுதி செய்திருந்த தாழ்த்தப் பட்டோர் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டையே பின்பற்ற மறுத்துவிட்டனர். 1978ஆம் ஆண்டுதான் அதுவும் நீதிமன்றத் தலையீட்டுக்குப் பிறகே தலித் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர். அதுவும்கூட கண் துடைப்புதான். அய்.அய்.டி. வரலாற்றில், இதுவரை இந்த இடஒதுக்கீட்டுக்கான இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதே இல்லை. இப்போதும் என்ன நிலை? அய்.அய்.டி. மனித வளம் மற்றும் சமூக விஞ்ஞானத் துறை, இளம் பேராசிரியர் அருள் சுதர்சன், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் பெற்றுள்ள தகவல்களே இதை உறுதி செய்கின்றன. 

2008-லிருந்து 2015 வரை ஆய்வுப் பட்டப் படிப்புக்கு (பிஎச்.டி.) அனுமதிக்கப்பட்ட தலித் மாணவர் எண்ணிக்கை 142. பழங்குடி மாணவர் எண்ணிக்கை 9. திறந்த போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர்கள் - 1592 பேர். மேல் பட்டப் படிப்புக்கு (எம்.எஸ்.) பொது போட்டி வழியாக நுழைந்த பார்ப்பனர் - 1194 பேர். இதில் வெகு சிலர் மட்டுமே (முன்னேறிய பிற ஜாதிப் பிரிவினர்) இதில் பிற்படுத்தப்பட்டோர் 740. தலித் மாணவர்கள் 29 பேர் பழங்குடிப் பிரிவு மாணவர் 3 பேர். இது தவிர, ஏனைய துறைகளில் பொதுப் போட்டி வழியாக நுழைந்தவர்கள் 1,194 பார்ப்பன/உயர்ஜாதியினர். 429 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள். 650 பேராசிரியர், துணைப் பேராசிரியர்களும், 8000 மாணவர்களும், 3000 ஊழியர்களும் பணியாற்றும் மிகப் பெரும் கல்வி நிறுவனத்தில் இடஒதுக்கீடு கொள்கைகள் திட்ட மிட்டு புறக்கணிக்கப்படுவதை இந்த புள்ளி விவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. (தகவல்: ‘பிரண்ட்லைன்’, ஜூன் 26, 2015)

இவ்வளவுக்குப் பிறகு, 2008ஆம் ஆண்டு மத்திய மனித வளத் துறை அமைச்சகம், இடஒதுக்கீட்டை உறுதி செய்யக் கோரி குறிப்பாணை ஒன்றை அய்.அய்.டி.க்கு அனுப்பியது. தலித் பிரிவினருக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம். ஆசிரியர் - மாணவர் தேர்வுகளில் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த குறிப்பாணை வலியுறுத்தியது. அய்.அய்.டி. நிறுவனம், அந்த ஆணையை அமுல்படுத்த மறுத்ததோடு, அதை எதிர்க்கவும் முடிவெடுத்தது. அய்.அய்.டி., தனது ‘செனட்’ கூட்டத்தைக் கூட்டி, இடஒதுக்கீட்டு ஆணையை நிறைவேற்ற முடியாது என்று தீர்மானமே நிறைவேற்றியது. மத்திய மனித வளத் துறை தனது குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆட்சிக்கே அறிவுறுத்தியது. வெகு மக்கள் மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனம், தலித், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கான சட்டப்படியான உரிமைக் கதவுகளை இழுத்து மூடியது. 

இந்த நிறுவனங்களில் மக்கள் வரிப் பணத்தில் படித்த ‘அறிவாளிகள்’ இறுதியாண்டு படிக்கும் போதே வெளிநாடுகளில் வேலை நியமன ஆணைகளையும் விசாவையும் பெற்றுக் கொண்டு பட்டம் பெற்ற உடனேயே விமானம் ஏறி விடுகிறார்கள். இந்தியாவில் குறைந்தது சில பல ஆண்டுகளாவது பணியாற்றுவதை கட்டாயப்படுத்தும் நிபந்தனைகளைக் கூட எதையும் இந்த ‘தேசபக்த’ நிர்வாகங்கள் விதிக்கத் தயாராக இல்லை.

இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களம்

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத் திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா?

இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப் பிரிவில் பிறந்த (செருப்பு தைக்கும் சமூகம்) மாணவர், வளாகத்துக்குள் பிணமாகக் கிடந்தார். அவரது சாவின் ‘மர்மம்’ அப்படியே நீடிக்கிறது. 2014ஆம் ஆண்டு பம்பாய் அய்.அய்.டி. விடுதியில் அனிஹட் அம்ப்ஹோர் என்ற தலித் மாணவர் மர்மமாக இறந்து கிடந்தார். ஜாதி அவமானத்துக்கு உள்ளாகியே தனது மகன் பிணமானார் என்று பெற்றோர்கள் புகார் தந்தார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அய்.அய்.டி.க்கு எதிரான போராட்டங்கள் எதையும், தமிழ்நாட்டின் ஆங்கில-தமிழ் நாளேடுகள் இருட்டடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் பத்திரிகைகளோடு நெருக்கமான தொடர்பு கொண்டு, செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது. மறைந்த பேராசிரியர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் இது பற்றி எழுதினார். ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடுகள் மட்டும் துணிந்து சுஜி பழிவாங்கப்பட்ட செய்திகளை வெளியிட்டன. (அதற்காக, அந்த ஏடுகளின் செய்தியாளர்கள் முறையே ஜெயா மேனன் மற்றும் பகவான் சிங்  மீதும் அந்த ஏடுகளின் நிர்வாகத்தின் மீதும் அய்.அய்.டி. இயக்குனர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்) இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு அய்.அய்.டி. நிர்வாகம், அதன் வரலாற்றிலேயே முதன் முதலாக தலித் மாணவியை தோல்வி அடையச் செய்த தனது அநீதியான முடிவை திரும்பப் பெற முன் வந்தது. சுஜி, தொடர்ந்து படித்தாலும் அவரால் கல்வியை அங்கே தொடர முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், அனுப்குமார் எனும் மாணவர், ‘அய்.அய்.டி.’களில் ஜாதியம் குறித்து நேரடி விசாரணை நடத்தி, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதேபோன்று பல்கலைக்கழக நிதிக் குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட். நேரடி ஆய்வுகளை நடத்தி, 72 சதவீத தலித் மாணவர்கள் புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதை வெளிச்சப்படுத்தினார் (டைம்ஸ் ஆப் இந்தியா, செப்.2014).

சைவ-அசைவ உணவு பாகுபாடு

சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன.

இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து)  தனியார் நடத்துபவை. ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக் கூடமும் உண்டு. அனைத்து உணவுக் கூடங்களிலும் அசைவ உணவுகள் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளன. சைவ உணவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சைவத்திலேயே சமண மதத்தினருக்கு மட்டும் தனி சமையல் கூடம். அசைவ உணவை விரும்பும் மாணவர்கள் வெளியிலிருந்து எடுத்து வந்து வளாகத்துக்குள் சாப்பிடலாம் என்ற அனுமதி மட்டும் இருக்கிறது. இதுவும் எந்த நேரத்திலும் பறிக்கப்பட்டு விடலாம் என்று அம்பேத்கர் - பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நவீன தொழில்நுட்பக் கல்வி வளாகம் ஒன்று - அதுவும் வெகு மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறிக் கொண்டு வெகுமக்கள் உணவு முறைக்கு தடை போடுகிறது. இவர்கள் படித்த உடனேயே சைவ - அசைவ உணவு வேறுபாடுகள் ஏதுமற்ற - வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகக் காத்துக் கிடப்பவர்கள். அத்தகைய வளாகத்துக்குள்ளேயே  ‘அசைவ’ உணவு வெறுப்புக்கும் தடைக்கும் உள்ளாக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் உணவுக் கலாச்சாரமே இங்கு அவமதிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் கல்வி வளாகமா அல்லது சங்கர மடமா? என்று கேட்க வேண்டியிருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒவ்வொரு துறையின் பெயர்ப் பலகையும் சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிகளிலேயே மாற்றப்பட்டுள்ளன. இந்தி தெரிந்த மாணவர்களால்கூட இதைப் படிக்க இயலவில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் அய்.அய்.டி. மாணவர் கூறுகின்றனர். நாடாளுமன்ற தோதலுக்கு முன்பு காங்கிரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கும் கருத்தரங்குகளை அய்.அய்.டி. நிர்வாகமே ஏற்பாடு செய்தது. குருமூர்த்தி, அரவிந்த் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல்களை அய்.அய்.டி. நிர்வாகம் பேச வைத்து, மோடிக்கு மறைமுக ஆதரவைத் திரட்டியது என்ற செய்தியை மாணவர்கள் தொலைக் காட்சி விவாதங்களில் கூறினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் ‘ஷாகாக்களும்’ அய்.அய்.டி.யில் அனுமதிக்கப்படுவதோடு, ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ அமைப்பும் அதற்குரிய ‘பூணூல் - குடுமி’ அடையாளங்களோடு வலம் வருகின்றன.

அய்.அய்.டி. தொடங்கியது முதல் இயக்குனர்களாக பி.வி. இந்திரேசன், எல்.எஸ். சிறீநாத், என்.வி.சி. சாமி, ஆர்.நடராஜன், அனந்த் என்று தொடங்கி, பாஸ்கர் இராமமூர்த்தி என்று பார்ப்பனர்கள் மட்டுமே தொடருகின்றனர். இவர்களின் ‘சாம்ராஜ்யத்தில்’ பதவி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை ஏதும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளில் ‘அட்ஹாக்’ நியமன முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதும் இல்லை. இந்த முறைகேடுகளை எதிர்த்து, ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன. ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாடாளுமன்ற சட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட, இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள சுயாட்சி உரிமைகள் முறைகேடாகவே பயன்படுத்தப்படுகின்றன. சென்னை அய்.அய்.டி., அதிகாரக் குவியல்களை சட்டப்பூர்வமாக்கி, அதற்கேற்ற  திருத்தங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. 

அய்.அய்.டி. சட்டத்தின் 13(5)ஆவது பிரிவு ஒரு பேராசிரியரையோ ஊழியரையோ விளக்கம் ஏதும் கேட்காமலே பதவி நீக்கம் செய்ய முடியும். பிரிவு 12(1) - நியமனங்களுக்கான விளம்பரத்தை வெளியிடாமல், இயக்குனர் பரிந்துரையை ஏற்று நிர்வாகக் குழுவே நியமனம் செய்ய முடியும் என்ற உரிமையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி தற்போதுள்ள சட்டங்களையே மாற்றியமைக்கவும், உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற சட்ட நடைமுறை பின்பற்றப்படாமல், அனைத்தையும் புறந்தள்ளி, ‘மனுதர்ம’ ஆட்சியை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.    

- விடுதலை இராசேந்திரன்

Pin It