திண்ணியம் வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்க வழக்கை மேல்முறையீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தியும், இந்து மதவெறி இயக்கங்களை தடை செய்யக் கோரியும் 3.10.2007 அன்று காலை 10 மணிக்கு சாதி ஒழிப்பு முன்னணி சார்பாக மதுரை தல்லாகுளம் தபால்தந்தி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புரட்சி வேங்கைகள் இயக்க அமைப்புச் செயலாளர் குருவிஜயன் தலைமையேற்கவும், தியாகி இம்மானுவேல் பேரவை பூ. சந்திரபோசு, சேரிப்புலிகள் க. திலீபன், தமிழ்த் தேசிய முன்னணி அ. ஆனந்தன், ராசு, தேவேந்திரர் மறுமலர்ச்சிப் பேரவை பகத்சிங் பழனிச்சாமி, மக்கள் ஒருமைப்பாட்டு நூலகர் சேலம் மணிமாறன், ஆதித் தமிழர் விடுதலை இயக்கம் அ. வினோத், மக்கள் சனநாயக விடுதலை முன்னணி த. மீ. பாண்டியன், மனித உரிமை ஆர்வலர் வழக்குரைஞர் இன்குலாப் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவுரையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டதாவது:

இந்திய துணைக்கண்டம் விடுதலை பெற்றதாகக் கூறி 60 ஆண்டுகள் கடந்த பின்னும், இந்த நாட்டின் உழைப்பாளிகள் சாதி இழிவுகளால் அவமானப்படுவது மறைந்தபாடில்லை. ஏன்? குறைந்ததுகூட இல்லை.

திண்ணியத்தில் அரசின் செலவில் கட்டித்தரப்படும் தொகுப்பு வீட்டைப் பெற ஊராட்சி மன்றத் தலைவர் ரூ.2000 லஞ்ச முன் பணம் பெற்றும், தொகுப்பு வீடு கட்டித் தராத நிலையில், பணத்தையும் திருப்பித் தராத நிலையில் தொடர்ந்து முயற்சிகளும், தோற்றுப்போன நிலையில் அதுவரை அடிமைத் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த தமுக்கை, போர்ப் பறையாக்கி அநியாயமாய் காசு பறித்த அவலத்தை அம்பலப்படுத்தியதோடு, சாதியின் காரணமாய் தன் மீது சுமத்தப்பட்டிருந்த வெட்டியான் வேலையையும் விடப் போவதாக அறிவிக்கிறார் கருப்பையா.

லஞ்சம் வாங்கும்போதும், உறுதியளித்தவாறு தன்னால் உதவ முடியாத போதும் அதற்காக வெட்கப்படாத முன்னாள் ஊராட்சித் தலைவரது கணவர் ஆசிரியர் சுப்பிரமணியத்துக்கு ஆவேசம், கோபமும் கட்டுக் கடங்காமல் வருகிறது. வேறென்ன காரணம், ஆதிக்கச் சாதி என்கிற ஆணவம் தான். அடிமை சாதிக்காரன் தன்னை அவமானப்படுத்திவிட்டானே என்று புத்தி மட்டாகிப் போய் வந்த ஆத்திரம் தான். இழுத்து வந்து உதைத்தார்கள், அடித்தார்கள். மனைவியும் தாயும் காலில் விழுந்து கெஞ்சியும் ஆதிக்கத் திமிர் பிடித்த சாதி வெறியர்களுக்கு ஆத்திரம் தீரவில்லை.

காய்ச்சிய இரும்புக் கம்பியால், கருப்பையாவுக்கும் அவரோடு தமுக்கடிக்கும்போது உடன் போன இருவருக்கும் சூடு போட்டும் கோபம் குறையவில்லை. கொந்தளிப்பு அடங்கவில்லை. எப்போது அடங்கியது தெரியுமா? தமுக்கடித்த அந்த கருப்பையா வாயில் மனித மலத்தைத் திணித்தப் பின்னால்தான் ஆத்திரம் குறைந்தது.

தீண்டாமையை எந்த வடிவத்தில் பின்பற்றுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்று நாமே நமக்கு எழுதி வழங்கிக் கொண்ட அரசியல் சட்டத்தின் 17 ஆவது பிரிவு தெளிவாக அறிவித்து அரை நூற்றாண்டுக்கு மேலான நிலையிலும், தீண்டாமை ஒழிப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்று பல சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னும், மேலும் கூர்மைப்படுத்தி வரையப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உண்ணத்தக்கதல்லாத அல்லது அருவருப்பான பொருள் எதனையும் குடிக்குமாரோ, உண்ணுமாரோ வல்லந்தப்படுத்துவது ஆறுமாதம் முதல் அய்ந்தாண்டுகள் வரை தண்டிக்கத்தக்க குற்றமாக வகைப்படுத்தும் 3ஆவது பிரிவைக் கொண்ட சட்டம் 1989 லேயே இயற்றப்பட்டுவிட்ட நிலையிலும் இக்கொடுமையை இழைக்கும் துணிச்சல் ஒரு படித்த, ஆசிரியராகப் பணியாற்றும் ஒருவருக்கு எப்படி வந்தது? என்று மனித உரிமையிலும், சமூக சமத்துவத்திலும் அக்கறையுள்ளவர்களெல்லாம் மலைப்புடன் எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் திருச்சி மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றம் மூன்று பேரை இழுத்து வந்து அடித்ததற்கும், மலத்தை வாயில் திணித்ததற்கும் என எல்லா குற்றங்களுக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கு மட்டும் மூன்று மாத தண்டனையும், இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இந்த அதிர்ச்சியான தீர்ப்புதான் இந்த ஆர்ப்பாட்டத்துக்கான காரணமாக அமைந்து விட்டது.

நீதிபதி, தீர்ப்பில் கூறியிருப்பதை எல்லாம் படிக்கிறபோது நமக்கு ஆத்திரம்தான் வருகிறது. புகாரை சில நாட்கள் கழித்து கொடுத்ததும், புகார் அளிக்கிறபோது வழக்குரைஞர்கள் உடன் சென்றதும், புகார் மனுவின் அசல் நகல் வழக்குக் கோப்பில் இல்லாததும், சாட்சிகள் அனைவரும் குற்றவாளிகளின் சாதியினராகவே இருப்பதுவும், மருத்துவரிடம் போகும்போது காயம் ஆறி இருந்ததும் எல்லாம் குறைந்த தண்டனை அளிப்பதற்கான காரணங்களாக அடுக்கிக் கொண்டே போகிறார் நீதிபதி. நிகழ்வுக்காக சொல்லப்படும் காரணம் கூட பலவீனமாக, சொல்லப்போனால் நம்ப முடியாததாக இருக்கிறது என்கிறார் நீதிபதி.

குற்றம் சாட்டப்பட்டவரும், நீதிபதியும் ஒரே சாதியினராக இருப்பதுதான் காரணமாகத் தெரிகிறது. அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் மீது தீர்ப்பாகிற நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் இதுபோலத் தான் இருந்திருக்கின்றன.

கீழ வெண்மணி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கோபாலகிருஷ்ண நாயுடுவைப் போன்ற தகுதியிலுள்ள பெரிய மனிதர்கள் குடிசைகளுக்குத் தீ வைப்பது போன்ற தரங்குறைந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றே அவ்வழக்கின் உயர்நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்ததாம். குஜராத்தில் குழந்தை மணத்துக்கு எதிராகப் போராடிய சமூகப் பணியாளர் ‘பன்வாரிதேவி’ தாக்கப்பட்டு, வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் அந்த நாட்டு உயர்நீதி மன்றம், தாழ்த்தப்பட்ட பெண்ணை உயர்சாதிக்காரர்கள் தொட்டு வன்புணர்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்ற தங்களது சாதிய உள்ளுணர்வுகளைத் தீர்ப்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள். ஏன், அரசுகள் மட்டும் எப்படி நடந்து கொள்கின்றன? அது பார்ப்பன ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி, பெரியாரின் விரல் பிடித்து நடந்த கலைஞரின் ஆட்சியில் ஆனாலும் சரி! அரசுகள் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக் குரலுக்கு எந்த வகையில் செவி சாய்க்கிறார்கள், என்ன நடவடிக்கைகளை மேற் கொள்கிறார்கள் என்பதைக் கவனிக்கிற போதும் வேதனைதான் ஏற்படுகிறது.

ஒவ்வொரு சாதிச் சங்கங்களும், கட்சிகளும், தங்கள் சாதித் தலைவர் பெயரை மாவட்டங்களுக்கும், போக்கு வரத்துக் கழகங்களுக்கும் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோதும், அரசு சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போதும் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதலமைச்சர்களே சிலைகளைத் திறந்தார்கள். ஆனால், ‘சுந்தரலிங்கம்’ என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய வீரரின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டபோது, எதிர்க் குரல் எழுப்பிய ஆதிக்கச் சாதியினருக்கு அஞ்சி எல்லா பெயர்களையும் அகற்றிய அவலம் நடந்தேறியது.

தங்கள் ஊர் கோவிலில் நடக்கும் தேரோட்டத்தில் மரபுரிமையாக இருந்த வடம்பிடிக்கும் உரிமை, சட்டம் கூறும் சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் உரிமை, உயர்நீதிமன்ற தீர்ப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், சட்டத்தை இயற்றும், நடைமுறைப்படுத்தும் பொறுப்பிலுள்ள அரசும், அரசு அதிகாரிகளும் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் கோரிக்கைகளுக்கு உதவுவதற்குப் பதிலாக ‘கண்டதேவி’ தேரோட்டத்தைத் தானே நிறுத்தினார்கள்?

ஏன்? அண்மைக் காலத்தில் எங்கள் மாவட்டத்தில் நடந்தது என்ன? சேலம் மாநகரில் உள்ள கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவிலில், கருவறைக்குள் அல்ல - கோவிலில் நுழைய தாழ்த்தப்பட்ட மக்களை, மக்கள் அனைவரும் கூட அல்ல - அந்தக் கோவிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாயத் தோழரை அனுமதிக்க மறுக்கப்பட்டபோது என்ன செய்தார்கள்?

வருவாய்த் துறை அதிகாரிகளும், மாநகர காவல்துறை ஆணையரும் சமாதானம் பேசியும் கோவிலில் நுழைய அனுமதிக்க முடியாது என்று ஆதிக்கச் சாதியினர் மறுத்த போது வழக்குப் பதிவு செய்தார்களா? கைது செய்தார்களா? இல்லையே! கோவில் நுழைவு உரிமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியவுடன் அந்தக் கோவிலை இழுத்துப் பூட்டி சீல் தானே வைத்தார்கள்?

சிதம்பரத்தில் நந்தன் தரிசிப்பதற்கு பார்வைத் தடையாய் இருந்த நந்தியைத் தான் “சற்றே விலகியிரும் பிள்ளாய்!” என்று சிவன் சொன்னானே தவிர, நந்தா! உள்ளே வா! என்று அழைக்கவில்லையே என்று பகுத்தறிவு பேசிய கலைஞரின் ஆட்சியில் தானே இது நடக்கிறது?

ஏன்? இதை விடுங்கள், வெறும் பூணூலை அறுத்ததற்குக்கூட கருப்புச் சட்டமான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி அய்ந்து மாத காலம் எங்கள் தோழர்களை சிறை வைத்த தமிழக அரசு, தூத்துக்குடி வேலாயுதம் பாளையத்தில் சங்கர லிங்கபுரத்தில் தாழ்த்தப்பட்டோர் வீடுகளும், உடைமைகளும் சிதைக்கப்பட்டு எரிக்கப்பட்டபோது என்ன வழக்குகளைப் பதிவு செய்தார்கள்? குற்றவாளிகளை எவ்வளவு காலம் சிறை வைத்திருந்தார்கள்? சொல்லட்டுமே!

எனவேதான் தோழர்களே, பொதுமக்களே! நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்பது இவர்கள் எல்லாம் அடிக்கடி பயன் படுத்தும் ஓர் அடுக்கி மொழி வசனம்!

மேலவளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரை, துணைத் தலைவரை, உடன் நான்கு பேர்களின் தலையை வெட்டிய கோரக் கொலை குறித்த வழக்கை நடத்திய சிறப்பு நீதிமன்றம் 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி 23 பேரை விடுவித்தது. குற்றவாளிகள் தண்டனைக் குறைப்புக்கு மேல் முறையீடு செய்ததை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதாசிவம், பால் வசந்தகுமார் ஆகியோர் தண்டனையை உறுதி செய்ததோடு மட்டும் நிற்காமல், மாவட்ட சிறப்பு நீதிமன்றம் இவ்வழக்குக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தாது எனக் கூறி விடுதலை செய்த 23 பேரைக் குறித்து கருத்தறிவிக்கும்போது, இவ்வழக்குக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் பொருந்தும் எனக் கூறி அரசு மேல் முறையீடு செய்யாத காரணத்தால் வழக்கிலிருந்து விடுதலை அளிக்கப்பட்ட குற்றவாளிகள் 23 பேரும் தண்டனையிலிருந்து தப்பி விட்ட அவலத்தை வேதனையுடன் சுட்டிக் காட்டியிருந்தார்களே! நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.

நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் இந்த திண்ணியம் வழக்கிலாவது உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும். அம் முறையீட்டு வழக்கை நடத்த அக்கறையும் பொறுப்புணர்வும் மிக்க நேர்மையான வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க தேவண்டும் என்று வற்புறுத்துவது இவ்வார்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம்.

மனித உரிமை இயக்கங்களும், தனி மனிதர் களும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்தில் இருந்தே நீக்க வேண்டு என்று பல்வேறு நியாயமான காரணங்களை முன் வைத்து வலியுறுத்துகிற போதெல்லாம், நீதிபதிகள் சிலரும், போலி சமுதாய அக்கறையாளர்களும் மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனை தான் குற்றங்களைக் குறைக்கும் என்று ஓயாது சொல்லி மரண தண்டனையை நியாயப்படுத்துகிறீர்களே!

திண்ணியம் வழக்கில் கடுமையான தண்டனை கூட அல்ல - நியாயமான தண்டனைகூட வழங்கப்படவில்லையே! செப்டம்பர் 10 ஆம் நாளில் வழங்கப்பட்ட குறைந்த தண்டனை தீர்ப்பைத் தொடர்ந்து செப்டம்பர் 26 ஆம் நாளில் சமயநல்லூரில் தாழ்த்தப்பட்ட வழக்கறிஞர் வாயில், திண்ணியம் வழக்கைப் போன்றே, ஊராட்சி மன்றத் தலைவரும் அவரோடு சேர்ந்த கூட்டமும், மலத்தைத் திணித்த அவலம் நடந்துள்ளதே! இதற்கு உங்களிடம் உள்ள பதில் என்ன? சொல்லுங்கள்!

ஏன்? நேற்றுகூட எங்கள் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கடந்த பல மாதங்களாக சட்ட விரோதமாக தேனீர் கடைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு என தனிக் குவளை வைக்கப்பட்டுள்ள கடைகளை பட்டியல் எடுத்து, உரிய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பியதோடு மட்டுமல்ல, எங்கள் கழக ஏடான, ‘புரட்சிப் பெரியார் முழக்கத்’திலும் வெளியிட்டோம். அப்படிப்பட்ட தனிக் குவளை உள்ள கடைகளில் நுழைந்து அவற்றை உடைப்போம் என்று பகிரங்கமாக அறிவித்தோம்.

அது குறித்து துண்டறிக்கைகளை விநியோகித்துக் கொண்டு, தனிக் குவளை முறை அதிகம் நிலவும் மேற்கு மாவட்டங்களில் பரப்புரைப் பயணத்தை மூன்று வண்டிகளில் நானும், கழகத்தின் பொதுச்செயலாளர்கள் கோவை இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரனும் மேற்கொண்டோம். அப்பரப்புரைப் பயணங்களில் பேசுகிற போதெல்லாம் நான் தவறாமல் ஒரு செய்தியைத் திரும்பத் திரும்பச் சொன்னேன்.

அக்டோபர் 2 இல் சட்டவிரோதமாக வைக்கப்பட் டிருக்கிற தனிக் குவளைகளை நாங்கள் உடைக்கத் தானே போகிறோம்! அப்போதுதான் அம்பலமாகப் போகிறது இந்த அரசும், காவல்துறையும்! சட்ட விரோதமாக தனிக்குவளை வைத்திருக்கிற தேனீர்க் கடைக்காரர்களைக் கைது செய்யப் போகிறீர்களா? அல்லது சட்டவிரோதமான அவற்றை அகற்றி சட்டம் விரும்புகிற சமத்துவத்தை நிலைநாட்ட தனிக்குவளைகளை உடைக்கப் போகிற எங்கள் தோழர்களைக் கைது செய்யப் போகிறார்களா? என்பது அக்டோபர் 2 இல் அம்பலமாகும் என்று பேசி வந்தேன். அம்பலமாகிப் போனது!

பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தில், மசக்கவுண்டனூர் என்ற ஊரைச் சுற்றி தனிக் குவளை வைத்துள்ள 11 கடைகளில் ஒரு கடையான குமார் என்பவரின் கடையில் தனிக்குவளை உடைப்புப் போராட்டம் நடக்கும் என்று காவல்துறைக்கு அறிவித்துவிட்டுத்தான் சென்றார்கள் எங்கள் தோழர்கள். ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திக சோதி தலைமையில் எட்டு பேர்! மசச்கவுண்டனூர் குமார் கடை நோக்கி! கடை இருந்தது! தனிக் குவளையும் இருந்தது!

ஆனால் கடைக்கு முன்னால்கூட அல்ல, ஊர் எல்லையிலே காவல் படை, சுமார் 50 பேர் கொண்ட காவலர் படை, ஆய்வாளர் இராசேந்திரன் தலைமையில் இரண்டு காவல்துறை வாகனங்களோடு நின்றிருந்து தோழர்களை ஊருக்குள்கூட போகவிடாமல் கைது செய்து வெள்ளித் திருப்பூர் காவல்நிலையம் கொண்டு வந்து வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

அப்போதும் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திக சோதி தனிக் குவளை முறை இருக்கும் 11 கடைகளின் பட்டிய லோடு மேலும் ஒரு புகாரை எழுதிக் கொடுத்துள்ளார். புகார் மனுவைப் பெற்றுக் கொண்டு ரசீதும் வழங்கப்பட்டதே தவிர வழக்கென்னவோ எங்கள் தோழர்கள் மீது மட்டும் தான்!

அதுபோலவே பல்லடம் அருகே இராசாக்கவுண்டன் புதூரில் இருந்த தனிக்குவளையை, தனி இருக்கையை எங்கள் தோழர்கள் உடைத்தார்கள். எங்கள் தோழர்கள் 47 பேர் கைது செய்யப்பட்டு, காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார்களே தவிர தனிக் குவளை வைத்திருந்த கடைக்காரர் பாதுகாப்புடன் தனிக்குவளையுடன் தொடர்ந்து தேனீர்க் கடை நடத்திக் கொண்டுதான் உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிகளிலும் அப்படித்தான். நிருபர்கள் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் வாசுகி அவர்களிடம் கேட்டதற்கு பொறுமையாகத்தான் இதற்கு தீர்வு காண வேண்டும். அவசரப்பட்டால் நிலைமை சீர்கெட்டுவிடும், அமைதிக் குலைவு ஏற்பட்டுவிடும் என்கிறார். விடுதலை பெற்று 60 ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னாலும்கூட பொறுமையாக, படிப்படியாக செய்யப் போகிறார்களாம். சட்டம் அமைதிதான் முக்கியமாம்! உரிமை முக்கியமில்லையாம்! சமத்துவம் முக்கியம் இல்லையாம்! சுடுகாட்டில்தான் அமைதி இருக்கிறது!

ஆம். தோழர்களே! நாம் அவ்வப்போது சின்ன சின்ன எதிர்ப்புக் குரல்களை எழுப்புவது உரிய கவனத்தை ஈர்க்காது. 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக இவ்வளவு காலமும் கேட்பாரற்று அனுபவித்துக் கொண்டிருந்த உயர்சாதிக் கூட்டம், பயிற்சி மருத்துவர்கள், மற்றவர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பங்கைக் கூட கொடுக்க மறுத்து செய்த ஆர்ப்பாட்டங்களை, அட்டகாசங்களை, போராட்டங்களை நமது தொலைக்காட்சிகள் பொறுப்போடு காட்டினவே!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உரிய பங்கையும் பெற முடியாமல் ஏமாந்து நிற்கும் நாம் அதைவிட கடுமையாக, அதைவிட வீதிகளில் இறங்கிப் போராட வேண்டாமா?

புரட்சியாளர் அம்பேத்கர் தான் சொல்வார் - நாக்கில் தீக்கங்கை வைத்திருப்பதை போன்ற உணர்வு ஆதிக்கவாதிகளுக்கு ஏற்படாதவரை நமக்கு இந்த நிலைதான் என்பார்.

தொடர்ந்து போராடுவோம்! மேல்முறையீடு செய்ய அரசை வற்புறுத்துவோம். தீண்டாமைக் கொடுமைகள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள், சமயநல்லூர் போன்ற தொடரும் அவலங்கள் தீர நாம் தொடர்ந்து போராடுவோம்! தீவிரமாக போராடுவோம்! ஆவேசமாக போராடுவோம்! அனைவரின் ஆதரவோடு போராடுவோம்! என்று நிறைவுரையாற்றினார் கழகத் தலைவர்.

Pin It