இந்திய அரசியலில் தொழிலாளிகளுக்குப் பிரதிநிதித்துவம் எங்கே?

தேர்தல் சம்மந்தப்பட்ட காரியங்களில் ஆதிதிராவிடர்கள் என்பவர்களுக்கு ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதில் ஆதிதிராவிடர்கள் என்பதாக எந்தெந்த வகுப்பார்களை ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது என்பது இப்போது பொது ஜனங்களுக்குள் ஒரு பிரச்சினையாக இருந்து வருகின்றது. லோக்கல் போர்ட் சட்டப்படியும், முனிசிபல் சட்டப்படியும் ஆதி திராவிடர்கள் என்பதற்கு வியாக்கியானம் சொல்லி இருப்பதில் “இந்து மதத்தைத் தழுவிக் கொண்டிருக்கும் பறையர், பள்ளர், வள்ளுவர், சக்கிலியர், தோட்டிகள், மாலா (தெலுங்கு பாஷையில் பறையர்) மாதிகர் (தெலுங்கு, கன்னட பாஷையில் சக்கிலி) ஹொலையர் (கன்னட பாஷையில் பறையர்) செருமர்கள் (மலையாள பாஷையில் பறையர்) ஆகிய இந்த வகுப்பார்கள் மாத்திரமே ஆதிதிராவிடர்கள் என்கின்ற வகுப்பில் அடங்கி இருக்கின்றார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

periyar 314இந்திய அரசியல் பிரதிநிதித்துவத்திலோ, அல்லது ஸ்தல ஸ்தாபன பிரதிநிதித்துவத்திலோ மேற்கண்ட வகுப்பார்களாகிய பள்ளர், பறையர், சக்கிலியர் ஆகிய மூன்று வகுப்பாருக்கு மாத்திரமே பிரதிநிதித்துவத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இதனால் இந்தியாவில் தீண்டாதார் என்கின்ற வகுப்பில் நடைமுறையில் சேர்க்கப்பட்டிருக்கின்ற வகுப்பார்களில் அரைவாசிப் பேர்களுக்குக்கூட பிரதிநிதித்துவம் கிடைத்திருப்பதாய் நினைப்பதற்கில்லை. ஏனெனில், மேற்கண்ட வகுப்பார்களைத் தவிர இன்னமும் எத்தனையோ வகுப்பார்களைப் பொதுவாகத் தீண்டாதார்களாகவே கருதி வருவது யாவரும் அறிந்ததாகும்.

உதாரணமாக மலையாளத்தில் தீயர்கள், ஈழவர்கள் முதலிய பல வகுப்பார்களையும் தீண்டாதவர்களாகவும், நெருங்காதவர்களாகவும், தெருவில் நடக்காதவர்களாகவும் கருதப்பட்டு வருகின்றது.

தமிழ் நாட்டிலும் குறவர், நாவிதர், வண்ணார், செம்படவர் என்பன போன்ற பல வகுப்பார்கள் சில இடங்களில் தீண்டாதவர்களாகவே கருதப்படுகின்றார்கள். மற்றும் சில இடங்களில் நாடார் முதலிய சில சமூகங்களையும் பொதுக் கோவில், குளம், சத்திரம், சாவடி, தெரு முதலியவைகளில் பிரவே சிக்க உரிமை மறுக்கப்பட்டிருப்பதும், யாவரும் அறிந்ததேயாகும்.

இந்தப்படியாக அனேக சமூகங்கள் பொது மனித உரிமை வழங்கப்படாமல் இருக்கின்றபோது, சட்டத்தின் மூலமாக இந்தச் சமூகங்களுக்கு சமஉரிமையை வழங்காமலும், பிரதிநிதி ஸ்தாபனங்களில் ஸ்தானம் ஒதுக்காமலும், இருந்தால் எப்படி இவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டதாக சொல்லக் கூடும்? எங்கோ சிற்சில இடங்களில் வேண்டுமானால் இக்கூட்டத்தார்களில் யாரோ இரண்டொருவர் தங்கள் சொந்த செல்வ நிலையினாலும், வேறு வியாபாரம் முதலிய துறைகளில் உள்ள செல்வாக்கினாலும், சற்று பொதுவாழ்வில் விளம்பரப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், பிரதிநிதித்துவம் பெற்றிருக்கின்றார்கள் என்பதும் அல்லாமல் மற்றபடி வேறுவகையில் அச்சமூகங்கள் எந்த வழியிலும் பிரதிநிதித்துவம் அடைவதற்கு மார்க்கமில்லாமலேயே இருக்கின்றன.

இவை ஒரு புறமிருக்க பொதுவாக இப்போது அளிக்கப்பட்டிருக்கும் இந்தவிதமான பிரதிநிதித்துவமானது தாழ்த்தப்பட்ட வகுப்பு, ஒடுக்கப்பட்ட வகுப்பு கொடுமை செய்யப்பட்ட வகுப்பு ஆகியவற்றிற்கு பிரதிநிதித்துவம் இல்லை என்பதோடு மாத்திரம் அல்லாமல் ஏழைகளாகவும், தொழிலாளிகளாகவும் இருப்பவர்களும் சமய சமூக சமுதாயக் கொடுமைகளால் முற்போக்கடையவே முடியாதபடி தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்ற பல வகுப்பாருக்கும் பிரதிநிதித்துவம் இருக்க வழியில்லாமலேயே இப்போதைய பிரதிநிதித்துவ முறை இருந்து வருகின்றது. செல்வவான்களைப் பொருத்தவரை தாராளமாக தனிப் பிரதிநிதித்துவங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உதாரணமாக கொஞ்சம் பூமி உள்ள குடியானவனுக்கு என்று ஒரு தொகுதியும், அதிக பூமி உள்ள நிலச்சுவான்தாருக்கு என்று ஒரு தொகுதியும், தோட்டகாரனுக்கு என்று ஒரு தொகுதியும், வியாபாரிக்கு என்று ஒரு தொகுதியும், லேவாதேவிகாரனுக்கு என்று ஒரு தொகுதியும், மற்றும் ஆங்கிலம் படித்தவனுக்கு என்று ஒரு தொகுதியும் ஆக இந்தபடி செல்வவான்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் முதலாளிகளுக்கும், தனித்தனி பிரதிநிதித்துவம் கிடைக்கும்படியாகச் செய்துவிட்டு எந்த வகையிலும் ஏழைகளும், தாழ்த்தப்பட்டவர்களும். ஒதுக்கப்பட்டவர்களும் வருவதற்கு மார்க்கம் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆகவே இந்த தத்துவங்களைப் பார்க்கின்ற போது இந்த அரசியல் அமைப்பும், ஆக்ஷி அமைப்பும் செல்வவான்களுக்கே சொந்தமாக்கி அவர் களது நன்மைக்கே அனுகூலமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றதே யொழிய பொதுஜன நன்மைக்கு ஏற்றதான பொதுஜன பிரதிநிதித்துவத்திற்கு லாயக்காக அமைக்கப்படவில்லை என்பது நன்றாய் விளங்கும். குறிப்பாக தொழிலாளிகள் விஷயம் சிறிது கூட கவனிக்கப்பட வில்லை என்பதும் அவர்களது நன்மைகளையும், முன்னேற்றங்களையும் வேண்டுமென்றே வெகு ஜாக்கிரதையுடன் புறக்கணிக்கப்பட்டு அழுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். நிற்க,

இப்போது அரசாங்க தத்துவப்படி ஆதிதிராவிடர் என்கின்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ள தீண்டாத வகுப்பார்கள் என்பவர்களுக்கும் கூட சரியானபடி பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதாகவும் சொல்வதிற்கில்லை. எப்படியெனில் ஆதிதிராவிட வகுப்பு என்று சொல்லப்பட்ட மேல்கண்ட மூன்று வகுப்பார்களிலும் இன்றைய தினம் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு சுமாருள்ள மக்கள் கிறிஸ்துவ மதத்தை தழுவி இருக்கின்றார்கள். அந்தப்படி அவர்கள் கிருஸ்துவ மதத்தைத் தழுவி இருந்தபோதிலும் தீண்டாமையானது கிருஸ்துவ மதத்திலும் இருந்து கொண்டு அங்கு வருகின்றவர்களையும் விலக்கி வைத்து இருக்கின்றது. உதாரணமாக “கிறிஸ்துவப் பறையர்கள்” என்றும் “கிறிஸ்துவச் சக்கிலிகள்” என்றும் மற்றும் இம்மாதிரியாகவே சொல்லப்படுவதுடன் அவர்கள் ஊரைவிட்டும் மற்றும் பல பொது உரிமைகளை விட்டும் விலக்கியே வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

கிறிஸ்துவர்கள் கோவிலிலுங்கூட மேல்கண்ட ஆதிதிராவிடக் கிறிஸ்துவர்கள் அனுமதிக்கப் படாமல் இருக்கின்றார்கள். ஆகவே இதிலிருந்து தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஏழைகளுக்கும், தொழிலாளிகளுக்கும் மற்றும் தொழில் காரணமாக தாழ்த்தப் பட்டவர்களுக்கும் அரசியலிலும், ஆக்ஷியிலும் பிரதிநிதித்துவம் இல்லை என்பது உறுதியாகின்றது. எனவே இந்த நிலையில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கும்போது இந்த நாட்டின் சுதந்திரம் என்கின்ற பெயரை சொல்லிக்கொண்டும், இந்திய மக்களின் சமத்துவம் என்கின்ற பெயரைச் சொல்லிக்கொண்டும் நடத்தப்படுகின்ற இயக்கங்களிலும், கிளர்ச்சிகளிலும் இந்தச் சமூகத்தார் கலந்து கொள்ளவில்லையென்ற பழியை எப்படி அவர்கள் மீது சுமத்தமுடியும் என்பது நமக்கு விளங்கவில்லை. அன்றியும் நம் போன்றவர்கள் அக் கூட்டத்தார்களை மேற்படி இயக்கங்களில் எப்படி கலந்து கொள்ளச் சொல்ல முடியும் என்பதும் நமக்கு விளங்கவில்லை,

மற்றும், உண்மையையும், நாணயப் பொறுப்பையும் ஒட்டிப் பேசுவதானால் நம் போன்றவர்கள் அவர்களைக் கண்டிப்பாய் இவ்வித இயக்கங்களில் ஈடுபட வேண்டாமென்றுதான் சொல்லவேண்டியிருக்கும் என்றே சொல்லுவோம். நிற்க,

இந்தப்படி வற்புருத்திச் சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்று யாராவது கேட்பார்களே ஆனால் அவர்களுக்கு மற்றொரு ஆதாரத்தையும் உதாரணமாக எடுத்துக்காட்டக்கூடும். அது என்னவெனில் சமீபத்தில் உயர்திரு. காந்தி அவர்கள் இதுவரை அடிக்காத ஒரு பெரிய குட்டிக் கரணம் அடித்திருக்கின்றார் என்பதேயாகும். அதாவது பம்பாயில் திரு. காந்தி யவர்களை உயர்திரு.டாக்டர் அம்பேட்கார் அவர்கள் தனது வகுப்பார்களின் நிலைமையைப்பற்றி ஒன்றும் செய்யவில்லையே என்றும், இந்த சமயத்தி லாவது தங்களுக்கு ஏதாவது செய்யக்கூடாதா யென்றும் கேட்டுக் கொண்ட போது திரு.காந்தியவர்கள் “சுயராஜ்யம் கிடைக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. சத்தியாக்கிரகம் முதலியவைகளும் செய்யக்கூடாது” என்றும் “சுயராஜ்யம் கிடைத்த பிறகு தீண்டாமை ஒழிந்துவிடும்” என்றும் சொல்லி இருக்கிறார். (19-ந் தேதி சு.மி.) இதைப் பார்க்கும்போது மயிலாப்பூர் “தேச பக்தர்களும் வர்ணாச்சிரம் சுயராஜ்ய வீரர்களும்” இதுவரை தீண்டாமை விலக்கைப் பற்றி என்ன என்ன விதமாய் சாக்குச் சொல்லி வந்தார்களோ அதையெல்லாம் திரு. காந்தியவர்களும் சொல்லுவதற்குத் தகுந்த தகுதி யையும், தைரியத்தையும் பெற்றுவிட்டார் என்பது நன்றாய் விளங்கும்.

ஆனால் ஒத்துழையாமை காலத்தில் இதே உயர்திரு காந்தியவர்கள் ஒத்துழையாதாரிடம் பேசும்போது “தீண்டாமை அடியோடு நீக்கப்பட்டா லொழிய சுயராஜ்யம் வராது” என்றும், “வந்தாலும் அது பயன்படாது” என்றும் சொன்னது இதற்குள் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கும் சிறிது காலத்திற்கு முந்தி பிராட்வே 8 நெம்பர் கட்டடத்தில் இதே திரு.காந்தியவர்கள் மிதவாதிகளிடத்தில் பேசும் போது “நான் சுயமரியாதைக்காக போராடப் போகின்றேனே தவிர சுயராஜ்யத்திற்காக அல்ல” என்றும், “சுயமரியாதை இல்லாத எந்த அரசியல் சுதந்திரத்தையும் நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்” என்றும் சொன்னார். ஆனால் அவையெல்லாம் இப்போது தலைகீழாகப் போய் கொண்டிருப்பதில் ஆச்சரியமொன்று மில்லையானாலும் தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டிய விஷயத்தில் போட்ட குட்டிக்கரணமானது தீண்டப்படாதார் என்பவர்களுக்குள் இருந்த கொஞ்ச நம்பிக்கையும் ஒழிந்திருக்கும். ஆகவே இந்த நிலையில் தீண்டாதார் விடுதலை எங்கே? தொழிலாளிகளுக்கு பிரதிநிதித்துவம் எங்கே?

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 29.03.1931)

Pin It