இந்து முஸ்லீம்

இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங்களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும். ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்களிலுங்கூட வேறுபட்டதென்று சொல்லும்படியான சமூகங்களாகும்.

periyar 329உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறுபாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டியதில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக்கலாம். ஆதலால் அதைப் பற்றிக் கவனிப்போம்.

இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும், அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக்கின்றார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது. இதில் ஒரு சமயம் எண்ணிக்கைகளிலும் ஏதாவது ஒரு சிறு அளவு வித்தியாசம் இருந்தால் இருக்கலாமே யொழிய ஒருவரையொருவர் வெறுக்கின்றார்கள் என்கின்ற உண்மையில் வித்தியாசம் இருக்குமென்று யாரும் சொல்ல முடியாதென்றே கூறுவோம்.

ஏனெனில் மகமதியர்களை இந்துக்கள் மிலேச்சர்கள் என்றும், முரடர்கள் என்றும் கருதும்படியாக இந்து மத ஆதாரங்களிலும் இந்தியாவின் சரித்திரங்கள் என்று சொல்லப்படுபவகைகளிலும் காணப்படுவதுடன் இன்றைய உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களால் மகமதியர்கள் தொடுவதற்கோ - உண்பவை தின்பவைகளில் கலந்து கொள்ளுவதற்கோ அருகரற்றவர்கள் என்றே கருதியிருக்கின்றார்கள் என்பதில் ஆnக்ஷபணையிருக்க முடியாது. அதுபோலவே இந்துக்களைப் பற்றியும் மகமதியர்களுக்கு தங்களது மத சம்பிரதாயப்படி இந்துக்களை இழிவாய் கருதவும் தங்களுக்கு நிரந்திர எதிரியாய்க் கருதவுமான உணர்ச்சிகள் தான் இருந்தும் வருகின்றது. இன்னும் மதக் கொள்கைகள் என்பது அந்தந்த மதக்காரர்கள் அல்லாதவர்களுக்கு உலகத்தில் இடமில்லை என்று கருதக் கூடிய அளவில் தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றன.

ஆகையால் தான் இந்துக்கள் இந்திய நாடு தங்களுடையது என்ற மனப்பான்மை மீது இந்தியாவில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும், அதுபோலவேதான் மகமதியர்கள் இந்தியா முழுவதும் மகமதிய இராஜ்யமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் பார்த்து வருகின்றோம். இருவருடைய மத சம்பந்தமான ஆதாரங்களும் இந்த இலட்சியத்தை வலியுறுத்துவதாகக் கொண்டதென்றே சொல்லுவோம்.

இந்திய அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்கள் அடிக்கடி தனது ‘சுயராஜ்யத் திட்டத்தின் கருத்து ராமராஜ்யம்’ என்று சொல்லுவதே இந்துக்களின் அரசியல் மனப்பான்மையை விளக்கக் கூடியதாகும்.

அதோடு மகமதியர்கள் மாட்டு மாமிசம் சாப்பிடுவதை இந்துக்கள் அருவறுப்பதும், இந்துக்கள் தெருவில் மேளம் அடிப்பதை மகமதியர்கள் தடை செய்வதும் போதிய உதாரணங்களாகும். ஏனெனில், இந்த இரண்டு தத்துவங்களிலும் மத உணர்ச்சி யிருக்கின்றதே தவிர மற்றபடி பொது நோக்கு உணர்ச்சியில்லை என்பது விளங்கும்.

நிற்க, இந்நாட்டில் இந்துக்கள், மகமதியர்கள் என்கின்றதான பெயர் கொண்ட இரு சமூகங்களென்பதில், எண்ணிக்கையில் இந்தியாவில் மகமதியர்களைவிட இந்துக்கள் என்பவர்கள் அதிக எண்ணிக்கை உள்ளவர்களென்று சொல்லுவதானாலும் அதாவது மகமதியர்களைவிட இந்துக்கள் 3 பங்கு அதிகமான எண்ணிக்கை உடையவர்கள் என்று கணக்கு சொல்லுவதானாலும் உண்மையில் மகமதியர்களே இந்தியாவில் வலிமை பொருந்திய சமூகத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனெனில் இந்துக்களின் ஜனசங்கை எவ்வளவு பெரிய எண்ணிக்கையாய் இருந்தாலும் அதில் பல பிரிவுகள் ஏற்பட்டு சின்னா பின்னப்பட்டு தங்களை ஒரு சமூகம் என்ற சொல்லிக் கொள்ள முடியாத நிலைமையில் பிரிக்கப்பட்டுக் கிடப்பதால் மகமதியர்களே இந்துக்களை விட பெரிய சமூகமாவார்கள் என்கின்றோம்.

மேலும் இந்துக்கள் என்கின்ற கூட்டத்திலிருந்து பஞ்சமர்கள் அல்லது ஆதிதிராவிடர்கள் என்கின்ற சமூகத்தாரான 4ல் ஒரு பங்கு ஜனத்தொகைக் கொண்ட சமூகத்தை விலக்கித்தான் இந்து சமூக எண்ணிக்கையைக் கணக்குப் போடவேண்டும். ஏனெனில் அவர்களை ஒரு வித அடிமையாகவும் மிருக ஜீவன்களைவிட கேவலமாகவும் இந்துக்கள் கருதுகிறார்கள். இதுபோலவே இந்துக்களில் மற்றும் பல சமூகங்கள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று சொல்லிக் கொள்ளும் முறையில் சமத்துவம் பாராட்டப்பட முடியாத - ஒற்றுமை பாராட்ட முடியாத நிலைமையிலுள்ள பல பிரிவுகளையும் கூர்ந்து பார்த்தால் தானாகவே மகமதிய சமூகம் தான் அதிக எண்ணிக்கை உடையது என்பதும் விளங்கும்.

அன்றியும் மகமதியர்கள் தங்களை எல்லோரும் இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக் கொள்வது போல் இந்துக்கள் எல்லோரும் தங்களை ஒரு கூட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொள்ள வார்த்தையே கிடையாது. ஒருவித பாவனையும் கிடையாது. தனித்தனி சமயம், ஜாதி, வகுப்பு, உட்பிரிவு ஆகியவைகளைச் சொல்லிப் பிரித்துக் காட்டிக் கொண்டே தீர வேண்டியவர்களாய் இருக்கிறார்கள்.

வேண்டுமானால் வேறு ஒருவனை ஏமாற்றும் போதும் வேறு ஒருவனுடன் சண்டைக்குப் போகும்போதும் மாத்திரம் தான் இந்து என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ள முடியாத மக்களைப் பிடித்து “நாம் எல்லோரும் இந்துக்கள்” என்று உரிமை பாராட்டுவதும், அது தீர்ந்த பிறகு அந்த மக்களையே “எட்டி நில் தொடாதே” என்பதுமான குணங்கள் இந்து சமூகத்திலுள்ள, சகல பிரிவார்களிடமும் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இது பார்ப்பனனானாலும், சைவனானாலும், வைணவனானாலும், வேளாளனானாலும், “எந்த வருண”த்தானானாலும் மற்றும் யாரானாலும் இவர்களுக்கெல்லாம் இந்த உணர்ச்சி இயற்கை உணர்ச்சியாய் இருந்தே வருகிறது.

ஆகவே இத்தியாதி காரணங்களால் இந்துக்கள் என்பவர்கள் தங்களை ஒரு சமூகம் என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலைமையில் வெகுகாலமாய் இருந்து வருவதும் இந்துக்கள் தவிர மற்ற சமூகங்கள் எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அவை ஆதிக்கத்திலிருந்து வருவதுமாய் இருந்து வருகிறது. மற்றும் இந்தக் காரணமேதான் இந்தியாவை வெளிநாட்டு மக்களே அதாவது “இந்துக்கள் அல்லாத சமூகமே” ஆளக் கூடியதாகவும் இருந்து வருகின்றது. ஆகவே இந்து சமூகமும் இஸ்லாம் சமூகமும் இந்தியாவில் இப்போதுள்ள ஆக்ஷியின் பயனாய் எவ்வளவு கஷ்டப்பட்டு வருவதாய் இருந்தாலும் ‘அன்னிய ஆக்ஷியை’ ஒழிக்கும் விஷயத்தில் ஒன்றை யொன்று நம்பி ஒத்து வேலை செய்ய முடியாமல் இருந்து வருவதுடன் மூன்றாவது ஒருவனுடைய தீர்ப்பே இவர்களது வாழ்வுக்கு வேண்டியதாய் இருக்கின்றது.

ஆதலால் புதிய அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதான முயற்சிகள் யார் யாரோலோ எவ்வளவு முயற்சிகள் செய்தும் முடிவு பெறாமல் முறிந்து போய்விட்டது நமக்கு சிறிதும் ஆச்சரியமாக இல்லை. இம்முயற்சியின் அஸ்திவாரமே ஒருவரை ஒருவர் யேய்க்கும் தத்துவத்தில் இருந்து முளைத்ததே தவிர உண்மையில் நல்ல எண்ணத்தின் மீது சிறிதும் ஏற்பட்டதல்லவென்றே சொல்லுவோம். இருவருக்கும் உள்ள தகராறு என்பதே பிரதிநிதித்துவம் என்பதில் மாத்திரம்தான் இருந்து வருகின்றதே யொழிய இன்ன மாதிரி சீர்திருத்தம் வேண்டும் என்பதில் இருப்பதாகக் காணவில்லை.

ஆகவே ஒருவர் கோரும் பிரதிநிதித்துவம் மற்றொருவர் கொடுக்க சம்மதிக்காததும் ஒருவர் கொடுக்கும் பிரதிநிதித்துவம் மற்றொருவருக்கு திருப்தி இல்லாததும் ஒருவரிடம் ஒருவருக்குள்ள அவநம்பிக்கையே யாகும்.

ஆதலால் இருவரும் அவநம்பிக்கைப் படுவதிலிருந்தே ஏமாற்றும் தன்மைதான் ஒற்றுமை என்கின்ற ரூபத்தில் இருந்து வருகின்றது என்பது விளங்கும். இந்த நிலையில் நாம் யார் மீதாவது அதிகமான குற்றம் சொல்ல வேண்டுமானால் இந்துக்கள் என்பவர்கள் மீதுதான் அதிக குற்றம் சொல்ல வேண்டியதாய் இருக்கின்றது. அதாவது இந்துக்கள் இடம் தான் ஏய்க்கும் எண்ணம் அதிகமாய் இருக்கின்றது என்று சொல்லுவோம். எப்படியெனில் இந்தியாவில் இந்துக்கள், மகமதியர்களை நினைப்பதைவிட இன்னும் அதிக இழிவாய்க் கருதும் 5, 6 கோடி மக்கள் தீண்டாதவர்களாய் தெருவில் நடக்காதவர்களாய், கல்வியின்றி, நல்ல உடையின்றி, நல்ல ஆகாரமின்றி, இருக்க வீடு இன்றி, குளிக்க தண்ணீர் இன்றி, தொழில் செய்ய உரிமை இன்றி அடிமைப் படுத்திக் கொடுமைப்படுத்தி இம்சிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இவர்களைப் பற்றி எந்த இந்து தலைவருக்கும் மகாத்மாக்களுக்கும் சிறிதும்- கடுகளவும் கூட இந்த அரசியல் கிளர்ச்சி ராஜியில் - திட்டத்தில் சேர்த்துக் கொள்ள கவலையே இல்லாமல் இருந்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலைமையைப் பற்றிய யோக்கியமான பேச்சே இந்து தலைவர்களுடைய இலக்ஷியத்தில் கிடையவே கிடையாது. மகமதியர்களுடன் ராஜி செய்து கொள்ள வேண்டும் என்கின்ற கவலையுள்ள அரசியல் ஸ்தாபனமானது தீண்டாதவர்களுடன் ராஜி செய்து கொள்வதைப் பற்றி இலக்ஷியப்படாமல் இருப்பதற்குக் காரணம் தீண்டாதவர்கள் பலமற்றவர்கள், அறிவற்றவர்கள் என்கின்ற எண்ணங்களை விட வேறு ஒரு காரணமும் இருக்க முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் தீண்டாதவர்கள் என்பவர்களும் அரசியல் ஒற்றுமையில் தங்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்பதை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். இந்திய அரசியல் ஸ்தாபனத்தில் அவர்கள் கலந்து கொள்ளாமலேயே இருந்து வருகின்றார்கள். இப்படியெல்லாம் இருந்தும் இவர்களைப் பற்றி இந்துத் தலைவர்கள் சிறிதும் இலக்ஷியமில்லாமல் இருப்பதும், மகமதியர்கள் விஷயத்தில் இவ்வளவு கவலைப்படுவதும் என்றால் இதில் ஏமாற்றும் தன்மை இல்லை என்று எப்படி சொல்ல முடியும்? அன்றியும், 5 கோடி ஜனத்தொகையுள்ள அந்த ஒரு சமூகத்திற்கு 2, 3 பேர்களே வட்ட மேஜை மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள் என்றால் இந்துக்கள் மாத்திரமல்லாமல் அரசாங்கத்தாரும் அவர்களை ஏய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால் மகமதியர்கள் ‘உதைப்பதற்கு’ தயாராய் இருக்கிறார்கள். உயிரை விடத் தயாராய் இருக்கிறார்கள். வேறு மதஸ்தனை கொன்றாலும் கொல்லுவதின் மூலம் செத்தாலும் மோக்ஷமென்று கருதி இருக்கிறார்கள். அந்த உணர்ச்சிதான் அவர்களை மனிதர்களாக வாழச் செய்கின்றது.

நமது தீண்டாதவர்கள் என்பவர்களோ காலில் விழுந்து கும்பிடுவதை- சாமி சாமி என்று கெஞ்சுவதை - உதைக்க உதைக்க உதைத்த காலுக்கு முத்தம் கொடுப்பதை ‘மோக்ஷம்’ என்று கருதுகின்றார்கள். ஆதலால், மகமதியர்களது மோக்ஷ வழியை கண்டு உலகம் நடுங்குகின்றது. தீண்டாதவர்கள் என்பவர்களின் மோக்ஷ வழியைக் கண்டு உலகம் அவர்கள் மீது ஏறி சவாரி செய்கின்றது. இந்த நிலைமையில் ஒருவருக்காவது ஒருவருக்கு உண்மை ராஜியோ, ஒற்றுமையோ, நம்பிக்கையோ எப்படி உண்டாகக் கூடும் என்பதை யோசித்தால் உண்மை விளங்கும்.

இந்த நிலைமையில் ‘சுயராஜியம்’ எப்படி சாத்தியம் என்பதை யோசித்தாலும் உண்மை விளங்கும். இந்தியாவானது சுயராஜியத்திற்கு தகுதியாய் இருந்தால் அதைப் பெறுவதினின்றும், தடுக்க இந்த உலகத்தில் யாராலும் முடியவே முடியாது. இந்து, இஸ்லாம் சமயங்களும் வருணாச்சிரம தர்மமும், தீண்டாமையும் உள்ளவரை உண்மையான விடுதலை ‘சுயராஜ்யம்’ இந்தியா ஒருநாளும் பெற முடியவே முடியாது என்பதை மனதில் வைத்து அவை ஒழியத் தகுந்த வேலை செய்வதுதான் ஒற்றுமையும் விடுதலையும் அடையும் மார்க்கமாகுமே தவிர வேறில்லை.

இன்றையத் தினம் இந்தியாவில் ஏதோ பிரமாதமாய் விடுதலைப் போர் நடப்பதாக கூறப்படுவதும் காணப்படுவதும் வெறும் புரட்டேயாகும். இது ஒரு இந்தியப் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், ஒரு புறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரன் ஒரு புறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்து வரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாக்ஷி என்னும் தந்திரத்தை ஒரு ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும், மேல்ஜாதிக் காரனும் இந்திய பாமர ஜனங்களின் முட்டாள்தனத்தையும், சில மக்களின் வேலையில்லாத்தனத்தையும் வயிற்றுப் பிழைப்பையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு செய்யப்படும் யுத்தமேயாகும்.

யுத்த நிறுத்த ராஜியின் போதும் இதே காரணம்தான் திரு. காந்தி இந்திய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் லார்டு இர்வின் ஐரோப்பிய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் இருந்துதான் ராஜி பேசினார்கள். ஆகவே முறையே இருவரும் இந்திய வர்த்தகர்கள் சார்பாகவும் ஐரோப்பிய வர்த்தகர்களின் சார்பாகவுமே பேசி ராஜி செய்து கொண்டார்கள்.

ஆகவே இவை முதலாளிகளுடைய போராட்டங்கள் என்பதும் இதற்கு பாமர மக்களையும் தொழிலாளிகளையும் பலி கொடுக்கின்றார்கள் என்பதும் அரசியல் கிளர்ச்சிகளில் சிறிது கலந்து அனுபோகப் பட்டிருந்தாலும் கண்ணாடியில் பிரதி பிம்பம் தோன்றுவது போல் விளங்கும்.

இந்த யுத்தம் ஒருவாறு முடிந்தவுடன் இதே பாமர மக்களும் வயிற்றுக்கில்லாத ஆட்களும் உண்மை விடுதலைக்குப் பாடுபட திரும்பக் கூடும் என்றாலும் இப்பொழுது நடக்கும் போராட்ட முடிவு நிபந்தனையில் அப்படிப்பட்ட ஒரு யுத்தம் அதாவது உண்மை விடுதலைக்கு உரித்தான யுத்தம் மறுபடியும் ஏற்படாமல் இருக்கும்படியான பந்தோபஸ்து செய்வதும் ஒரு பெரிய காரியமாய் இருந்து வருகின்றதை உணருகின்றோம்.

அதுதான் புதிய சுயராஜ்ய திட்டம் என்பதில் உள்ள அதாவது சமஷ்டி அரசாங்கமுறை என்று சொல்லப்படுவதான, சுதேச அரசர்களின் ஆக்ஷி யையும் இந்த சீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்திருப்பதும், மத நடுநிலைமையும், ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையும் காப்பாற்றுவது என்பதுமான நிபந்தனைகளுமாகும். சுதேச இராஜாக்கள் நமது ஆக்ஷியில் கலந்து கொள்வது என்பது ‘பணக்காரர்கள் காப்பாற்றப்படுவார்கள்.’ என்பதும், மத நடு நிலைமை என்பது ‘இரண்டு மதத்தின் பேராலும் பல சோம்பேறிகள் வாழலாம்’ என்பதும், ஒவ்வொரு வகுப்பு உரிமையும் காப்பாற்றப்படும் என்பது ‘பார்ப்பனர்கள் காப்பாற்றப்படுவார்கள்’ என்பதும் தானே தவிர வேறில்லை. ஆகவே இந்த சுயராஜியக் கிளர்ச்சி என்பது பணக்காரன், சோம்பேறி, பார்ப்பான் ஆகிய கூட்டம் பிழைப்பதற்கும் நிலையாய் தங்கள் நிலைமையை பந்தோபஸ்து செய்து கொள்வது என்பதற்குமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்பதாக உறுதி கூறுவோம்.

இந்தப் போராட்டமானது முதலாளிகள் சண்டை என்பதற்கு உதாரணம் என்னவென்றால் வெளிநாட்டுச் சாமான்களை பகிஷ்கரிப்பது என்பதே யாகும். எப்படியெனில் இந்தப் பூச்சாண்டியை அரசியலில் 1907ம் வருஷம் முதலிலிருந்தே கையாளப்பட்டு வரும் தந்திரமாகும்.

இந்த பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கு அத்தாக்ஷி வெளி நாட்டுத் துணியை பகிஷ்கரிப்பதற்காக கதரைப் பர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருக்கும் காரியமேயாகும். கதரில் இயந்திரம் முதலிய முதலாளியை காப்பாற்றுவதும், கூலிக்காரனை, தொழிலாளியை அடக்கி வைப்பதுமான தத்துவம் அடங்கியிருப்பது நன்றாய் விளங்கும். ஒவ்வொரு அரசியல் கிளர்ச்சியின் போது (Boycott) “பாய்காட்” “பகிஷ்காரம்” என்று சொல்லிக் கொண்டு கலவரம் செய்துவிட்டு, ஏதாவது ஒரு அதிகார - உத்தியோக சௌகரியம் கிடைத்தவுடன் அந்நிய நாட்டு வியாபாரத்தை தாராளமாய் விட்டுவிட்டு எலக்ஷன்களில் போட்டி போடுவதும் யாவரும் அறிந்ததேயாகும்.

இந்தியாவில் ஒரு பழமொழியுண்டு. அதாவது “கொட்டை நூற்று பஞ்சம் விடியுமா?” என்று சொல்லுவதுண்டு. இதன் கருத்து என்னவென்றால் நூல் நூற்பதினால் தரித்திரம் ஒழியுமா என்பதேயாகும்.

ஆகவே இன்றைய சுயராஜ்ய முயற்சிக்கும் ஏழைகள் பணக்காரர்கள் ஆவதற்கும் தொழிலாளிகள் பிழைப்பதற்கும் கள்ளுக்குடி ஒழிவதற்கும் கொட்டை நூற்க வேண்டியது (ராட்டினத்தில் நூல் நூற்க வேண்டியது) தான் முக்கிய மார்க்கமாயிருக்கின்றது என்பது எவ்வளவு தந்திரமானது என்பதை யோசித்தால் சிறிதளவு மூளையுள்ளவர்களுக்கும் தெரியாமல் போகாது.

இதுபோலவே கள்ளுக்கடை மறியல் என்பதும் எலக்ஷன் நெருங்க நெருங்க இது ஒரு எலக்ஷன் பிரசாரமாய் புறப்படுவதும், எலக்ஷன் முடிந்தவுடன் மறியல் ஒழிந்து போவதுமல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணயம் இருக்கின்றது அல்லது இருந்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்தால் அதன் புரட்டும் விளங்காமல் போகாது.

ஆகவே கதரும், மறியலும், இந்து, முஸ்லீம் ஒற்றுமை முதலிய காரியங்களாலும் ஏற்படப் போகும் பயன் என்ன என்பதை அறிவுடைய - சுயநலமற்ற மக்கள் உணர்ந்து பாமர மக்களுக்கு எடுத்துரைக்க வேணுமாய் விரும்புகின்றோம்.

இதைப் பற்றிய மற்றும் விபரங்களையும் சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளின் யோக்கியதைகளையும் மற்றொரு சமயம் புள்ளி விவரங்களுடன் எழுதுவோம்.

(குடி அரசு - தலையங்கம் - 28.06.1931)

Pin It