“மத நம்பிக்கையாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்வதற்கு தடையில்லை” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் தெரிவித் துள்ளார் (“Does not bar persons who have religious faith from joining the party”). மார்க்சிஸ்ட்டுகள் நாத்திகர்களாக இருந்தாலும், மதம் தோன்றியதற்கான காரணம் சமூகத்தில் அதன் செயல்பாடு பற்றிய புரிதல் இருத்தல் வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சி ஏடுகள் மார்க்சிஸ்ட்டுகள், மதச் சடங்குகளிலிருந்து விலகி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தாலும், கட்சியின் செயல்பாடுகளில் மாற்றங்கள் வரத் தொடங்கியுள்ளன. கேரளாவின் சி.பி.அய்.(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். மனோஜ், மத வழிபாடுகளில் பங்கேற்றதை கட்சி எதிர்த்ததால், தனது மத நம்பிக்கையை கைவிட முடியாது என்று, 2009 ஆம் ஆண்டு கட்சியிலிருந்து அவர் விலகினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டையொட்டி நிறுவப்பட்டிருந்த கண்காட்சியில் மார்க்ஸ், லெனின், சேகுவேரா படங்களோடு ஏசுவின் ஓவியமும் இடம் பெற்றிருந்தது. கல்கத்தாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் மேற்கு வங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு தொடங்கியது. மாநாடு வாயில் ஒன்றுக்கு இந்து மதத் தலைவர் விவேகானந்தர் படத்துடன் பெயர் சூட்டப்பட்டிருந்தது.

தொடரும் ‘பால்ய விவாகக்’ கொடுமைகள்

பெண்கள் சிறுமியாக இருக்கும் போதே திருமணம் செய்து விடும் ‘பால்ய விவாகம்’ எனும் சமூகக் கொடுமையை பார்ப்பனியம் ‘இந்து சமூக வாழ்க்கை’ என்ற பெயரில் சமூகத்தில் திணித்தது. பிறகு பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தக் கொடுமை பாhப்பனர் எதிர்ப்பையும் மீறி சட்டத்தால் தடுக்கப்பட்டது. பிறகு பெண்களின் திருமண வயதை 18 ஆக நிர்ணயித்து, இந்தியாவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. என்றாலும், பார்ப்பனியம் திணித்த இந்த சமூகக் கொடுமை தொடரவே செய்கிறது.

உலகில் நடக்கும் ‘சிறுமிகள்’ திருமணங்களில் இரண்டாவதாக ‘பாரத புண்ணிய’ பூமியான இந்தியா இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 47 சதவீத பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்படுகிறார்கள். உலகில் இதில் முதலிடம் பெறுவது வங்க தேசம். (66 சதவீதம்) இந்தியாவில் பீகார் முதலிடம் பெற்றுள்ளது. அம்மாநிலத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்யப்பட்டு விடுகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் 15 வயதிலேயே திருமணம் செய்யப்பட்டு விடு கிறார்கள். ‘மூத்தவர்கள்’ என்ற பெயரில் செயல்படும் சர்வதேச மனித நேய அமைப்பு ‘சிறுமிகள் - மணமகள் அல்ல’ என்ற முழக்கத் துடன் இந்தக் கொடுமையை நிறுத்தும் விழிப் புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது. நோபல் பரிசு பெற்ற அருட்தந்தை டெஸ்மோன்ட்துத்து அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் மேரி ராபின்சன் உள்ளிட்ட குழுவினர் பீகார் வந்து பாட்னாவில் இளைஞர்களை சந்தித்துப் பேசினர். பெண்கள் இளம் வயதில் திருமணம் செய்யப்படுவதால் சந்திக்க வேண்டிய ஆபத்துகள், உடல்நலக் கேடுகள் பற்றி விரிவாக எடுத் துரைத்தனர்.

80 சமூக அமைப்புகளை உள்ளடக்கிய இந்த நிறுவனம் உலகம் முழுதும் சிறுமிகள் திருமணத்துக்கு எதிரான விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தி வருகிறது.

இராமகோபாலன் வெளியிடாத அறிக்கை

கருநாடாக சட்டசபையில் மூன்று பா.ஜ.க. அமைச்சர்கள் அலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அதற்காக அவர்கள் பதவி இழந்துள்ளனர். அவர்கள் பக்தி பரவசத்தோடு ‘விநாயகன்’, ‘இராமன்’ பிறந்த கதைகளையும், ‘சிவன்’ திருவிளையாடல்களையும் காட்சி வடிவத்தில் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றே கருதுகிறோம். அதற்காக இப்படியா அவர்கள் பதவியை பறிப்பது? இது மத விரோதம்! தெய்வக் குற்றம்!

Pin It