ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும், தங்களுக்கு சீட் கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, புனேயில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், விஸ்வநாதன் எம்.பி. உள்ளிட்ட  20 பேர் சிறப்பு பூஜை நடத்தினர். சீட் வரம் வேண்டி திருப்பதியில் தனது குடும்பத்தினருடன் அருள் அன்பரசு எம்.எல்.ஏ. மொட்டை அடித்து வழிபட்டார்.

 

ஆட்சியை பிடிக்க வேண்டும், மீண்டும் மூன்றா வது முறை தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்பதற்காக திருச்சி திருவரங்கம் ரங்க நாதசாமி கோயிலில் அ.தி.மு.க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா சாமி கும்பிட்டார். தஞ்சா வூரில் உள்ள பிரசித்திப் பெற்ற அம்மன் கோவிலில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சாமி கும்பிட்டார்.

 

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சாமி கும்பிட்டார். சென்னை காளிகாம்பாள் கோவிலில், குடும்பத்தினருடன் யாகம் நடத்தினார்.

 

தமிழக காங்கிரஸ் கட்சியிலுள்ள பிரமுகர்களும் தங்களுக்கு சீட் கிடைக்க வேண்டும். ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெற வேண்டும் உள்ளிட்ட வேண்டுதலை வலியுறுத்தி, சிறப்பு பூஜை நடத்தும் பணிகளை துவக்கியுள்ளனர்.

 

கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பதற்காக எதிர் அணியினர் கோவிலில் வழிபட்டனர். மறைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., போளூர் வரதன் செங்கம் தொகுதி பக்கமே வரவில்லை என்ற குற்றச்சாட்டை தெரிவித்து, எதிர் அணியினர் சாமி கும்பிட்டு கிடா வெட்டி கறி சோறு சாப்பிட்டார்களாம்.

 

தற்போது அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், கடந்த 15-ம் தேதி சென்னை யிலிருந்து விமானம் மூலம் புனேவுக்கு சென்றார். அவருடன் காஞ்சிபுரம் எம்.பி. விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. வள்ளல் பெருமான், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவி, முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார், திருப்பூர் துணை மேயர் செந்தில் உட்பட 20 பேர் சென்றனர். புனேயில் இருந்து கார் மூலம் சீரடி சாய்பாபா கோவிலுக்குச் சென்றனர்.

 

மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் அணியை சேர்ந்த அனைவருக்கும் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்க வேண்டும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சராக வேண்டும் என்ற வேண்டுதலுடன் சிறப்பு பூஜையை நடத்தினர். இந்த சிறப்பு பூஜை கார்த்தி சிதம்பரம் தலைமையில் நடந்தது.

 

அதேபோல் சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ., அருள் அன்பரசு தனது மனைவி, மகள், இரு மகன்களுடன் திருப்பதிக்கு சென்றார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். படித்த இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும். தனக்கும் தொகுதி கிடைப்பதற்கு எந்த இடையூறும் இருக்க  கூடாது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிள்ளை குட்டிகளுடன் சேர்த்து அருள் அன்பரசு மொட்டை அடித்துள்ளார்.

 

சென்னை அண்ணாநகரை சேர்ந்த முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சி.டி. மெய்யப்பன் கடந்த மூன்று முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

 

இந்த முறை ஏமாறக் கூடாது என்றும், தனக்கு தொகுதி வரம் கேட்டு திருச்செந்தூர் கோவிலில் சாமி கும்பிட்டு வந்துள்ளார். சீட் வரம் வேண்டி காங்கிரசார் டில்லி செல்வதற்கு முன், கோவில் குளங்களையும் சுற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

 

‘தினமலர்’ பார்ப்பன நாளேடே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

Pin It