(தகவல் தொழில்நுட்பத் துறையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து 19.2.2011 அன்று சென்னை சோழிங்கநல்லூரில் நடத்திய உண்ணாநிலைப் போராட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். )

 

தமிழர்களுக்கு சொந்தமான கச்சத் தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. தமிழரின் இறையாண்மைக்கு எதிரான இந்தியப் பார்ப்பன ஆட்சியின் தேச விரோத நடவடிக்கையாகும். மீன் வளம் நிறைந்த கச்சத் தீவு பறி போனதினால் தமிழர்களின் மீன் வள உரிமை பறி போய் மீனவர்களின் குருதியும், சிங்கள கப்பல் படையினால் கடலில் ஓடுகிறது. தமிழரின் இறையாண்மையில் தலையிட்டு தமிழர்களுக்கு துரோகம் இழைத்த காங்கிரசுக்கு தேச பக்தியை போற்றும் தார்மீக உரிமை கிடையாது.

 

பார்ப்பன ஏடான ‘இந்து’ தமிழ்நாட்டில் சிங்கள அரசின் தூதுவராக செயல்பட்டுக் கொண்டு, ஈழ  தமிழர்களுக்கும், அவர்களின் நியாயமான உரிமைப் போராட்டத்துக்கும் எதிராக நஞ்சைக் கக்கி வருகிறது. இந்து நாளேடு “கச்சத் தீவு பிரச்னை முடிந்து விட்ட ஒன்று” என்ற தலைப்பில் தலையங்கம் ஒன்றை தீட்டியது.

 

“இந்தியாவும், இலங்கையும் கச்சத் தீவு பிரச்சினை முடிந்துவிட்ட பிரச்சினையாகவே கருதினாலும் தமிழ்நாட்டில் உள்ள மாநில கட்சிகள் கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று அவ்வப்போது வலியுறுத்தி வருகிறார்கள். தமிழக மீனவர்கள் தங்களது பிரச்சினைக்கும் கச்சத் தீவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்கள். அவர்கள், சிறீலங்கா கடற்பரப்புக்குள் தங்கு தடையின்றி மீன் பிடிப்பதற்கு உரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.

 

இறையாண்மையுள்ள ஒரு தேசமான இலங்கை, இந்த உரிமையை வழங்க வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்திய அரசுக்கும் அதைக் கேட்கும் உரிமை இல்லை.” (‘இந்து’ ஜூன் 22, 2009) என்று ஆணவத்தோடு பார்ப்பனத் திமிரோடு பச்சையாக தமிழக மீனவர்களுக்கு எதிராக எழுதியது ‘இந்து’ நாளேடு.

 

தமிழகத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியை இலங்கைக்கு ‘தாரை’ வார்க்கப்பட்டதைக் கண்டிக்க முன் வராத ‘இந்து’ பார்ப்பன ஏடு, இலங்கையின் இறையாண்மை யாகிவிட்டதாகக் கூறி கச்சத் தீவை தமிழர்கள் கேட்க என்ன உரிமை இருக்கிறது என்று எழுதுகிறது.

 

இவர்களுக்கு அவர்கள் முன் வைக்கும் சட்ட வாதங்களின் அடிப்படையிலேயே நாம் பதில் சொல்ல முடியும்.

 

இலங்கைக்கு கச்சத் தீவு வழங்கப்பட்டதற்கு இதுவரை நாடாளுமன்றத்தின் ஒப்புதலே பெறப்படவில்லை. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றதால் தான். கச்சத் தீவு வழங்கப்பட்டது, சட்டப்படி செல்லும். இதன் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.

 

இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சி நேரு பிரதமராக இருந்த காலத்தில் இருந்தே கச்சத் தீவு பிரச்னையில் அலட்சியம் காட்டி வந்திருக்கிறது.

 

•              1955 ஆம் ஆண்டு கச்சத் தீவில் இலங்கைக் கப்பல் படை போர்ப் பயிற்சிகளை நடத்தியது. இந்தியா ‘கண்டனம்’ தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டது. தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

 

•              இந்தியாவிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் இல்லை என்பதைத் தெரிந்து கொண்ட இலங்கை அரசு மீண்டும் 1956 இல் கடற்படை பயிற்சியைத் தொடர்ந்தது. “இரு நாட்டுத் தூதர்களும் பேசி முடிவு காணும் வரை பயிற்சியை ஒத்திப் போடுமாறு” இந்தியா வேண்டுகோள் விடுத்தது. அப்போது கச்சத் தீவு தமிழ்நாட்டுக்கு உரியது என்று, இந்திய அரசு கூறவில்லை. “பயிற்சியை ஒத்தி வைக்கிறோம்; ஆனால் கச்சத் தீவு எங்களுடையது” என்று, இலங்கை அரசு கூறியது.

 

•              1956 இல் நாடாளுமன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர், பொதுவுடைமைக் கட்சியைச் சார்ந்த அனந்தன் நம்பியார், இப்பிரச்னையை எழுப்பினார். அப்போது பிரதமர் நேரு, “இந்த சின்னஞ்சிறு தீவுக்காக இரு நாடுகளும் போராட வேண்டும் என்ற கேள்விக்கே இடமில்லை. கச்சத் தீவுக்கு இலங்கை உரிமை கோருவதால் இந்தியாவின் தன்மானம் ஒன்றும் இழந்து போய்விடவில்லை. இலங்கை நமது அண்டை நாடு; நாம் அந்நாட்டுடன் உறவுடன் இருக்கவே விரும்புகிறோம்” என்றே அலட்சியமாக பதில் கூறினார்.

 

•              மீண்டும் 1968 இல் கச்சத் தீவுக்கு இலங்கை உரிமை கோரியது. அப்போது நாடாளுமன்றத்திலும் இப்பிரச் சினை எழுப்பப்பட்டது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி, “இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக கச்சத் தீவு இருந்திருக்கிறதா என்பது பற்றி விவரம் கேட்டுள்ளோம்” என்று பதில் கூறினார்.

 

•              இந்தியாவின் வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த பி.ஆர். பகத், “கச்சத் தீவு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கும் உரியது அல்ல” என்று பச்சையாக பொய் பேசினார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் இந்த பதிலைக் கேட்டு வெட்கம்; வெட்கம் என்று குரல் எழுப்பினர்.

 

•              கச்சத் தீவு பிரச்சினையில் தமிழர்களின் உரிமைகளை அலட்சியப்படுத்திய காங்கிரஸ் ஆட்சி, 1974 இல் இலங்கைக்கு தாரை வார்க்க முன் வந்தது. இதற்கான அரசியல் பின்னணியையும் நாம் கருதிப் பார்க்க வேண்டும்.

 

•              1971 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவத்தை அனுப்பி, வங்க தேசத்தை தனியாகப் பிரிக்க, பிரதமர் இந்திரா பாகிஸ்தானில் தலையிட்டார். அதை விரும்பாத அமெரிக்கா இந்தியாவை அச்சுறுத்த ‘எண்டர்பிரைஸ்’ என்ற அணு ஆயுதம் தாங்கிய கப்பலை கொல்கத்தா நகரைத் தாக்கும் திட்டத்தோடு இந்தியப் பெருங்கடலுக்குள் அனுப்பியது. அப்போது இந்தியாவுக்கு ஆதரவாக சோவியத் ரசியா களமிறங்கத் தயாரானது. அதனால் அமெரிக்கா பின்வாங்கியது. இந்தியப் பெருங்கடல்  பரப்பை ராணுவ மோதலுக்கு பயன்படுத்தினால், பெரும் கேடுகள் உருவாகிவிடும் என்பதால் அய்.நா. தலையிட்டது. இந்தியப் பெருங்கடலில் நின்று கொண்டோ அல்லது கடலுக்கு மேல் பறந்து கொண்டோ எந்த நாடும் கடல் ஓரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது என்று அய்.நா. தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது.

 

•              இந்தியாவுக்கு வடக்கே பாகிஸ்தான், சீனாவும் உள்ளன. கிழக்கும் மேற்கும் உள்ள கடல் பகுதிகளினால் இந்தியா வுக்கு அதிக ஆபத்துகள் இல்லை. இந்தியாவுக்கு தெற்கே உள்ள ஒரே தரைப் பகுதி இலங்கை தான். வங்க தேச விடுதலைக்குப் பிறகு பாகிஸ்தான், இலங்கையில் விமானத் தளம் ஒன்றை அமைக்க முயற்சிகளை மேற்கொண்டது. வங்க தேசப் போரின் போது இலங்கை பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே செயல்பட்டது. இந்த சூழ்நிலையில் இலங்கையில் பாகிஸ்தான் விமான தளம் அமைப்பதைத் தடுக்க, பிரதமராக இருந்த இந்திரா, இலங்கை பிரதமர் சிறீமாவோ, பண்டார நாயகாவிடம் சமரசம் பேசத் தொடங்கினார். “கச்சத் தீவை இலங்கைக்கு தந்து விட்டால், பாகிஸ்தான் விமான தளத்துக்கு இடம் தரமாட்டோம்” என்று சிறீமாவோ பண்டார நாயகா பேரம் பேசினார். தமிழ்நாட்டின் ஆட்சியைக் கலந்து பேசாமலே கச்சத் தீவை ஒப்படைக்க இந்திரா சம்மதித்தார். இரு பிரதமர்களும் கூடிப் பேசினர். தமிழகத்தின் கச்சத் தீவை இலங்கைக்கு ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் 20.6.1974 இல் புதுடில்லியில் இந்திராவும், 28.6.1974 இல் கொழும்பில் சிறீமாவோ, பண்டார நாயகாவும் கையெழுத்திட்டனர். அந்த ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் (23.7.1974) அன்றைய வெளியுறவுத் துறை அமைச்சர் சுரவன்சிங் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.  அறிக்கை சமர்ப்பிக்க எழுந்த உடனேயே தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாஞ்சில் மனோகரன், இரா. செழியன், பி.கே.எம். மூக்கையா தேவர், எஸ்.எம். முகம்மது ஷெரீப் எதிர்ப்பு தெரிவித்து, வெளி நடப்பு செய்துவிட்டனர். அப்போது தமிழகத்தைச் சார்ந்த 38 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். தி.மு.க.வும், இந்திரா காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து தமிழகத்தின் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி இருந்தன. தி.மு.க.வும், பிற கட்சிகளும் எதிர்த்த போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், துரோகத்துக்கு துணை நின்றனர்.

 

•              தி.மு.க. உறுப்பினர்கள் 22 பேர்; காங்கிரஸ் 9; இந்திய கம்யூனிஸ்ட் 4; பார்வர்டு பிளாக் 1; முஸ்லீம் லீக் 1. ஒரிசாவிலிருந்து சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந் தெடுக்கப்பட்ட பி.கே. தேவ் மற்றும் ஜனசங்கத்தின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாஜ்பாய் ஆகியோர் கூட, கச்சத் தீவு தமிழகத்துக்கே உரியது என்று பேசினர். ஆனால்,  காங்கிரஸ் உறுப்பினர்களோடு சேர்ந்து கொண்டு தமிழக கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்பது துயரமான வரலாறு. கம்யூனிஸ்ட் உறுப்பினர் எம். கல்யாணசுந்தரம் கச்சத்தீவு ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் கூறி, மீனவர் பிரச்சினையில் மட்டும் வினாவை எழுப்பினார்.

 

•              அப்போது நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுவரன்சிங், “தற்போது இரு நாட்டு மீனவர்களும் அனுபவித்து வரும் மீன் பிடிக்கும் உரிமையும், அங்குள்ள அந்தோணியார் கோயில் விழாவுக்கு பயணம் செய்யும் உரிமையும் எதிர்காலத்தில் முழுமையாகக் காப்பாற்றப்படும் என்றும் 1921 ஆம் ஆண்டு கொழும்பு ஒப்பந்தப்படி கச்சத் தீவுக்கு மேற்கே எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் தமிழக மீனவர்கள் இலங்கை மீனவர்கள் போலவே கச்சத் தீவைச் சுற்றியும் மீன் பிடித்து வருகின்றனர். அந்த உரிமை தொடர்ந்து காப்பாற்றப்படும்” என்றும் உறுதி அளித்தார்.

 

•              1921 ஆம் ஆண்டு சென்னை மாகாணம் மற்றும் இலங்கை பிரிட்டிஷ் அதிகாரிகள் கச்சத் தீவு எல்லையை இலங்கையோடு இணைத்து ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றி, அதை ஒப்புதலுக்கு பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தனர். பிரிட்டிஷ் ஆட்சி அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. அன்னிய ஆட்சி என்று கூறப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியே கச்சத் தீவை இலங்கைக்கு வழங்கும் முடிவை ஏற்காத போது, இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சி, இந்த துரோகத்தை இழைத்தது.

 

•              1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் கூட தமிழக மீனவர்கள் கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையை வலியுறுத்தியது.

                ஒப்பந்தத்தின் விதி 5 - “இந்திய மீனவர்களும், வழிபாட்டுக்குச் செல்லும் பயணிகளும் கச்சத் தீவுக்கு இது நாள் வரை வந்து போனது போல் வந்து போகவும், கச்சத் தீவை அனுபவிப்பதற்கும் முழு உரிமை உடையவர்கள். இதற்காக சிங்கள அரசிடமிருந்து பயண ஆவணங்களோ நுழைவுக்கான அனுமதியோ பெற வேண்டியது இல்லை” என்று கூறியது.

 

•              1974 இல் வழங்கப்பட்டிருந்த இந்த உரிமை, 1976 இல் பறிக்கப்பட்டு விட்டது. 1976 இல் இந்திராவின் காங்கிரஸ் ஆட்சி, நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்து, அடிப்படை உரிமைகளைப் பறித்திருந்த காலம். அப்போது இந்தியாவின் வெளியுறவு செயலாளர் கேவல் சிங் என்ற அதிகாரியும், இலங்கை வெளியுறவு செயலாளராக இருந்த டபிள்யூ.டி. ஜெயசிங்கே என்ற அதிகாரியும், கடிதங்களை பரிமாறிக் கொண்டு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி, தமிழர்கள் கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.

 

இரு நாட்டின் பிரதமருக்கு இடையே உருவான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டிருந்த உரிமையை இரு மாநில அதிகாரிகள் உருவாக்கிய ஒப்பந்தத்தில் பறித்து விட்டனர்! கச்சத் தீவை வழங்குவதற்கு இருநாட்டு பிரதமர்களும் செய்து கொண்ட ஒப்பந்தம், நாடாளுமன்றத்தில் அறிக்கையாக முன் வைக்கப்பட்டதே தவிர, வாக்கெடுப்பு நடத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவில்லை என்பதே உண்மை! எனவே சட்டப்படியாக கச்சத் தீவு இலங்கைக்கு வழங்கப்படவில்லை. இதே அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. பார்ப்பன ‘இந்து’ நாளேடுகள் இந்த வரலாற்று உண்மைகளை மறைத்து சிங்களர்களின் குரல் ஒலிப்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கச்சத் தீவு தமிழர்களுக்கே உரிமையானது என்பதற்கு ஏராளமான வரலாற்றுச் சான்றுகள் உண்டு!

அவை அடுத்த இதழில்

Pin It