காங்கிரஸ் தீர்மானங்களும் சட்டமறுப்பு சத்தியாக்கிரகங்களும் தென்னாட்டில் தேர்தலையே குறிக்கோளாகக் கொண்டது என்பதாக நாம் பலமுறை சொல்லியும் எழுதியும் வந்திருக்கின்றோம்.

periyar 404அது மாத்திரமல்லாமல் சட்டமறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டவுடன் இனி “தலைவர்களுக்கும்” (பார்ப்பனர்களுக்கும்) “தொண்டர்களுக்கும்” (பார்ப்பனரல்லாதார்க்கும்) தேர்தல் பிரசாரத்தைவிட வேறு பிரசாரம் இருக்காது என்றும் தேர்தலை உத்தேசித்தே ஆங்காங்கு கள்ளுக்கடை மறியல், ஜவுளிக்கடை மறியல் ஆகியவைகள் நடத்தப்படும் என்றும் எழுதியும் இருந்தோம் . இந்த விஷயங்கள் வாசகர்களுக்கு அப்போழுது சற்று அலட்சியமாகக் கருதப்படக் கூடியதாக இருந்திருக்கும். ஆனால் இப்போது நாம் எழுதியது போலவே தேர்தல் பிரசாரங்கள் “தலைவர்களால்” (பார்ப்பனர்களால்) தமிழ் நாட்டில் தொடங்கப்பட்டு விட்டது. அதற்கு அனுகூலமாகத் தொண்டர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்) ஆங்காங்கு இந்தத் தலைவர்களுக்கு வரவேற்பு அளித்து கூட்டம் கூட்டி ஜே போட்டு ஓட்டர்களை அறிமுகப்படுத்தி அத்தலைவர்களின் உத்திரவுக்குக் கீழ்ப்படியும்படி செய்யும்படியான வேலையில் மும்மரமாய் ஈடுபட்டு இருக்கிறார்கள். சில இடங்களில் பார்ப்பனரல்லாதார் பணமுடிப்பும் அளிக்கின்றார்கள்.

சமீபத்தில் புதிய சட்டத்தின் படி ஸ்தல ஸ்தாபன தேர்தல்கள் நடைபெறப் போகின்றபடியால் அத்தேர்தல்களில் பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியுள்ள கனவான்கள் எந்தெந்த ஸ்தாபனங்களில் ஆதிக்கம் பெற்று இருக்கின்றார்களோ அவர்களைக் கவிழ்த்தும் வேலையில் காங்கிரஸ் பிரசாரம் என்னும் பேரால் மிகவும் தீவிரமாக முயற்சிகள் செய்து வருகின்றார்கள். அதாவது தென்னாட்டை 3 பிரிவுகளாகப் பிரித்து காங்கிரஸ் “தலைவர்கள்” (பார்ப்பனர்கள்) தலைமையில் தங்கள் சிஷ்ய கோடி தொண்டர்களுடன் புறப்பட்டிருக்கிறார்கள். எப்படியென்றால்,

திருவாளர்கள் சி. இராஜகோபாலச்சாரியார் தலைமையில் ஒரு கோஷ்டி, வட ஆற்காடு, தென்னாற்காடு, செங்கல்பட்டு, சென்னை ஆகிய இடங்களுக்கும், டாக்டர் ராஜன் அய்யங்கார் தலைமையில் ஒரு கோஷ்டி கோயமுத்தூர், சேலம், திருச்சி, தஞ்சை ஆகிய இடங்களுக்கும், ஏ.வைத்தி நாதய்யர் தலைமையில் ஒரு கோஷ்டி மதுரை, திருநெல்வேலி, ராமநாதபுரம், செட்டிமார் நாடு ஆகிய இடங்களுக்கும் என்று பிரித்துக் கொண்டு புறப்பட்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்கு உபதலைவர்களாக ஒரு கூட்டம் (அதுவும் வெறும் பார்ப்பனர்களாகவே திருவாளர்கள் டி.வி.எஸ். சாஸ்திரியார், ஆலஸ்யம் ஐயர், வெங்கிட்டராமய்யர், ஈ. கிருஷ்ணய்யர், என்.எஸ். வரதாச்சாரியார், கே. சந்தானம் அய்யங்கார் ,எக்கியேஸ்வர சர்மா, சங்கரய்யர், சங்கரய்யர் லக்ஷிமி அம்மாள், வி.வி.எஸ். அய்யர் செல்லம்மாள், லக்ஷிமிபதி அய்யர் அம் மாள், லக்ஷ்மணராவ்கமலாதேவி அம்மாள், கிருஷ்ணமூர்த்தி அய்யர், சுப்பையர், சுந்திரமய்யர் முதலிய பல அய்யர், அய்யங்கார், அம்மங்கார் களும் இவர்கள் தவிர மற்றும் ஆங்காங்கு போகின்ற இடத்தில் உள்ள வக்கீல் அய்யர் அய்யங்கார் அம்மங்கார்களும் இருப்பதோடு கூட்டங்களில் எங்காவது கேள்விகள் குழப்பங்கள் ஏற்படுகின்ற சமயத்தில் இடத்தில் மாத்திரம் முன்னால் நிறுத்துவதற்கு என்கின்ற உள் எண்ணத்துடன் சிறிது நன்றாய்ப் பேசுவதற்கும் தலைகொடுப்பதற்கும் பார்ப்பனரல்லாதார்களின் உப தலைவர்கள், தொண்டர்கள் என்னும் பேரால் வெகு சிலர்களும் அவர்கள் பெயரைக் குறிப்பிட வேண்டுமென்பதாக விரும்புகிறவர்கள் யாரும் இருக்க மாட்டார்களென்றே கருதுகின்றோம். ஆனாலும் அவர்கள் பெயரையும் குறிப்பிட்டு விட்டால் ஒரு விதத்தில் தப்பர்த்தம் கற்பிக்கப்பட இடமில்லாமல் இருக்கலாமென்று கருதி அதையும் குறிப்பிட்டே விடுகின்றோம்.

அதாவது திருவாளர்கள் கோவை சி.பி.சுப்பையா, தஞ்சை வெங்கிடு கிருஷ்ணபிள்ளை, வேத ரத்தினம்பிள்ளை, திருநெல்வேலி திரிகூட சுந்திரம் பிள்ளை, வட ஆற்காடு அண்ணாமலை பிள்ளை ஆகியவர்கள் பெயர்கள் இக்கோஷ்டியார்களுடன் ஆங்காங்கு காணப்படுகின்றன. எனினும் அவர்கள் எவ்வளவு தூரம் இதில் கலந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் இவர்களுக்கு எவ்வித மரியாதைகள் தலைவர்கள் என்பவர்களால் அளிக்கப்பட்டிருக்கின்றன வென்பதும் இவர்களிடம் மேற்கண்ட முக்கிய தலைவர்கள் (பார்ப்பனர்கள்) எவ்வளவு மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கின்றார்கள் என்பதும் இவர்களுடன் நெருங்கிப் பழகி இவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான பார்ப்பனரல்லாத இரண்டொருவர்களுக்குத்தான் நன்றாய்த் தெரியும். ஆனாலும் அதை நாம் வேண்டுமென்றே இங்கு வெளிப்படுத்தவில்லை. மற்றும் இந்தப் பிரசாரக் கூட்டத்திற்கு பணம் கொடுப்பவர்கள் யார் என்று பார்த்தால் நெற்றி வேர்வை நிலத்தில் கொட்டப் பாடுபடும் பார்ப்பனரல்லாத மக்களே மூட்டை கட்டி பண முடிப்பை அப்பார்ப்பன பிரசாரத்திற்கு காணிக்கையாக வைக்கின்றார்கள். ஆனால் இது சங்கராச்சாரியாருக்கு கொடுப்பதைவிட மோசமல்ல என்றே சொல்லலாம்.

ஏனென்றால் இந்தப் பணத்தில் இரண்டொரு பார்ப்பனரல்லாதாராவது சாப்பிடுகின்றார்கள் என்கின்ற திருப்தி இருந்தாலும் இந்தக் காணிக்கைத் தொகையானது எந்தப் பார்ப்பனரல்லாதார் கொடுக்கின்றார்களோ அந்த சமூகச் செல்வாக்கை ஒழிக்கப் பிரசாரம் செய்யவே பயன்படுத்தப் படுகின்றன என்பதை பார்க்கின்றபோது நம் நாட்டு மக்களின் நிலையை எடுத்துக் காட்ட இதைவிட வேறு உதாரணம் தேவையா என்று கேட்கின்றோம்.

இதற்கேற்றார்ப் போல் ஸ்தல ஸ்தாபனத் தேர்தல்கள், புதிய சட்டத்தின் படி நடைபெற யேற்கனவே ஒரு வருஷ­காலம் வாய்தா கொடுக்கப்பட்டு அந்த ஒரு வருஷ காலவாய்தாவும் தீர்ந்து இப்போது மறுபடியும் புது எலக்ஷன்கள் நடைபெற இன்னும் 6 மாதமோ ஒரு வருஷமோ வாய்தா கொடுக்கப் போகின்றதாக தெரிய வருவதைப் பார்த்தால் இனியும் ஒரு வருஷகாலத்திற்கு குறையாமல் இந்தத் தேர்தல் பிரசாரத் தொல்லை நமது நாட்டில் இருக்கும்போலத்தான் காணப்படுகின்றது. பிறகு அது முடிந்தவுடன் சட்டசபை தேர்தல் பிரசாரங்கள் முறையே இந்தப்படி தொடங்கப் படலாம். ஆகவே நம் நாட்டு விடுதலைப் பிரசாரங்கள், தேசீயப் பிரசாரங்கள் ஆகிய பொது நல சேவைகள் என்பவைகள் எல்லாம் தேர்தல் பிரசாரமும் பதவி பெருவதுமாகவே இருந்து வருகின்றதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

இந்தத் தந்திரம் சுமார் 50 வருஷமாக (காங்கிரஸ் ஆரம்பிக்கப் பட்ட காலமாக) ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது என்றாலும், இந்த விழிப்பான சமயத்திலும் அதே கூட்டம் அதே காரியத்தை இனியும் இந்த நாட்டில் நடத்துகின்றது என்றால் - நடத்த சௌகரியமிருந்து வருகின்றது என்றால் இந்த நாட்டு மக்கள் எந்த அளவில் முற்போக்கு அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை . ஆகவே ஆங்காங்குள்ள பார்ப்பனரல்லாத மக்கள் இந்த சூட்சிப் பிரசாரத்திற்கு ஏமாந்துவிடாமல் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமென்றே எச்சரிக்கை செய்யவே இதை எழுதுகின்றோம்.

நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் என்று எழுதுவதினாலேயே வாசகர்கள் தவறுதலாய் நினைத்து விடக்கூடாது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அதாவது இப்படி எழுதியதால் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படுவதில் யாராவது குழப்பம் விளைவிக்கவோ, கேள்விகள் முதலியவைகள் கேட்டு தொல்லை விளைவிக்கவோ வேண்டும் என்பதாக கருதிவிடக் கூடாது என்றும், மேலும் அப்படிப்பட்ட கூட்டம் எதுவானாலும், யார் பேசினாலும், எதைச் சொன்னாலும் இஷ்டப்பட்டவர்கள் பேசாமல் கேட்டுக் கொண்டிருப்பதும் இஷ்டமில்லாதவர்கள் அங்கு இருக்காமல் திரும்பி விடுவதுமாக இருக்க வேண்டுமே யொழிய சிறிது கலவரமாவது உண்டாக்குவது யோக்கியமல்ல வென்றே சொல்லுவோம்.

கூட்டங்களில் பேசியானவர்களின் பேச்சுக்கள் ஏதாவது குற்றமுடையதாகவோ உண்மைக்கு மாறானதாகவோ திருத்தி தப்பர்த்தம் புரியும்படி கூறப்பட்டதாகவோ இருந்ததாக தெரிய வருமானால் அவற்றை பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்து மறுநாளோ அல்லது அதற்கடுத்த சௌகரியப்பட்ட நாளோ இதற்கென்றே ஒரு கூட்டம் கூட்டி அவர்கள் பேசிய மாதிரி நாம் பேசாமல் அதாவது அதே குற்றத்தை நாம் செய்யாமல் தெளிவாயும் நியாயமாயும் விளக்குவதன் மூலம் மக்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும் என்றே தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஆகவே எந்தக் காரணத்தை முன்னிட்டும் குழப்பமோ காலித்தனமோ தொல்லைகளோ விளைவிக்கக் கூடாதென்று, மறுபடியும் வலியுறுத்திக் கூறுகின்றோம்.

பார்ப்பனப் பிரசாரத்திற்கு வருகின்றவர்கள் பலர் வரும்படிக்கோ, பெருமைக்கோ வருகின்றவர்களாக இருக்கலாம் என்றாலும் பெரும்பான்மையோர் ஒரு பொதுநல சேவையை குறிகொண்டே வருகின்றார்கள் என்பதை நாம் மறைக்க முயலவில்லை. ஆனால் அப்பொதுநல சேவை எதுவென்றால் தங்கள் (பார்ப்பன) சமூகத்தின் நன்மையையும் ஆதிக்கத்தையும் உயர்வையும் குறியாக வைத்து அவற்றை நிலைநிறுத்தவும் பெருக்கவும் என்ற நோக்கம் கொண்ட சமூகத் தொண்டர்களாக வருகின்றபடியால் அந்த அளவில் அவர்களுக்கு உள்ள சமூக பக்தியை நாம் பாராட்ட வேண்டியவர்களாகவும் பொறாமைப்பட வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம்.

பார்ப்பனரல்லாத சமூகத்தில் அந்த மாதிரி சமூக நன்மைக்கு என்று கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சகித்துக் கொண்டு புரப்படுகின்ற மக்கள் மிக மிக சுருக்கமே ஆகும். பார்ப்பனர்களுக்கு பணம் கொடுத்து ஆதரித்து பார்ப்பனரல்லாதார் பக்தி காட்டுவது போல் பார்ப்பனரல்லாத பிரசாரகர்கள் வந்தால் அவர்களை ஆதரிப்பவர்களும் பொதுச்செலவுக்கு பணம் கொடுப்பவர்களும் மிக மிக சுருக்கமே யாகும். பார்ப்பன பிரசாரகர்களிடத்தில் இருக்கும் கட்டுப்பாடும் அடக்கமும் பார்ப்பனரல்லாத பிரசாரகர்களிடத்தில் காணப்படுவதும் அருமையோகும். உதாரணம் வேண்டுமானால் சாதாரணமாக நமது நாட்டில் காங்கிரஸ் என்னும் பார்ப்பனப் பிரசாரம் ஏற்பட்டு 50 வருஷங்களாகியும் இன்றுவரை ஒரு பார்ப்பனத் தலைவராவது - ஒரு பார்ப்பன அதிகாரம் பதவி பட்டம் பெற்ற ஆசாமியாவது - சட்டையை கழட்டி வைத்தால் ஜேப்பில் இருக்கின்ற பேனாவைத் திருடி விற்றுப் பிழைக்கும் ஒரு பார்ப்பனத் தொண்டனாவது- “சுத்தமாய் நாளைக்கு கஞ்சிக்கு வகையில்லை” என்று சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு உபாதானப் பிச்சைகாரப் பார்ப்பனனாவது எந்தச் சமயத்திலும் எப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையிலும் தன்னுடைய சமூக நன்மையையும் சமூக ஆதிக்கத்தையும் சமூக உயர்வையும் கடுகளவாவது விட்டுக் கொடுத்ததாக யாராவது சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

வேண்டுமானால் கள்ளு சாராயம் குடிப்பார்கள், எங்கு வேண்டுமானாலும் புசிப்பார்கள், கண்டபடியெல்லாம் திரிவார்கள், எவ்வளவு இழிவான தென்று கருதப்பட்ட வேலைகளை யெல்லாம் கூட செய்வார்கள். ஆனால் அப்படிப்பட்ட எவர்களிடமும் பார்ப்பன சமூக நலத்தையும் உயர்வையும் ஒரு கடுகளவாவது விட்டுக் கொடுத்ததாக ஒரு சிறிதும் காண முடியாது. மற்றபடி பார்ப்பனரல்லாதார்களிலோ என்றால் சமூக நலத்தையும் சமூக சுயமரியாதையையும் ஒரு ஓட்டுக்கு விற்றுவிடத் தயாராயிருப்பார்கள். இந்த வித்தியாசங்களே தான் எப்படிப்பட்ட நெருக்கடியான நிலைமையையும் பார்ப்பனர்கள் சமாளித்து வருவதும், பார்ப்பனரல்லாதார்கள் எப்படிப்பட்ட சௌகரியமான நிலைமை கிடைத்தாலும் அதிலிருந்து சடுதியில் கீழே விழுந்து விடுவதுமாயிருகின்றார்கள். ஆகையால் இனியாவது பார்ப்பனரல்லாத பொதுமக்கள் கவனித்து சமூக நன்மையை முக்கியமாய் கருதி சூக்ஷிக்கும் தந்திரத்திற்கும் ஏமாந்து போகாமல் ஜாக்கிரதையுடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமாய் மறுபடியும் மறுபடியும் வலியுறுத்தி எச்சரிக்கை செய்கின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 26.04.1931)

Pin It