விநாயகன் கலவர ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தவும், மரண தண்டனைக்கு எதிராக பரப்புரைப் பயணம் மேற்கொள்ளவும் சென்னையில் நடந்த கழக ஆலோசனைக் குழு முடிவெடுத்துள்ளது.

5.8.2011 அன்று காலை 10 மணிக்கு சென்னை இராயப்பேட்டை முருகேசன் திருமண மண்டபத்தில் கழக ஆலோசனைக் குழுக் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர்கள் கோவை கு.இராமகிருட்டிணன், விடுதலை க.இராசேந்திரன், துணைத் தலைவர் ஆனூர் செகதீசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

•     கடந்த சில ஆண்டுகளாக மதப் பண்டிகையான விநாயகர் சதுர்த்தியை, இந்துத்துவத்தின் வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்தும் போக்கே நிலவி வருகிறது. சிறுபான்மையருக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டுவதற்கும், மதச் சார்பின்மைப் போக்கை மாற்றி, பெரும்பான்மை இந்து மத வல்லாதிக்கத்தை நிறுவும் முயற்சிகளும் இதன் வழியாக செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டு பகுத்தறிவு, இன உணர்வு, ஆரிய பண்பாட்டு எதிர்ப்பு உணர்வுகளைத் தாங்கி, வடவர் பண்பாட்டு திணிப்பின் குறியீடான விநாயகர் கலவர ஊர்வலத்தை எதிர்த்து பெரியார் கைத்தடி ஊர்வலத்தை 28.8.2011 ஞாயிறன்று சென்னை, கோவை ஆகிய மாநகர்களில் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.

       இந்த எதிர்ப்பு ஊர்வலத்தின் நோக்கத்தை விளக்கி வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் 16.8.2011 முதல் தெருமுனை விளக்கக் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

•     அரசியல் சட்டத்தின் முகப்புரையிலேயே இந்திய ஒன்றியத்தை மதச்சார்பற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தும் பெரும்பான்மை இந்துக்களின் நாடாக கருதும் மனப்பான்மையோடு, வெகுசிலரின் விருப்பப்படி அரசு அலுவலகங்களில் மத விழாக்களை எடுக்கும் முறை பரவலாகி வருகிறது. இப்படிப்பட்ட சட்ட விரோதப் போக்கை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் பல்வேறு சமயங்களில் சுற்றறிக்கை அனுப்பியுள்ள நிலையிலும் சில அலுவலகங்களில் பூஜை செலவுக்கென பணம் கறக்கும் நோக்கத்தோடும், சிலர் இது விதிகளுக்குப் புறம்பானது என்பது புரியாத காரணத்தாலும் ஆயுத பூஜை போன்றவற்றை செய்து வருகிறார்கள்.

எனவே தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் சென்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், மைய அரசு ஒருங்கிணைப்பு குழு ஆகியோரிடமும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை கண்காணிப் பாளர்கள், மாநில, மைய அரசின் மாவட்ட அலுவலகங்கள் ஆகியவற்றிலும், நகர, ஒன்றிய, கிளை கழகப் பொறுப்பாளர்கள் தங்கள் தங்கள் பகுதி அலுவலகங்களிலும், இது குறித்த அரசு ஆணைகளை இணைத்து ஆயுத பூஜை போன்ற மத விழாக்களைக் கொண்டாடி அரசின் ஆணைகளை மீறும் வகையிலும், பிற மதத்தினர், மத நம்பிக்கையற்றோர் ஆகியோரிடம் வெறுப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தும் வகையிலும், அரசியல் சட்டம் கூறும் மதச் சார்பின்மைக்கு ஊறு விளைக்கும் வகையிலும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோளை முன் வைக்கும் கடிதங்களை 14.8.2011 அன்று அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மரண தண்டனை எதிர்ப்பு இயக்கம்

•     மரண தண்டனை என்னும் தண்டனைப் பிரிவையே இரத்து செய்ய வேண்டும். தற்போது மரண தண்டனையை எதிர்நோக்கி ஆண்டுக்கணக்கில் பெரும் மன உளைச்சலோடு வாடிக் கொண்டிருப்போரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

•     பத்தாண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனையைக் கழித்தோர் அனைவரையும் எவ்வித நிபந்தனை, விதிவிலக்குகள் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து மூன்று குழுக்களாக பரப்புரை பயணங்களை சென்னை, கோவை, தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்து 20.9.2011 அன்று புறப்பட்டு, 28.9.2011 அன்று வேலூரில் முடிப்பது என்றும்,

•     சென்னையில் 20.9.2011 அன்றும், வேலூரில் 28.9.2011 அன்று பயண நிறைவு நாளிலும் ஒத்த கருத்துள்ள அமைப்புகளின் தலைவர்களை அழைத்து மாபெரும் பொதுக் கூட்டங்களையும், பயணத்தின் ஒவ்வொரு நாள் மாலையிலும், அரங்குகளிலோ, திறந்த வெளிகளிலோ பொதுக் கூட்டங்களை நடத்தியும், துண்டறிக்கைகள், சிறு வெளியீடுகளையும் பெருமளவில் பரப்புவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

•     3.9.2011 அன்று அடுத்த தலைமை செயற்குழுக் கூட்டத்தை ஈரோட்டில் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Pin It