சில மாதங்களாக தமிழக புலமைச் சுழலில் இடம்பெற்றுவரும் முக்கிய விவாதமொன்று பெரியாரின் சிந்தனைகளை நாட்டுடைமையாக்குவது பற்றியதாகும். இதில் வழமைக்கு மாறான ஒரு விடயம் என்னவென்றால் வழமையாக பார்ப்பனிய சக்திகளே பெரியாரிய சிந்தனைகள் பரவலடைவதைத் தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. ஆனால் இம்முறை பெரியாரிய சிந்தனைகள் நாட்டுமையாவதை பெரியாரின் வாரிசுகள் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோரே தடுப்பதுதான் இதிலுள்ள புதுமை.

பெரியார் நமது காலத்தின் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர் என்பதில் கருத்து பேதங்களுக்கு இடமில்லை. சிந்தனையாளர்களும் அவர்தம் சிந்தனைகளும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையுமல்ல. காலத் தேவையுடன் பொருந்துவன நிலைக்க, மற்றையவை அழிந்துபோகும். இந்தப் பின்புலத்தில் பெரியாரியத்தை நோக்குவோமானால், குறிப்பாக தமிழ்ச் சூழலைப் பொருத்தவரையில் பெரியாரின் தலையீடென்பது ஒரு பெரும் சிந்தனை உடைவாகும். இது நமது கருத்தியல் விவாதங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை. தமிழ் சமூதாயம் தனக்குள் சாதிய நோய்க் கூறுகளையும், கலாசார மூடத்தனங்களையும் கொண்டிருக்கும் வரை பெரியாரின் சிந்தனைகளுக்குத் தேவையுண்டு.

எப்படி ஒடுக்குமுறைக்கு எதிராக போராட வேண்டிய தேவையில் மார்க்சியம் உயிர்வாழ்கிறதோ, அப்படித்தான் பெரியாரியமும் தமிழ் சமூதாயத்தில் நிலைகொண்டிருக்கும் அகநிலை விடுதலைத் தேவைகளில் நிலைகொண்டிருக்கிறது. எனவே பெரியாரின் சிந்தனைகளுக்குக் குறித்த சிலர் உரிமை கோருவதானது அடிப்படையில் அவரது சிந்தனைகள் தலைமுறைகளைத் தாண்டி பரவுவதைத் தடுக்கும் செயலாகும். பிறிதொரு வகையில் தமிழ் சமூதாயம் முன்னோக்கி நகர்வதை தடுப்பதாகவும் அமையும்.

ஒரு சிந்தனையாளர், எழுத்தாளர்கள் என்போரின் எழுத்துக்கள் அந்த காலத்தின் தலைமுறையைச் செதுக்கும் உளி போன்றது. எப்படி ஒரு சிற்பி வெறும் கல்லை சிற்பமாக மாற்றி கல்லுக்கு பெறுமதி கொடுகிறானோ, அப்படித்தான் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் என்போரும் தாம் வாழும் சமூதாயத்தை செதுக்கும் சிற்பிகளாக விளங்குகின்றனர். அவர்களை நமது தனிப்பட்ட நலன்கள் என்ற வட்டத்திற்குள்ளும், அரசியல் எல்லைகளுக்குள்ளும் முடக்க நினைப்பது அறிவுடைமையாகாது.

பெரியாரின் வழி வந்ததாக கூறிக்கொள்ளும் தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் பெரியாரிலிருந்து விலகி நீண்ட காலமாகவிட்டது. தமிழகத்தின் பிரதான அரசியல் நீரோட்டத்திற்கு வெளியே நிற்கும் சில அமைப்புக்கள் மட்டுமே பெரியாரின் சிந்தனைகளை உயர்த்தி நிற்கின்றன. இந்தச் சூழலில் அவரது சிந்தனைகள் பரவுவதைத் தடுப்பதானது இறுதியில் அவரது சிந்தனைகளை குறிப்பிட்ட சில குழுக்களின் விவாதப் பொருளாக சுருக்கிவிடும் ஆபத்தைத்தான் விழைவிக்கும். நமது இலக்கு சமூகத்தை புரட்சிகரமாக மாற்றியமைப்பதாயின் மாற்றத்திற்குரிய சிந்தனைகள் அனைத்தும் மக்கள் மத்தியில் பரவுவதற்கான வழிவகைகள் குறித்து மட்டுமே நாம் சிந்திக்க வேண்டும். அதுதான் நமது பணியும் கூட.

தமிழ் தேசியத்தின் எழுச்சி குறித்து சிந்திக்கும் நாம் அதன் தோற்றுவாய்களில் ஒருவரான பெரியாரின் சிந்தனைகளை குத்தகைக்கு எடுப்பது பற்றி விவாதிப்பது கவலைக்குரிய ஒன்றாகும். நாம் இதற்கு வெட்கப்பட்டாக வேண்டும்.

- யதீந்திரா

Pin It