மக்களை அறிவாளியாக்கும், துறையில் மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் துறையில் யார் பாடு பட்டாலும் அவர்கள் பொதுமக்களால் வெறுக்கப் படவும், நாத்திகர்கள் என்று கூறப்படவும், தொல்லைக்கு ஆளாக்கப்படவும், கொல்லப்படவுமான தன்மை உலகிலேயே இயற்கையாக இருந்து வருகிறபோது, அந்த நிலை நம் நாட்டில், நம் மக்கள் இருக்கும் யோக்கி யதையில் ஏற்படாமல் இருக்க முடியுமா? அதலால், அந்த நிலைக்கு ஆளாகும் தன்மையை எதிர்பார்த்தே நான் இந்தக் காரியத்தில் பிரவேசித்துத் தொண்டாற்றி வருகிறேன்.
இதன் பயனாக நான் பலமுறை சிறை சென்றிருக் கிறேன்; வாழ்க்கையில் பல இன்னல்களை அடைந்திருக்கிறேன்; இதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கத்திற்கு என் பெயராலும், இயக்கத்தின் பெயராலும் அரசாங்கத் தாராலோ, அரசாங்கத்தில் உள்ள மேல் ஜாதி மக்களாலோ அல்லது இந்தக் கருத்துக்கு மாறுபட்டவர்கள் என்பவர்களாலோ எனது முயற்சியைத் தடுக்கவும், ஸ்தாபனத்தை ஒழிக்கவுமான தன்மையாக ரூபாய் 15,00,000 (பதினைந்து இலட்ச ரூபாய்)க்கு மேல் கடந்த காலத்துக்கு என்று இன்கம் டாக்ஸ் வரி (வருமான வரி) போடப்பட்டிருக்கிறது என்பதுடன் நிகழ்காலத்திற்கும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் போல் இன்கம்டாக்சும் போடப்பட்டு வருகிறது.
இவை தவிர நம் நாட்டில் உள்ள எல்லாப் பார்ப்பனராலும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். மேல் ஜாதியார் என்று பார்ப்பனரைப் போல் தங்களைக் கருதிக் கொண்டிருக்கும் எல்லாச் சைவர்கள் என்பவர்களாலும் பெரிதும் வெறுக்கப்பட்டிருக்கிறேன். இவை மாத்திரமா? 100 க்கு 90 கிறிஸ்துவர்களாலும் வெறுக்கப்படுகிறேன். இஸ்லாமியர்களாலும் வெளிப்படையாய் வெறுக்கப்பட வில்லை என்றுதான் நினைக்கிறேன்.
இவற்றுள் ஒரு அதிசயமென்னவென்றால் ஆதி திராவிட மக்களுக்குள் பதவியில் உள்ள சிலர் தவிர, ஒருவர் கூட எனக்கு ஆதரவாளர் கிடையாது. யாராவது சிலர் அவர்கள் சொந்த சுயநல காரியங்களுக்கு வருவார்கள். அவ்வளவுதான். சிலர் எதிரிகளாகவே, அலட்சியப்படுத்துபவர்களாகவே ஆகிவிட்டார்கள். எதற்கு இவற்றைச் சொல்கிறேன் என்றால் என் இந்தத் தொண்டுக்கு ஆதரவாளர்களாக, பாராட்டுபவர்களாகப் பெரும்பாலான மக்கள் இல்லை என்பதைக் காட்டு வதற்காகவேயாகும்.
இதில் நான் மகிழ்ச்சியும், பெருமையும் அடையத் தக்கதும், குறிப்பிடத்தக்கதுமான காரியம் என்னவென்றால் என் இயக்கத்தில் (இந்தத் தொண்டுக்கு ஏற்பட்ட இந்த இயக்கத்தில்) வேறு எந்த இயக்கத்தையும் விடக் கட்டுப் பாடும், அதற்கேற்ற கடமைப்பாடும் நல்ல அளவுக்கு இருந்துவருகின்றன. இயக்கத் தோழர்கள் யாராயிருந் தாலும், பிடிக்காவிட்டாலும் அவர்கள் வெளியே போய் விடுகிறார்கள் என்பதுதான்.
நாத்திகர் என்பதற்காக யாரும் பயப்படாதீர்கள். சாக்ரட்டீஸ் நாத்திகர்; பெர்ட்ரண்ட் ரஸல் நாத்திகர்; பெர்னாட்ஷா நாத்திகர்; இங்கர்சால் நாத்திகர்; நேரு நாத்திகர். மற்றும், இயேசு நாதரும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு கொலை யுண்டார்; முகமது நபியும் நாத்திகர் என்றே சொல்லப் பட்டு அடித்து விரட்டப்பட்டார். புத்தர்களும், சமணர்களும் நாத்திகர் என்றே சொல்லப்பட்டு அவர்களின் வீடுகள், மடங்கள் கொளுத்தப்பட்டு வெகுபேர் கொல்லப்பட்டு, கழுவேற்றப்பட்டு, அவர்கள் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டு அல்லலுற்றனர்.
இவர்கள் தவிர, அமெரிக்காவில் பல நாத்திகச் சங்கங்களில் மூன்று கோடிக்கு மேல் வெளிப்படையான நாத்திகர்கள். இங்கிலாந்திலும் அதுபோலவே அரைக் கோடிக்கு மேலும், ஜெர்மனியில் ஒரு கோடியும், சைனாவில் 60 கோடியும், ரஷ்யாவில் 25 கோடியும், ஸ்பெயினில் முக்கால் கோடியும், பிரான்சில் முக்கால் கோடியும், பர்மாவில் அரைக்கோடியும், சயாமில் ஒரு கோடியும் இருக்கிறார்கள்.
இப்படியாக நூற்றுக்கணக்கான கோடி மக்கள் நாத்திகர்களாக இருக்கிறார்கள். பல தேசங்கள் நாத்திக தேசங்களாகவே இருந்து வருகின்றன. இத்தனைக்கும் அவர்கள் எல்லோரும் பகுத்தறிவு கொண்ட தேச மக்கள் ஆவார்கள்.
(தந்தை பெரியார் பிறந்த நாள் மலர் - 1973)