கடந்த ஏப்ரல் 15, 2010 அன்று தில்லி தமிழ் மாணவர்கள் அமைப்பும்,ஜனநாயக மாணவர்கள் அமைப்பும் இணைந்து “பேசப்படாத இனப்படு கொலை - இலங்கையில் போர்க் குற்றங்கள்” என்ற தலைப்பிலான கருத்தரங்கினை தில்லி கான்ஸ் டிடியூசன் அரங்கில் நடத்தின. நிகழ்வில் டப்ளினில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் இலங்கையின் போர்க் குற்றங்களை விசாரித்து அளித்த அறிக்கை வெளியிடப்பட்டது. 

நிகழ்வில் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில் பங்கு பெற்ற தில்லி உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்தர் சச்சார், சாய்பாபா, சண்டிகர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜித்சிங் பெயின்ஸ், காஷ்மீர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சய்யத் அலி ஷா கிலானி, ’சீக்கிய செய்தி’ இதழின் ஆசிரியர் பேரா. ஜக்மோகன்சிங், எஸ்.ஏ.ஆர். கிலானி, சி.பி.அய். எம்.எல்.இன் கவிதா கிருஷ்ணன், மணிப்பூர் மாணவர் இயக்கத்தின் மலேம் நிங்தவ்ஜா மற்றும் நவஜன் பாரத் சபாவின் டாக்டர் மிர்கங்க் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். புரட்சிகர எழுத்தாளர்கள் அமைப்பின் கவிஞர் வரவரராவ் நேரில் வர இயலாததால் தனது செய்தியையும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை போற்றி ஒரு கவிதையும் அனுப்பியிருந்தார். அது நிகழ்வில் வாசிக்கப்பட்டது. இலங்கை மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தினை ஒழுங்கு செய்வதில் முக்கிய பங்கு வகித்தவரான மனித உரிமையாளர் சிங்களர் விராஜ் மெண்டிஸ், ஜெர்மன் நாட்டிலிருந்து இந்தியா வருவதற்கான விசாவை வழங்க இந்திய அரசு மறுத்த நிலையில் பதிவு செய்யப்பட்ட அவரது உரை திரையிடப்பட்டது. அது போன்றே நேரில் வர இயலாத நீதியரசர் கிருஷ்ணய்யர் மற்றும் பியூசிஎல் முன்னாள் தலைவர் கே.ஜி.கண்ணபிரான், இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி ஜன் ஜனநாயகம் ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட உரைகளும் திரையிடப்பட்டன. 

இந்தியாவில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டங்களை மேற்கொள்ளும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும், சமூக - பொருளாதார போராட்டங்களை நடத்திவரும் இடதுசாரி அமைப்புகளின் பிரதிநிதிகளும், மனித உரிமைப் போராளிகளும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு, ஈழத் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையை கடுமையாக கண்டித்தும் ஈழப் போராட்டத்திற்கு தங்கள் முழுமையான வெளிப்படையான ஆதரவினை தெரிவித்தும் உரையாற்றினர். 

தமிழ்நாட்டிலிருந்து இந்நிகழ்வில் கலந்து கொண்ட பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி தனது உரையில் “இலங்கை ஒரு முன்மாதிரி இனப் படுகொலையை நடத்தியிருக்கிறது” எனக் குற்றம் சாட்டினார். மேலும், “சாட்சிகளின்றி, உலக நியதிகள்,சட்டங்கள், கண்டனங்கள் ஆகிய எதை பற்றியும் எந்த அச்சமோ அக்கறையோ இன்றி இலங்கை தனது சொந்த மக்கள் மீது ஒரு முன் மாதிரி இனப் படுகொலையை நடத்தியிருக்கிறது. இந்த இனப்படுகொலையானது உயிர்களை கொல்வதாக மட்டுமின்றி,தமிழர்களின் பண்பாட்டை, நிலத்தை, அறிவுசார் வாழ்க்கையை என அனைத்தையும் பறித்திருக்கிறது. இந்த முன் மாதிரியை பின்பற்றி உலகின் பிற ஆதிக்க அரசுகள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த எவர் மீதும் இப்படியான இனப்படுகொலையை நடத்தலாம். காஷ்மீர், வடகிழக்கு, பஞ்சாபில் நடைபெறும் போராட்டங்களை அழிக்கவும், மற்றும் “பசுமை வேட்டை” என்ற பெயரில் பழங்குடிகள் மீது மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தவும் இந்த முன் மாதிரி இனப்படுகொலை பயன்படலாம். அதனால் மனித குலத்தின் ஒட்டு மொத்த நன்மைக்காக நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்” என்று குறிப்பிட்டார். 

மாநாட்டில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

•               தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய இனப் படுகொலை மற்றும் போர்க் குற்றங்களை இந்த அவை கண்டிக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றவாளிகள் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். 

•               கட்டாயமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுவித்து அவர்கள் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்பட வேண்டும். 

•               இலங்கை அரசு தமிழர் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சிங்க குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். 

•               இனப்படுகொலையை நடத்தி வரும் இலங்கை அரசுக்கு இந்திய அரசு வழங்கி வந்த அனைத்து வித அரசியல், இராணுவ மற்றும் பிற வகையிலான உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும். 

•               சுயநிர்யண உரிமைக்காகப் போராடும் தேசிய இனங்கள் மீது இந்திய அரசு நடத்தி வரும் போரை இந்த அவை கடுமையாகக் கண்டிக்கிறது. 

நிகழ்வில் ஈழ வரலாறை விளக்கும் குறும்படமும், தற்போது ஈழத்தில் நிலவும் சூழலை விவரிக்கும் பிரெஞ்சு தொலைக்காட்சியின் குறும்படமும் திரையிடப்பட்டன.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஜவகர்லால் நேருப் பல்கலைக்கழக மாணவர்கள் கலையரசன், கார்த்திக், தமிழ்த்துறை மாணவர்கள்,தில்லி வழக்கறிஞர்கள் பிரபு, முத்து, ஆனந்த செல்வம், மயில்சாமி உட்பட பலரும் சிறப்பாக செய்திருந்தனர்.

Pin It