2021 ஆகஸ்டு 30ஆம் நாள் மற்றுமொரு பன்னாட்டு வலிந்து காணமலாக்கப்பட்டோர் நாளைக் குறிப்பதாகும். ஆனால் சிறிலங்காவில் பத்தாண்டு முன்பு அரசுப் படைகளால் கடத்திச் செல்லப்பட்ட அன்புக்குரியவர்களைத் தேடியலையும் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ்க் குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைத்தபாடில்லை.

eelam tamils2009 மே மாதம் உள்நாட்டுப் போரின் முடிவில் சிறிலங்கா இராணுவத்தினால் வலிந்து இழுத்துச் செல்லப்பட்டு காணாமற்போன தமிழர்கள் இன்று வரை கணக்கெடுக்கப்படவே இல்லை. அவர்கள் காவலில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டு விட்டதாக அஞ்சப்படுகிறது. ‘காணாமற்போனவர்கள்’ பெரும்பாலும் தமிழ் இளைஞர்கள். இவர்களில் வணக்கத்துக்குரிய பிரான்சிஸ் ஜோசப் என்ற கத்தோலிகக் குருவும் ஒருவர்.

மனிதவுரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ள படி, வலிந்தோ தன்விருப்பமின்றியோ காணாமலாக்கும் செயல்கள் பற்றிய ஐக்கிய நாடுகள் பணிக்குழுவில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தொகையில் சிறிலங்காதான் உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது. 1980கள் தொடக்கம் அனைத்து இனக் குழுக்கள், சமயக் குழுக்களையும் சேர்ந்த 60,000 முதல் 100,000 பேர் வரை “காணாமல் போயிருப்பதாக” மதிப்பீடு செய்யப்படுகிறது.

நடுநிலையான புலனாய்வு நடத்துமாறு பன்னாட்டு அழைப்புகள் விடுக்கப்பட்ட போதும் சிறிலங்காவில் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமைந்த மூன்று ஆட்சிகளுமே போரினூடாக வலிந்து காணாமலாக்கிய செயல்களுக்குப் பொறுப்பான நாட்டின் படைத் தலைவர்களையும் அரசியல் தலைவர்களையும் கூண்டிலேற்ற எம்முயற்சி செய்யப்பட்டாலும் மறித்து முடக்கி விட்டன.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பார்வையில், சிறிலங்கா அரசு காணாமலாக்கப்பட்டவர்களின் சிக்கலை அணுகியுள்ள முறையானது ஈழத் தமிழர்களுக்கு எதிரான தன் இனவழிப்புச் செயல்களுக்கும் மானிட விரோதக் குற்றங்களுக்கும் பொறுப்புக்கூறுவதில் அதற்குள்ள அலட்சியத்தையே அனைத்து வகையிலும் காட்டுவதாக உள்ளது.

ஆகவே, வலிந்து காணாமலாக்கிய குற்றங்கள் உள்ளிட்ட இனவழிப்புச் செயல்கள் குறித்தும் மானிட விரோதக் குற்றங்கள் குறித்தும் பன்னாட்டுப் புலனாய்வு வேண்டும், குற்றவாளிகள் அனைத்துலக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கோரிக்கை ஆகும்.

சிறிலங்கா அரச நிறுவனங்களிலும் அரசியல் சமூகத்திலும் இனவாதம் ஊன்றிப் படர்ந்து ஊடாடி நிற்கும் நிலையில் அவற்றால் வலிந்து காணாமலாக்கிய குற்றங்களால் துயரப்பட்டவர்களுக்கு நீதி வழங்க முடியவில்லை என்பது வெள்ளிடைமலை.

2009ஆம் ஆண்டு அதிகாரத்தில் இருந்த மகிந்த இராசபட்ச அரசானது காணாமலாக்கிய நிகழ்வுகளைப் புலனாய்வு செய்யும் எல்லா முயற்சிகளையும் எதிர்த்து நின்றது. அவரையடுத்து வந்த அதிபர் மைத்திரிபால சிறிசேனா காணாமலாக்கப்பட்டவர்களின் தாய்மார்களையும் மனைவிமார்களையும் சந்தித்தார். காணாமலாக்கிய நிகழ்வுகளைக் கவனிப்பதாக உறுதியும் அளித்தார். ஆனால் ஒன்றுமே செய்தாரில்லை. அடுத்துவந்த அதிபர் கோட்டபய இராசபட்சர் காணாமற்போன அனைவரும் இறந்து விட்டார்கள் என்றாரே தவிர, நீதி அல்லது பொறுப்புக்கூறலுக்கு வழிசொன்னாரில்லை. இறுதியில் இராசபட்சர் ஐநா மனிதவுரிமைப் பேரவையின் 30/1 தீர்மானித்திலிருந்தும் விலகிக் கொண்டார். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாயின், சிறிலங்கா அரசே தமிழர்களுக்கு நீதி மறுத்துள்ளது.

இத்தனை ஆண்டுகளும் சிறிலங்காவின் தலைவர்கள் (அ) சட்டச் செயல்வழிகளை மறித்துள்ளார்கள்; (ஆ) தாங்கள் கடைப்பிடிக்க ஒப்புக்கொண்ட நிலைமாற்ற நீதிப் பொறிமுறைகளை மீறியுள்ளார்கள்; (இ) காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றிய செயற்பாட்டாளர்களை மிரட்டி அச்சுறுத்தியுள்ளார்கள்; (உ) குற்றவாளிகளைக் குற்றவிளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொண்டே பன்னாட்டு உடன்படிக்கைகளில் ஒப்பமிடுவதன் மூலம் வலிந்து காணாமலாக்கும் செயல்களை ஒழிக்கப் பாடுபடுவது போல் நாடகமாடியுள்ளார்கள்.

2015 செப்டெம்பரில் அப்போதிருந்த சிறிலங்கா அரசாங்கம் ஐநா மனிதவுரிமைப் பேரவையூடாக பன்னாட்டுச் சமுதாயம் இயற்றிய நிலைமாற்ற நீதிப் பொறிமுறைகளைச் செயலாக்க ஒப்புக்கொண்டிருந்தது. அது வெறும் பொய்மையே என்று தெரிந்து விட்டது. காணாமலாக்கிய நிகழ்வுகளின் உண்மைத் தன்மையைப் புலனாய்வு செய்யும் வழிவகைகளைச் செயலாக்கத் தொடங்குவதாக சிறிலங்கா அரசு கூறிய போதிலும் அது நிறுவிய கருவிகளிலிருந்து காணாமலாக்கப்பட்டுப் பிழைத்து மீண்டு வந்தவர்களின் தேவைகளைச் செய்து கொடுக்காமல் பன்னாட்டு சமுதாயத்தைக் குளிர்விப்பதில் மட்டுமே அது அக்கறை கொண்டிருப்பது தெரிந்து விட்டது.

30/1 தீர்மானத்தை ஒட்டிப் பன்னாட்டு வல்லுநர்களைக் கொண்டு காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கம் பன்னாட்டுச் சமுதாயத்தைக் கேலிசெய்து பழிப்புக் காட்டுவது போல் உள்நாட்டுச் செயற்பாட்டாளர்களைக் கொண்டு மட்டும் காணாமற்போனோர் அலுவலகம் ஒன்றை அமைத்தது. சிறிலங்கா அரசைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பன்னாட்டு அரசுகள் புவிசார் அரசியல் காரணங்களால் இந்த ஏற்பாட்டை அணைத்துக் கொண்டன என்பது வருத்தத்திற்குரியது

காணாமாலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும் காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் காணாமற்போனோர் அலுவலகத்திடம் கூறியது என்னவென்றால், உள்நாட்டுப் போரின் முடிவில் சிறிலங்கப் படையிடம் சரணடைந்து காணாமற்போனவர்களில் ஐந்தே ஐந்து பேர் என்னவானார்கள் என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால் நாங்கள் உங்களை நம்பி இணைந்து பாடுபட அணியமாய் உள்ளோம் என்பதே. ஆனால் இதைக் கூட அவர்களால் செய்ய முடியவில்லை. இந்த அலுவலகம் தன் ஐந்தாண்டுக்கால வாழ்வில் காணாமற்போன சிலரின் பெயர்களை வெளியிட்டதற்கு மேல், தமிழர்கள் காணாமலாக்கப்பட்ட நிகழ்வுகளை கருத்தூன்றிப் புலனாய்வு செய்யவே இல்லை.

இப்போதைய அதிபர் கோட்டபய இராசபட்சர் அண்மையில் இந்த அலுவலகத்திற்குச் செய்துள்ள அமர்த்தங்கள் (நியமனங்கள்) காணாமற்போனோர் அலுவலகத்தின் தற்சார்பை மேலும் சீர்குலைத்துள்ளன. இவ்வாறு அமர்த்தப்பட்டிருப்பவர்களில் ஒருவர் செய்தியாளர் லசந்த விக்கிரமதுங்கா கொலையில் சான்றியத்தை அழித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் காவல்துறைக் காவலர் ஜெயந்த விக்ரமரத்னா. இன்னொருவர் குற்றவாளிகளாகக் கருதப்பட்டவர்களை விடுவிக்க முற்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் உபாலி அபயரத்னா.

முந்தைய ஆட்சியில் தொடுக்கப்பெற்ற சில குற்ற வழக்காடல்களையும் கோட்டபய இராசபட்சர் முடக்க முற்பட்டுள்ளார். இந்த மாதம் முற்பகுதியில் 2008, 2009 ஆண்டுகளில் பெரியோரும் சிறாருமான 11 பேர் காணாமலாக்கப்பட்டது தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணகொடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தலைமை அரசுச் சட்டத்தரணி கைவிட்டுக் கொண்டார்.

முல்லைத்தீவு நீதியர்களின் வழக்கு மன்றங்களில் துணிச்சலான குடும்பங்கள் தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்குகளை மையப்படுத்தியே சட்டச் செயல்வழிகள் அமைந்துள்ளன. முறைப்பாட்டாளர்களில் பெரும்பாலார் 2009 மே மாதம் உள்நாட்டுப் போரில் சண்டை ஓய்ந்து கொண்டிருந்த நேரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை சிறிலங்கப் படையிடம் சரண் செய்தவர்கள் ஆவர். தங்கள் அன்புக்குரியவர்களை சட்டப்படி அமைக்கப்பட்ட நிறுவனமாகிய சிறிலங்க இராணுவத்திடமே ஒப்படைக்கிறோம் என்பதால் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று நம்பினார்கள். ஆனால் அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போய் விட்டார்கள்.

சிறிலங்கப் படையின் சட்டத்தரணிகள் இறுதியில் நீதிமன்றத்துக்கு வர இணங்கிய போது முறைப்பாட்டாளர்களுக்காக முன்னின்ற சட்டத்தரணிகள் குறுக்கு விசாரணையின் ஊடாக 2009 மே மாதம் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் அவர்களிடம் இருப்பதை வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளி விட்டார்கள். அதாவது அந்தப் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருந்தால் அவர்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும் என்று பொருள். ஆனால் சிறிலங்கப் படை பட்டியல் தர வேண்டும் என்று நீதியர் ஆணையிட்ட போதிலும் சிறிலங்கப்படை முட்டுக் கட்டை இட்டதால் வழக்கு முடங்கி விட்டது.

காணாமலாக்கும் குற்றங்கள் எளிதில் நடைபெறத் துணை செய்த கருவிகளில் ஒன்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டம். அரசு இந்தச் சட்டத்தை நீக்கம் செய்யும் படி காணாமலாக்கப்பட்டுப் பிழைத்து வந்த தமிழர்களும் உள்நாட்டு, பன்னாட்டு மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் அரசுகளும் – வெகு அண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையும் -- கோரியுள்ள போதிலும், அப்படி எதுவும் நடக்கவில்லை.

2018ஆம் ஆண்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் “உங்களை மறக்கவில்லை திட்டம்” தொடங்கிற்று. வலிந்து காணாமலாக்கலுக்கு இரையானவர்களை ஆவணமாக்குவதும் நினைவேந்துவதும் இத்திட்டத்தின் மையக் குறிக்கோள் ஆகும். காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்தப் பட்டியலில் குறிப்பிட வேண்டிய தகவல்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். இத்திட்டத்துக்கான வலைத்தளம்: http://youarenotforgotten.org/about-us/.

- நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

Pin It