கடந்த ஒரு வார காலமாகவே பத்திரிகைகள் பக்கம் பக்கமாக விளம்பரங் களையும், மலர்களையும் திக்குமுக்காடும் அளவுக்கு வெளியிட்டு குவித்து வருகின்றன. எல்லாம் அட்சய திருதியைக்கான வர்த்தக விளம்பரங்கள்தான்! ஒரு பக்கம் கடவுள்களின் வண்ணப் படங்கள்! தாமரையில் வீற்றிருக்கும் நான்கு கைகளைக் கொண்ட மகாலட்சுமி. உடல் முழுதும் நகைகள்! (எந்தக் கடையில் வாங்கியது? பவுன் என்ன விலை என்றெல்லாம் எவரும் கேட்டு விடாதீர்கள்!) பசுமாட்டு உருவத்தில் உள்ள கஜலட்சுமி! இப்படி பக்திமணம் பரப்பும் படங்கள். அதற்கு அருகிலேயே நகைக்கடை விளம்பரங்கள். அட்சய திருதியை அன்று ஒரு ‘பொட்டு’ தங்கமாவது வாங்கிவிட வேண்டுமாம்; வாங்கி விட்டால் ஆண்டு முழுதும் செல்வமும், நகையும் கொழித்துக் கொண்டே இருக்குமாம்! 

எனவே கடன் வாங்கியாவது, ஒரு ‘கிராம்’ நகையாவது வாங்கி விடுங்கள் என்று தமிழ்நாட்டு மக்களுக்கு ‘ஆன்மீக திலகங்கள்’ அறிவுரை கூறுகிறார்கள். அந்த ஆன்மீகங்கள் யார் தெரியுமா? தமிழ்த் திரைப்பட நடிகைகள்தான்! 

அட்சய திருதியையில்  நகை வாங்கினால் பவுன் விலை கடகடவென சரியும் என்று எவராவது கூற மாட்டார்களா என்று நமக்கும் ஒரு ஏக்கம் உண்டு. “நல்லா இருக்கே உமது ஆசை;நடக்காத உறுதி மொழி எல்லாம் தந்து, நாங்கள் அம்பலப்பட்டுப் போவதில் அப்படி என்னப்பா, உனக்கு மகிழ்ச்சி?” என்று, எதிர் கேள்வி போட்டு விடுகிறார்கள். நமக்குத் தெரிந்த, ஒரு பக்தி பிரமுகரிடம் அட்சய திருதிதைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன்.“உண்மையிலேயே அது தானம் செய்ய வேண்டிய நாள்; அன்று ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும்; குறிப்பாக சாப்பாடு போட வேண்டும் என்பதுதான் அய்திகம்” என்றார். “பிறகு அது எப்படி தங்கம் வாங்கும் நாளாக மாற்றப்பட்டது? அய்தீகத்தை இப்படி எல்லாம் மாற்றுவதற்கு இராமகோபாலனோ, ஆலயத் திருப்பணிக் குழு தலைவர்களோ, மடத் தலைவர்களோ, ஏன் வாயைத் திறக்கவில்லை?” என்று எவரும் கேட்கக் கூடாது. கேட்டாலே அது மத விரோதமாகிவிடும். 

அட்சய திருதி இப்போது அடுத்த கட்டத்துக்கும் முன்னேறியிருக்கிறது. “அட்சய திருதியில் அய்ஸ்வர்யத்தை உங்கள் இல்லத்துக்கு எடுத்துச் செல்லுங்கள்” என்ற தலைப்பில் செல் பேசி,துணி துவைக்கும் எந்திரம், குளிர்சாதனப்பெட்டி என்று அனைத்துவிதமான நுகர் பொருள்களும் ‘அட்சயதிருதி’ விற்பனை பட்டியலில் இடம் பிடித்து விட்டன.

ஆக, பக்தியும், வர்த்தகமும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாமல் கைகோர்த்து வளர்ந்து கொண்டிருக்கிறது. என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் எப்போதும் நெற்றியில் ‘வண்ணக் கோலத்தோடு’ தனது பக்தியைக் காட்டிக் கொள்வார். (அதாவது விபூதி, அதற்கு நடுவே குங்குமம்) “இது என்ன சார் வேடம்?  பக்தி எல்லாம் இப்போது வியாபாரமாகிவிட்டது” என்று நான் கூறியபோது, அவருக்கு மூக்குக்கு மேலே கோபம் வந்துவிட்டது. பக்தியை இப்படி எல்லாம் கிண்டலடிக்காதீர்கள் என்றார். அவரிடம் இந்த விளம்பரங்களை எடுத்துக் காட்டியபோது, நமட்டுச் சிரிப்பு ஒன்றைக் காட்டிவிட்டு நழுவிவிட்டார். 

பக்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்கு இனி, கோயில், பஜனை,கதாகாலட்சேபங்கள், விரதங்கள், பண்டிகைகள் போன்றவை பயன் தருமா? இதுபற்றி பக்தர்கள், ஆழமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான ஆலோசனை. 

பக்தியை - கோயிலிலிருந்து கழற்றி விட்டுவிட்டு ‘சூப்பர் மார்க்கெட்’, ‘நகைக் கடைகள்’ போன்றவைகளோடு இணைத்துப் பாருங்கள்! 

பக்தி ஓகோ என்று பெருக்கெடுத்து ஓடுமய்யா!

உதாரணமாக - கீழ்க்கண்டவற்றை பரிந்துரைக்கிறோம். 

இராமநவமியை எல்லோரும் புது செருப்பு வாங்கும் நாளாகக் கொண்டாடலாம். இராமனின் செருப்பு தானே, 14 ஆண்டு காலம் பாரத தேசத்தை ஆட்சி செய்தது. 

விநாயகர் சதுர்த்தியை சோப்பு வாங்கி கொண்டாடலாம். பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து தானே விநாயகனே பிறந்தான்! 

கிருஷ்ணன் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குக்கூட நம்மிடம் ஒரு திட்டம் இருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்களாக. அதற்கு கொஞ்சம் கூடுதல் செலவு அவ்வளவுதான்.  நட்சத்திர ஓட்டலில் இளம் ஆண் பெண் நண்பர்கள் இரவு விருந்து பார்ட்டிகளை நடத்திடலாம். நட்சத்திர ஓட்டல்கள் இதற்கு கட்டணத்தில் சலுகைக் காட்டி, கிருஷ்ண லீலா சிறப்புக் கொண்டாட்டங்களை அறிவிக்கலாம். பக்தர்கள் குதூகலமாக ஆடிப் பாடி பக்தியைக் கொண்டாடலாம். 

அதற்கு பாட்டுகள் கூட உண்டு. “நந்தகோபாலனோடு நான் ஆடுவேனே; குத்தாட்டம் போடுவேனே; ஜில்லுனு பாடுவேனே” என்ற பக்திப் பரவசமான பாடல்களை தயாரிக்கலாம். ஏ.ஆர்.இரகுமானைக் கேட்டால்கூட இசை அமைத்துத் தருவார். 

பக்தியும் வியாபாரமும் கைகோர்த்துவிட்டால், பிறகு உலக வங்கி, பங்குச் சந்தை என்ற உயரத்துக்கு பக்தி எகிறி விடும். அட்சய திருதியைக்கு பொருள் வாங்க ஓடும் பக்தர்கள் இந்த அரிய ஆலோசனைகளை காதில் போட்டுக் கொள்வார்களாக!

-          கோடங்குடி மாரிமுத்து

Pin It