மலேயாவில் (இப்போது மலேசியா) தொழிலாளர்களாக குடியேறிய தமிழ்நாட்டைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் இந்தியர்களுக்கு ஆட்சி அதிகாரங்கள் வழங்குவது குறித்து, ஆய்வு நடத்த வந்த சைமன் குழுவிடம் அளித்த கோரிக்கை மனுவை முழுமையாக ‘ரிவோல்ட்’ வெளியிட்டது. தீண்டாமைக் கொடுமைகள் பட்டியலிட்டு காட்டியது அந்த மனு. சாதிகளற்ற மலேயா சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் சமமாக நடத்தப்படுவதை பெருமையுடன் சுட்டிக் காட்டி, தமிழகத்தில் இந்து மதம் திணித்த தீண்டாமைக் கேடுகளை விரிவாக அது விளக்கியது.

பஞ்சாப் ஜாலியன் வாலாபாக்கில் சட்டவிரோதமாகக் கூடிய மக்களை ஈவிரக்கமின்றி பிரிட்டிஷ் அதிகாரி டயர் சுட்டுக் கொன்ற கொடுமையைக் கண்டித்த ‘ரிவோல்ட்’, நமது நாட்டு டையர்களுக்கு எப்போது முடிவு கட்டப் போகிறோம் என்ற கேள்வியை எழுப்பி, நீண்ட தலையங்கத்தைத் தீட்டியது. “தீண்டாமையின் கொடூரங்களை மேடைப் பேச்சுகளாலும், தீர்மானங் களாலும் ஒழித்துவிட முடியாது. பார்ப்பனியத்தில் ஊடுருவியுள்ள அதன் ஆணிவேரைக் கில்லி எறிய வேண்டும். வர்ணாஸ்ரம ஆதரவு மாநாடுகள் நடத்தப்படும் நிலை தொடரும் காலம் வரை சாதி உற்பத்தி நிறுவனங்களான கோயில்கள் புனிதமாக போற்றப்படும் காலம் நீடிக்கும் வரை, “ஜாலியன் வாலா பாக்குகளாக” பிறசாதி மக்களை நடமாட மறுக்கும் அக்கிரகாரங்கள் நீடிக்கும் காலம் வரை, மக்களை இழிவுபடுத்தும் நமது நாட்டு டையர்களான மதப் பிரச்சாரகர்களின் வெறுப்பு கக்கும் மதப்பிரச்சாரம் தொடரும் வரை  இந்தப் புற்றுநோய் - சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கும் காலம் வரை - கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவிலிருந்து விடுபட முடியாது என்று எழுதியது ‘ரிவோல்ட்’.

பெரியார் இயக்கம் தீண்டப்படாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏதும் செய்திடவில்லை என்ற பொய்யான பரப்புரை ஒன்று, சில சக்திகளால் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பெரியார் திராவிடர் கழகம், ‘குடிஅரசு’ தொகுப்புகளையும், ‘ரிவோல்ட்’டையும் வெளிக் கொண்டு வந்த பிறகு, இந்த பொய்யுரைகள் சூரியன் கண்ட பனிபோல் மறைந்தோடிப் போய்விட்டன. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக பெரியார் இயக்கம் நடத்திய சோர் வில்லா போராட்டங்கள் வரலாறுகளாக இந்த ஏடுகளில் பதிவாகியுள்ளன.

‘ரிவோல்ட்’ தொகுப்பின் இரண்டாம் பகுதியாக வர்ணாஸ்ரம எதிர்ப்பு மற்றும் தீண்டாமை சாதி எதிர்ப்பு தொடர்பாக ‘ரிவோல்ட்’ வெளியிட்ட முக்கிய கட்டுரைகள் 177 பக்கங்களில் தொகுத்து தரப்பட்டுள்ளன.

“தீண்டப்படாத மக்கள், சென்னை மாகாணத்தில்தான் மிகக் கொடூரமான முறையில் நடத்தப்படுகிறார்கள். வேறு எந்தப் பகுதியிலும் இவ்வளவு கொடூரம் இல்லை” என்று காந்தியடிகளே கூறியதை ‘ரிவோல்ட்’ எடுத்துக் காட்டி, வர்ணாஸ்ரமவாதிகளான ‘டையர்’களை வீதிகளில் நேரடியாக சந்திக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது.

ஈரோடு தேவஸ்தானக் கமிட்டி, தீண்டப்படாத மக்களை கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று முடிவு செய்ததை ஏற்க மறுத்த ‘வர்ணாஸ்ரம’ டையர்கள், ஈரோட்டில் உள்ள கோயில்களை ஒரு மாதம் வரை திறக்க மறுத்தனர். ஈரோட்டில் கோயில் நுழைவை வெற்றிகரமாக நடத்தி முடித்த சுயமரியாதை இயக்கத்தையும், ரிவோல்ட்டையும் பாராட்டி, கடிதங்கள் குவிந்தன! இதை ‘ரிவோல்ட்’ சுட்டிக்காட்டி, பிற பகுதியில் ‘வர்ணாஸ்ரம டையர்களுக்கு’ எதிராக போராட்டங்கள் வெடிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தது!

Pin It