பார்ப்பனியம் சனாதன தர்மம் என்ற போர்வைக்குள் பதுங்கிக் கொண்டு சமூகத்தை வேதகாலத்துக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லத் துடிக்கிறது. தன்னை ஒரு சனாதனவாதி என்று கூறிக் கொள்ளும் தமிழக ஆளுநர் ரவி, நந்தன் (தீயில் எரிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட தோழர்) பிறந்த கிராமத்தில் பட்டியலினப் பிரிவினருக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.

ஒரு பிராமணன் காயத்ரி மந்திரம் ஓதி பூணூல் அணிவிக்கப்பட்டு பிராமணன் என்று அடையாளப்படுத்தப்பட்ட உடனேயே அவன் பிறப்பில் சத்திரிய, வைசிய, சூத்திரர்களின் எஜமானர்கள் ஆகி விடுகிறான்,

“பிராமணன் முதல் வர்ணத்துக்கு உரியவன், பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்தவன், அதனால் இந்த உலகில் உண்டாகியுள்ள சகல வர்ணத்தாரின் பொருள்களையும் தானம் வாங்க அவனே பிரபுவாகிறான்” என்று மனுசாஸ்திரம் கூறுகிறது.

சத்திரிய, வைசிய வர்ணத்தில் அடங்கியுள்ள ஜாதிகளும் பூணூலை அணிகிறார்களே என்ற கேள்விக்கு மேற்குறிப்பிட்ட மனுசாஸ்திரமே சரியான பதிலாகிறது. கடவுளே பிரம்மனுக்கு கட்டுப்பட்டவன் என்று வேதம் கூறுகிறது.

“தெய்வா தீனம் ஜகத் சர்வம்

மந்த்ரா தீனம் து தெய்வதம்

தன்மந்திரம் பிராமணாதீனம்

தஸ்மத் பிராமணா பிரபு ஜெயத்”

“உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது, கடவுள் மந்திரத்துக்கு கட்டுப்பட்டவர்கள், மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டது, பிராமணர்களே நமது கடவுள் என்பதே இதற்கான விளக்கம் ” பிராமணர்கள் ஓதும் மந்திரங்கள் வழியாகவே சிற்பி செதுக்கிய சிலைகள் கடவுளாக்கப்படுகின்றன, பிராமணர்கள் மந்திரத்தால் தான் திருமணங்கள் உறுதிபடுத்தப் படுகின்றன,

கடந்த வாரம் அலகாபாத் உயர்நிதீமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. வேத பண்டிதர்களைக் கொண்டு விவாகத்துக்கு உரிய அத்தனை சடங்குகளையும் உரிய முறைப்படி செய்கின்ற திருமணமே செல்லத்தக்கது என்றும் ‘சப்தபதி’ எனும் அக்னி வலம் வருவதின் எண்ணிக்கையில் மணமக்கள் ஒன்றை குறைத்து விட்டால் கூட திருமணம் செல்லாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இறந்து போனவர்கள் ஆன்மா சாந்தி அடையவும், அவர்களுக்கு விருப்பமான உணவுகளை அனுப்பி வைக்கவும் வேத மந்திரங்களுக்கு மட்டுமே சக்தி அதிகம், அதுவும் பூணூல் அணிந்த புரோகிதர்கள் மட்டுமே, அதற்கான உரிமை பெற்றவர்கள் என்கிறார்கள். அதுவும் காசியில் கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிந்தால் மோட்சம் உறுதி என்ற நம்பிக்கையை விதைத்துள்ளனர். ஆனால், பிண எரிப்பை ‘பஞ்சமர்கள் என்ற பட்டியல் பிரிவினரே பரம்பரைத் தொழிலாக செய்து வருகின்றனர். கங்கை ஆற்றங்கரையில் பிணம் எரிப்புக்காகவே ஒரு சாதிப் பிரிவு இருக்கிறது. ’டோம்ஸ்’ என்பது அவர்களது பெயர், அவர்கள் எரித்த பிணம் மட்டுமே மோட்சத்துக்கு போய் சேரும் என்ற மூடநம்பிக்கையை பார்ப்பனர்கள் – பாமர மக்களின் மூளையில் திணித்து விட்டார்கள். அப்போது தானே அவர்கள் அத்தொழிலை காலம்தோறும் செய்ய முடியும். ஆனால் அவர்கள் வாழ்நிலை படுமோசமாக உள்ளது. இதுகுறித்து ராதிகா (அய்யங்கார்) என்ற பெண் ‘கங்கையில் நெருப்பு’ (Fire On The Ganges) என்ற விரிவான நூலை அண்மையில் எழுதியுள்ளார்.

ராமானுஜர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பூணூல் அணிவித்தார், பாரதியும் அதையே செய்தான், என்ன நடந்துவிட்டது? ராமானுஜரை வைணவ பார்ப்பனர்கள் மதிப்பதே இல்லை, மனுசாஸ்திரத்தையே போற்றுகிறார்கள். கலைஞர் தான் தொலைக்காட்சியில் ஒரு தொடரே ராமானுஜர் குறித்து எழுதினார். பெரியார் ஒரு கேள்வியைக் கேட்டார், மூன்று சதவீத பார்ப்பனர்கள் பூணூல் அணிவதை ஏதிர்க்காமல் 97 சதவீத மக்களுக்கும் பூணூல் போட வேண்டும் என்பது என்ன நியாயம் என்று கேட்டு – ஒரு உதாரணத்தையும் கூறினார். மூட்டை அரிசியில் ‘கல்’ இருந்தால் கல்லை பொறுக்கி எடுக்க வேண்டுமே தவிர அரிசியைத் தனியாக பொறுக்கிக் கொண்டிருப்பதா? என்று கேட்டார்.

பூணூல் அணியும் ‘பிராமணன்’ பிராமணனுக்கு உரிய வாழ்வைத்தான் வாழ்கிறானா? கடல் தாண்டி போவது பிராமண தர்மப்படி குற்றம், ஆனால் கடல் தாண்டி போய் பிராமண சங்கம் நடத்துகிறார்கள். எண்ணெய் தொடர்பான வணிகம் நடத்துவது ஒரு குற்றம். ஆனால் ஓட்டல் நடத்துகிறார்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவம், திரைப்படத்துறை, தோல் தொழில்நுட்பத் துறை என்றெல்லாம் படிப்பது ‘பிராமணனுக்கு விதிக்கப்பட்ட கடமையை மீறுவது ஆகாதா?

பூணூல் பற்றி ராமகிருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார் :

பூணூல் அணிவது பற்றி பரமஹம்சர் என்று மதவாதிகளால் போற்றப்படும் ராமகிருஷ்ணர் கூறிய கருத்து “The Sacred thread is also bondage for it is a sign of Egoism, I am Brahmin and superior to all” (‘Sri Ramakrishna the Great Master’ நூலில் 137வது பக்கம்)

“பூணூல் என்பது அகங்காரச் சின்னம்; நான் எல்லோரையும் விட உயர்ந்த பிராமணன் என்பதன் சின்னம்” என்கிறார்.

பூணூல் அணிவதை காந்தியும் எதிர்த்துள்ளார்; அவர் தனது சுயசரிதையில் எழுதுகிறார்

“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு, இந்தியாவிலும் தென்னாப்பிரிக்காவிலும், பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே நான் பூணூல் போட்டுக் கொள்ளும் படி செய்ய முயன்றார்கள். ஆனால் அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மாத்திரம் அதைப் போட்டுக் கொள்ளுவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று விவாதித்தேன். பூணூல் அணிவது அனாவசியமான பழக்கம் என்பது என் கருத்து, ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. பூநூலைப் பொருத்தவரையில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. ஆனால், அதை அணிய வேண்டும் என்பதற்குரிய நியாயம்தான் எனக்குத் தென்படவில்லை” என்கிறார் காந்தி.

ஆளுநர் பூணூல் புனிதத்தை பேசுகிறார், இது ஆளுநரின் வேலைதானா? 1948ஆம் ஆண்டு பெரியார் கூறிய கருத்து இப்போதும் பொருந்தி வருகிறது.

பார்ப்பனர் – திராவிடர் போராட்டம் ரொம்பவும் வளர்ந்து விட்டது; பார்ப்பனர்களும் துணிந்துவிட்டார்கள்; துணியக் காரணம் இல்லாமல் இல்லை. இன்று ஆட்சி அவர்கள் ஆதிக்கத்தில் இருக்கிறது. அனேகமாக அவர்கள் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாக இருக்கக் கூடும். இன்று தவறின், நாளை ஆட்சி யார் கைக்கு செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள்.

பெரியார், விடுதலை - 19.05.1948

விடுதலை இராசேந்திரன்