முதியோர், கர்ப்பிணிகள், உடல்நலிவுற் றோர்  மற்றும் அவர்களின் உதவியாளர்கள் ‘அத்தி வரதர் தரிசனத்துக்கு வரவேண்டாம்’ என்று தமிழக  அரசின் காஞ்சி மாவட்ட நிர்வாகம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக அரசு செலவில் விளம்பரம் செய்திருக்கிறது.

“அத்திவரதரை தரிசனம் செய்து விட்டதாலேயே உங்களைக் காப்பாற்றி விடமாட்டார். அவருக்கு சக்தி இருக்கிறது என்றெல்லாம் நம்பி வராதீர்கள்” என்ற வாசகங்களையும் விளம்பரத்தில் சேர்த்து அறிவித்திருந்தால் பொது மக்களுக்கு எளிதாகப் புரிந்திருக்கும். பரவாயில்லை. எதற்கு வீண் வம்பு? பக்தர்களே, புரிந்து கொண்டால் சரி.

இதுவரை கூட்ட நெரிசல்களில் சிக்கி 7 பேர் உயிரிழந்து விட்டனர். ஆபத்துக்கு உதவிட அவசர மருத்துவ சிகிச்சை, ஆக்சிஜன் சிலிண்டர் எல்லாம் தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. என்னுடைய சக்தியை இப்படி எல்லாம் கேலி செய்வதா என்று கோபத்தில் அத்திவரதர் எழுந்து ஓடிப்போய் குளத்தில் மீண்டும் விழுந்து விடப் போகிறாரா என்ன? அப்படியே ஓடினாலும் காவல்துறை விட்டு விடுமா?

சரி; அத்திவரதர் இதுவரை குளத்துக்குள் படுத்த நிலையில் ஏன் இருந்தார் தெரியுமா? காரணங்களும் இப்போது ஜீயர்கள் வழியாக வெளிவரத் தொடங்கியிருக்கிறது. 

“இஸ்லாமியர் படையெடுப்புகளிலிருந்து காப்பாற்றவே ‘அத்திவரதர்’ குளத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டார். இனி அந்தப் பயம் இல்லை. எனவே அத்திவரதரை குளத்துக்குள் கொண்டு போக வேண்டாம். வெளியிலேயே நிரந்தரமாக தரிசனத்துக்கு வைத்து விடலாம். அத்திவரதரும் எனது கனவிலே தோன்றி மீண்டும் குளத்துக்குக் கொண்டு போய் என்னை மூழ்கடித்து விடாதீர்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டுள்ளார்” என்று மணவாள மாமுனிகள் மடத்தின் தலைவர் சடகோப இராமானுஜ ஜீயர் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.

“அதெல்லாம் கூடாது; அத்திவரதரை மீண்டும் குளத்துக்குள்ளேயே படுக்க வைக்க வேண்டும்; 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே வருவதால் தான் இவ்வளவு கூட்டம்; அதைப் புரிந்து கொள்ளுங்கள். நிரந்தரமாக தரிசனத்துக்கு வைத்தால் கூட்டம் வரவே வராது. இப்போதுகூட வரதராஜப் பெருமாள் கோயில் மூலவர் அத்திவரதர் நிரந்தரமாகத் தான் காட்சி தருகிறார். அவரை தரிசிக்கக் கூட்டம் வருவது இல்லையே” என்று எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார், திருவரங்கம் ஜீயர். சடகோப ஜீயர் கனவில் அத்திவரதர் வந்து கூறினார் என்பதை எல்லாம் திருவரங்கத்து ஜீயர் நம்பத் தயாராக இல்லை.

இந்த, ‘கனவுக் கதைகள்’ எல்லாம் அப்பாவி ‘சூத்திர’ பக்தர்களின் காதுகளில் பூ சுற்றுவதற்குத் தான் என்பது ஜீயர்களுக்குத் தெரியாதா என்ன?

அறநிலையத் துறை அதிகாரிகள், பக்திப் பழங்களாக பூத்துக் குலுங்கும்  நமது அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களின் கனவில் வந்து அத்திவரதர் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நிச்சயமாகக் கூற மாட்டார். இவர்கள் என்னதான் பக்தியில் முற்றிப் போயிருந்தாலும் நமது அமைச்சர்கள் எல்லாம் ‘சூத்திரர்கள்’ தானே? கடவுள் அவர்கள் கனவுகளில் எப்படி வருவார்?

ஆக, அத்திவரதர் மீண்டும் ‘ஜலத்துக்குள்’ போவாரா? பூமிக்கு மேலேயே இருப்பாரா என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் அத்திவரதருக்கு இல்லை. முடிவெடுக்கும் உரிமை, அவரை வைத்து பக்தி - வணிகம் நடத்த விரும்பும் ‘ஆன்மிக புருஷர்கள்’ கையில் தான் இருக்கிறது.

‘ஆண்டவர்களை’ கருப்புச் சட்டைக் காரர்கள்கூட இப்படி எல்லாம் அவமதிப்ப தில்லையே! நமது ஜீயர்கள் பெருமாளை பாடாய் படுத்தலாமா? என்கிறார்,

இன்னும் கடவுள் சக்தியை நம்பும் ஒரு அப்பாவி பக்தர்!

Pin It