கருநாடகாவில் எடியூரப்பா தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, ‘பிராமணர் வளர்ச்சி வாரியம்’ ஒன்றை ‘பிராமணர்களுக்காகவே’ உருவாக்கியிருக்கிறது. 6ஆம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடத்தில் ஏற்கனவே இடம் பெற்றுள்ள சில கருத்துகளை நீக்க வேண்டும் என்று வாரியத் தலைவர் எச்.எஸ். சச்சிதானந்தா மூர்த்தி என்ற பார்ப்பனர், முதலமைச்சர் எடியூரப்பாவிடம் கடந்த வாரம் ஒரு மனுவை நேரில் அளித்தார்.

பாட நூல் தயாரித்த வரலாற்றாளர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே அந்தக் கருத்துகளை உடனே அகற்றி விடுமாறு எடியூரப்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ‘புதிய மதங்களின்  தோற்றம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ள பாடத்தில் கீழ்க்கண்ட கருத்துகள் இடம் பெற்றிருந்தன.

“வேத காலத்தில் (கி.மு. 1500 முதல் 600 வரை) நாட்டில் கடும் உணவு நெருக்கடி உருவானது. காரணம், ‘பிராமணர்’கள் உணவுப் பொருள்களை எரித்து யாகம் நடத்தியது தான். மட்டுமின்றி விவசாயிகளுக்கு உற்பத்திக் கருவிகளாக இருந்த ஆடு மாடுகளும் யாகத்தில் எரிக்கப்பட்டன” என்ற வரலாற்றுத் தகவல் பாடநூலில் இடம் பெற்றிருந்தது. இது வேண்டும் என்றே ‘பிராமண சமூகத்தை’ அவமதிக்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டது என்றும் உடனடியாக நீக்க வேண்டும் என்றும் மனுவில் பார்ப்பனர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

“சமஸ்கிருதம் புரோகிதர்களின் மொழியாகவே இருந்ததால், வெகு மக்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாத நிலையில், ‘பிராமண’ ஆதிக்கத்துக்கு எதிராக புதிய மதங்கள் உருவாயின” என்ற பகுதியையும் நீக்க வேண்டும் என்பதும் பார்ப்பனர்களின் கோரிக்கை. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்தப் பாடத் திட்டம் உருவாக்கப்பட்டது.

அப்போது பாடத் திட்ட தயாரிப்புக் குழுவில் இடம் பெற்றிருந்த  ராமச்சந்திரப்பா இது பற்றிக் கூறுகையில், “வரலாற்றுப் பேராசிரியர்களைக் கொண்டு வரலாற்று அடிப்படை யில் எழுதப்பட்ட இந்தக் கருத்துகளை அவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் அரசே தன்னிச்சையாக நீக்குவது ஜனநாயகத்துக்கு எதிரானது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

வேதங்களில் கால்நடைகள் பலியிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. ‘யக்ஞ வேதம்’ பலியிடுதலை விரிவாகக் கூறுகிறது. குதிரையை நெருப்பில் பலியிடும் அசுவமேத யாகம்; பசுவைப் பலியிடும் கோமேத யாகம்; மனிதர்களையே நெருப்பில் போட்ட நரமேதம்; பிற உயிர்களைப் பலியிடும் ‘சர்வமேதம்’ பற்றி வேதங்கள் கூறுகின்றன.

‘அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து பத்னி க்ராக்யம் ப்ரக்ஷ்தே’ என்ற சமஸ்கிருத சுலோகம், குதிரைகள் நெருப்பிலிடப்பட்ட அசுவமேத யாகத்தை உறுதிப்படுத்து வதாகும். பாட நூல்களில் வேதங்களின் அடிப்படையில் கூறப்பட்ட கருத்துகளை தடை செய்யக் கோரும் பார்ப்பனர்கள், அந்த வேதங்களையே தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைப்பதே நியாயம்.

ஆனால் பார்ப்பனியம் அதைச் செய்யாது. வேதங்களும் புனிதமாக மதிக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் அதன் மோசமான மனித விரோத கருத்துகள் மக்களுக்கு தெரிந்து விடக் கூடாது என இரட்டை வேடம் போடுகிறது. - இதுதான் பார்ப்பனியம். 

- விடுதலை இராசேந்திரன்

Pin It