இராமாயணம் என்பதே திராவிடர்களை ஆரியர்கள் சூழ்ச்சியால் வென்றதை விளக்கும் கதை தான். தென்னக திராவிட மன்னன் - ராவணனை, வடநாட்டு ஆரிய குலத் தலைவன், இராமன், வீழ்த்தியதாக எழுதப்பட்ட இந்தக் கதை, ஆரிய - திராவிடப் போராட்டத்தின் வெளிப்பாடு என்றார் பெரியார். இந்தியாவின் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவும், இதே கருத்தைத்தான் கூறினார்.

வடநாட்டில் ஒவ்வொரு விஜய தசமி கொண்டாட்டத்தின்போதும் இராவணனை தீமையின் வடிவமாக சித்தரித்து, அவன் உருவ பொம்மையை எரித்து வருகிறார்கள். இது தென்னாட்டு பார்ப்பனரல்லாத திராவிடர்களை இழிவுபடுத்தும் நிகழ்ச்சி என்பதை, திராவிடர் இயக்கம் வலியுறுத்தி வருகிறது.

கலைஞர் 1954 ஆம் ஆண்டிலேயே ‘முரசொலி’ வார ஏட்டில் இதைக் கண்டித்து தென்னாட்டில் ராமனை எரிக்கும் ‘இராவண லீலா’ நடத்துவோம் என்று எச்சரித்தார். அன்னை மணியம்மையார் திராவிடர் கழகத் தலைவராக இருந்தபோது 1974-ல் ‘இராவண லீலா’வை திராவிடர் கழக சார்பில் நடத்தினார். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டு பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்ட பிறகு, மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விஜயதசமி நாளில் ராமலீலாவை எதிர்த்து ராமன் உருவத்தை எரிக்கும் போராட்டத்தை நடத்தி, பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் சிறையேகினர்.

இப்போது டெல்லியில் சுபாஷ் மைதானத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி திராவிட மாவீரன் இராவணனை எரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சோனியா காந்தி. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ‘இந்துத்துவ சக்தி’களுக்கு எதிராக உறுதியாக களத்தில் நிற்பவர். அவர் மீது நமக்கு மிகவும் மதிப்பு உண்டு. அத்தகைய சோனியா இந்த நிகழ்வில் பங்கேற்றது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. பார்ப்பன சக்திகள் விரிக்கும் வலையில் சோனியா வீழ்ந்துவிடக் கூடாது.

அவர் உண்மையிலேயே ‘இந்து பார்ப்பன’ கொண்டாட்டத்தின் பின்னணியைப் புரிந்து கொண்டு பங்கேற்றாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனாலும், தென்னாட்டு பார்ப்பனரல்லாத மக்களை இழிவுபடுத்தும் இவ்விழாவில் சோனியா பங்கேற்றதை நாம் கண்டிக்கிறோம்.

திரைப்படத் துறையில் மூடநம்பிக்கைகள்: பழம்பெரும் இயக்குனர் சாடுகிறார்

பிரபல திரைப்பட இயக்குனர் ஸ்ரீதர் எழுதிய கட்டுரையிலிருந்து

பொதுவாக சினிமா உலகத்தில் சென்டிமெண்ட் பார்க்கிறவர்கள் மிகுதி. அதில் பல மூட நம்பிக்கை என்றுகூட சொல்லலாம். படத்தின் முதல் பிரதி ரெடியானவுடன் பிலிம் அடங்கிய பெட்டியை, திருப்பதிக்கு எடுத்துக் கொண்டு போய் பெருமாள் பாதத்தில் வைத்துவிட்டு வருவார்கள். கடவுள் பாதத்தில் படத்தின் முதல் ரீல் வைப்பதன் மூலம் ஒரு படம் வெற்றி பெற்று விடுமானால், கதை, நடிப்பு, டைரக்ஷன், பாடல்கள் எல்லாம் எதற்கு?

நான் இது போன்ற சென்டிமென்ட்டுகள் பார்க்கிறவனல்லன். உதாரணமாய், ஒருபடத்துக்கு எங்கள் ஆபிசிலேயே பூஜைக்கு நேரம் குறித்திருந்தோம். ஆபிசில் இருந்த கடவுள் படங்களையே படம் பிடித்து படத்தை ஆரம்பிப்பதாக ஏற்பாடு. குழந்தை தெய்வத்திற்குச் சமமில்லையா? யாராவது ஒரு சிறு குழந்தையை வைத்து கேமராவை இயக்குவது என்ற என் வழக்கப்படி கேமராமேன் வின்சென்டின் மகன் ஜெயனன் கேமராவை இயக்க வேண்டும்.

ஆனால், திடீரென்று பட்டனை அழுத்த மாட்டேன் என அவன் அடம் பிடிக்க, நாங்கள் அவனைக் கட்டாயப்படுத்த, அவனோ அழ ஆரம்பித்துவிட்டான். கடைசியில் அவன் விரலை, வின்சென்ட் கேமராவில் பதித்து, கேமராவை இயக்கினார். (இங்கே ஒரு சிறு விளக்கம். நான் சிறுவர்களை வைத்து பூஜையன்று கேமராவை இயக்குவதற்கு ஒரு காரணம் உண்டு. பெரியவர்களை வைத்து இயக்கினால் இந்தப் படம் நல்லா ஓடணும். நாம் ஆரம்பித்து வைக்கிறோம். படம் சரியா போகலைன்னா நம்மை குறை சொல்லுவாங்களே, இந்த படம் ஓடுமா? ஓடாதா? இப்படி பலதரப்பட்ட எண்ணங்களுடன் கேமராவை இயக்குவார்கள். ஆனால் குழந்தைகள் எதைப் பற்றியும் நினைக்க மாட்டார்களில்லையா?)

வின்சென்டின் மகன் பண்ணிய கலாட்டா போதாதென்று, அடுத்தபடியாய் கற்பூரம் ஏற்றிக் காட்டியபோது கரண்ட் கட். மறுபடியும் அபசகுணமா என்ற முணுமுணுப்பு என் காதுபடவே கேட்டது. நான் அதைப் பெரிதுபடுத்தாவிட்டாலும், கோபு மனம் வாட்டமுற்றது. “இதற்கெல்லாம் முக்கியத்துவம் தர வேண்டாம்; எனக்கு கதை மீது நம்பிக்கை இருக்கிறது” என்று அவரைச் சமாதானப்படுத்தினாலும் அவருக்கு முழுத் திருப்தியில்லை. “வேண்டுமானால் பாடல் பதிவின்போது ஒரு சின்ன பூஜைக்கு ஏற்பாடு செய்து விடலாம்” என்றேன். அதன்படி சாஸ்திரிகளை வைத்து நேரம் குறித்து ஒரு பூஜையும் ஏற்பாடாகியது.

மறுபடியும் பிரச்சினை. குறிப்பிட்ட நாளில், பூஜை நேரத்துக்கு வரவேண்டிய அய்யர் ஏனோ வரவில்லை. எம்.எஸ்.வி.யின் குழுவில் இருந்த “பிராமணர்” ஒருவரை வைத்து பூஜையை முடித்து விட்டு, குறித்த நேரத்தில் பாடல் ரிக்கார்டிங்கைத் தொடங்கினோம்.

படத்தின் முதல் காட்சியாக ராஜஸ்ரீ நடிக்கும் பாடல் காட்சி! ‘அனுபவம் புதுமை’ பாடல் படம் பிடிக்கத் தயாராகி, ஸ்டார்ட் சொன்னதும், கேமராவில் பெல்ட் ஒன்று அறுந்து போக ஷுட்டிங் தடைப்பட்டது. அபசகுணம் என கருதப்பட்ட இத்தனை தடைகளையும் மீறி அந்தப் படம் அமோக வெற்றி பெற்றது. அதுதான் “காதலிக்க நேரமில்லை”.

"திரும்பிப் பார்க்கிறேன்” டைரக்டர் ஸ்ரீதர் எழுதிய நூலிலிருந்து மேட்டூர் கிட்டு

Pin It