‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ அகற்றப்படவில்லை என்று ‘டெகல்கா’ வார ஏடு வெளியிட்ட கட்டுரையை கடந்த ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வெளியிட்டது. அதே செய்தியை ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேடும் (ஆக.29, 2009) உறுதிபடுத்தியிருக்கிறது. அர்ச்சகர் பயிற்சி முடித்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைத்துவிட்டதாக தி.க. வின் ‘விடுதலை’ செய்தி வெளியிட்டது. ஆனால், பயிற்சி முடித்த மாணவர்களுக்கு பயிற்சி முடித்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பிறகும் அதற்கான சான்றிதழ்களையே தமிழக அரசு வழங்கவில்லை என்ற அதிர்ச்சியான உண்மைகள் இப்போது வெளி வரத் தொடங்கியுள்ளன.

‘டெகல்கா’வைத் தொடர்ந்து இப்போது ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரை யில் தந்துள்ள தகவல்கள்:

தமிழக அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி பெற்ற 207 மாணவர்களுக்கு பயிற்சி முடிந்து ஓராண்டுக்குப் பிறகும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வில்லை.

இப்போது - பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகும் சான்றிதழ்கள் வழங்கப் படாதது குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேட்டபோது, சான்றிதழ்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை. சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால்தான், பயிற்சி முடிந்தவர்களுக்கு, வேலை கிடைக்கவில்லை என்றால், இது பற்றி, விவாதித்து, முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார். பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது இதன் வழியாக அறநிலையத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

செந்தில்குமார் என்ற தலித் இளைஞர் (வயது 24) அறநிலையத் துறை வெளியிட்ட பத்திரிகை விளம் பரத்தைப் பார்த்து கோயில்களுக்குள் நிலவும் தீண்டாமை ஒழிவதாக பெருமையுடன் கருதி, அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பித்தார். ஓராண்டு பயிற்சியையும் முடித்தார். இதற் கிடையே உச்சநீதிமன்றம் பார்ப்பன ரல்லாதாரை அர்ச்கராக நியமிக்க தடைவிதித்து விட்டது. திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் கீழ் இவர் வைணவ சம்பிரதாயங்களுக்கான பயிற்சியில் சேர்ந்தார். ஆனால் செயல்முறைப் பயிற்சிக்காக கோயில் கர்ப்பக்கிரகத் துக்குள் சென்று பயிற்சி எடுக்கும் நிலை வந்தபோது, தங்களை, கோயில் அர்ச்சகர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று செந்தில் குமார் கூறினார்.

“கோயிலுக்குள் நாங்கள் திவ்ய பிரபந்தம் பாடக்கூட அர்ச்சகர்கள் அனுமதிக்கவில்லை. அப்போதுதான் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று செந்தில்குமார் கூறுகிறார்.

வன்னியர் சமுகத்தைச் சார்ந்த இராமசாமி என்ற மாணவர், வைணவத்தில் ஈடுபாடு இருந்த காரணத்தால், தான் படித்து வந்த பி.காம். பட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டு, அர்ச்சகர் பயிற்சியில் சேர்ந்தார்.

“இந்த பயிற்சியில் சேர்ந்ததால் எனக்கு ஏற்கனவே இரண்டாண்டு வீணாகிவிட்டது. இப்போது மீண்டும் பி.காம். பட்டப் படிப்பையே தொடர விரும்புகிறேன். என்னுடைய ஏழைக் குடும்பத்தைக் காப்பாற்ற நான் ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டும்” என்று கூறுகிறார். இராமசாமி திருவண்ணாமலைக்கு அருகே உள்ள பெலசூர் எனும் கிராமத்தைச் சார்ந்தவர்.

இவருடன் படித்த இவரின் நண்பரான பச்சையப்பனின் கதை (27) இன்னும் பரிதாபமானது. இவரது கிராமத்துக்கு அருகே உள்ள தனியார் கோயில் நிர்வாகங்கள். இவரை அர்ச்ச கராக்க மறுத்துவிட்டன. “பார்ப்பன ரல்லாதார் அர்ச்சகரா வது மிக மிகக் கடினமானது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்” என்று கூறும் அவர், மீண்டும், விவசாய வேலைக்கு திரும்பிவிட்டார். பயிற்சி பெற்ற 207 பேரில் 3 பேர் மட்டும் பார்ப் பனர்கள். அவர்களுக்கு மட்டும் அரசு சான்றிதழ் இல்லாமலே அர்ச்சகர் வேலை கிடைத்துவிட்டது என்று இந்த மாணவர்கள் கூறினர்.

மயிலை கபாலீசுவரன் கோயிலில் - நான்காவது தலைமுறையாக அர்ச்ச கராக இருக்கும் சாம்பமூர்த்தி (59), ஏழாவது படிக்கும் தனது மகன் அபிஷேக் சாமிநாதன், ‘சார்ட்டட் அக்கவுண்ட்’ படிக்க விரும்புவதாக வும், அர்ச்சகர் வேலையில் தமக்கு உதவ அவன் விரும்பவில்லை என்றும் கூறுகிறார். கடந்த 150 ஆண்டு காலமாக தமது குடும்பம் பாரம்பர்ய மாக கபாலீசுவரன் கோயிலில் அர்ச்ச கராக இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

மற்றொரு பிரபல சென்னை கோயிலில் அர்ச்சகராக இருக்கும் அருணாச் சலமும் தனது மகன், அர்ச்சகர் பதவிக்கு வர விரும்பவில்லை என் கிறார். இவரது மகன் அமெரிக்காவில் கணினி மென்பொருள் துறையில் உயர் அதிகாரியாக அய்ந்து ஆண்டு காலம் பதவியில் இருந்துவிட்டு, இப்போது சென்னை அய்.அய்.டி.யில் (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) கவுரவ பேராசிரியராக வேலை செய்கிறாராம். இது தவிர ஏழைகள் முன்னேற்றத்துக்கு சேவை செய்கிறாராம். ‘இந்த வேலையே எனக்கு திருப்தி தருகிறது; அர்ச்சகர் வேலை வேண்டாம்’ என்று கூறுகிறாராம்.

பாலகிருஷ்ண சாமிகள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற அர்ச்சகர், தனது மகன் குமார், ஆசிரியர் வேலைக்குப் போக முடிவு செய்து விட்டதாக கூறுகிறார். அர்ச்சகர் வேலையில் போதுமான வருமானம் வருவது இல்லை என்றும் அவர் கூறினார். இத் தகவல்களை ‘டெக்கான் கிரானிக்கல்’ நாளேட்டின் கட்டுரை வெளியிட் டுள்ளது.

அர்ச்சகர் தொழில் பரம்பரை அடிப்படையில் தரப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரை போகும் பார்ப்பனர்கள், தங்களது பிள்ளைகள் மட்டும் பரம்பரைத் தொழிலை விட்டுவிட்டு, பேராசிரியர்களாகவும், சார்ட்டட் அக்கவுண்டர்களாகவும் ஆக விரும்புகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் கூட பயிற்சியின்போது மாணவர்கள், கோயில் கர்ப்பகிரகத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டதை தி.மு.க. ஆட்சி தட்டிக் கேட்கவில்லை.

பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓராண்டு காலமாக சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை என்பதில்கூட இந்த அரசு கவனம் செலுத்தவில்லை. இந்த பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர் பதவிகளை தர மறுக்கும் சாதி ஆதிக்க வாதிகளின் தலையீட்டை தடுத்து, அவர்களுக்கு பதவிகளைப் பெற்றுத் தரும் முயற்சிகளிலும் இந்த ஆட்சி ஈடுபடவில்லை. உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்கும் முயற்சிகள் ஏதும், தமிழக அரசு எடுக்காத நிலையில் ‘கலைஞர் சாதுர்யமாக காய் நகர்த்துவதாக’ புகழாரம் சூட்டிய வீரமணிகள், பெரியார் நினைவிடத்தில் இதற்காக கலைஞருக்கு கல்வெட்டு வைத்து பெருமைப்படுத்தியதோடு தங்கள் கடமையை முடித்துக் கொண்டு விட்டார்கள். 

Pin It